கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே, இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.

தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பிலே புரட்சி வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதும் அவ்வார்த்தையில் அடங்கி யிருப்பதாய் நான் கருதவில்லை.

ஆனால், அவ்வார்த்தையானது பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்பட்டு விட்டது. எது போலென்றால் “பூச்சாண்டி” என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்திருப்பதுப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அருத்தம் என்ன? பயன் என்ன? என்கின்ற விஷயம் உணராமல் பயப்படும்படி செய்யப்பட்டாய் விட்டது.periyar with gt naiduபுரட்சி

புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும்.

இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1 மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப்பட வேண்டியதுதான். ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால் அதனால் அனுகூலம் அடைக்கின்றவர்கள் அதை நன்மையான காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச் செய்வார்கள். ஆனால் மனித சமூகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும்.

புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவதாகும். அந்தப்படி இப்போது நம் கண் முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு புரட்சியிலும் எந்தெந்த தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம் பூண்டற்றுப் போய் விட்டது? மாறுதலேற் படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜந்தானே.

சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் “கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள் அம்சங்களல்லவா, கடவுள் அருள் பெற்றவர்களல்லவா? கடவுள் கடாட்சம் பெற்றவர்களல்லவா” இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள் என்பவைகளிலும் புராணங்கள் என்பவைகளிலும் சொல்லப்பட்ட சத்திய வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்க வில்லையா? அரசர் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்க வில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ இருப்பது எங்கள் சுயமரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? ராஜபக்தி, ராஜ வாழ்த்து, அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப் படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல்லையா? ஆகவே அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன்.

இந்த புரட்சியால் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது? யார் வாய் வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது? அரசர்கள் ஒழிக்கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா? அல்லது பாலைவனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ மாற்றவோ யாராவது நம் நாட்டில் கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாஸ்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்னதாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். இது போலவே மக்களில் ஒரு சாராரை “பூதேவர்கள்” (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத சாஸ்திர புராண ஆதாரங்கள், கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று சொல்லி “பூதேவர்கள்” காலில் விழுந்து கும்பிட்டும் “சண்டாளர்களை” தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் “மகாத்மா” என்று அழைக்கப்படுகிறார்களா இல்லையா?

மற்றும் இம்மாதிரி “சண்டாளர்கள்” கண்ணுக்கே தென்படக் கூடாது, கிட்டவே வரக் கூடாது என்று இருந்ததெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்கார், சாஸ்திரிகள், றாவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த ஸ்தானங்களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா?

சமூக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்கள் “நரகத்துக்கு”ப் போய் விடுவார்கள், பெண்ணும் விபசார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் “ரிஷிகள்” வாக்கியங்களையும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு, பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா?

எனவே இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?

ஆகவே அரசியல் துறையிலும் சமூகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம் - செய்தும் விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும், அறிவுடைமையாகவும், மக்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப்படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மற்றும் “உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள்” விஷயம் இன்று உலகில், நம் நாட்டில் என்ன பாடுபடுகின்றது? அக்கடவுளையடையும் மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள் புரட்சி மதப் புரட்சியல்லவா? இதனால் மக்களுக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? ஆகவே இவ்விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப்படுவதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் அவற்றால் யார் யார் நன்மை அடைந்து வந்தார்களோ அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப் படுகின்றதே அல்லாமல் வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள் சமூகத்தில் 100க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் லட்சியம் செய்யக் கூடிய அளவா என்பது விளங்கும். ஆகவே அரசியல், சமூக இயல், அறிவியல் ஆகியவற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு அவை சாதாரணமாய் நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே மேற்கண்ட புரட்சிகள் போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன்? அடிமை ஏன்? என்று கேள்க்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கின்றோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.

பட்டாளம், பீரங்கி, ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி விஷப்புகை, வெடி முதலிய பலமும் ‘கடவுள் அவதாரமும்’ உள்ள அரசனை, நீ வேண்டாம் மூட்டை கட்டிக் கொள் என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டு அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப்பட்டும் போன பிறகு, அதை விட கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான காரியமா இந்த பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்று தான் கேட்கிறேன். முன்னையதைவிட இதற்கு என்ன அதிக தைரியம் வேண்டும்? என்ன அதிக பலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய பாவமான காரியமாகும்? அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவையெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களே யொழிய இவர்கள் இயற்கையா? காற்றைப் போல் இன்றியமையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து காணாமல் போவது போல், மறைவு பட வேண்டியதுதானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக் கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம் தானே? இதை வெளியில் சொல்லுவது தப்பு - சட்ட விரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில் சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம் சிலர் இது சாத்தியப்படுமா? என்று கேட்கலாம். இப்படி கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா தப்பா என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

சாத்தியப்படுமா?

அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு உள்ள படை, பட்டாளம், வெடி குண்டு, பீரங்கிகளை யெல்லாம் விட, இந்தப் பணக்காரனுக்கும் முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனை விட பணக்காரனுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத சாஸ்திர புராணப் பாதுகாப்புகள் இருக்கிறது? அவர்கள் நிலைமையே இப்போது காற்றாய்ப் பறக்கின்றது. பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பளுவு இருக்கிறது? வரிசைக் கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியது தானே? சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும் படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பது தான் சுயமரியாதைக் கட்சியின் லக்ஷியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளை யெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாக பார்ப்பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.

அன்றியும் அரசன் வேண்டாம் என்றாலும், பார்ப்பான் வேண்டாம் என்றாலும், பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேர்களுக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப் பட வேண்டியது அறிவாளியின் கடமை என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவ காருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலை கீழாக கொண்டு போகப் படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும் ஜீவ காருண்யம் என்று எண்ண மாட்டார்கள். பெரும் பான்மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுயநலத்தால் எவ்வளவு கஷ்டப் படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.

“ஐயோ இந்தப் புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே” என்று ஒரு அறிவாளியும் கருத மாட்டான். எப்படி யெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால் திருடன் பாடு பட்டினிதான். அதனால் திருடன் மனம் பதருமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் இதை ஜீவகாருண்ய மென்று நீங்கள் ஒப்பு கொள்ளுவீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கபட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர்களும் சில சமயங்களில் மனக் கஷ்டப்படத்தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர் போவதனால் எத்தனை சங்கராச்சாரிகள் மனம் பதருகிறது? இதில் ஏதாவது நாணையமோ, உண்மையோ இருக்க முடியுமா?

இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும் என்பது நமது கருத்தல்ல ஆனால் பலாத்காரத்துக்கு பலவந்தமாய் வருபவர்களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்கு தயாராய்த்தான் இருக்க வேண்டும். இதற்காக எந்தப் பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது; யாரும் பட்டினி கிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக்காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படுகிறார்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதை விட கவலைப்படுவதை விட அதிகமாகவே அதை காப்பாற்றுவதிலும் கவலைப் படுகிறான்; லாப நஷ்டம் வரும் காலையிலும் அதிக லாபம் வர வில்லையே என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப் படுகிறான். எவ்வளவு இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது; எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங் கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால் உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கம் வழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டே பணக்காரனாக ஆசைப்படுகிறான். ஆகவே பணக்காரத் தன்மை என்பது போய் விடுவதால் மனித சமூகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்து விடாது; பணக்காரத் தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையைப் பொருத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஓய்வற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும்.

மனிதப் பிறவி உயர்ந்த தென்றும், அருமையான தென்றும், மற்ற ஜீவராசிகளை விட மேம்பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது.

இன்றைய மனித சமூகத் திட்டம் சரியென்று ஒப்புக் கொள்வதனால் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்பது சோம்பேரிகள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர்களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு நான் “இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு” என்றுதான் சொல்லுவேன். மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் அவனது இன்றைய வாழ்க்கைத் திட்டமே காரணமாய் இருக்கிறது; மனிதனை விட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக அபுரூபமேயாகும்.

மனிதனை விட மற்ற ஜீவ பிராணிகளில் நாளைக்கு என் கதி என்ன? என் பிள்ளை குட்டி பேத்தி பிதிர் ஆகியவர்களுக்கு என்ன கதி? உலகம் உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்குக் கெல்லாம் மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி தன் சமூகத்தையோ சகல வித அயோக்கியத்தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக அருமையாகவே இருக்கும். மனித சமூகத்தாலேயே எதை எதை இழிவான கொடுமையான குணம் என்று கருதுகின்றோமோ அவை யெல்லாம் உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதை விட மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு தேள் ஆகியவை மேல் பாம்பு தேள் சவாரி செய்கின்றதா? ஆனால் மனிதன் மேல் மனிதன் செய்கின்றானா இல்லையா! ஆகவே மனிதனிடம் என்ன உயர்வான குணங்கள் இருக்கக் காண்கின்றோம்?

அரசன், ஜாதி, மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம் மேல் கண்ட இழிதன்மைக்கும் அக்கிரமத்தன்மைக்கு மனித ஜீவகாருண்ய மற்றத் தன்மைக்கும் அனுகூலமாய் இருக்கின்றதா? இல்லையா?

மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்து “பகுத்தறிவுள்ள” தனது பெண்டு பிள்ளைக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஆனால் மிருகம், பக்ஷி ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது. மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால் தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே மனிதனின் நடப்பையும் கடவுளால் தான் நடைபெறுகின்றது என்று சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியது போலவேதான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளை காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளை காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையுடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

குறிப்பு : 06-12-1932 ஆம் நாள் ஈரோடு சுயமரியாதை இளைஞர்கள் அளித்த வரவேற்பு பத்திரத்திற்கு பதில் அளித்து பேசியது.

(தொடரும்)

(குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932)