பிரிந்து நின்றே இந்தியை எதிர்த்துப் போராடுகிறோம்! இந்தியா முழுவதையும் இணைத்துப் போராடுவோம் வாருங்கள்! புதிய அரசமைப்பைக் காண்போம் வாருங்கள்!
தமிழ் மட்டுமே கல்வி கற்கும் மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ் மட்டுமே தமிழ்நாட்டு அரசின் ஆட்சி மொழியாக-அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ் மட்டுமே தமிழ்நாட்டு நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்.
இவையெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழர் விடுத லைக்கான கோரிக்கைகள்.
இவற்றுள் கல்வி கற்பிக்கும் மொழி தமிழாக மட்டுமே இருக்க - தமிழ் ஆட்சி மொழியாக இருக்க - எந்த ஒரு தடங்கலும் அரசமைப்புச் சட்டத்தில் 2-1-1976 வரையில் இல்லை. அதாவது, தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக்கல்வி, கல்லூரி கலை - அறிவியல் கல்வி - தொழிற்கல்வி இவற்றைத் தமிழில் மட்டுமே கற்பித்திடத் தமிழ்நாட்டு அரசுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. தமிழை ஆட்சி மொழியாக ஆக்க உரிமை இன்றும் உள்ளது.
அந்த உரிமைகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கிட - 1947 முதல் 1967 வரை தமிழகத்தை ஆண்ட காங்கிரசு அரசு தவறிவிட்டது. 1967 முதல் 1976 சனவரி வரை ஆண்ட தி.மு.க. அரசு தவறிவிட்டது; 1977 முதல் 2015 வரை மாறி மாறித் தமிழகத்தை ஆட்சி செய்த-செய்கிற தி.மு.க.-அ.தி.மு.க. அரசுகள் தவறிவிட்டன.
இந்தி பேசாத மற்ற எல்லா மாநிலங்களுமே இதில் தவறிவிட்டன. இந்தி பேசும் மாநிலங்களுமே இதில் தவறிவிட்டன.
இந்தி பேசாத மாநிலங்கள் ஆங்கிலத்தைத் தூக்கிப்பிடித்தன; இவற்றுள் தமிழகம் தவிர்த்த மற்ற இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியையும் தூக்கிப் பிடித்தன.
இதற்கு இடையில், கல்வி அளிக்கும் அதிகாரம் முழுவதுமாக மாநிலங்களுக்கே (State List) இருந்த உரிமையைப் பறித்து, 3-1-1976 முதல் இந்திய அரசுக்கும் - மாநில அரசுகளுக்கும் பொதுவில் அதிகாரம் வழங்கும் பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List)) மாற்றப்பட்டுவிட்டது.
அப்படி மாற்றப்பட்டதைத் தமிழக அரசு - தமிழக மக்கள் - தமிழகக் கட்சிகள் எதிர்க்கவில்லை; எதிர்த்துப் போராடவில்லை.
வேறு எந்த மாநில அரசும் போராடவில்லை என்பதும் உண்மை.
ஏன்?
இந்தியா முழுவதிலும் உள்ள எந்தக் கட்சியும் மக்களை - மாணவர்களை - படித்தவர்களை-தத்தம் கட்சித் தொண்டர்களை அரசியல் படுத்தவில்லை. பொதுவு டைமைக் கட்சிகளும் இதில் அடக்கம்.
அதாவது அடிமைப்பட்டிருந்த ஒரு துணைக்கண்டம் போன்ற இந்தியா - பல மொழிகள், பல மதங்கள், பல ஆயிரக்கணக்கான உள்சாதிகள் உள்ள நாடு என்று கற்பித்திடவும், எல்லா மொழிகளுக்கும் எல்லா நிலைமைகளிலும் சம உரிமை உண்டு-அவை அளிக் கப்பட வேண்டும் என்பதையும்; எல்லா மக்களுக்கும் ஆங்கிலம் அந்நிய மொழி என்பதையும், இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலமும், இந்தியும் அந்நிய மொழிகள் என்பதையும், உள்சாதி வேறுபாடுகளை உடும்புப் பிடியாக உயர்த்திப் பிடிப்பது மானிட உரிமைக்கு எதிரானது என்ப தையும் எல்லாத் தரப்பாருக்கும் இந்தியத் தலைவர்களும், கட்சிகளும் கற்பிக்கவில்லை. இவற்றைக் கற்பிப்பதுதான் மக்களை அரசியல்படுத்துவது என நாம் கருதுகிறோம்.
இந்த வகையில் அரசியல்படுத்துவதை, உயர்நிலைப் பள்ளிக்கல்வியிலேயே தமிழகத்தில் தொடங்கியிருக்க வேண்டும்; எல்லா மாநிலங்களிலும் அப்படித் தொடங்கி யிருக்க வேண்டும்.
இவை நடைபெறாததால்தான், இன்று ஆங்கிலம் எல்லா மட்டங்களிலும் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கிறது; தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திலும் பயன் பாட்டில் இருக்கிறது; 2019க்குள் இந்தியும் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டுக்கு வரக்கூடும்; எல்லா மாநிலங்களிலும் இவை இரண்டு மொழிகளும் ஆட்சி செலுத்தும் நிலை ஏற்படக்கூடும்.
ஏன்?
இந்தி தான் - தேவநாகரி வரிவடிவிலான இந்திதான் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழி; அதாவது ஒரே அன்றாட அலுவல் மொழி.
இதை 1967 முதல் எதிர்த்துப் போராடத் தவறிய தி.மு.க. - போராடத் தவறிய அ.இ.அ.தி.மு.க. இரண்டு வாக்கு வேட்டை திராவிடக் கட்சிகளும் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. இவர்களைச் சார்ந்தும், நத்திக் கொண்டும் மற்ற எல்லாத் தமிழக வாக்கு வேட்டைக் கட்சிகளும் இருந்தன. வாக்கு வேட்டைக்குப் போகாத கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்த் தேசிய - திராவிடத் தேசிய அமைப்புகளும் ஒட்டுமொத்த இந்தியாவைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் - ஒற்றை இந்தியா, ஒற்றை இந்திய ஆட்சி மொழி என்பதை எதிர்த்து ஒழிக்க எந்த முயற்சியையும் செய்யாமல் - செயல்படு களத்தைத் தமிழ்நாட்டு எல்லையோடு நிறுத்திக் கொண்டார்கள்.
ஆங்கில ஒழிப்பு என்பது ஓர் அனைத்து இந்தியச் சிக்கல்.
இந்தி ஆட்சி மொழி ஒழிப்பு என்பது, ஒற்றை இந்தியா உடைப்பு என்கிற அனைத்திந்திய அரசியல் சிக்கல்.
தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் மொழியாக வரவேண்டும் என்கிற முதலாவது முயற்சியை 2002இல் அப்போது ஆட்சியிலிருந்த செல்வி. செய லலிதாவின் அ.இ.அ.தி.மு.க. அரசு எடுத்தது. அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.சுபாஷன் ரெட்டி அதை முற்றிலுமாக எதிர்த்துக் கருத்துக் கூறிவிட்டார்.
பின்னர், தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 6-12-2006 இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - வழக்குப் பதிவு செய்வது, வாதாடுவது, தீர்ப்பு அளிப்பது எல்லாம் தமிழ்மொழியிலேயே செய்யப்பட வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று, அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒரே அமர்வாக இருந்து - கொள்கை அளவில் தமிழ்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என ஒப்புதல் அளித்தனர்.
தமிழக அரசினர் மேலே கண்ட இரண்டு முடிவுக ளையும் முன்வைத்து, 7-12-2006இலேயே, இந்திய அரசுக்கு எழுதிய மடலில், இந்த ஏற்பாட்டுக்குக் குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டினர்.
இந்திய அரசு நேரே குடிஅரசுத் தலைவருக்கு இக்கோரிக்கையை அனுப்பாமல், அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் என்பவருக்கு அனுப்பியது. அவர் அக்கோரிக்கையை முற்றிலுமாக மறுதளித்தார்.
“நொண்டிக் குதிரைக்கு சறுக்கிவிட்டது சாக்கு” என்பதற்கு ஒப்ப, அப்போதைய இந்தியச் சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் என்பவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் கோரிக் கையை மறுதளித்தார்.
(கே.ஜி. பாலகிருஷ்ணன் என்கிற பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவர் 2006இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆனவுடன், “பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு தரும்போது, அவர்களில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத் தருவது போல, பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரும்போதும், அப்படி வருமான வரம்பு வைக்க வேண்டும்” என்று முதன்முதலாகக் கருத்துச் சொன்ன மரைகழன்ற அதிமேதாவி ஆவார்.
அப்போது சட்ட அமைச்சராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ் என்கிற பார்ப்பனர் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர். இவை நாம் அறியத்தக்கவை). நிற்க.
மேலே கண்ட சட்ட அமைச்சரின் 27-2-2007 மடலைக் கண்ட அப்போதைய தி.மு.க. முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, அதிர்ச்சி அடைந்து, உடனே 11-3-2007இல் இந்தியச் சட்ட அமைச்சருக்கு மடல் எழுதி, நான்கு இந்தி பேசும் மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியான - மாநில ஆட்சி மொழியான இந்தி, அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திலும் பயன்பாட்டு மொழியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் எனக் கோரினார்.
2012 நவம்பர் முடிய தமிழ் நீதிமன்ற மொழிச் சிக்கல் இப்படிக் கடிதப் போக்குவரத்திலேயே இருந்தது ஏன்? மூர்க்கமாக எதிர்க்க எவரும் முன்வராததால்தான்.
இவ்வளவு இக்கட்டான சூழலில், கடந்த சில நாள் களாக, “இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி” என்பதைக் கண்டனம் செய்து, கருத்தரங்கு களும், மாநாடுகளும், ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் நடைபெறுகின்றன.
அண்மையில் 14-9-2015 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், தலைமை நீதிபதியின் அமர்வு அறையில், “உயர்நீதிமன்ற அன்றாட நடப்பை தமிழ்மொழியில் நடத்துங்கள்” எனக் கோரிக்கைத் தட்டிகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, பல வழக்கு ரைஞர்களும் பல கல்லூரிகளின் மாணவர்களும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மனம் நிறைந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்கள் நீதிமன்ற அறையில் போய்ப் போராட லாமா என்று கேட்கப்படலாம்.
அப்படிக் கேட்கிற ஒவ்வொருவரும் மனித உரிமை உணர்வு உள்ளவர்களாக இருந்தால் -
1. தமிழ்நாட்டில் உள்ள மக்களில் 100க்கு 95 பேருக் குப் புரியாத மொழியான ஆங்கிலத்தில் ஏன் மனுப் போட வேண்டும்? எதற்காகத் தன் வழக்குக்குத் தன்னால் அமர்த்தப்படும் வழக்கறிஞர் ஆங்கிலத் தில் வாதாட வேண்டும்? நீதிபதிகள் ஏன் ஆங்கிலத் தில் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்? ஏன் ஆங்கிலத்தில் தீர்ப்புகளை எழுத வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும் அல்லவா?
2. தமிழ்நாட்டில் கல்வியில் இந்தி இல்லை. உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போடுவோரில் - 100க்கு ஒருவர், இந்தி, இராஜ°தான், மார்வாரி பேசுகிற வழக்காளிகளாக இருக்கலாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் 2 விழுக்காடு பேர் இருக்க லாம்.
நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடுக்கிற 100 பேர்களில் 97, 98 பேர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களின் வழக்குகளை எதற்காக ஆங்கிலத்தில் பதிய வேண்டும்? இவர்களின் வழக்கு ரைஞர்கள் ஏன் ஆங்கிலத்தில் வாதாட வேண்டும்?
முதல் தோற்றத்திலேயே Prima Facie இது முழுக்க முழுக்க மக்கள் நாயக உரிமைக்கு எதிரானது என்பது, அன்று முதல் இன்று வரை (1906-2015) மக்கள் தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; கட்சிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், எல்லா மொழி வழக்கு ரைஞர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
வெகுமக்களான எல்லோரும் “நாம் இந்துக்கள்” - “நாம் இந்தியர்கள்” என்றும் நம்புகின்றனர். மற்ற மதக்காரர்கள் “நாம் இந்தியர்கள்” என்று நம்புகிறார்கள். நம் இந்திய நாட்டுக்கு ஒரு இந்திய மொழிதான் - அதுவும் இந்தி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று மூடத்தனமாக எண்ணுவதே இவ்விழி நிலைக் குக் காரணம் ஆகும்.
“இந்தியா” என்பது ஒரே நாடு அல்ல; “இந்தியர்” என்று எவரும் இலர். தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளி, வங்காளி, பஞ்சாபி, சிந்தி, இந்திக்காரர் இவர்களே உள்ளனர். இதுவே உண்மை.
இந்த உண்மையை நிலைநாட்ட ஆங்கிலம் இணை ஆட்சி மொழி, இந்தி ஆட்சி மொழி என்பதை மூர்க்க மாக எதிர்த்து ஒழிக்க வேண்டும்.
இந்தி, இந்தி பேசும் மாநிலத்தில் தாய்மொழி என்பது ஒன்று; இந்தி பேசும் மாநிலத்தின் ஆட்சி மொழி என்பது இரண்டு; எல்லாவற்றுக்கும் மேலாக அரசமைப்பின்படி இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழி என்பது மூன்று. இது இந்தி பேசும் மாநிலங்களுக்கு உள்ள அதிக உரிமை. இதைத் தமிழ்ப் பெருமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நம் அரசியல் உரிமை மறுப்பை எதிர்த்து நாம் போராட வேண்டும்.
இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
1963ஆம் ஆண்டைய இந்திய ஆட்சி மொழிச் சட்டப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், ஆங்கிலம் இந்திய அரசின் இணை ஆட்சி மொழி என் பதைத் தீவிரமாக நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
தமிழ்நாட்டில் பேச்சு, மூச்சு - கல்வி, ஆட்சி, நீதி, வழிபாடு எல்லாம் தமிழிலேயே இருக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பகுதிகளிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியே - அந்தந்த யூனியன் பகுதி ஆட்சி மொழியே - பேச்சு, மூச்சு, கல்வி, ஆட்சி, நீதி, வழிபாடு ஆகிய எல்லாத் துறைகளிலும் இருக்க வேண்டும் - என நாம் போராட வேண்டும்; அந்தந்த மாநிலத்தார் போராட வேண்டும்.
தமிழராகிய நாம் இந்தியா முழுவதும் சென்று போராட வேண்டும்.
இந்தியாவுக்கு ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தீரவேண்டிய-மிகப் பாரித்த பெரிய அரசியல் விடுதலைப் போராட்டமே இந்தி ஆதிக்க ஒழிப்புப் போராட் டம் ஆகும். இதை நாம் உணரவேண்டும்.
இணைந்து போராடுவோம், வாருங்கள்! இந்தியா முழுவதையும் இணைத்துப் போராடுவோம், வாருங்கள்! புதிய அரசமைப்பை உருவாக்குவோம், வாருங்கள்!