saraswati murderகண்கட்டாய் காவல்துறையின் நடவடிக்கை!
கள்ள மவுனம் காக்கும் அரசியல் கட்சிகள்!
கட்டுடைக்கும் "அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்"

திருநாவலூர் காவல் நிலையம்
குற்ற எண் 262 /2021 ம்
மறுக்கப்பட்ட மானுட உரிமையும், தொடரும் மாண்பின் கொலைகளும் மௌனமாய் அரசியல்கட்சிகள்...

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கட்சிகள் நடத்த மட்டும்தானா?
தமிழ் சமூகத்தில் மறிக்கப்பட்ட மானுட மாண்புகள்?...
(தொடரும்)

- என்ற நமது விசாரணைகளுக்கு இடையே "அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் " - உண்மை அறியும் குழுவின் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவியானந்தல் கிராமத்தில் நர்சிங் படித்து வந்த சரஸ்வதி என்கிற மாணவி ஏப்ரல் 2 அன்று படுகொலைச் செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து ஏப்ரல் 19 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ் .வாலண்டினா, மாநில செயலாளர் வி. பிரமிளா, மாவட்டச் செயலாளர் ஏ.அலமேலு, மாவட்டத் தலைவர் தேவி, மாவட்ட நிர்வாகிகள் ஆ.சக்தி, தனலட்சுமி, சந்திரா ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு தேவியானந்தல் கிராமத்திற்கு சென்றது.

சரஸ்வதியின் பெற்றோர்கள் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் இப்போது குற்றவாளி என காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிற ரங்கசாமி, ரவீந்திரன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் வீரமணி - ஜெயகாந்தி தம்பதியர்களுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் சரஸ்வதி வயது 18. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்.

சரஸ்வதியும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ரங்கசாமியும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் இவர்களது காதலுக்கு சரஸ்வதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் சரஸ்வதியும் ரங்கசாமியும் இரண்டுமுறை வீட்டை விட்டு வெளியே சென்று திருப்பூரில் பல நாட்கள் தங்கி இருந்துள்ளனர். சரஸ்வதியின் காதலை மையமாக வைத்தே அவளது பெற்றோர் ஜெயகாந்தி - வீரமணிக்கிடையே கடந்த இரண்டாண்டுகளாக அடிக்கடி சண்டை வந்துள்ளது.

சரஸ்வதியின் தந்தை வீரமணி குடிப்பழக்கம் உள்ளவர். அவரின் அடியையும், துன்புறுத்தலையும் பொறுக்க முடியாமல் சரஸ்வதியின் தாயார் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

அதேசமயம் தனது மகள் சரஸ்வதி தலித் இளைஞன் ரங்கசாமியை காதலிப்பதற்கு தன் மனைவி ஜெயகாந்தியும் அவனது பெற்றோரும், தான் காரணம் என கருதி ஜெயகாந்தியின் பெற்றோர் வீட்டை வீரமணி ஓர் ஆண்டுக்கு முன்னதாக தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

அதன்பிறகே ஜெயகாந்தி அவ்வூரில் குடியிருக்க முடியாமல் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்று ராமச்சந்திரா மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணியில் சேர்ந்து குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சரஸ்வதியின் திருமணத்தை முன்னிட்டு வீரமணியும், ஜெயகாந்தியும் இணைந்துள்ளனர். தற்போதும் கூட சரஸ்வதியின் பெற்றோர்கள் ஒற்றுமையுடன் இல்லை என்பது அவர்கள் இருவருடனும் பேசியதிலிருந்து தெரிய வருகிறது.

சரஸ்வதியின் கொலைக்குப் பிறகு அவளின் தாய் வழி தாத்தா, பாட்டி அந்த ஊரை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் என் பேத்தியை அழைத்துவந்து படுகொலை செய்து விட்டீர்கள் என்று அவர்கள் கதறியதாகவும் ஜெயகாந்தியின் தாயார் கூறினார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊரான தேவியானந்தல் கிராமத்திற்கு சரஸ்வதியை அழைத்து வந்து அவரது பெற்றோர்கள் காதலன் ரங்கசாமியை மறந்துவிட வேண்டும். உனது காதலை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் உறவுக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர்.

சரஸ்வதியை அவளுக்கு நிச்சயம் செய்த மணமகனின் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். அப்போது சரஸ்வது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள மணமகனின் போனிலிருந்தே ரங்கசாமியிடம் பேசியிருக்கிறார் என தெரியவருகிறது. ஏப்ரல் 1 ஆம்தேதி அந்த மணமகனே சரஸ்வதியை அழைத்துவந்து தேவியானந்தல் கிராமத்தில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

மரணத்தில் சந்தேகம்

இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி சரஸ்வதி அவள் வீட்டு அருகே கொலைச் செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். காவல் துறைக்கு முதலில் சரஸ்வதியின் அப்பாவின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.

பின்பு ஏப்ரல் 15 ம்தேதி இதுதொடர்பாக சரஸ்வதியின் காதலன் ரங்கசாமி அவனது, தம்பி மற்றும் நண்பர் மூன்று பேரை திருநாவலூர் காவல் நிலைய காவல்துறை கைது செய்துள்ளது.

முதலில் 262 / 21, 174 ( 1 ) என்ற குற்றப் பிரிவின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது. பிறகு 602 ,294 (பி ), 302, 404, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. சரஸ்வதியின் கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருவரும் காதலித்தது, காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு இருந்தது. ரங்கசாமி உடனான காதலை முறித்து வேறு ஒரு பையனுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது, திருமண ஏற்பாட்டிற்கு பிறகும் காதலர்களின் தொடர்புகள் தொடர்ந்தது போன்ற சம்பவங்களால் சரஸ்வதியின் பெற்றோர்களே சென்னையிலிருந்து அவளை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் தெரிவித்தனர் .

காதலன் ரங்கசாமி தன்னை காதலித்து விட்டு தற்போது வேறு ஒரு பையனை திருமணம் செய்துக் கொள்ள முன் வந்தது குறித்து கோபப்பட்டும் கொலை செய்திருக்கலாம்
என்ற சந்தேகத்தையும் சிலர் தெரிவித்தனர்.

எனவே சரஸ்வதியின் காதல் முதல் பெற்றோரின் பிரிவு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டிலேயே அவளை அனுப்பி வைத்தது மற்றும் மரணம் வரை பல்வேறு சந்தேகங்கள் உண்மையறியும் குழு விசாரித்ததில் எழுந்துள்ள நிலையில்,

1) சரஸ்வதியும் ரங்கசாமியும் காதலித்தது முதல் இறப்புவரை உள்ள சந்தேகங்களை முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் இப்பிரச்சனையில் ஒரு பெண் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறாள். ஒரு பெண்ணின் கொடூரக் கொலையின் மீது மனிதத்துவம் இன்றி சாதீய சாயம் பூசி பிரச்சனையின் தன்மையை திசைத் திருப்புவதை ஜனநாயக மாதர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். சரஸ்வதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இத்தீரர்களின் செயல்பாடு மானுட மாண்பில் நம்பிக்கையுற வைக்கிறது.

இங்கு தேவை சட்டத்தின் மீதான நம்பிக்கையும், என்ன செய்யப்போகிறது அரசு?

பார்வையாளர்களாக பொதுச் சமூகம்?

பெண் சுயமாக சிந்திப்பதே குற்றமா?

இருபத்தோராம் நூற்றாண்டில் பெண் சுதந்திரம் கேள்விக்குறிதானா?

பெண்ணின் மீதான மரணம்தான் மானுட நாகரீகமா? தொடரும் நம் விசாரணையில் கொல்லப்பட்ட சரசுவதியின் குடும்பத்தை முதலில் சந்தித்தோம். சரசுவதி கொல்லப்பட்ட விவரத்தைக் கேட்டோம். ஜெயகாந்தியும், வீரமணியும் சொன்ன பதில்கள்

ஜெயகாந்தி:

“என் கணவனும் நானும் வீட்டிற்கு வெளியில் கட்டிலில் படுத்திருந்தோம். என் பொண்ணு சரசுவதியும் மகனும் வீட்டிற்குள் படுத்திருந்தனர். விடியற்காலை 4 மணி இருக்கும் எழுந்து உள்ளே படுக்க சென்றோம். அப்பொழுது உள்ளே மகள் இல்லை. எங்கே என்று தேடிப்பார்த்தோம். அழுது கத்தி அழைத்தேன் ஒரு சத்தமும் இல்லை. அப்பொழுதுதான் 50 அடி தொலைவில் என் பொண்ணு கிடப்பதை என் மகன் அழைத்துக் காட்டினான்.

பார்த்தால் கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பி பாத்தோம். எந்த சலனமும் இல்லை. வீட்டிற்கு பின் புறத்தில் 100 அடி தொலைவில் அவளின் செருப்பு இருந்தது. அங்குதான் அவர்கள் பேசியிருக்கிறார்கள். “என் பொண்ணைக் காதலிக்கச் சொல்லி மிரட்டி தொந்தரவு செய்திருக்கிறான். என் மகள் அதை என்னிடம் சொல்லவில்லை. அவளை கொலைசெய்து வீட்டின் அருகில் 60 அடி தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளான் என்றார் ஜெயகாந்தி.

பக்கத்திலேயே அவர்கள் பேசியிருப்பதாக சொல்கிறீர்கள், உடல் அருகிலேயே கிடக்கிறது. உங்களுக்கு சத்தம் ஏதும் கேட்கவில்லையா? என்றோம்.

எப்பொழுதும் இரவில் 3 முறையாவது எழுவோம். அன்றைக்கு இருவருமே அசந்து நல்ல தூங்கிவிட்டோம். நடந்தது தெரியவில்லை என்றார்.

தந்தை வீரமணி:

“அண்ணங்காரகுப்பம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த எங்களின் சொந்தத்திலுள்ள மாப்பிள்ளையை பார்த்தோம் மாப்பிள்ளை பெயர் மகேந்திரன். மகளுக்கு நிச்சயம் செய்துவிட்டோம். அடுத்து கொஞ்ச நாளில் திருமணம் நடக்கப்போகிறது. திருவிழாவிற்காக மகளைக் கொண்டுவந்து விட்டுட்டு போகச் சொல்லி மாப்பிள்ளையிடம் நான்தான் சொன்னேன். அவரும் கொண்டுவந்துவிட்டுவிட்டு சென்றார்.

அடுத்த நாள் இப்படி இறந்துகிடக்கிறாள். அன்றிரவு அந்த பையன் அழைத்துதான் இவள் போயிருக்கிறாள். அவர்கள் அடித்துக் கொலை செய்து தூக்கிக் கொண்டுவந்து இங்கு போட்டுவிட்டு சென்றுள்ளனர்." உடலை பார்த்ததும் கதறி அழுதோம்.

காவல்துறை வந்து எடுத்துச் சென்றனர். நாங்கள் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. போலீசே சந்தேக மரணம் என்றுதான் பதிவு செய்தனர் கொலை நடந்தது ஏப்ரல் இரண்டாம் தேதி காவல்துறையோ எங்கள்மீது சந்தேகம் கொண்டு தொடர்ந்து அழைத்து விசாரித்து வந்தனர்.

15 நாட்களுக்கு பின்புதான் போலீசே அந்த பசங்கல கைதுசெய்திருக்காங்க. நாங்கள் யார் பெயரையும் கொடுக்கவில்லை. அந்த பையன்கிட்ட இருந்து அடிக்கடி போன் வந்துள்ளதை வைத்து விசாரித்திருக்கிறார்கள். அந்த பையன்களே ஒத்துக்கொண்டார்கள் என போலீஸ்காரர்கள் சொன்னார்கள் பல கட்சிக்காரங்க வந்து எங்கள பார்த்தாங்க." என்றார்.

ஊரில் உள்ள வன்னியர் மக்களுடன் பேச்சுக் கொடுத்தோம்.

சிலர் பதட்டமாகவே “எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் வேலை வெட்டிக்குப் போய்விட்டோம். அன்று ஊரிலேயே நாங்கள் இல்லை என்று சொல்லி பல பேர் ஒதுங்கிக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் “நாங்கள் சொன்னா எங்களையும் கொல பண்ணவா? எதுக்கு வம்பு எனக்கிருப்பது ஒரே பையன், நீங்க கௌம்புங்க“ என்றார்.

அடுத்துக் கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களான, ரங்கசாமி (21), அவரின் தம்பி கிருஷ்ணசாமி (15), ரவீந்திரன் (22) ஆகியோர் தற்போது விழுப்புரம் சிறையில் உள்ளனர். ரங்கசாமியின் குடும்ப நண்பர் ரவீந்திரன். முதலில் ரவீந்திரன் குடும்பத்தை சந்தித்தோம்.

ரவீந்திரனின் அம்மா கனகவல்லி, அப்பா மற்றும் இரு அண்ணன்கள், மூத்த அண்ணனின் மனைவி ராதிகா ஆகியோர் இருந்தனர். எங்களை பார்த்தவுடன் கதறி அழுது கும்பிட்டார் கனகவல்லி.

“ஒன்னும் செய்யாத என் பையன இப்படி பொய் கேசு போட்டு ஜெயில போட்டுட்டாங்களே, என் பையன் ஏதும் அறியாதவன், ஆந்திராவிற்கு நெல் அறுவை மிஷின் ஓட்டும் டிரைவராக இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் செய்துவிட்டோம். வரும் வைகாசி 30 அன்று கல்யாணம் வச்சிருந்தோம். இப்படி அவன் வாழ்க்கையை நாசம் செஞ்சுட்டாங்களே அம்மா. வீட்டில் தூங்கியிருந்தான் என் பையன். ராத்திரி 9.45 மணிக்கு போலீசு வந்தாங்க. ரவீந்திரன அனுப்புங்க சும்மா விசாரிச்சுட்டு உடனே அனுப்பிடறோம். ஒன்னும் பண்ணமாட்டோம்“ னு சொல்லிதான் அழைச்சுட்டு போனாங்க.

உடனே பின்னாடியே போயி உளுந்தூர்பேட்டை, நாவலூர் ஸ்டேசன்ல தேடிப்பார்த்தோம். அங்க இல்லனு சொல்லிட்டாங்க. எங்க ஊருக்கு இந்த இரண்டு ஸ்டேசன்தான் வரும். ஆனா. எங்க பையன எடக்கல் ஸ்டேசன்ல வச்சு அடிச்சுக் கொடுமை பண்ணிருக்காங்க. அடிச்சதுல முகம் கை கால், பிறப்புறுப்பு எல்லாம் வீங்கி கிடக்குதாம். அடுத்த நாள் காலைலை நாங்க போனா எங்கள பாக்க உடல போலீசு. அங்கிருக்கிற ஒரு அதிகாரிக்கு 5000 ரூ பணம் கொடுத்த பின்னாடி எம் பையன காட்டுனாங்க.

அவன் எங்கள பார்த்ததும் தலைய தலைய அடிச்சுக்கிட்டு அழுதான். போலீசு “நாங்க சொல்ற மாதிரிதான் சொல்லனும்னு சொன்னத என் புருஷன் காதால கேட்டிருக்காரு. இப்படி கொலபழி போட்டுட்டாங்களே என் பையன் எப்போ வருவான், நீங்க உதவுங்க." என்று அழுதார்.

ரவீந்திரனும் கொலை கேசுல சேத்திருக்காங்களே எதனால்?

ரவீந்திரன் அண்ணி ராதிகா

சரசுவதியும் ரங்கசாமியும் 5 வருஷமா காதலிச்சாங்க இது ஊருக்கே தெரியும். இரண்டு முறை கூட்டிட்டு ஓடிருக்காங்க. ஊர்க்காரங்களே அழைச்சிவந்து பிரிச்சு வச்சாங்க. அவன் பேர அந்தபொண்ணு நெஞ்சுல பச்ச குத்தியிருக்கு. அவள் பேர அவன் நெஞ்சுல குத்தியிருக்கான். அந்த பொண்ணும் ரங்கசாமியும் என் மச்சினன் போனிலிருந்துதான் அப்பப்போ பேசுவாங்க. அந்த பொண்ணு இந்த ரங்கசாமிகூடதான் வாழுவேன்னு பிடிவாதமா இருந்துச்சு.

கடைசியா அவளுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்கன்னு தெரிஞ்சதும் காதலிச்ச ரங்கசாமி மருந்து குடிக்க போயிட்டான். என் மச்சினன் ரவீந்திரன்கிட்ட வந்து அவங்க அப்பா, அம்மா அழுதாங்க என் பையன காப்பாத்து, அந்த பொண்ணால இவன் செத்துடுவான் போல, வா" என்று வந்து அழைச்சிட்டுபோனாங்க.

ரவீந்திரன் ஆஸ்பிடலுக்கு அழைத்துச்சென்று காப்பாத்தி விட்டான். உயிரைக் காப்பாத்துனது குத்தமா? இந்த பழியை வைத்துதான் போலீசு ரவீந்திரனை பொய்கேசுல சேத்திருக்காங்க.

ரங்கசாமி தம்பி சின்ன வையசு மைனர். அந்த பையனுக்கும் இதுக்கும் என்னங்க சம்மதம்? அந்த பையன கொல கேசுல போட்டிருக்காங்களே அவன் வாழ்க்கை என்னாகிறது? கல்யாணமாகுறவரு இப்போ ஜெயில்ல இருக்காரு. கொரோனான்னு ஜெயில்லயும் பார்க்க விடல. இதுக்கெல்லாம் யார் பதிலு சொல்றது?" என ஆத்திரத்துடன் கொட்டித்தீர்த்தார்.

அடுத்து, ரங்கசாமியின் குடும்பத்தை பார்க்கச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது.

அருகில் உள்ள பொது மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினோம். “சரசுவதி கொலை எப்படி நடந்துச்சு? எனப் பேச்சுக் கொடுத்தோம். அப்பகுதியிலுள்ள பெண்கள், ஆண்கள் தயக்கமில்லாமல் கோபத்துடன் பேசத் தொடங்கினார்கள். “இந்த பசங்க கொல செய்யுற பசங்க இல்லிங்க. இரண்டு பேரும் லவ் பண்ணாங்க. ஓடிப்போயி திருப்பூரில் தங்கி பனியன் கம்பனியில வேலை பார்த்தாங்க. அந்த பொண்ணுக்கு நகை துணி எடுத்துக்குடுத்து நல்லா பார்த்திருக்கான். ரங்கசாமி நல்ல சம்பாதிக்கிற பையன். பொறுப்பா அவன் உண்டு தொழிலுண்டுனு இருந்தான். அந்த பொண்ணுக்காக இவன் மருந்து குடிக்க போனான்.

அவன் எப்படிங்க அந்த பொண்ண கொன்னுருப்பான்? சொல்றதுக்கு ஒரு மனசாட்சி வேணாமா? அப்படியே கொன்னிருந்தாலும் நாங்க சொல்லிடுவோம். தப்பு செஞ்சவன் தண்டனைய அனுபவிக்கட்டும்னு சொல்லுவோம். செய்யாத பழிக்கு தண்டனை அனுபவிக்கனுமா? அந்தப் பொண்ணு செத்து போச்சே னுதான் கொலப் பழியை சுமந்துகிட்டு ஊரே அமைதியா இருக்கோம். என்னன்னு போலீசு விசாரிக்காம இந்த பசங்க மேல கேசுபோட்டு ஒத்துக்கச் சொல்லி அடிச்சி ஜெயில வச்சி, இப்போ எங்க ஊரே கொல செஞ்ச ஊருன்னு வெளியில பேசுறாங்க எனப் பெண்கள் கூறினர்.

அந்த ஊர் முக்கியஸ்தர் சிலரை விசாரித்தோம். “அந்த பொண்ணும் பையனும் விரும்புனது உண்மை. வெளியூர் போனவங்கள கூட்டிட்டு வந்து பேசி பிரிச்சிவிட்டோம். ஒரே ஊரு, சண்ட வரக்கூடாதுன்னு இருதரப்பும் அப்படி பண்ணோம்.

திடீர்னு இப்படி கொல நடந்திருக்கு, கள்ளக்குறிச்சி காவல்துறையினரை அணுகி “ஏன் இப்படி பொய்யாக மூன்று இளைஞர்களை குற்றம் சாட்டி பழிவாங்குகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நாங்கள் மூன்றுபேருடன் இன்னும் முப்பது பேரைச் சேர்த்து வழக்கில் கைது செய்வோம் என்று மிரட்டுகின்றனர் என்றார்கள்.

காதலிச்சவங்க ரெண்டுபேரும் போன்ல பேசிக்காமல் இருப்பாங்களா? போன் பண்ணது செல்லுல காட்டுதுன்னு ஒரே காரணத்த வச்சி எப்படிங்க கொல பண்ணாங்கனு சொல்ல முடியும்? விவரமா விசாரிக்கனுமா இல்லையா? இத கேட்க யார் இருக்கா? போலீசும் அவங்க பக்கம்தான் இருக்கு.

இன்ஸ்பெக்டர் சொல்றாரு “ இது ஆணவக்கொலை, எங்க பசங்க செய்யல னு வெளியில பேசுறதும், போராட்டம் பண்ணுவோம் னு கிளம்புனிங்கனா ஊருல இருக்குற மொத்த பசங்க மேலயும் கேசு போடுவேன். இன்னும் 30 பேர் இதுல சம்மந்தப்பட்டிருக்காங்க அவங்களையும் பிடிக்க வேண்டிவரும்.“ என்று மிரட்டியதாக பயத்துடன் சொன்னார்கள்.

“சரசுவதி பொண்ணோட அப்பா கத்தி எடுத்துக்கிட்டு ஊரையே மிரட்டிக்கிட்டு திரிவாரு. அவரு மேல நெறைய கேசு இருக்கு. பொண்டாட்டியோட விரலையே வெட்டியிருக்காரு. மாமனா, மாமியார் வீட்டை கொளுத்தியிருக்காரு. அதனால அவங்களே கேசு கொடுத்து 1வருசம் ஜெயில்ல இருந்துட்டு வந்தாரு.

வன்னியர் ஊருக்குள்ளே பெண் விசயத்தில் தட்டிக்கேட்ட வன்னியர் இருசன் என்பவரின் கை, கால வெட்டியிருக்காரு. அண்ணங்காரங்குப்பம் தான் வீரமணி ஊரு. அங்க இந்த மாதிரி அட்டூழியம் செஞ்சதால துரத்திவிட்டிருக்காங்க. ஊரே பயந்துக்கிட்டுதான் இருக்கு. இந்த ஊர சேர்ந்த ஆள் இல்ல அவரு. அந்த பொண்ணு செத்தபின்னாடி கத்திய தூக்கிக்கிட்டு எங்க ஊருக்குள்ள வந்து கலாட்டா பண்ணிட்டு போறாரு.

வெட்டிருவேன்னு மிரட்டுறாரு. போலீசு ஒன்னும் பண்ணல. நாங்க கேசு குடுக்க போறதுக்குள்ளே போலீசு பிடிச்சிட்டுபோயி உடனே விட்டுட்டுச்சி. இதே நாங்க யாராச்சும் இப்படி பண்ணா போலீசு சும்மா இருந்திருக்குமா? எங்களுக்கு ஒரு நீதி மற்றவங்களுக்கு ஒரு நீதியா?

இதேமாதிரி அவங்க சாதியிலே ஒரு பொண்ணு எங்க ஊருல வாழுறாள். எந்தப்பிரச்சனையும் இல்லை. அதேமாதிரி இன்னொரு பொண்ணு பக்கத்து ஊருல உள்ள இந்த சாதிப் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நல்லா வாழுது. அந்த குடும்பம் எந்த பிரச்சனையும் பண்ணல. அந்த பொண்ணோட அப்பா செல்லப்பெருமாள் அவரோட கழுத்துல வீரமணி கத்திய வச்சி மிரட்டிருக்காரு.

உன் பொண்ண அடக்கி வைக்காதனாலதான் என் பொண்ணுக்கு துணிச்சல் வந்துடுச்சி நீ தான் காரணமுன்னு சண்டைபோட்டிருக்காரு. அந்த குடும்பம் ஸ்டேசன்ல கேசு கொடுக்க போனாங்க. அப்புறம் வேணாமுன்னு அவங்களுக்குள்ளேயே பஞ்சாயத்து பேசி இப்போதைக்கு அமுக்கி வச்சிருக்காங்க.

இப்படி அட்டகாசம் பண்றவரு தான் வீரமணி. அதனாலதான் போலீசு அவர் மேலேயே சந்தேகம்பட்டது. அப்பாவி பசங்கள அடிச்சு பொய் வாக்குமூலம் வாங்கத்தெரிந்த போலீசுக்கு அந்தக் கொலைய யார் செஞ்சதுன்னு மிரட்டி கண்டுபிடிக்க தெரியாதா? இன்னும் கொஞ்ச நாள்ல உண்மை வெளியே வரும் என பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்

கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளையும்,உண்மைக் குற்றவாளிகளையும் கண்டறிய "சிபிஐ" விசாரித்திட வேண்டும்

- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

Pin It