முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுவைக் கள்ளத்தனமாக வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். பின்னர் வந்த திராவிட கட்சியினர் மது விற்பனையை அனுமதித்துத் தனியாருக்கு ஏலம்விட்டு, கடை வைத்து விற்பனை செய்ய அனுமதித்தனர்.

அரசுக்கும் வருவாய் ஏலத் தொகையாகக் கிடைத்தது. பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கூறிய அ.தி.மு.க.வே ஆட்சிக்கு வந்த பின்னர் அரசே கடைகளை நடத்தினால் நல்ல வருவாய் கிடைக்கும் என்று கருதி தொகுப்பு ஊதியத்திற்கு ஆட்களை அமர்த்தி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் வைத்து நடத்திக் கொண்டு வருகின்றனர்.

மதுக்கடையால்தான் ஆட்சிக்கு அதிக வருவாய் வருகிறது என்றும் கூறுகின்றனர். அரசு கடைகளின் எண்ணிக்கைப் பன்மடங்கு உயர்ந்துவிட்டதால் மதுக்குடிக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. அதனால் தமிழன் பண்பாடுகள் சீரழிந்துவிட்டன. மது அருந்திய, அதிகாரி உடன்பணிபுரியும், பெண்களிடமும், ஆசிரியர்கள் மாணவிகளிடமும் பாலியல் தொல்லைகள் தருகின்றனர்.

குடிக்கப் பணம் கிடைக்கவில்லை என்று வீட்டில் திருடியபின், வெளியில் திருடியும் வழிப்பறி செய்தும், கூலிக்குக் கொலைகள் செய்தும் மது அருந்துகின்றனர். இவை அனைத்தும் ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

அரசு இலவசமாக கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் தாரைவார்த்து விட்டுத் தனியார் கொள்ளையடிக் கின்றனர். கீழ்த்தட்டு மக்களை மது மயக்கத்திலேயே வைத்திருந்தால்தான் மக்கள் விழிப் புணர்வு இல்லாமல் இருப்பார்கள், நாமும் ஆட்சி செய்து கொள்ளையடிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் தொடர்ந்து மதுவுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டு உள்ளனர்.

கேடான மதுக்கடையை சொகுசுமயமாக்கி விற்பனை செய்கின்ற அரசு கொடுங்கோல் அரசே!

Pin It