தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சாலைக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். இழப்பில் ஓடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் துறையைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், மக்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் கூசாமல் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மக்களிடம் கட்டண உயர்வுக்கு மன்னிப்பு வேறு கேட்கின்றார்கள். இப்படி 67 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை வரைமுறையில்லாமல் கண்முடித்தனமாக கட்டண உயர்வை அறிவித்துவிட்டு, மக்களிடம் நீலிகண்ணீர் விடுவதுபோல நாடகமாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராடிய மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை காவல்துறை மூலம் இந்த உதவாக்கரை அரசு தொடுத்துள்ளது. மக்கள் விரோதத் திட்டங்களை ஜெயலலிதா எப்படி காவல்துறையின் குண்டாந்தடிகள் மூலம் மக்கள் மீது திணித்தாரோ, அவரது அடிமைகளும் அதே வழியைக் கடைப்பிடித்து இந்தக் கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்கின்றார்கள்.
எந்த ஒரு தனியார் பேருந்து முதலாளியும் தான் இழப்பில் தொழில் நடத்திக்கொண்டு இருப்பதாகவும், அதனால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் பேச்சுக்குக்கூட சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி அரசுப் போக்குவரத்துத் துறை மட்டும் 35000 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது? கொழுத்த லாபம் வரும் வழித்தடங்களை எல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள, லாபம் பெரிதாக வராத வழித்தடங்கள் அனைத்தும் திட்டமிட்டு அரசின் கைகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் ஓடும் தனியார் பேருந்துகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் பினாமிகளுக்கும் சொந்தமானது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. இந்தக் கும்பல்தான் திட்டமிட்டு அரசு போக்குவரத்துத் துறையை முடக்கியது.
ஒருபக்கம் லாபம் வரும் வழித்தடங்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் சொத்தாக மாற்றப்பட்டது ஒரு காரணம் என்றால், இன்னொன்று போக்குவரத்துத் துறையில் அரசியல்வாதிகளும், மேல்மட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளும் சேர்ந்து நடத்தியுள்ள மிகப்பெரிய ஊழல்கள், உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான ஊதியம், பணப்பயன்கள் போன்றவை எல்லாம் சேர்ந்தே இன்று போக்குவரத்துத் துறையை இவ்வளவு பெரிய இழப்பை சந்திக்க வைத்துள்ளது.
ஓடும் அரசு பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் பொதுமக்களின் உயிரை எந்த நேரத்திலும் காவு வாங்கும் நிலையிலேயே ஓடிக்கொண்டு இருக்கின்றன. இயக்கப்படும் பேருந்துகளில் ஏறக்குறைய 70 சதவீத அரசுப் பேருந்துகள் காலாவதியானவை. ஓட்டுவதற்கே தகுதியற்றவை, சாதாரண மழைக்கே பேருந்து முழுவதும் ஒழுகும் நிலையில்தான் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. அப்படி மோசமான நிலையில் இயக்குவதற்கே தகுதியற்ற பேருந்துகளைத்தான் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி இயக்கிக் கொண்டு இருக்கின்றது. இந்தச் சாதாரண டப்பா பேருந்துகளைத்தான் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு, தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகமான கட்டணக் கொள்ளையை போக்குவரத்துத் துறை அடித்துக் கொண்டிருக்கின்றது. அப்படி எல்லாம் ஏமாற்றிப் புடுங்கியும் போக்குவரத்துத் துறை இழப்பில் இருக்கின்றது என்று சொன்னால் அரசு நிர்வாகம் எந்த அளவிற்கு ஊழல்மயப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சாமானிய மக்கள் எப்போதுமே தங்கள் தேவைக்கு பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றார்கள். வீட்டுவேலைக்கு செல்பவர்கள், பட்டறைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும், நெசவுதொழிலுக்கும் செல்பவர்கள், காய்கறி வியாபரிகள், இன்னும் பல்வேறு தினக்கூலி தொழிலாளர்களும், கிராமப்புற மக்கள், பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் என அனைவருமே இதை நம்பியே இருக்கின்றார்கள். இந்தக் கட்டண உயர்வானது ஏற்கெனவே மிகக் குறைவான கூலியால் தங்களின் வாழ்வாதாரத்தை சுருக்கிக் கொண்டு உயிர்வாழ்வதற்கே போராடிக் கொண்டு இருக்கும் அந்த மக்களை மேலும் வறுமையிலும், சாவிலும் தான் கொண்டுபோய் நிறுத்தும். தினம் 50 ரூபாய் சம்பளத்திற்கும், 100 ரூபாய் சம்பளத்திற்கும் பல மைல்கள் பயணம் செய்யும் சாமானியக் கூலி உழைப்பாளர்கள் தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை பேருந்து கட்டணதிற்கே கொடுத்துவிட்டு சோற்றுக்கே திண்டாடும் நிலையை இந்த உதவாக்கரை அரசு உருவாக்கி உள்ளது.
தங்களுடைய சம்பளத்தை மட்டும் எந்த விதக் கூச்சமும் இன்றி வெட்கம்கெட்ட முறையில் உயர்த்திக் கொண்ட இந்த அரசு, 50 ரூபாய், 100 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டது கிடையாது. எவன் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால்தான் நமக்கென்ன, முடிந்தவரை கொள்ளை அடிப்போம், பிறகு இழப்பு கணக்கு காட்டி அதையும் பொதுமக்கள் தலையிலேயே சுமத்துவோம் என்ற கபடத்தனத்தில், மோசடித்தனத்தில்தான் இந்த அரசு இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்தக் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். எந்த அரசின் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பொது விநியோகத் திட்டத்தில் கொடுக்கப்பட்டு வந்த உளுத்தம் பருப்பு கூட கொடுக்க முடியாத கேடுகெட்ட இழிநிலையில்தான் இந்த அரசு இயங்கிக்கொண்டு இருக்கின்றது.
மக்கள் கேள்வி கேட்கின்றார்கள், எந்த ஆணியுமே புடுங்காத போது நாங்கள் கட்டும் வரிப்பணம் எல்லாம் என்ன ஆனது என்று. சாமானிய மக்களுக்கு செலவழிக்கப் பணம் இல்லை எனக் கண்ணீர்விடும் இந்தக் கும்பல், ஆர்.கே.நகர் தொகுதியில் நூற்றுக்கணக்கான கோடிப் பணத்தை எங்கிருந்து வாரியிறைத்தது என்று மக்கள் காறித் துப்புகின்றார்கள். இப்போது கூட ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க 44 கோடியே 63 லட்சம் செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எவன் அப்பன் வீட்டுக் காசை எடுத்து, யாருக்கு நினைவிடம் அமைப்பது? ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றால், அவரின் சொத்தை விற்று அமைக்கட்டும். இல்லை அம்மாவின் மீது பேரன்பு கொண்டிருந்தால் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து அமைச்சர்கள் செலவழிக்கட்டும். உச்சநீதி மன்றத்தால் முதன்மைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து நினைவிடம் அமைப்பது வெட்கக்கேடான செயலாகும். இப்படித்தான் மக்களின் வரிப்பணம் எல்லாம் அமைச்சர்கள் வீட்டு கல்லாப் பெட்டிகளுக்கு மடைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ந்த அரசு ஓட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்கும் தீர்மானகரமான முடிவோடு இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இது ஒரு திவாலான அரசு. இந்த அரசு இனி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் சாமானிய மக்களின் தாலி அறுப்பதை மட்டுமே செய்து கொண்டிருக்கும். ஒரு பக்கம் மதுபானக்கடைகளின் மூலம் சாமானிய மக்களின் வருமானத்தைப் பெருமளவில் கொள்ளையடிக்கும் அரசு, இன்னொரு பக்கம் பேருந்து கட்டணக் கொள்ளை மூலம் அவர்களை ஓட்டாண்டிகள் ஆக்கி பிச்சைக்காரர்களாக மாற்றப் பார்க்கின்றது.
அரசு எந்தவித வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. படித்து முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள், மக்களின் உண்மை வருமானம் தொடர்ச்சியாக குறைந்துகொண்டு வருகின்றது, எந்த தொழிற்நிறுவனமும் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச கூலியைக்கூடத் தருவதில்லை. அமைப்புசாராத் தொழிலாளர்கள் பெரும் அளவில் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். கிடைக்கும் மிக மலிவான சொற்ப ஊதியத்தில் தங்களின் உயிரையும், பிள்ளை குட்டிகளின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளவே சாமானிய மக்கள் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்திலும் அவமானகரமான முறையில் தோல்வியடைந்து முழுக்க முழுக்க மக்கள் விரோத அரசாக இது மாறியிருக்கின்றது.
உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக தன்னை காட்டிக்கொள்ளும் கட்சிகள் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்தி இந்த அரசை செயல்படாமல் முடக்க வேண்டும். இவர்கள் தாங்களாகவே தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசைக் கலைத்துவிட்டு ஓடும் வரை ஓயாமல் போராட்டத்தை நடத்தி சாமானிய மக்களுக்கு அவர்களின் நரக வேதனையில் இருந்து குறைந்தபட்ச விடுதலை தருவதற்காகவாவது முன்வர வேண்டும்.
- செ.கார்கி