கவிதையின் மீது நம் இந்திய மக்களுக்கு எப்போதுமே ஒரு பெரும் மதிப்பு இருந்ததுண்டு. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவிஞர்கள் கொண்டாடப்பட்டு இருக்கின்றார்கள். வால்ட் விட்மனையும், பாப்லோ நெரூதாவையும் , ஷேக்ஸ்பியரையும் படிக்க விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்? ஒரு சிறுகதையும், நாவலும் ஒருவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளை விட ஒரு நான்குவரி கவிதை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அது மூங்கில் காட்டில் விழுந்த ஒரு நெருப்புப் பொறியாக உள்ளங்களை எரித்துச் சாம்பலாக்கிவிடும். அது கொடுக்கும் உடனடியான அதிர்ச்சி உங்கள் தண்டுவடங்களை சில சமயங்களில் சில்லிடச் செய்துவிடும். அதனால்தான் உலகம் முழுவதும் கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் அனைத்துக் கவிஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. மக்கள் தங்கள் நினைவுகளில் வைத்துக் கொள்வதும் இல்லை. யார் தன் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் தன் கவிதைகளை அர்ப்பணிக்கின்றார்களோ, அவர்கள் தான் நூற்றாண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகின்றார்கள்.

vairamuththu at modi book release

இயற்கையின் அழகியலையும் அதன் வசீகரிக்கும் விந்தையையும் கவிஞன் கவிதையாக்குகின்றான். அவனது சக மனிதர்களால் வெளிப்படுத்த முடியாத மிக ஆழமான மன உணர்வுகளை அவன் வெளிப்படுத்துகின்றான். அது தங்களால் வெளிப்படுத்த முடியாத, ஆனால் வெளிப்படுத்த விரும்பிய உணர்வு என்று நினைக்கும் போது அப்படி நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் கவிஞன் சொந்தமாகின்றான். மக்கள் விரும்பாத, அவர்களுக்குத் தேவைப்படாதவற்றை தன்னுடைய சொந்த அரிப்பை தீர்த்துக் கொள்ள எழுதுபவர்கள் எல்லாம் மக்களால் நிராகரிக்கப்படுகின்றார்கள். உலகம் முழுவதும் பல கவிஞர்கள் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவர்கள் மக்களின் குரலாக அவர்களின் உணர்வாக எழுதியதுதான்.

நாம் தமிழில் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வருடமும் பல நூற்றுக்கணக்கான கவிதைத் தொகுதிகள் வெளிவருகின்றன. ஆனால் எத்தனை பேரின் கவிதைகள் கொண்டாடப்படுகின்றன என பார்த்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் குறைந்தபட்சம் படிக்கும் பழக்கம் உள்ளர்கள் கூட புறக்கணித்து விடுகின்றார்கள். காரணம் கவிதையை வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு அவை முற்றிலும் அந்நியப்பட்டு இருப்பதால்தான். தமிழில் கவிதை எழுதும் பல கவிஞர்கள் அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பெரும்பாலும் பாலியல் சார்ந்த கவிதைகளை மட்டுமே எழுதி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும், சாதிய வன்கொடுமைகள் பற்றியும், அவர்களிடம் இருந்து அழிக்கப்படும் பண்பாடுகளையும், அதை மீட்டெடுப்பதற்கான வழிகளையும் பற்றியும் எப்போதுமே கவலை இருந்தது இல்லை. எப்போது பார்த்தாலும் பாலியலை பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது. ஆண்குறியையும், பெண்குறியையும், மார்புகளையும், உச்சநிலையையும் பற்றி மட்டுமே எழுதி அந்தக் கருமத்தை அனைவரும் படித்து வியக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். எப்போதெல்லாம் அரிப்பெடுத்திக் கொள்கின்றதோ அப்போதெல்லாம் பேனாவால் சொறிந்து கொள்கின்றார்கள். இந்த அரிப்பெடுத்த கூட்டதிற்கு ஒரு வாசகர்வட்டம் வேறு உள்ளது. கடைகளில் மறைத்து விற்கப்படும் சரோஜாதேவி புத்தகங்களை கவிதை என்ற பெயரில் வெளிப்படையாக வெளியிட்டு அரிப்பெடுத்த வாசகனுக்குத் தீனி போடுகின்றார்கள்.

தன் சமகால மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினையில் இருந்து தூர விலகி தன்னுடைய அரிப்பை மட்டுமே பிரதானப்படுத்தும் கவிஞன் இறுதியில் அவன் உயிருடன் இருக்கும்போதே அவனது கவிதை தொகுதிகள் செத்து சுடுகாடு போவதை பார்க்கின்றான். இதை எல்லாம் ஏன் சொல்கின்றோம் என்றால் கவிதை மிக மகத்தானது. எப்பொழுதென்றால் அது மக்களின் சிந்தனையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் புரட்சிகர உணர்வுகளைத் தட்டி எழுப்பி சமூக மாற்றத்தற்குத் துணை நிற்கும் போது.

ஒரு சிறுகதை எழுதுவதைவிட, ஒரு நாவல் எழுதுவதைவிட, கவிதை எழுதுவது இன்று மிக எளிமையாக மாறிவிட்டது. அதனால் கையில் பேனாவும், பேப்பரும் இருக்கும் யார் வேண்டும் என்றாலும், இன்று ஒரு கவிஞனாக அவதாரம் எடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், எழுதிய குப்பைகளை நூலாக வெளியிட்டு, உங்கள் பெயருக்கு முன்னால் கவிஞன் என்ற பட்டத்தை போட்டுக்கொள்ளலாம். கவிதை வெளியீட்டுக்கு சில ஆயிரங்கள் செலவழிக்கத் தயாராக இருந்தால், உங்கள் குப்பைகளுக்கு ஓர் அங்கீகாரம் கொடுக்க ஒரு கூலிப்படை கவிஞர் கூட்டம் எப்போதுமே தயாராக இருக்கின்றது.

எதை எழுதினாலும் அதற்குக் கவிதை என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான் இங்கே பல வெத்துவேட்டுகளை எல்லாம் கவிஞனாக அவதாரம் எடுக்க காரணமாக இருக்கின்றது. எப்படி அநாதைக் குழந்தைகளின் கனவுகளில் வரும் அப்பா, அம்மாக்களை உண்மையில் நாம் கண்டுபிடிக்கவே முடியாதோ, அதே போல இந்தப் பாவிகள் எழுதும் கவிதைகளில் இருந்து கவிதையை மட்டும் நம்மால் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவே முடியாது.

கவிதையை எழுதுவதற்கு ஏதாவது தகுதி வேண்டும் என்றால், முதல் தகுதி அது மனிதர்களால் மனிதர்கள் படிப்பதற்காக எழுதப்பட வேண்டும் என்பதுதான். அப்படி என்றால் மனிதர்கள் தவிர மற்ற விலங்குகள் கூட கவிதை எழுத முடியுமா என்றால் கலியுகத்தில் மிகக் கொடிய மிருகங்கள் கூட கவிதை எழுத ஆரம்பித்து இருக்கின்றன. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், மோடி தற்போது ஒரு கவிஞராக அவதாரம் எடுத்திருப்பது. தன் சிந்தனைகளில் எந்நேரமும் ரத்த வாடயையும், சதைகளின் கவிச்சையையும் நுகரத் துடிக்கும் ஒரு மிருகம், தன் ஆட்சிப் பரப்பில் இருக்கும் எளிய விலங்குகளை தினம் தினம் திட்டம் தீட்டி வேட்டையாடும் ஒரு மிருகம், வயிறு புடைக்க தின்றுவிட்டுச் செறிக்காமல் அஜீரணக் கோளாரால் அவதிப்பட்ட போது அந்த வேதனையை கவிதையாக எழுதி இருக்கின்றது.

அந்தக் கவிதைகளில் எளிய மனிதர்களை அந்த மிருகம் எப்படி எப்படி விரட்டி விரட்டி வேட்டையாடியது, அதன் ரத்தத்தையும், சதைகளையும் எலும்புகளின் ஊன்களையும் எப்படி ருசித்து சாப்பிட்டது என்பதெல்லாம் இருக்கும் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். மிருகங்கள் அதை ஒருபோதும் செய்யாது. வேட்டையாடுவது அதன் தொழில் என்பதால் அதன் கவிதைகளில் வேட்டையாடப்பட்ட எளிய விலங்குகளின் வலி எல்லாம் அதில் இருக்காது. மாறாக அது அவ்வாறு ரத்தத்தையும், சதைகளையும் ருசித்து உண்ணும் போது அதன் மீது வீசிய மெல்லிய காற்றைப் பற்றியும், தன்னால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் ரத்தங்கள் வானத்தில் தெறித்து வானம் தன் முகமெல்லாம் சிகப்பை அள்ளி பூசிக்கொண்ட பாரதமாதாவாக காட்சியளித்ததைப் பற்றியும், விலங்களின் மரண ஓலம் அதற்குள் ஏற்படுத்திய கிளர்ச்சியைப் பற்றியுமானதாகவே அந்தக் கவிதைகள் இருக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் அந்தக் கவிதைகள் பிணத்தைப் பாலியல் பலாத்காரம் செய்து முடித்தவனின் இளைப்பாறுதல்.

அப்படிப்பட்ட கவிதைகள் சமூகத்தில் அது போன்றே ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை ஒருங்கிணைக்க பயன்படுபவை. ஒரு பெரும் கொடூரத்தின் மீது வண்னங்களைப் பூசி அவற்றை பிறர் மெய்மறந்து ரசிக்க வைக்கும் உத்தி. இப்படிப்பட்ட உத்தி தமிழ்நாட்டில் அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் எடுபடுமா? என்று யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்குத் தமிழ்நாட்டில் விருதுக்கு வெளிக்கி இருக்கும் கவிப்பேரரசுகள் இருக்கின்றார்கள். அவர்கள் சாகித்திய அகாதெமி என்றால் சட்டை கழற்றித் தருவார்கள், தேசிய விருதுகள் என்றால் வேட்டியைக் கழற்றித் தருவார்கள். இப்போது யாரோ ஞானபீடம் என்று சொல்லி இருப்பதால் அவர் தன்னுடைய கோவணத்தையே கழற்றித் தந்திருக்கின்றார். இப்போது முழு நிர்வாணமாக பாசிசம் பெற்றெடுத்த கவிதைக் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார். பாவம் சீக்கிரம் கொடுத்து விடுங்கள் ஞானபீடத்தை. ஆண்பால் பாவம் பொல்லாதது.

- செ.கார்கி

Pin It