இரண்டு மனங்கள் ஒன்று கலந்த பிறகு அவர்கள் வாழ்வில் ஒன்று சேரப் பெரும் தடையாக இருப்பது பெரும்பாலும் சாதி! சாதி வன்மத்தோடு குறுக்கிடும் போது அந்தக் காதலர்கள் தனித்து விடப்படுகின்றனர். அவர்களால் மட்டுமே அல்லது அவர்களின் நண்பர்களால் மட்டுமே அதனை எதிர்கொள்ள முடிவதில்லை. சாதி ஒழிப்பு கோட்பாட்டளவில் அவர்களைக் கொஞ்சமும் போய்ச் சேரவில்லை என்பதால் சாதியை எதிர்கொள்ளும் வலிமையற்றுப் போகின்றனர். இந்நிலையில் என்ன செய்வது என்ற கையறு நிலையில் உள்ள காதலர்கள் இப்போதெல்லாம் சாதி ஒழிப்பு, முற்போக்கு இயக்கங்களை நாடி வருவது ஒப்பளவில் பெருகியுள்ளது. தோழர்கள், இயக்கங்கள் இதோ நாங்கள் உள்ளோம் என்று தங்கள் சக்தி மீறிச் செயல்படுவதன் வெற்றி என்று இதனைக் குறிப்பிட்டால் தவறில்லை. நம் உழைப்பால், பொறுப்பால் ஏற்பட்டுள்ள நல்விளைவு!

இதன் மற்றுமொரு விளைவை, அதாவது எதிர்விளைவை நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. அந்த விளைவைத்தான் இப்போதைய இளமதி – செல்வம் நிகழ்வில் கண்டிருக்கிறோம். சாதிவெறியர்கள் அல்லது சாதிக் கட்சிகள் அணிதிரண்டு பெண்ணின் (இடைநிலைச் சாதி எனத் தனியே குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை) வீட்டையே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோர் இயல்பாகவே அதே சாதி வன்மத்தில் பெண்ணின் உணர்வைக் கொல்லவும், உச்சத்தில் பெண்ணையே கொல்லவும் செயலாற்றுகிறார்கள். இப்படி உள்ளவர்களுக்கு அந்தச் சாதி வெறியர்கள் பக்கபலமாகக் களத்திலும் நின்று... சட்டத் தளத்திலும் துணை நிற்பதாக உறுதி கொடுத்துத் துணிவு கொடுக்கிறார்கள். அதைத் தங்கள் கடமையாகவே இறுதிவரை உடனிருந்து செய்தும் முடிக்கிறார்கள். சோர்வதில்லை... பின்வாங்குவதில்லை! ஒருவேளை பெற்ற பாசம் சாதி தாண்டி சில பெற்றோரிடம் வேலை செய்வதும் உண்டு. அங்கெல்லாம் இந்தச் சாதிக் கூட்டங்கள் உட்புகுந்து அந்தப் பெற்றோரை அச்சுறுத்திப் பல வழியிலும் பணியச் செய்கிற போக்கும் இன்று வளர்ந்து நிற்கிறது. இதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

இந்த விளைவை நாம் இளவரசன் திவ்யா நிகழ்வில் பார்த்தோம். திவ்யா இளவரசன் போன்று சாதி மறுப்பு திருமணங்கள் செ‌ய்‌த பல இணையர்கள் அதே நகருக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சாதிவெறிக் கூட்டம் திவ்யா குடும்பத்தைத் தம் கட்டுபாட்டுக்குள் செயல்பட வைக்கத் தொடங்கியதுதான் இளவரசனை நாம் இழக்கக் காரணமானது.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். திவ்யாவை இளமதியோடு ஒப்பிடுகிறேன் பேர்வழி என்று திவ்யாவைத் தவறாக மதிப்பிடுவதைக் காண முடிந்தது. திவ்யா இளவரசன் நினைவில்தான் உள்ளார். (நான் நேரில் சந்தித்தேன். அவரிடம் பொய் இல்லை) ஆனால் தன்னால் அப்பாவை இழந்து நிற்கும் தாய், வருமானம் இன்றித் தவிக்கும் குடும்பம், தம்பியின் படிப்பு வேலை இவை திவ்யாவை அழுத்திக் கொண்டுள்ளன. ஒன்றை மறந்து விடாதீர்கள்... அவர் அப்பாவும் திருமணம் ஆன கையோடு அரிவாளை எடுத்துக் கொண்டு இவர்களைத் துரத்தவில்லை. சாதிவெறிக் கூட்டம்தான்... பாமகவேதான் தாம் நினைத்தபடி அவரின் கௌரவம் போய்விட்டது என்று அவரை நம்ப வைத்தது. அவரை அது தற்கொலை செ‌ய்‌து கொள்ளத் தூண்டியது. அடுத்தடுத்து இந்தத் தற்கொலையே எல்லா அநீதிகளுக்கும் நியாயமாக்கப்பட்டது. அந்தளவில் சாதி வெறியர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

திவ்யா சொன்ன ஒரு வார்த்தை “என்னைக் கடைசியாக இளையா (இளவரசன்) முகத்தைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள்” என்பது! செய்தவர்கள் யார் எனபது நமக்குத் தெரியும். இது அவரின் வாழ்நாள் வலி! சாதிய அமைப்போடு ஒரு பெண்ணின் நிலையைப் பொறுத்திப் பார்க்கத் தவறுவது தற்குறித்தனமே! பொதுவானவர்கள் அப்படிக் கருதினால் புரிந்து கொள்ளலாம். சாதி ஒழிப்பு இலட்சியம் உள்ளவர்கள் இப்படிக் கருதுவது ஏற்புடையதல்ல.

திவ்யா இன்று எப்படியேனும் படித்தாக வேண்டும். தம்பியை வேலையில் அமர்த்த வேண்டும் என்று படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் காதல் அரண் செயலி வழி எங்கள் தனிப்பட்ட அனுபவம் ஒன்று! வீட்டுச் சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்கச் சென்றோம். அந்தப் பெண்ணே அனுப்பிய குறுஞ்செய்திகள், குரல் பதிவுகள் போன்ற ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. அவ்வளவு தெளிவான, துணிவான பெண்! எனக்கு என் வீட்டில் திருமணம் செ‌ய்‌து வைத்தால் கூட நான் அங்கிருந்து உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன் என்று சொன்ன உறுதிமிக்க பெண்! நாங்கள் செய்த முயற்சிகளால் அந்தப் பெண்ணை நேரில் காவல் நிலையம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. வழக்கம் போல் காவல் நிலையம் கட்டப் பஞ்சாயத்துச் செய்தது. இறுதி வரை பெண்ணை அழைத்து வரவில்லை பெண்ணின் பெற்றோர். இறுதியில் நாம் வேறு ஒரு காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெண்ணை அழைத்து வருவார்கள் என்று காவல்துறைக் கண்காணிப்பாளரே கொடுத்த உறுதியின் அடிப்படையில் காத்திருந்தோம். வரவே இல்லை.

அடுத்த நாள் பெண் வழியே வந்த செய்தி : என் பெற்றோர் என்னை அடைத்து வைக்கவில்லை; அவனை விரும்பவுமில்லை என எழுதிக் கொடுத்து விட்டாராம். பிறகுதான் காரணம் அறிந்தோம், சாதிக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதிவெறிக் கூட்டம் பெண் வீடு வந்து குடும்பத்தையே அச்சுறுத்தி (குடும்பமும் சேர்ந்து நாடகம் நடத்தி இருக்கலாம்) பலவகையில் மிரட்டியதால் அவர் அந்த கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதே நிலையில்தான் நேற்றைய முன்தினம் நமது இளமதியும் இருந்தார். இதை யாரும் யாருக்கும் விளக்க வேண்டியதே இல்லை. இந்தப் படிப்பினைகள் கொண்டு நாம் இனி செயலாற்ற வேண்டும். நாம் வேகமாக ஓடுகிறோம்... அதைவிட வேகமாக அவர்கள் நமைத் துரத்துகிறார்கள். இதோ நம்மைத் தாண்டியும் எங்கோ தொலைவாக ஓடியும் விட்டார்கள். நம் கண்ணுக்கு அவர்கள் எட்டவே இல்லை. சாதி ஒழிப்பு ஆற்றல்களின் செயல்கள் பெருகப் பெருக சாதிவெறி ஆற்றல்கள் நம்மை விஞ்சும் மிரட்டும் செயல்களுக்குத் தாவி விட்டார்கள். 

இப்போது நாம் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பெண்ணின் உறுதிதான் நமக்கு இறுதியிலும் இறுதியாக வெற்றி ஈட்டித் தரும். அந்தப் பெண்கள் காட்டும் காதல் உறுதி பிரமிக்க வைக்கிறது. சாதி வன்மம் முன்னால் மட்டுமே தோற்றுப் போகிறார்கள். மிரட்டலுக்கு அஞ்சி உயிர் வாழவே விட மாட்டார்கள் என்று முடிவெடுப்பது ஒருவகை. பெற்றோரின் பாசப் பசப்பல்களுக்கு இரக்கப்பட்டு ஏமாந்து ஒப்புக் கொள்வது இன்னொரு வகை. இரண்டும் கலந்தும் நடைபெறுவதுண்டு. பெண் சாதி ஒழிப்பு குறித்தோ பெண் விடுதலை குறித்தோ கொஞ்சமேனும் பயின்றிருந்தால் இது நடக்குமா? நடக்கவே நடக்காது. இன்னும் வேகமாகக் காதலர்களிடையே இளைஞர்களிடையே இந்தக் கருத்தியல்களைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

தந்தை பெரியாரைத் தாண்டிப் பெண் விடுதலை பேசியவர்கள் யாரும் இல்லை. தாண்டி என்றால் அவரின் எல்லையை யாரும் தாண்டவில்லை... இன்று வரை! இளமதி போன்றவர்கள் பெண் விடுதலைச் சிந்தனையில் ஊன்றி வளர்க்கப்பட்டிருந்தால் என்ன நேர்ந்தாலும் நம்மிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். பெண் விடுதலைக்கும் சாதி ஒழிப்புக்குமான உறவை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். காதல் இணையர்களிடம், இளைஞர்களிடம் சாதி ஒழிப்பு, பெண் விடுதலைச் சிந்தனைகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இன்னும் வேகமாக அவர்களை நாம் சென்றடைய வேண்டும். அதற்கு உடனே வழி காண வேண்டும்.

பெற்றோர் அந்த நேரத்தில் காட்டும் பாசம் பெற்ற பாசம் அல்ல சாதிப் பாசம், சாதிக் கௌரவம் என்பதை பெண்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் ஒவ்வொரு இணையும் அதில் காணும் போராட்டம், வெற்றி எ‌ன்பது வெறும் தன் தனிப்பட்ட வாழ்விற்கானது அல்ல... அது அவர்கள் சமத்துவம் படைக்கச் செய்யும் பெரும் பங்கு என்பதை உணரச் செய்ய வேண்டும். சாதியற்ற சமூகம் படைக்கும் நோக்கத்தை அவர்களுக்கு விதைத்தாலன்றி சாதிய வன்மத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் கிட்டாது.

இ‌னி இது போன்ற இணையர்களுக்கு இணையேற்பு செய்து வைப்பது மட்டும் நம் வேலையல்ல. நாம் அவர்களுக்கென்று பயிலரங்கங்களை நடத்தி இந்த அடிப்படைகளை எடுத்துரைக்க வேண்டும். பெரியாரை அறிமுகம் செய்ய வேண்டும். பெரியாரைப் படிக்கச் செய்ய வேண்டும். இந்தத் தளத்தில் பெரியாரை விட்டால் நாம் தோற்றுப் போவோம். அதேபோல் அண்ணல் அம்பேத்கரை அறிமுகம் செய்ய வேண்டும். அவரை ஆழமாகக் கறக்கச் செய்ய வேண்டும். சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக் கருத்துகளை பலவகைக் கலை வடிவங்களில் நாடகம், குறும்படம், வகுப்புகள் வழிக் கொண்டு செல்ல வேண்டும். வீட்டில் நெருக்கடி ஏற்பட்ட பிறகே நம்மை அணுகுகிறார்கள். அதற்கு முன்பே அவர்களை நாம் சென்றுசேர வழி காண வேண்டும். அவர்களை ஒன்றுகூடச் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இதைச் செய்ய வேண்டும். அதை அக்கறையுள்ளோர் கூடிப் பேசலாம். திட்டம் வகுக்கலாம்.

நமக்கு எதிரானவை சாதிச் சங்கங்கள், சாதிக் கட்சிகள், சாதியப் பெற்றோர்கள், சாதிச் சொந்தங்கள் மட்டும் அல்ல... அதிகார வர்க்கம், காவல்துறை, நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஆணையங்கள் கூட நமக்குச் சார்பாக இல்லை, இருக்க விடுவதில்லை, இருக்கவும் முடியாது. சமூக கட்டமைப்பே அத்தகையதுதானே!

இளமதி நாம் செய்ய வேண்டிய மலையளவுப் பணிகளை நினைவு படுத்துகிறார்.

முன்னேறுவோம்! கற்பிப்போம்! அ‌ணி திரட்டுவோம்! செயல்படுவோம்!

- தி.சுதா காந்தி, வழக்கறிஞர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It