சில ஆய்வுகளின் தன்மை எப்படி இருக்குமென்றால், அவை பரவலாக நிலவும் கருத்துக்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புதிய பார்வையை முன்வைக்கும். அந்தப் பார்வை நமது வரலாற்றுப் புரிதலை மட்டும் மாற்றாமல், நமது எதிர்காலப் பார்வையையும், நாம் செயல்படவேண்டிய திசையினையும் காண்பிக்கும். அவ்வாறான ஆய்வுகள் வெகு அபூர்வமாகவே நிகழும். அதுபோன்ற ஒரு ஆய்வினையே ஆழி செந்தில்நாதன் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்[1]. அவருடைய உரையிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்து மேலும் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

periyar anna ki veeramaniதிராவிட நாடு கோரிக்கைத் தோற்றுப் போவதற்கு முக்கிய காரணாமாக ஆழி செந்தில்நாதன் அவர்கள் கூறுவன:

  • 1947-இல் இந்தியா சுதந்திரமாவதற்கு முன்னர், திராவிட நாட்டுக்கு சாதகமாக எந்த ஒரு மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படவில்லை. மாறாக இந்திய விடுதலைப் போரில் திருப்பூர் குமரன், வ.உ.சி என்று பல தியாகிகள் தோன்றியிருக்கின்றனர், ஆனால் திராவிட நாட்டுக்காக பெரிதாக மக்கள் தியாகம் செய்யவில்லை. அன்றிருந்த சூழலில் போராட்டங்கள் நடத்தியிருந்தால் திராவிட நாடு வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறான செயல்பாட்டிற்கு ஏற்ற சூழல் அன்று இல்லை. ஒரு மாபெரும் வாய்ப்பு நழுவவிடப்பட்டது. ஒரு போராட்டமும் செய்யாமல் வெறும் பேச்சால் நாட்டை அடைய முடியாது.
  • 1949-இல் திமுக உதயமானது. அண்ணா அவர்கள் திராவிட நாட்டை ஒரு நாடாக பார்க்காமல் திராவிட மொழிக் குடும்ப நாடுகளின் கூட்டாகப் பார்த்தார். அவருடைய நோக்கம் தமிழ்நாடு விடுதலையாவதே. தனிநாட்டு கோரிக்கைக்கு மக்களிடம் வலு சேர்த்து வரும் பொழுதுதான், இதை முறியடிக்க இந்திய அரசு 1963-இல் "பிரிவினைவாதத் தடைச்சட்டம்" கொண்டு வருகிறது. அதன்படி பிரிவினைவாதம் பேசினால், தேர்தலில் போட்டியிட முடியாது. அச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டுமென அண்ணா நினைக்கிறார், ஆனால் அவருக்குக் கிடைத்ததோ அதிர்ச்சி. கட்சியில் ஒரு சில தலைவர்களைத் தவிர தனிநாட்டுக்குப் பெரிதாக எந்த ஆதரவும் இல்லை. போராடி சிறை செல்ல ஒரு 5000 பேர் கூடத் தயாராக இல்லை. அன்றைய சூழலில் திமுகவிற்கு இருந்த ஆதரவானது சமூகநீதி கோட்பாட்டுக்கு ஆதரவாகத் தான் இருந்ததுவே ஒழிய தனிநாட்டுக்கு இல்லை. இந்த சூழலை அகச்சூழல் என்கிறார் ஆழி. அண்ணா தனியொருவராக எதுவும் செய்ய முடியவில்லை. மற்றவர்கள் அவரைத் தனிநாடு கோட்பாட்டை விட்டுவிட சம்மதிக்க வைக்கின்றனர். அடிப்படையில் தனிநாடு அமைவதற்கு எந்த ஒரு அகச்சூழலும் புறச்சூழலும் அமையாததுதான் தனிநாடு கோட்பாடு தோற்பதற்கான முக்கிய காரணங்கள், பயமோ கோழைத்தனமோ அல்ல என்பதுதான் ஆழி அவர்களின் வாதம். எந்த காரணங்கள் தனிநாடு கோரிக்கையை தோற்கடித்ததோ, அதே காரணங்களே இன்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அந்த சூழல்கள் ஏன் இன்றும் நிலவுகிறது, அதை எப்படி மாற்றுவது என்பது தான் இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவால் என்கிறார்.

   ஆழி அவர்களின் இக்கருத்துக்கள் தேசியம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின், குறிப்பாக பார்த்த சட்டர்சியின் [3], கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. பார்த்தா சட்டர்சியின் கருத்துக்களை ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். அதைக் கீழுள்ள சுட்டியில்[2] பார்க்கவும். அவற்றின் முக்கியம் கருதி மீண்டும் தருகிறேன்:

ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தா சட்டர்சி [2] அவர்கள் கீழ்காணும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

தேசியம் முற்றிலும் ஒரு அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் தவறான பார்வை. காலனி ஆட்சியில் அரசியல் செயல்பாடுகளுக்கு வெகு முன்னதாக, தேசியம் தனக்கென ஒரு சுதந்திரமான தளத்தை அமைத்து வெற்றியடைகிறது. அவ்வெற்றிக்கு பின்னரே முழு சுதந்திரத்திற்கான அரசியற்போர் நடைபெறுகிறது. இதனை ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்து செயல்படுத்துகிறது

அகம்: ஒரு தேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொன்மங்கள் என்று எவையெல்லாம் தேசிய அடையாளம் சார்ந்ததோ, அவை அகம் என்று அடைப்புக்கள் கொண்டு வரப்பட்டன. அகம் என்பது அடையாளம் என்பதனால், தேசியம் இந்த அடையாளத்தைப் பாதுகாத்தது, குறிப்பாக காலனி ஆட்சியின் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அடையாளத்தை தொடமுடியாதவாறு செயல்பட்டது. அதற்காக பண்பாட்டை மாற்றாமல் இருந்தது என்று சொல்ல முடியாது. தேசியம் இந்த அகத்தில்தான் முழு வீச்சில் தேசிய வரலாற்றிற்கேற்ப, மேற்குலக பண்பாடு அற்ற, ஒரு நவீன பண்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. உணர்வுப்பூர்வமாக மக்களை தாங்கள் ஒரு தேசியம் என்று உணர வைக்கிறது. இத்தளத்தில் தேசியத்தின் முக்கிய செயல்பாடுகள்:

  • தேசியம் தனது பழைய மொழியை சீர்திருத்தி, அச்சு ஊடகம் மூலமாக பரப்பி தேசத்திற்கான ஒரு நவீன மொழியை உருவாக்குகிறது. தேசம் தனது இறையாண்மையை முதலில் நிலைநாட்டுவது மொழியில்தான்.
  • தேசமெங்கும் கல்விக்கூடங்களை திறந்து நவீன மொழியையம், தனது அடையாளங்களான கலை, இலக்கியங்களை பரப்பி மக்களை தேசிய அடையாளத்தில் கொண்டுவருகிறது. தேசியம் நாட்டை தனது ஆட்சிக்குக்கீழ் கொண்டுவருமுன் பள்ளிகளை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிறது.
  • பாரம்பரிய குடும்பம் மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை செய்ய காலனி ஆட்சியை அனுமதிக்கவில்லை. சீர்திருத்தம் செய்வதற்கான உரிமை தேசத்திற்கு மட்டுமே உண்டு என்று போராடியது.
  • அந்நியரின் பண்பாட்டைத் தழுவினால், தேசிய அடையாளம் அழிந்துபோகும் என்பதால் வீட்டிலும் புரட்சி வெடித்தது. அந்நிய பண்பாட்டு ஆதிக்கம் வீட்டினில் நுழையாதவாறு பண்பாட்டு புரட்சி நடத்தப்பட்டது.

அகத்தில் வெற்றியை உறுதி செய்து தன் இறையாண்மையை நிலைநாட்டியபின், தேசியம் புறத்தில் இறங்குகிறது.

புறம்: இது பொதுவெளி. இங்கே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான தத்துவங்களான விடுதலை, உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியம் போராடுகிறது. இந்த தளத்தில் மேற்குலக முறைகள், தத்துவங்கள் தாராளமாக பின்பற்றப்படுகின்றன.

ஆழி அவர்களின் ஆய்வையும் பார்த்த சட்டர்சியின் ஆய்வையும் இணைத்துப் பார்க்கும்பொழுது, எந்த செயல்பாடுகளில் திராவிடம் இயக்கம் தோற்றுப்போனது, இன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்றும் ஓரளவுத் தெளிவாகப் பார்க்கலாம்.

  • பார்த்த சட்டர்சி கூறும் அகச்செயற்பாடுகளை திராவிட இயக்கங்கள் பூர்த்தி செய்யவில்லை, அதனாலேயே அக்கட்சியிலும் மக்களிடமும் தனிநாட்டுக்கு பெரிய ஆதரவில்லாமல் போனது. ஆனால் இந்திய தேசிய இயக்கங்களின் அகச்செயல்பாடுகள் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் தமிழ்த் தேசிய செயல்பாடுகளைவிட வீரியமுடன் இருந்துள்ளது, இன்றும் இருந்துவருகிறது. இன்றைய தமிழ்வழிக் கல்வியின் வீழ்ச்சியும், மத்திய பாடத்திட்டம், நீட் போன்ற திட்டங்களும் தமிழர் அடையாளத்தை நீக்கி இந்திய தேசியத்தில் தமிழர்களை கரைப்பதன் நோக்கத்துடனே திட்டமிடப்பட்டுள்ளன. இந்துத்வா அமைப்புகள் அகச்செயல்பாடுகளில் அசுர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பு இன்று வீரியமுடன் நடக்கிறது.
  • இன்றைய தமிழ்த்தேசிய செயல்பாடுகள் எல்லாம் பெரும்பாலும் புறச்செயல்பாடுகளுடன் உள்ளன. அகச்செயற்பாடுகளின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. அகத்தில் வெற்றி இல்லாமல் புறத்தில் வெற்றி கிடைப்பது கடினம். அதைத்தான் திராவிட இயக்கங்களின் தோற்றுப்போன தனிநாடு கோட்பாடு காண்பிக்கிறது. அகச்செயல்பாட்டின் புறக்கணிப்புதான் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் வரலாற்றுப் பிழை. வரலாற்றிலிருந்து கற்று நமது செயல்பாடுகளை சீர்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு ஆழி செந்தில்நாதன் அவர்களின் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதிலிருந்து கற்று தமிழ்த் தேசியம் தனது எதிர்காலப் பாதையை மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உசாத்துணை:

  1. ஆழி செந்தில்நாதன், காணொளி, https://www.youtube.com/watch?v=t4YCC5NetFQ&feature=share
  2. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

3. Chatterjee, Partha. The nation and its fragments: Colonial and postcolonial histories. Vol. 11. Princeton, NJ: Princeton University Press, 1993.

Pin It