கீற்றில் தேட...

மனித சமூகம் அநாகரிக நிலையில் இருந்த காலத்தில் கூட களவுத் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இன்று, தன்னை நாகரிக சமூகம் என்று சொல்லிகொள்ளும் இந்தச் சமூகம் காதலர்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடுகின்றது. தனக்கான வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கும் சமூகம், எப்படி ஜனநாயக சமூகமாக இருக்க முடியும்? இந்திய சமூகத்தின் ஜனநாயகத்தை சிதைக்கும் கொலைக்கருவியாய் இருக்கின்றது பார்ப்பனியம். அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் சாதியால் நஞ்சாக்கி, அவர்களை இயல்பான சமூக மனிதர்கள் என்ற நிலையில் இருந்து கீழிறக்கி, ஆதிக்க மனம் படைத்தவர்களாக மாற்றி வைத்திருக்கின்றது. அந்த ஆதிக்க மனம்தான் பிறப்பின் அடிப்படையில் தன்னுடைய சக மனிதனை தன்னைவிட மேலானவன் என்றும், கீழானவன் என்றும் வேறுபடுத்திப் பார்க்கும் இழிசிந்தனையை அவனுக்குத் தருகின்றது.

amrutha pranay

(கொல்லப்பட்ட பிரணாய் உடன் அவரது காதல் மனைவி அம்ருதா)

ஒருவனை எதிரியாக நினைப்பதற்கு அவனின் சாதியே இந்திய சமூகத்தில் போதுமானதாக இருக்கின்றது. பட்டியல் சாதியினரின் உழைப்பை மட்டும் எவ்விதத் தயக்கமும், கூச்சமும் இன்றி கசக்கிப் பிழிந்து தன்னை வளப்படுத்திக் கொள்ளுபவர்கள், அவர்களை குறைந்தபட்சம் ஒரு மனிதப் பிறவியாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் வரம்பு கட்டுகின்றார்கள். அவர்களின் இடம் சமூகத்தில் எதுவாக இருக்க வேண்டும் என அவ்வப்போது கற்பித்துக் கொண்டே இருக்கின்றார்கள். மலம் அள்ளுவதற்கும், சாக்கடை அள்ளுவதற்கும், செருப்பு தைப்பதற்கும், செத்த மாட்டை தூக்குவதற்கும், இழவுச் செய்தி சொல்வதற்கும், இன்னும் இந்த சமூகம் செய்ய மறுக்கும், இழிவானதாக நினைக்கும் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு மட்டுமே அவர்கள் கடவுளால் இந்த மண்ணில் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்த வேலையைச் செய்தால் மட்டும்தான் இழிவானவர்கள் என்று கிடையாது, அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் அந்தக் குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்டாலே அவர்கள் தங்களுக்கான சமூக வரம்புகள் என்ன என்று அறிந்து, அதன்படி கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என இந்தச் சமூகம் எதிர்பார்க்கின்றது. அப்படி நடந்துகொள்ளும் வரை நீங்கள் ஓர் இந்துவாக இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படுவீர்கள். இந்த எல்லைக்கோட்டை மீறி நீங்கள் ஒருஅடி எடுத்து வைத்தால் கூட இந்து என்ற முகமூடியை கிழித்துக்கொண்டு வரும் சாதிய மிருகங்கள் உங்களை கடித்துக் குதறிவிடும்.

சாதி மாறி காதலித்தல் என்பது அதுவும் சாதிய அடுக்கில் மேல்நிலையில் உள்ள ஒருவர் கீழ்நிலையில் உள்ள ஒருவரைக் காதலித்தல் என்பது, தன்னை ஆதிக்க சாதியாகக் கருதிக் கொள்ளும் ஓர் இந்துவால் நினைத்துப் பார்க்க முடியாத அவமானகரமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. அப்படி காதலிக்கும் ஓர் ஆணையோ, பெண்ணையோ கொலை செய்வது சாதிய அமைப்பை, சுயசாதிப் பெருமையை காப்பதற்காக செய்யப்படும் புனித செயலாகப் பார்க்கப்படுகின்றது. அதனால் தான் அதுபோன்ற கொலைகளை 'கெளரவக் கொலைகள்' என்று இந்திய சாதிய சமூகம் பெயரிட்டு இருக்கின்றது. இது போன்ற சொல்லாடல்களே ஒரு சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமான அநாகரிக நிலையில் இருக்கின்றது என்பதைக் காட்ட போதுமானது.

சாதியைக் காப்பற்ற கொலை செய்வதற்கு இந்தச் சமூகம் மனரீதியாக தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கிக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் படுகொலைகள் நடக்கும்போதும் முற்போக்கு அமைப்புகளின் கடுமையான எதிர்வினையைத் தவிர பொதுச்சமூகத்தில் இருந்துவரும் எதிர்வினை மிகக் குறைவானதே. இது போன்ற கொலைகளை எதிர்ப்பதால் நாளை தங்கள் வீட்டிலும் அதுபோன்ற சாதி மீறிய திருமணங்கள் நடைபெற்றுவிடும், இதனால் சுயசாதிப் பெருமைக்கு பங்கம் வந்துவிடும் எனக் கருதுவதால் பெரும்பாலும் சாதிய சனாதன சிந்தனையில் தோய்ந்துபோன சமூகம் அது போன்ற கொலைகளை எந்தவித அசைவும் இன்றி கடந்துபோய் விடுகின்றது. பொதுச்சமூகத்தின் இந்தக் கண்டுகொள்ளாமைதான் சாதிவெறி தலைக்கேறிய மிருகங்களுக்கு கொலை செய்யும் அளவிற்கு உத்வேகத்தை அளிக்கின்றது.

தெலுங்கானா மாநிலத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக 2018, செப்டம்பர் 14 ஆம் தேதி பிரணாய் என்ற தலித் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். பிரணாயின் மனைவியான அம்ருதா இந்தக் கொலைக்கு காரணமான தனது தந்தை மாருதிராவை தூக்கில் போட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவர் மீது நல்கொண்டா காவல்நிலையத்தில் அம்ருதா கொடுத்த புகாரைத் தொடர்ந்து மாருதிராவும், கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பிரவீன் ஒரு தலித்தாக இருந்ததே அவர் கொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஒரு தலித்தின் கரு தனது மகளின் வயிற்றில் வளர்வதை சகிக்க முடியாத சாதிவெறியனான மாருதிராவ், பிரவீனை குஜராத்தில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து கொன்றிருக்கின்றார்.

இந்தச் சமூகத்தின் அனைத்து தூண்களும் சாதியால் செல்லரிக்கப்பட்டுக் கிடக்கின்றது. சாதிவெறி பிடித்த அயோக்கியர்கள் எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தன்னை சமூகத்தில் மிக உயர்ந்த மனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். நீதிமன்றங்கள், காவல்துறை என அனைத்துமே சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே பெரும்பாலும் செயல்படுகின்றன. காதலர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் இந்த அரசுகள் வழங்குவது கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் பல நூறு பேர் சாதி ஆணவ படுகொலை செய்யப்படுகின்றார்கள். ஆனால் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு சிலரே அரிதாக தண்டிக்கப்படுகின்றார்கள். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கே ஒரு பெரும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டியுள்ளது. அப்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் காவல்துறையின் உதவியுடன் சாட்சிகள் மிரட்டப்படுகின்றார்கள்.

Amrutha and Kousalya

(அம்ருதாவிற்கு தைரியமூட்டும் கவுசல்யா)

கோகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த அவரது தோழி ஸ்வாதி பிறழ்சாட்சியாக தற்போது மாறியிருக்கின்றார். காவல்துறையில் இருக்கும் கவுண்டர் சாதிவெறியன்களின் துணையுடன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து கவுண்டர் சாதிவெறியன் யுவராஜை தப்புவிக்கும் வேலையை இந்த அரசு செய்து வருகின்றது. இதுதான் இந்திய சமூகத்தின் உண்மை நிலை. நாளை மாருதிராவ் கூட இதே போல தன்னுடைய பணபலத்தையும்,சாதிபலத்தையும் பயன்படுத்தி தப்பிக்க முடியாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஒரு சாதி வெறியனுக்கு இன்னொரு சாதி வெறியன் எப்போதுமே துணையாக இருப்பான். எப்படி ராமதாஸ் தலைமையில் அனைத்து சாதிவெறியர்களும் ஒன்றிணைந்தார்களோ, அதே போல ஒன்றிணைந்து இது போன்ற சாதிவெறி பிடித்த நாய்களைக் காப்பாற்ற முற்படுவார்கள். அவர்களைப் பொருத்தவரை இது சாதிய ஆணவப் படுகொலை கிடையாது, ‘கெளரவப் படுகொலை’. அதனால் நிச்சயம் காப்பாற்றுவதற்கு எல்லா வகையிலும் உதவுவார்கள்.

கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம் மட்டுமே சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்துவிட முடியாது. இந்தச் சமூகத்தின் சாதிய மனநிலையை அடிப்படையில் மாற்ற வேண்டும். சாதிமறுப்புத் திருமணங்களை மிகத் தீவிரமாக முற்போக்கு இயக்கங்கள் கையில் எடுக்க வேண்டும். சும்மா வெறுமனே வாயில் சாதி ஒழிப்பை பேசுவதை நிறுத்திவிட்டு, தங்கள் அமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக சாதிமறுப்புத் திருமணம்தான் செய்யவேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முற்போக்கு அமைப்புகள் அவர்களுக்கு கைகொடுத்து உதவ வேண்டும். இது போன்று செயல்படுவதால் சாதிவெறி பிடித்த நாய்களுக்கு ஓர் அச்ச உணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். காதலர்களும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்ளும்போது அதன் சமூக விளைவுகளை மனதில் வைத்து தங்களுக்குத் துணையாக முற்போக்கு அமைப்புகளை அழைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் மட்டுமே உங்களையும், உங்கள் காதலையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இந்திய சாதிய சமூகத்திற்கு நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் நாம் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கின்றது. அது அகமணத் திருமணத்தின் மூலமாக மட்டுமே முடியும். சாதியை வேரறுக்கவும், சாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்கவும் ஒரு பெரும் பிரச்சார இயக்கமாக இதை முற்போக்கு அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை இழிவான ஒன்றாக, அருவருப்பான செயலாக பார்க்கும்படி இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்; கற்றுக் கொடுப்போம்.

- செ.கார்கி