கத்தோலிக்கர் பயம்

இளைஞர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இப்பொழுது நாம் கூறுவது புதியதன்று. இந்த நாட்டில் மட்டிலும் அல்ல, வேறு எந்த நாட்டிலும் மூடப் பழக்க வழக்கங்களையும் அவற்றிற்குத் தந்தைமார்களாக இருந்து வளர்த்து வரும் புரோகிதர்களின் ஆதிக்கங்களையும், இந்தப் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பு வஞ்சகச் செயல்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரும் மதங்களையும் அழித்து தவிடுபொடி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டின் வாலிபர் கள் என்பதை உலக ஞானம் உள்ள எவரும் அறிவார்கள். இளைஞர்களால் விரும்பப்படாததும், அவர்களுடைய கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் பெறாததுமான எந்த இயக்கமும் மாண்டு மடிந்து இருந்த இடந்தெரியாமலும், தேச மக்களின் நினைவில்கூட இல்லாமலும் போதல் திண்ணம். ஏனென்றால் முதியோர்களைப் போன்று அழுக்கேறிப் பாசம் பிடித்து, சுரணையற்றுப் போன மூளை இளைஞர்களிடமில்லை. இது நமது முன்னோர் வழக்கமாயிற்றே இதை விட்டு விட்டால், நமக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ! அண்டை அயலார் நம் மேல் பழி கூறுவார்களே! இதனால் நமது வருவாய்க்கு இடையூறு நேர்ந்து விட்டால் என்ன செய்வது? வழக்கத்திற்கு விரோதமாக நடந்தால் “குலதெய்வம்” கெடுத்து விடுமோ “தெய்வம் கோபித்துக் கொள்ளுமே” என்று தொட்டதற்கெல்லாம் சந்தேகமும், பயமும் கொள்ளுகின்ற கோழைத்தனமும் பேடித்தனமும் இளைஞர்களிடமில்லை.periyar and sivabrindadeviஇளைஞர்களின் சிந்தையும், அறிவும் செயலும் பரிசுத்தமானவை; ஒரு கட்டுப் பாட்டுக்குள் அடங்காதவை; சுயநல விவகாரங்களில் படிந்து முனை மழுங்காமல் கூர்மையாகவே இருப்பவை. ஆகையால் அவர்கள் எந்தச் செயல்களையும் ஆலோசித்துப் பார்த்து அவை சரியானவை என்று தம்மனத்திற்குப் பட்டால் உடனே அந்தக் காரியத்தை யாருடைய புகழ்ச்சியையும், இகழ்ச்சி யையும் எதிர்பாராமல், ஆதரிப்பையும், புறக்கணிப்பையும் பொருட்படுத்தாமல், எதிர்ப்பையும் கண்டிப்பையும் லட்சியம் பண்ணாமல், செயல் முறையில் காட்டக் கூடிய ஆண்மை படைத்தவர்கள். ஆகையால்தான் அவர்கள் தலையிட்டு அவர்களுடைய ஆதரவைப் பெற்று அவர்களுடைய ஊழியத்தைப் பெற்று, நடைபெறக் கூடிய எந்த இயக்கங்களும் மின்சார சக்திபோல் பரவி வெற்றி பெற்று வருகின்றன.

துருக்கி தேசத்தின் சுயமரியாதை வீரரான ‘முஸ்தபா கமால் பாஷா’ அவர்களின் கொள்கைகளை முழுமனத்துடன் ஆதரித்து, நாடெங்கும் பரவச் செய்து வெற்றியைக் கொடுத்தவர்கள் இளைஞர்கள்; இத்தாலி தேசத்தின் சுயமரியாதை வீரராகிய ‘முசோலினி’ அவர்கள் அந்நாட்டு இளைஞர்களின் ஆதரவைப் பெற்றே தமது கொள்கைகளில் வெற்றி பெற்றார்; ருஷியா தேசத்துச் சுயமரியாதை வீரராகிய ‘லெனின்’ அவர்களும் இளைஞர்களின் துணையைக் கொண்டே தமது கொள்கைகளை நிலைநிறுத்தி வெற்றி பெற்றார்; ஸ்பெயின் தேசத்தில் புரோகிதர்களின் ஆதிக்கத்தை ஒழித்து மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றக் காரணமாயிருந்தவர்களும், இருக்கின்றவர்களும் இளைஞர்கள்; கடந்த மகாயுத்தக் காலத்தில் அப்பொழுது பிரிட்டிஷ் முதல் மந்திரியாகயிருந்த திரு. லாயிட் ஜார்ஜ் அவர்களின் விருப்பத்தின்படி நின்று இங்கிலாந்தின் சுயமரியாதையைக் காப்பாற்றியவர்கள் அந்நாட்டின் இளைஞர்கள் என்னும் விஷயங்கள் சரித்திர ஞானம் உள்ளவர்களுக் கெல்லாம் தெரியாதவையல்ல.

பழயகால சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்தாலும் இந்த உண்மையை வெளிப்படையாக உணரலாம். கிரீசின் வைதீக முதலாளிக் கூட்டத்தாரால் அக்கிரமாகக் குற்றஞ் சாட்டி விஷங்கொடுத்துக் கொல்லப்பட்ட ‘சாக்ரட்டீஸ்’ என்னும் பெரியாரின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் இளைஞர்கள்; அக்காலத்தில் மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களுக்குப் புரோகிதர்களின் வஞ்சகச் செய்கைகளை எடுத்துக் காட்டி அவர்களை விடுதலை செய்த ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் பரவச் செய்தவர்கள் இளைஞர்கள்; விக்கிரக ஆராதனைகளிலும், பலிகளிலும், கொடுமையான வழக்கங்களிலும் அமிழ்ந்துக் கிடந்த அரேபிய தேச மக்களுக்குச் சுயமரியாதையை உண்டாக்கிய முகமது நபி அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் இளைஞர்கள்; ஜெர்மனி தேசத்தின் சுயமரியாதை வீரராகிய மார்ட்டின் லூதர் அவர்களின் கொள்கைகளை ஆரம்பத்தில் ஆதரித்து நாடெங்கும் பரப்பியவர்கள் இளைஞர்கள்; மேற்கூறிய பெரியார்கள் அனைவரும் புரோகிதர்களின் மோசங்களையும், அக்கிரமங்களையும், வேஷங்களையும் எடுத்துக் காட்டி தேசமக்களை விழிப்படையச் செய்ய முயன்றபோது முதியவர்களான வைதீகர்களும், புரோகித ஆதிக்கத்திற்கு அடங்கியவர்களும் எதிர்த்து அப்பெரியார்களுக்குப் பலவகையான துன்பங்களை உண்டாக்கிய காலங்களிலும் அஞ்சாமல் அவர்கள் கொள்கைகளை ஆதரித்துப் பரவச் செய்தவர்கள் பரிசுத்த மனமுடைய இளைஞர்களே என்பதைக் கற்றவர்கள் யாவரும் அறிவார்கள்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட நமது சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு இதைப் பரவச் செய்து வருபவர்கள் அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களே என்பதை யாரும் அறிவார்கள். இன்று சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று பிரயத்தனம் பண்ணிய படு வைதீகர்களின் பிள்ளைகளையும் நமது இயக்கம் வெளியில் இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருவதுடன், அவ்வைதீகத் தந்தைமார்களின் உச்சிக் குடுமியையும் பிடித்துக் குலுக்குகிறது என்பது நாடெங்கும் தெரிந்த செய்தியாகும்.

‘சைவப் பெரியார்’களெல்லாம் மகாநாடுகள் கூட்டிச் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டித்தார்கள். சைவ இளைஞர் மகாநாடு கூட்டி அவர்களை யெல்லாம் சுயமரியாதை இயக்கத்தில் சேரவிடாமல் தடுத்துப் பார்த்தார்கள். என்னதான் முயன்றாலும் இளைஞர் மனத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் வேறுபடுத்த முடியாமல் இப்போது மூலையில் உட்கார்ந்து விட்டார்கள்.

ஆனால் இப்பொழுது கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நம்மைக் கண்டிக்க முற்பட்டிருக்கின்றதைக் கண்டு நாம் ஆச்சரியமடையவில்லை. புரோகித ஆதிக்கம் எந்தெந்த இடங்களில் இருக்கின்றதோ, அங்கெல்லாம் நமது இயக்கம் சென்று அவ்வாதிக்கத்தைத் தளர்த்தாமற் போகாது.

இந்தியாவில் புரோகிதர்களின் சட்டத்திற்கும், நிபந்தனைகளுக்கும் அடங்கியுள்ள மதங்களில் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மதமும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. ஆகையால்தான் அம்மத இளைஞர்கள் பலர் இப்பொழுது சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிறார்கள். இதைக் கண்டு பயந்தே அம்மத வைதீகர்களின் ஆதிக்கத்தில் சென்ற 30-5-32 -இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கத்தோலிக்க வாலிபர்களின் மகாநாட்டில் நமது இயக்கத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அத்தீர்மானம் வருமாறு:-

சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை மேலே போர்த்துக் கொண்டு நாஸ்திகத்தையும் மதத்தில் வெறுப்பையும் பரப்பிவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இம்மகாநாடு கத்தோலிக்க இளைஞர்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன், சமத்துவமின்மையை உண்டு பண்ணியவர்களும், அதை ஆதரித்து வருகின்றவர்களும், குருக்கள்மார்கள் என்று சொல்லிக் குருக்கள்களை எதிர்த்தும், அவர்கள்மேல் குறைகூறியும் வரும் மனப்பான்மையை வளர்த்துவருவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவ் வியக்கத்தின் செயல்களில் ஒன்றை இம்மகாநாடு முக்கியமாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பிரசாரத்தை அழிக்கத் தங்களால் முடிந்த வகையில் எல்லாம் முயற்சி செய்யுமாறு இம்மகாநாடு கத்தோலிக்க வாலிபர்களைக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானத்தைக் கத்தோலிக்க வாலிபர்கள் மகாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் நேர்ந்ததற்குக் காரணம் இன்னதென்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. இத்தீர்மானத்தில் “சமத்துவமின்மையை உண்டுபண்ணியவர்களும், அதை ஆதரித்து வருகின்றவர்களும் குருக்கள் மார்கள் என்று சொல்லிக் குருக்களை எதிர்த்தும், அவர்கள் மேல் குறை கூறியும் வரும் மனப்பான்மையை வளர்த்துவருவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவ்வியக்கத்தின் செயல்களில் ஒன்றை இம்மகாநாடு முக்கியமாகக் கண்டிக்கிறது” என்று விளக்கமாகக் கூறப்பட்டிருப்பது ஒன்றே போதுமானதாகும்.

இத்தீர்மானத்தைச் செய்தவர்களுக்கு நாம் சொல்லுகின்றோம். சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்பனவைகளை உண்டாக்குவதே எங்கள் இயக்கத்தின் நோக்கம்; இவைகளுக்குத் தடையாக இருப்பவை புரோகிதர்களும், கடவுள், மோட்சம், நரகம், சொர்க்கம், பாவம், பாவமன்னிப்பு, பரலோகம் முதலிய பூச்சாண்டிகளேயாகும். இவைகளின் மேல் மக்கள் கொண்டிருக்கும் மயக்கத்தையும் நம்பிக்கையையும் ஒழித்தால்தான் சுய மரியாதையை உண்டாக்க முடியும் என்றுதான் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகின்றோம். இந்தப் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் எங்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுதும் இப்பிரசாரமே எங்கள் இயக்கத்தின் முதன்மையாக இருந்து வருகிறது. இந்த பிரசாரமானது கத்தோலிக்க இளைஞர்கள் மனத்திலும், சைவ இளைஞர்கள் மனத்திலும், வைணவ இளைஞர்கள் மனத்திலும், முஸ்லிம் இளைஞர்கள் மனத்திலும் மற்ற எந்த இளைஞர்கள் மனத்திலும் புகுந்துதான் தீரும். இந்த உணர்ச்சி இளைஞர்கள் மனத்தில் வேரூன்ற, வேரூன்ற பாதிரிகளுக்கும், பண்டார சன்னதிகளுக்கும், ஜீயர்களுக்கும், முல்லாக்களுக்கும் மற்றுமுள்ள சமுதா யத்தை அரித்துக் கெடுக்கும் விஷப்பூச்சிகளாகிய புரோகிதக் கூட்டங் களுக்கும் செல்வாக்கும், வயிற்றுப் பிழைப்பும் இல்லாமல் போகும் என்பதில் ஐயமில்லை.

சுயமரியாதை இயக்கம், குருக்கள்மார்களின் வஞ்சகச் செயல்களைக் கண்டிக்கின்றதென்று ஆத்திரப்பட்டு வாலிபர்களுக்கு எச்சரிக்கை செய்ய முன் வந்த கத்தோலிக்க கிறிஸ்துவ வாலிபர் மகாநாட்டார், அவர்களுடைய ‘கடவுள் குமாரன்’ என்று சொல்லப்படுகின்ற ஏசுநாதர் புரோகிதர்களைக் கண்டித்திருப்பதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

“நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார்.”

“வஞ்சகர்களாகிய வேத பாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் வெளி வேஷத்திற்காக அதிக ஜெபம் பண்ணுவதுபோலக் காட்டி, விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள்.”

“சாப்பிடுகின்றதும் தண்ணீர் அருந்துவதுமான பாத்திரங்களின் வெளிப்புறத்தை மாத்திரம் சுத்தமாக்குகிறீர்கள்! உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கின்றன.”

“நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்! அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும் உட்புறத்திலோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா அசுத்தங்களும் நிறைந்திருக்கும்.”

“அப்படியே நீங்களும் வெளிவேஷத்தில் நீதிமான்கள் போல மக்களுக்குக் காணப்படுகிறீர்கள்! உள்ளத்திலோ, வஞ்சகத்தினாலும், அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்!” என்று மத்தேயு சுவிசேஷம் 23-வது அதிகாரத்தில் சொல்லப்படும் விஷயத்தை நாம் இக்காலத்தில் எல்லா மதத்தில் உள்ள குருமார்களுக்கும் பொருத்தமானது என்றுதான் சொல்லுகிறோம். எங்கள் இயக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தைக் கண்டிக்கவோ, அல்லது ஒரு வேதத்தைக் கண்டிக்கவோ, அல்லது ஒரு மத குருமார்களைக் கண்டிக்கவோ எழுந்தது அன்று என்று பல தடவை விளக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பகுத்தறிவிற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் மதங்களையும், எல்லா வேதங்களையும் எல்லா மதகுருக்கள்மார்களின் வஞ்சகங்களையும் ஒழிக்கவே செய்யும் என்பதை இப்பொழுதும் கூறுகிறோம்.

உண்மையில் இந்த விஷயங்கள் இளைஞர்களுக்கெல்லாம் தெரியாதவைகளும் அல்ல; புரோகிதர்களின், மோசங்களும் வஞ்சகங்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மதப் புரட்டுகளும் இளைஞர்கள் மனத்தில் இயற்கையாகவே வேரூன்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் இனி எவர் என்ன தீர்மானங்கள் செய்தாலும், பிரசாரம் பண்ணினாலும் இளைஞர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 05.06.1932)

Pin It