கீற்றில் தேட...

women military 350காதலர் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் காதலிக்கும் உரிமையை இன்று உலகம் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவில் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. காதலை மறுத்த சமூகத்தில் காதலர் நாள் ஒரு வெற்றிக் குறியீடு. ஆனால் பெண்களை மென்மையாக அழகு தேவதையாக வர்ணித்துக் காதலிக்கும் ஆண்கள் மனம், பெண்கள் கட்டளையிடுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெண்கள் காதல் உரிமையை ஏற்றுக் கொள்ளும் ஆண்கள், பெண்கள் கட்டளையிடும் உரிமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்திய இராணுவத்தின் பெண் அதிகாரிகளுக்கான கட்டளையிடும் பணிகளுக்கான வழக்கு இதற்குச் சான்றாக உள்ளது. இவ்வழக்கில் நீதிபதிகள் அதிர்ந்து போகும் அளவிற்கு மத்திய அரசு ஒன்றைச் சொல்லியிருக்கிறது. இராணுவத்தில் அதிக அளவில் ஆண்கள் இருப்பதாலும், அதிலும் அவர்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இங்கு நிலவும் சமூக கட்டமைப்பின் படியும், பெண் அதிகாரிகளின் கட்டளையை ஏற்றுக் கொள்ளப் படைகள் மனதளவில் உருவாக்கப்படவில்லை என்று சொல்லி இருக்கிறது. மேலும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "பெண்கள் ஆண்களுக்குச் சமமாக வருவதற்குப் போராடக் கூடாது. அவர்கள் ஆண்களை விட இன்னும் மேலானவர்கள்" என்றொரு வாதத்தை வைத்திருக்கிறார். இதில் அப்பட்டமான அவரின் இந்துத்துவ மனநிலை தெரிகிறது.

2010 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தால் பெண் அதிகாரிகளுக்குப் குறுகியகால சேவை ஆணையத்திற்குப் (Short Service Commission) பின் நிரந்தர ஆணையத்தை (permanent commission) கொடுக்க கப்பல் படைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்துத் தான் இந்திய அரசின் பாதுகாப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் செய்யப்படும் வாதங்கள் மிகவும் பிற்போக்கானதாக இருந்து வருகின்றன. ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்களே இவ்வழக்கைத் தொடுத்திருக்கிறார்கள். பபிதா புனியா மற்றும் பலர், இராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளின் சார்பில் தொடுத்த இவ்வழக்கில் சனாதன (அ)தர்மங்களை நீதிமன்றத்தில் வாதங்களாக எடுத்து வைக்கிறது மத்திய அரசு.

பெண்களால் 'Front-line combat' என்று சொல்லப்படும் நேரடியாகப் போர் நடக்கும் இடங்களில் கட்டளையிட்டுப் பணி செய்ய முடியாது என்றும் அவர்களுடைய உடலியல் அமைப்பு அதற்கு ஏற்புடையது அல்ல என்றும் வாதங்களை அரசு முன்வைத்திருக்கிறது. பெண்கள் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்று சொன்னவர்கள் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களை மறுத்தும், பின்னர் ஏற்றும் கொண்டிருக்கின்றனர். பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று சொன்னவர்கள் வேலைக்கு அனுப்பினார்கள்.

பின்னர் மிக மென்மையான பணிகளுக்கு அனுப்பினார்கள். பின்னர் காவல் துறை இராணுவம் போன்ற பணிகளுக்கும் அனுப்பினார்கள். இப்படிப் பெண்ணின் உடல் மீது சொல்லப்பட்ட பொய்யுரைகளை எல்லாம் உடைத்து இன்று பெண்கள் நடை போட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மீண்டும் அதே பழைய காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காரணம் எவ்வளவு பலவீனமானது என்பதை உலகம் அறியும். இராணுவத்தில் பணிபுரியும் உயரதிகாரிகளே இதனை மறுத்துள்ளனர். 30 ஆண்டுகளாக இராணுவத்தில் பெண்களுடைய இந்த உடலியல் பிரச்சினைகளை மிகவும் பக்குவமாக இராணுவம் கையாண்டு வந்திருக்கிறது என்று இராணுவத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இருப்பினும் இப்படிப்பட்ட வாதங்களை வைக்கும் ஆட்சியாளர்களிடமும் பார்ப்பனிய அதிகாரிகளிடமும் மண்டிக் கிடக்கும் மதக் குப்பைகளையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. மேலும் எதிரிகளால் கைப்பற்றப்படும் போது பெண்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் மனரீதியான தொல்லைகள் அரசாங்கத்திற்கு மிகவும் அழுத்தமான சூழலை உருவாக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த வாதங்களை எல்லாம் நீதிபதிகளே கண்டித்து இருக்கின்றனர்.

இந்த வழக்குத் தொடர்ந்த பெண் அதிகாரிகள் இந்திய பாதுகாப்புத் துறையின் அனைத்து வாதங்களுக்கும் தகுந்த பதிலடிகளைச் சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்திருக்கின்றனர். கட்டளையிடக் கூடிய ‘கர்னல்' என்று சொல்லப்படும் அதிகாரி இல்லாத நேரங்களிலும் அதற்கு அடுத்தபடியான அதிகாரியும் உடல் நலம் இல்லாத நேரங்களிலும்  பெண்கள் தலைமை ஏற்றுப் படைகளைச் சிறப்பாக வழிநடத்தி இருக்கின்ற நிகழ்வுகள் இராணுவத்தில் பலமுறை நடந்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வளவு சான்றுகள், ஆதாரங்கள் இருந்தும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மனம் இல்லை. அதனால் தான் நீதிபதிகள் மிகத் தெளிவாக ‘administrative will' மற்றும் ‘change of mindset'  தேவை என்று மத்திய அரசின் வாதங்களை மறுத்துள்ளனர். இதில் நாம் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது 'administrative will' என்பதைத்தான். இந்த நாட்டில் ஆட்சியாளர்களைப் போலவே அதிகாரிகளிடமும் பார்ப்பனியம் வேரூன்றியிருக்கிறது. ஆட்சியாளர்கள் கூட வாக்குகளுக்காக மாற்றிப் பேசுவார்கள். ஆனால் நிர்வாகம் செய்யும் பார்ப்பனிய அதிகாரிகளே அவர்களைவிட ஆபத்தானவர்கள். 

பெண் விடுதலைக்காகப் பெண்கள் இன்று நீதிமன்றத்தை நாடி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த பெண் அதிகாரிகளுக்கு நாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். இது குறிப்பிட்ட சில பெண் அதிகாரிகளுக்கான போராட்டம் மட்டுமில்லை. பெண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து ஆணைப் பெண்ணுக்கு எஜமானனாக நிறுவிய சமூக கட்டமைப்பின் மீது நடத்தப்படும் ஒரு துல்லியத் தாக்குதல். வேலு நாச்சியாரும், ஜான்சி ராணியும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். பெண்ணின் கட்டளையை ஏற்று ஆண்கள் இராணுவத்தில் பணிபுரியும் நாள்களை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை நகர்த்துபவர் "அரசாங்கம் பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டும்" என்று போர்க்குரல் எழுப்பிய பெரியார். 

இதுகுறித்து நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் ராணுவத்தில் பெண்களுக்குரிய உயர் பதவி குறித்து அரசு சொல்லும் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரமாகப் பணியாற்ற 3 மாதத்திற்க்குள் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இது கடைசியாகக் கிடைத்த செய்தி.