தேவதாசிகள் என்றால் யார்?

தேவ-தேவர்கள், தாசிகள்-அடியாள்கள்.

thevaradiyarகோவில்களில் கலை, இலக்கிய சேவை செய்தவர்கள். தெய்வத்திற்கு இணையாக அக்காலத்தில் மதிக்கப்பட்டவர்கள் என்பது பல தேவதாசிகள் பற்றிய புத்தகங்களிலும், செய்திகள் வழியாகவும் தெரிகிறது. இதை எழுதியவர்கள் யார்? வைணவர்களாகவும், பார்ப்பனவழிப் பெண்களாகவும் இருந்தனர். ஆய்வுகள் ஒரு சார்பாகத் தோன்றின.

எங்கிருந்து திடீரென்று இப்பெண்கள் இறைவனை கணவனாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்? மரத்தடி கோவில் வரலாறில் ஏன் இந்த பக்தைகள் இல்லை?

இவர்கள் தொடக்க காலம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின், பல்லவர் காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டவுடன் தொடங்குகிறது. புத்த, சமண வீழ்ச்சிக்குப்பின் ஆண்களை கழுவேற்றிக் கொலை செய்த சைவ –வைணவர்கள் பெண்களை என்ன செய்தார்கள்? கொலை செய்ததாக எங்கும் பதிவில்லை.

பார்ப்பனப் பெண்கள் தேவதாசிகளாக இருந்த வரலாற்றுக்குறிப்புகளே இல்லை. பார்ப்பன இனப் பெண்கள் இந்த சேவைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதால் பிற பெண்களையே தேவதாசிப் பெண்களாக கோவில்களில் வைத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் விடாத கால கட்டம் என்பதால் சூத்திரர்களாகவே இருக்க முடியும். கலை, இலக்கியம் வளர்த்த பெண்கள் என்று சொல்லப்படுவது உண்மையானால் ஏன் அது கெட்ட வார்த்தையாகத் திரிந்தது?

மனுதர்மம், மூடத்தனங்கள் திராவிட மண்ணில் வேரூன்றிய கால கட்டம் இது என்பதால் பெண்கள் கடவுள் பெயரால், பக்தியின் பெயரால் உள்ளிழுக்கப்பட்டு நடனக்கலை, இசை, ஓவியம் என்று கலை வளர்க்கும் பணியை செய்தார்கள் என்கிறார்களா? என்பது நமக்குள் எழும் கேள்வி. பல்லவர் கால சிற்பங்களில் தேவதாசிப் பெண்களின் சிற்பம் இடம் பெற்றிருப்பதே இதற்கு சான்று. இந்த சிற்பங்கள் கலை ஓவியம் வளர்த்ததை மட்டும் சொல்வதில்லை.

இன்று கோவிலில் செல்லும் பெண்ணோ, ஆணோ காமத்தைப்பற்றி பேசுவது தவறு என்கிறோம். ஆனால் சிற்பங்களோ காமத்தை வெளிப்படையாக பிரதிபலிக்கும் ரீதியில் அமைந்துள்ளது. இதை வரவேற்றவர்கள் தான் மன்னர்கள், புலவர்கள் என்பது உண்மைதானே. அப்போது தேவதாசிகள் என்பவர்களை மட்டும் புனித வாழ்க்கையை நடத்த மன்னர்களும், நிலபிரபுக்களும் விட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. அப்படி நாகரீகமாக நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை.

ராஜதாசி என மன்னருக்கு வேண்டிய தாசிகளும், சமூக தாசி எனும் பெயரில் ஊரில் பணக்காரர்களுக்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆக தேவ தாசி முதலில் கெட்ட வார்த்தையாக இல்லை. கெட்டவை பின்பு நடந்ததால் அது கெட்ட வார்த்தையானது. கோவிலில் பெண் இல்லாக் குறை தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இதற்கிடையே கலைகளும் வளர்ந்தன எனலாம். ஆம். அப்பெண்கள் இன்னல்களுக்கு நடுவே கலை வளர்த்தனர். அவர்கள் குழந்தைகள் கோவில்களில் நாதஸ்வரம், மேளம் அடிக்கும் பணி செய்திருக்க வேண்டும்.

தலை நிமிர்ந்து வரும் தருவாயில் மீண்டும் வீழ்த்தப்பட்டனர். சோழர்கள் படையெடுத்து ஆக்ரமித்ததும் பெண்களை விற்கவும், போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையும் இருந்தது. பார்ப்பனர்கள் நிலம் பெற பெண்களை சோழர்களிடம் விற்ற வரலாறும் இருக்கிறது.

1848 முதல் எதிர்ப்புகள் தொடங்கப்பட்டாலும், 1925 வரை இங்கே இந்தக் கொடுமை நடைமுறையில் பொட்டுக்கட்டுதல் எனும் பெயரில் இருந்தது. வீட்டில் மூத்த பெண்ணை இந்த வழி வந்த பெண்கள் கோவிலுக்கு நேர்தல் எனும் பெயரில் சடங்குகள் செய்து கோவிலில் விட்டனர். டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் போன்றோர் முயற்சியாலும், பெரியாரின் விமர்சன நடவடிக்கைகளாலும் சீர்திருத்தத்தை நோக்கி நகர்த்தப்பட்டது தேவதாசிகள் வாழ்க்கை.

சீர்திருத்தங்கள் வரும்போது அதை எதிர்த்தவர்களும், அவர்கள் சொன்ன காரணங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணியே இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே என்பதும், எதிர்ப்புக்கான காரணம் இந்து மனுதர்மம் என்றும், பெரியாரின் 'பெண்விடுதலைச் சட்டங்களும், பார்ப்பனர்களும்' புத்தகம் மூலம் அறிய முடிகிறது.

இவர்களுடன் போராடி 1925 இல் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பால்ய விவாகத் தடுப்புச் சட்டம், இருதாரமுறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை அனைத்தும் உருவாக்கிய இவரே இந்தியப் பெண்களுக்கான பெண் தெய்வம் என்றால் அது மிகையல்ல. இவருடன், இந்த சட்டங்களைக் கொண்டு வரும் முன்பே அதைப் பரிந்துரை செய்து குடிஅரசில் எழுதியும், அரசை வற்புறுத்தியும் பெண் விடுதலையை முன்னெடுத்த பெரியாருமே போற்றுவதற்குரியவர்கள்.

2003, 2012 வரை கூட இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் சிறுமிகள் இந்துத்துவ நம்பிக்கைகளாலும் வறுமையாலும் பொட்டுக்கட்டும் வழக்கத்தில் இருந்துள்ளனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் இணையப்பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

நெஞ்சை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த நூற்றாண்டிலும் ஆளாவதன் காரணம் சட்டங்கள் வந்தாலும், அதை நடைமுறைப்படுத்த இந்துத்துவ மூடநம்பிக்கைகளை வைத்து தடை போடும் மூடர்கள் தான் என்பதை உணர்ந்து விழித்தெழுவோம். பக்தியை குறைக்க வாதாடவில்லை. மூடத்தனங்களை ஒழிப்பதும் பக்தியின் கடமை தான். நம் இனத்தின் மீதுள்ள பக்தியின் கடமை.

- லோனா வெங்கட்

Pin It