இந்த ஆண்டுக்கான உலக அழகியை பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் 108 நாடுகளில் தேடி இந்தியாவில் கண்டுபிடித்துள்ளன. 32-24-32 அளவுள்ள அந்த அழகியைப் பெற்றெடுத்த பெருமை நம் பாரத மாதாவிற்குக் கிடைத்திருப்பது பாரத நாட்டிற்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம். அதுவும் மோடியின் ஆட்சியில் இது நடந்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. நமது பிரதமர் அவர்கள் ஒருமுறை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற ஆங்கிலப் பத்திரிக்கை அவரிடம் குஜராத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு பற்றி கேள்வி கேட்டபோது அவர் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பதிலளித்தார் “குஜராத் பெண்கள் எப்போதும் சுகாதாரத்தைவிட அழகுக்கே முக்கியத்துவம் தருகின்றார்கள்” என்று. இந்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி 55 சதவீத குஜராத்திப் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விபரத்தோடு பொருத்திப் பார்த்தால் மோடி பெண்கள் மீது வைத்திருக்கும் அளப்பறிய அன்பை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.

பெண்களைப் பற்றி இப்படி மிக உயர்ந்த மதிப்பீடுகளை வைத்திருக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆட்சி செய்யும் போது, ஒரு இந்தியப் பெண் உலக அழகிப் பட்டம் பெறுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இந்த மாதிரி உலக அழகிப் பட்டம் வாங்க வேண்டும்; அதன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சிய நோக்கில்தான் தங்களது உணவுத் தேவையை குறைத்துக்கொண்டு தங்களை பன்னாட்டு பெரு நிறுவனங்கள் 'அழகி' என்று தீர்மானிக்கக் கொடுத்திருக்கும் 32-24-32 என்ற அளவிற்குள் தங்கள் உடலை பொருத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றார்கள். மற்றபடி அவர்களுக்கு மூன்று வேளையும் தரமான ஊட்டச்சத்துக் கிடைப்பதை நமது 52 இன்ச் மார்பளவு உடைய உலக அழகனாகத் தேர்த்தெடுக்க எல்லாவகையிலும் பொருத்தமான பிரதமர் அவர்கள் உறுதி செய்திருக்கின்றார்கள்!

miss world 2017

உலகி அழகிப் போட்டியைக் கடுமையாக எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் உட்பட சங்பரிவார கும்பல்கள், மோடி பதவியேற்ற உடனேயே தங்களது ஆணாதிக்க சிந்தனையைக் கைவிட்டு மனஷி சில்லரின் வெற்றியை அகமகிழ்ந்து கொண்டாடிவருகின்றனர். 'பெண்கள் இழுத்து மூடிக்கொண்டு வீட்டில் கணவனுக்கும், மகன்களுக்கும், மாமியார்களுக்கும் பணிவிடை செய்வதை மட்டுமே செய்ய வேண்டும், அதுதான் குடும்பப் பெண்களின் லட்சணம்' என்ற மிக உயர்ந்த ஆன்மீக சிந்தனையில் வளர்த்தெடுக்கப்பட்ட இந்தக் கும்பல், இப்போது மனஷி சில்லர் நீச்சல் உடையில் தன் உடலை பன்னாட்டு பெருமுதலாளிகளுக்குக் காட்சிப்படுத்திய போது அவரை ஒரு நீச்சல் உடை அணிந்த பாரத மாதாவாகவே கருதி ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள்.

பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பலர் உலக அழகிப் பட்டம் வாங்கிய மனஷி சில்லரை வாய் வலிக்க வலிக்க வாழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். 17 ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு பாரதப் புதல்வியின் உடல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக அவர்கள் கருதுகின்றார்கள். இதற்கு முன்னால் 1966 ஆண்டு ரீட்டா ஃபாரியாவும், முறையே 1994 ஐஸ்வர்யா ராய்,1997 டயானா ஹெய்டன்,1999 யுத்தாமுகி, கடைசியாக 2000 ஆண்டு பிரியங்கா சோப்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். உலகமயமாக்கல் இந்தியாவில் திணிக்கப்பட்ட 1990 களுக்குப் பின் இதுவரை மனஷி சில்லரையும் சேர்த்து ஐந்து உலக அழகிகள் இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்துத்துவ கும்பல் உலக அழகிப் போட்டியை மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பு வரை கடுமையாக எதிர்த்து வந்தாலும், ஒருநாளும் இந்தக் கும்பல் பன்னாட்டு அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பதற்கு எதிராக ஒரு சிறு போராட்டத்தைக்கூட நடத்தியது கிடையாது. பாரதப் பண்பாட்டை தன்னுடைய யோகாவில் சரிசமமாக கலந்து இந்திய மக்களுக்கு விநியோகித்துக் கொண்டு இருக்கும் கருப்புப்பண ஒழிப்புப் போராளி ராம்தேவ் கூட தன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து மிகக் குறைந்த விலையில் தருவதாக அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்துகொண்டு இருக்கின்றார். ஐஸ்வர்யா ராயும், யுக்தாமுகியும், பிரியங்கா சோப்ராவும் பிறந்த இந்த மண்ணில் இன்னும் அழகற்று வாழும் பல கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற பாபாஜி அவர்கள் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலமாகவே அழகுசாதனப் பொருட்களை தயாரித்து அழகிகளை உற்பத்தி செய்துகொண்டு இருக்கின்றார். மோடியின் ஆட்சியில் இந்தியாவில் அழகற்ற பெண்கள் என்று யாரும் இருக்க கூடாது என்பதில் கலாச்சாரக் காவலர்கள் மிகக் கவனமாக இருக்கின்றார்கள்.

மனஷி சில்லர் பல கோடி அழகற்ற இந்தியப் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக மாறியிருக்கின்றார். அழகியாக வாழ்வது ஒரு தவம். தன் உடலை அங்கம், அங்கமாக அளவெடுத்து ஒவ்வொரு பாகத்திற்கும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒரு விலையைத் தீர்மானிப்பது பாரத நாட்டிற்கும் பாரதமாதாவிற்கும் கிடைத்த பெருமை. எனவே இனி அழகற்ற இந்தியப் பெண்கள் தங்களின் உடல்களும் நல்ல விலை போக வேண்டும் என்றால் மினுமினுக்கும் முகப்பூச்சு மாவுகளையும், சுண்டி இழுக்கும் நறுமணத் திரவியங்களையும், குழவைகளையும் பயன்படுத்தி தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையில் பாரத தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக இருந்தீர்கள் என்றால் பதஞ்சலி தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களையே பயன்படுத்துவது இன்னும் சிறப்பானது.

உலக அழகியாகத் தேர்ந்தெடுக்க வெறும் அழகு மட்டுமே பிரதானமானது கிடையாது உங்களுக்குக் கொஞ்சம் அறிவும் இருக்க வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றனர். அழகிப் போட்டியில் உங்களிடம் கேட்கப்படும் மிகக் கடினமான கேள்விகளான 'உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்கள்? அழகு பற்றிய உங்களின் கருத்து என்ன?' போன்ற கேள்விகளுக்கு இந்த உலகில் இதுவரை யாரும் சொல்லாத கவர்ச்சியூட்டும் பதில்களை நீங்கள் அளிக்க வேண்டும். அனாதைக் குழந்தைகளுக்கு சேவை செய்வேன் என்றோ, இல்லை அன்னை தெரசா போன்று ஆவேன் என்றோ நீங்கள் பதில் சொல்லலாம். அழகு என்பது 32-24-32 கிடையாது, மனம் தான் உண்மையான அழகு என்று கூட சொல்லலாம். இப்படி நீங்கள் கொடுக்கும் பதில்கள் உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தரும். இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டம் பெற்ற மனஷி சில்லரிடம் 'உயர்ந்த ஊதியம் கொடுக்கும் தகுதியான தொழில் எது? அதற்கான காரணம் என்ன?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், உயர்ந்த ஊதியம் கொடுக்கும் தகுதியான தொழில் தாய்மை என்றும், ஆனால் பணம் அவளின் வருமானமல்ல, உண்மையான அன்பும்,மரியாதையுமே அவளின் சம்பளம் என்றும் மிக உயர்ந்த வாழ்க்கைத்தொழில் தாய்மை என்றும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றார்.

ஏற்கெனவே இந்தியாவில் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் வேலைக்கு செல்கின்றார்கள் என்பதும், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 19.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெண்களின் உழைப்பு ஊதியமற்ற வேலைகளால் இந்தியாவில் சுரண்டப்படுகின்றது என்பதையும் சேர்த்துப் பார்த்தால், மனஷி சில்லர் கொடுத்த பதிலில் இந்தியாவின் ஆன்மீக லட்சியம் பிரதிபலிப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். வீட்டில் எந்தவித ஊதியமும் இன்றி சாகும்வரை அடிமை வேலை செய்யும் பெண்களுக்கு அன்பும், மரியாதையுமே போதும் என்பதுதான் இதன் உட்கருத்து. தாய்மையை மிக உயர்ந்த வாழ்க்கைத் தொழிலாகப் பார்க்கும் மனஷி சில்லருக்கு நமது நாட்டின் பிரதமரான மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தான் சோற்றுக்கு வழியற்ற ஏழைப் பெண்கள் மூலம் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களுக்கு வாடகைத் தாய் தொழில் மூலம் அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொடுத்து அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலம் என்பது தெரியுமா என்று தெரியவில்லை.

அதுமட்டும் அல்லாமல், உலக அழகிப் போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பியூட்டி வித் எ பர்பஸ் ( beauty with a purpose) என்ற நிகழ்ச்சியில் உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் அழகிகள் புராஜெக்ட் ஒன்றையும் செய்ய வேண்டுமாம். இதற்காக மனசி சில்லர் 'மாதவிடாய் காலத்தில் சுகாதாரம்' என்ற தலைப்பில் 20 கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தாராம். பெரும்பாலான ஏழை இந்தியப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்ரி நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தால் இதை அவர் செய்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஏழைப் பெண்கள் அதைப் பயன்படுத்தாததற்குக் காரணம் அதன் விலையே ஒழிய, அதைப் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் பெண்களின் மீதும், அவர்களின் சுகாதாரத்தின் மீதும் பெரிய அக்கறை கொண்ட மோடி அரசு சானிட்ரி நாப்கின்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரியை விதித்து, மிகக் குறைந்த விலையில் அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தது. மோடியின் இந்த அக்கறையைப் பார்த்துத்தான் பல சமூக ஆர்வலர்கள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் அலுவலகத்திற்கு சானிட்ரி நாப்கின்களை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். இதுவும் கூட அந்த 20 வயதே நிரம்பிய 32-24-32 உலக அழகியான மனஷி சில்லருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

ஆனால் இதெல்லாம் பெண்களை தன்னுடைய சக மனுஷியாய், தன்னுடைய உற்ற தோழியாய், தன்னைவிட எந்தவகையிலும் மானூட சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு எள்ளளவும் குறைவான தகுதி கொண்டவள் என்று கருதாத இடதுசாரி சிந்தனைகொண்டவர்களின் பிரச்சினை. பன்னாட்டு பெருங்குழும நிறுவனங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர்களுக்கு பெண்களின் உடலை சந்தைப்படுத்த வேண்டும், அதை நுகர்வுக்கு ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டும், அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளவேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கவலை. அதற்காக அவர்கள் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்படும் பெண்களின் உடல் பாகங்கள் அனைத்தையும் தங்களின் அழகு சாதனப் பொருட்கள்தான் அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்று காட்டுவதன் மூலம் அதைக் கோடான கோடி அழகில்லாத பெண்கள் வாங்கிப் பயன்படுத்தி, அவர்களும் தங்கள் உடலை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு பண்பாட்டோடு மாறுபட்ட தோற்றத்தோடு வாழும் ஒரு நாட்டில் மனஷி சில்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒட்டுமொத்த இந்தியப் பெண்களையும் கொச்சைப்படுத்தும் செயலாகும். இது எது போன்றது என்றால் தமிழ்நாட்டில் பத்தினியாக ஒரு கண்ணகி மட்டுமே இன்றுவரை கொண்டாடப்பட்டு வருவதற்குச் சமமாகும். எப்படி கண்ணகி பத்தினி என்று சிலை வைப்பதன் மூலம் மற்ற பெண்கள் சிலை வைக்க தகுதியற்ற விபச்சாரிகள் என்று முத்திரை தானாகவே விழுகின்றதோ, அப்படித்தான் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அதில் சரிபாதி பெண்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரு உலக அழகியை தேர்ந்த்தெடுப்பதும் ஆகும். உண்மையில் மானமுள்ள, சுயமரியாதை உள்ள ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்க்க வேண்டும். உலக அழகிப் போட்டியை நடத்தும், அதைக் கொண்டாடும் ஒவ்வொருவனும் விபச்சாரத் தரகனைவிட மோசமானவர்கள் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It