வரலாற்றுப் பூர்வமான மிகப்பெரிய புரட்சியாகக் கொண்டாட்டத்தோடு அறிவிக்கப் பெற்ற, கேரள இடதுசாரி அரசாங்கத்தினுடைய உயர்சாதியினரில் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானம், சாதீய இட ஒதுக்கீடு என்னும் சமூக சீர்திருத்த அரசியலுக்கு எதிரான சவர்ணர்களின் சூழ்ச்சியாகும். இந்தியா என்னும் நாடு உருவாகி எழுபது வருடங்கள் ஆனபின்னும், அனைவருக்கும் சமமாகவும், நியாயமாகவும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய வளங்களும், பொது மூலதனங்களில் பெற வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் உயர்சாதியைச் சார்ந்தவர்களிடமே குவிந்து கிடக்கிறது.. அந்த வகையில் நீதி மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நூற்றாண்டுகளாக சாதி என்னும் நுகத்தடியைத் தாங்கி வாழ்ந்து வருகின்ற தலித் மற்றும் ஆதிவாசிகளை பொதுமூலதனம் மற்றும் சொத்துகளுக்கு உரியவர்களாக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீட்டின் மூலம் முயல்கிறோம்.

pinarayi vijayan 338

உயர்சாதியினருக்கும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவர விரும்புகிறவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது, இடஒதுக்கீடு என்பது தொழில் புரட்சியோ, வறுமையை ஒழிப்பதோ அல்ல என்பதாகும். நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட அதிகார சமத்துவத்தை அளிப்பதற்கான ஒரு அரசியலமைப்பு முறையிலான வழி மட்டுமே அது. ஆனால், அந்த இடஒதுக்கீடு தாங்கள் அனுபவிக்க வேண்டிய, சமூக அதிகாரத்தை வலுக்கட்டாயமாகப் பெறுவதற்கான ஆயுதமாக இடஒதுக்கீட்டைத் தலித் மற்றும் ஆதிவாசிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதே இடஒதுக்கீட்டை மறுப்பவர்கள் முன்வைக்கும் வாதமாகும். தற்போது அரசாங்க வேலைகளிலும், கல்விக் கூடங்களிலும் மட்டுமே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பூமி என்னும் மண்ணின் மீதான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை போன்றவற்றை நோக்கி இதுபோன்று சாதியால் நீதி மறுக்கப்பட்ட மனிதர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம். தலித் மற்றும் ஆதிவாசிகளுக்குப் பொதுச்சமூகத்தில் சில துறைகளிலாவது கிடைக்கும் வாய்ப்புகள் குறையவும், அதன்மூலம் தற்போதுள்ள நிலையிலிருந்த மேலும் பரிதாபகரமான நிலைக்கு மாறவும், பொருளாதார இடஒதுக்கீடு வழி வகுக்கும். கேரளாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களில் 37..5 சதவிகிதம் பட்டியல் இன மக்களும், 29..5 சதவிகிதம் பட்டியலின உட்பிரிவைச் சேர்ந்தவர்களும் இருக்கும்போது, சவர்ணர்களில் வெறும் எட்டு சதவிகிதம் மட்டுமே வறுமை நிலையில் உள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கேரள பிணராயி அரசு நடைமுறைப்படுத்தப் போகும் உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு கேரள அறநிலையத்துறையில் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து, தாங்கள் ஏதோ பெரிய விஷயத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்பது போன்று அறநிலையத்துறை கோவில்களில் சாந்தி பணிக்கு (பூசாரி) தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தது. பூசை செய்ய ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இங்குள்ள (தேவசம் போர்டு) கல்லூரிகளில் பட்டியல் சாதி மற்றும் உட்பட்டியல் சாதியைச் சார்ந்த ஒரு பேராசிரியரை நியமித்திருந்தால், ஒருவேளை அது, இதுவரையுள்ள பொய்யான சமூகப் புரட்சி பற்றிய முழக்கங்களை அடித்து நொறுக்கி வரலாற்றை மாற்றி எழுதியிருக்கும் .ஆனால், தலித்தைச் சாதாரண சாந்தி (கீழ்நிலைப் பூசாரி) ஆக்குவதன் மூலம் பாபா அம்பேத்கர், மகாத்மா அய்யங்காளி, பொய்கையில் அப்பச்சன் ஆகியோர் முன்னெடுத்து நடைமுறைப்படுத்திய நவீன முற்போக்குச் சிந்தனைகளை ஒட்டு மொத்தமாகத் தலைகீழாகக் கவிழ்த்து, மனுஷ்மிருதி கொள்கைகளையே உண்மையில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இங்கே மறைந்திருப்பது பார்ப்பனிய மார்க்சியத்தின் கள்ளத்தனம் அல்லாமல் வேறொன்றுமில்லை.

பொருளாதார இடஒதுக்கீடு என்னும் வாதத்தோடு வருகின்ற பார்ப்பன மார்க்சியத்திற்கு கட்சி, அரசியல் வேறுபாடு ஒன்றும் கிடையாது. கடந்த உம்மன்சாண்டி அரசினது காலத்தில்தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாலகிருஷ்ண பிள்ளையைத் தலைவராகக் கொண்டு, உயர் சமூகத்திற்கான அமைப்பு என்னும் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் பிணராயி அரசு, ஒருபடி மேலே போய், காபினெட் அந்தஸ்து கொடுத்து உயர் சமூகத்திற்கான அமைப்பின் தலைவருக்கு ஆதரவளித்தது. 2017 – ஆரம்பத்தில் அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனின் முக்கியமான ஓர் உரை அனைவருக்கும் ஞாபகமிருக்கும். ஒரு பார்ப்பன நிகழ்வில் பங்கு கொண்டு பேசிய அவர், “தனது கட்சியின் அரசியல் என்பது பொருளாதார இடஒதுக்கீடுதான்” என்று கூறினார். அத்தோடு அவரது உரை பரிகாசத்திற்குரியதாகவும் அமைந்தது. “மண்ணிலிருந்து ஒதுக்கப்பட்ட துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தவர்கள் கேரள பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. மரியாதைக்குரிய அமைச்சருக்குக் கேரளாவில் எங்காவது மூன்றரை சென்டில் ஒரு பார்ப்பன காலனியைக் காட்டித் தர முடியுமா? அதுகூட வேண்டாம். புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து மோசமான தரித்திர நிலையில் வாழும் ஒரு பார்ப்பன கூட்டத்தைக் காட்ட முடியுமா? மார்க்சியத்தைப் பார்ப்பன மார்க்சியமாக மாற்றி எழுதுவது எப்படி என்பதன் அரசியலை இந்தப் பேச்சுகள் உ|றுதி செய்கின்றன.

'விவசாய நிலம் விவசாயிகளுக்கே’ என்னும் முழக்கத்தை எழுப்பி, அதை நடைமுறைப்படுத்த கொண்டு வரப்பட்ட “நிலச்சீர்திருத்தச் சட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, அதனுடைய முக்கியத்தவத்தைக் குறைக்கும் விதமாக, கேரளாவிலிருந்த ஏராளமான நிலப்பகுதிகளை உயர்த்தப்பட்ட சவர்ணர்கள் டிரஸ்டுகளாகவோ, எஸ்டேட்டுகளாகவோ பதிவு செய்தனர். அதன்பின்னர், நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் எல்லைக்குள் டிரஸ்டுகளையும் எஸ்டேட்டுகளையும் உட்படுத்தாதபடி சட்டத்திருத்தம் செய்தனர். பூமியின் பெரும்பகுதியை டிரஸ்டுகளாகவும் எஸ்டேட்டுகளாகவும் மாற்றியிருந்தனர். அதன்பிறகு தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் கொஞ்சம் இடங்களை வழங்கி, அதை காலனிகள் என்று அழைக்கவும் செய்ததாம்.

சமூக நெருக்கடி வாய்ந்த சூழலில்தான் உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது என்று அரசு கூறுகின்றது. அந்தச் சூழல் என்னவென்று அரசு தெளிவுபடுத்த வேண்டும். இங்கே சமூகச் சிந்தனையாளரும் எழுத்தாளருமான சண்ணி காபிகாடு கூறுவதைக் கேரள பொதுச்சமூகம் கவனிக்க வேண்டும.; அவர் கூறுகிறார்,

“தேவசம் போர்டு நியமனங்களில் உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளதார நிலையில் பின்தங்கியிருப்வர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தீர்மானிப்பதுடனே, ஒரு தள்ளுபடி சலுகை என்னும் வகையில், அது பட்டில் மற்றும் உட்பட்டியலின மக்களுக்கும் கொடுக்கும் இடஒதுக்கீட்டை விட, உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு அதிகமாகக் கொடுக்க வகை செய்கிறது. பத்து சதவிகிதமாக இருக்கும் அந்த இடஒதுக்கீட்டின் அனுகூலம் என்னவாக இருக்கும் என்பதும் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்னும் சட்டம் வடிவம் கொள்ள, ஒரு மாநிலத்தில் ஏதாவது ஒரு மக்கள் இனம் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியுள்ளனர் என்று கண்டறியப்பட்டால், அதாவது, அந்த மக்கள் சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் ஒடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது உறுதியானால், அவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது மாநிலத்தின் உரிமையாகும். இந்த உரிமையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுவே அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிற விதிமுறை.

இரண்டாவது விஷயம் ஒரு மக்களினத்தை இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால், அரசு துறைகளில் எந்தெந்த துறைகளில் சம பிரதிநிதித்துவம் இல்லை என்னும் சூழல் உள்ளதோ, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு இடஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும். அதாவது Unrepresented or under represented ஆன மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என்பதே இரண்டாவது விஷயம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்வைத்துள்ள இந்த இரண்டு அம்சங்களையும் பகிரங்கமாக மீறும் செயலே, உண்மையில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள உயர்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்னும் புதிய சட்டம். இதன் காரணத்தை ஆராய்ந்தால், கேரள தேவசம் போர்டின் கீழ் செயல்படும், நான்கு கல்லூரிகளில் 186 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 79 சதவிகிதப் பேராசிரியர்கள் நாயர் மற்றும் பார்ப்பனர் போன்ற முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்தப் பணி வாய்ப்புகளில் தலித் மற்றும் ஆதிவாசி இன மக்களின் இடஒதுக்கீடு என்பது 2010 வரை பூஜிய சதவிகிதம் மட்டுமே.

உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறபோது, மேற்கண்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகமாகப் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற மக்களினம் என்பதையும் நாம் முக்கியமாகக் கவனத்தில் கொண்டாக வேண்டும். அவ்வாறு Over Reprsented ஆக இருக்கும் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலே நடந்துள்ளது என்பதே நாம் முன்வைக்கும் முக்கிய வாதமாகும். அதோடு கூடவே, சாந்திப்பணி (பூசாரி) உட்பட கோவில்களிலுள்ள வேறு பணிகளின் நிலையை ஆராய்ந்தாலும் முற்பட்ட சாதிகளின் அசாதாரணமான பெரும்பான்மையைக் காண முடியும். உண்மை நிலை இவ்வாறிருக்க, பட்டியல் மற்றும் உட்பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அளவு உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை என்றும் அரசு கூறுகின்றது. அப்படியென்றால், இந்தத் துறைகளில் பட்டியல் மற்றும் உட்பட்டியலின் மக்களுக்கு எங்கெங்கே சரியான பிரதிநிதித்துவம் உள்ளது என்பதையும் இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும். இனிமேல்தான் நாங்கள் அதைக் கொண்டுவர இருக்கிறோம் என்பதே அப்போது அரசின் பதிலாக இருக்கும்.

எப்படியிருந்தாலும் உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களை, பொருளாதார நிலையில் முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம், இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதல்ல. இடஒதுக்கீடு என்பது மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்பின் கொள்கையாகும். உயர்த்தப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களுக்குச் சமூக நிலையிலுள்ள போதாமை என்பது பொருளாதாரம் மட்டுமே. பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த தனது சொந்த சாதியைச் சேர்ந்த நம்பூதிரிகளைப் போன்றே அவர்களுக்கும் சமூக – பண்பாடு அடிப்படையிலான அனுகூலங்கள் கிடைக்கிறது. அவர்களுக்கு இல்லாதது பொருளாதாரம் மட்டுமே. அதற்காக அரசு மேற்கொள்ள வேண்டியது ஏனைய சீர்திருத்த நடவடிக்கைகளைப் போன்று, ஒரு திட்டத்தை நடைமுறையை உருவாக்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே. அப்படியல்லாமல், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதல்ல.

இவ்வாறு உயர்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் வேறொரு ஆபத்தும் உள்ளது. இடஒதுக்கீடு ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்பது இடஒதுக்கீடோடு தொடர்புடைய ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆகும். பத்து சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு வழங்க வேண்டுமானால், அது நடைமுறையிலிருக்கும் ஐம்பது சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்துதான் வழங்கப்பட முடியும். அது பொது ஒதுக்கீட்டில் வர முடியாது. அப்போது இந்தப் பத்து சதவிகிதம் கூடுதலாகச் சேரும்போது, பொதுஒதுக்கீட்டில் ஏற்கெனவே ஐம்பது சதவிகிதத்தை வைத்துள்ள சவர்ணர்களுக்குப் பத்து சதவிகிதம் கூடுதலாகக் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் போது, சமூக, பொருளாதாரத் துறைகளில் ஏறத்தாழ அறுபது சதவிகித இடங்களைச் சவர்ணர்கள் தங்கள் கைவசமாக்கும் சூழலையே இந்த இடஒதுக்கீடு எற்படுத்தும் என்று உறுதியாகக் கூறலாம். இதுவொரு புரட்சியல்ல. அதற்கான முயற்சியுமல்ல. முக்கியமாக இதை நடைமுறைப்படுத்துவதற்கான நோக்கம் வேறொன்று.

இடைக்கால கேரளத்தில் சமூக நல நடவடிக்கைளில் இருந்து முற்பட்ட சமூக மக்கள் விலகிச் சென்று பிஜெபி, சங்க பரிவாரங்களில் இணைந்தனர். இதற்குத் தடை போட வேண்டும் என்னும் அரசியல் நோக்கத்துடனேயே உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு என்னும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கையை நடைமுறைப்படுத்த இடதுசாரி அரசு முயல்கிறது. ஆனால், வலிமை பெற்று வரும் சங்கபரிவார் மற்றும் பிஜெபி சக்திகளை எதிர்க்க, இடஒதுக்கீட்டை அமல்படுத்தி உயர்த்தப்பட்ட சாதிகளைத் தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்னும் பேராசையைவிட, இதுபோன்ற அரசியலை தவிடு பொடியாக்கும் விதத்தில் தலித், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட பகுஜன் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் மேலாண்மையையே இடதுசாரிகள் செய்ய வேண்டும் (Sunny M Kapikadu: In a Conversation with the author of this article based on his talk on News 18 TV on 16/11/2017).

இதற்கு முன்னர் குஜராத்தில் பிஜெபி அரசு பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயன்றது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் முப்பது பக்கமுள்ள விரிவான தீர்ப்பை வழங்கியது. அது பொருளாதார இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கடுமையாகக் கூறியிருந்தது. Inappropriate and unconstitutional என்று நீதிமன்றம் குஜராத் அரசின் செயலை விமர்சித்;திருந்தது. பொருளாதார இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைக்கும் உரிமைக்கும் சமூக அரசியலுக்கும் எதிரானது. நடுத்தர வர்க்க வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதுபோன்ற சவர்ண ஆதரவு நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். காரணம், இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல.

மலையாள மூலம் - மாயா பிரமோத் (கட்டுரையாளர் கேரளாவைச் சேர்ந்த தலித்திய ஆய்வாளர்)
தமிழாக்கம் - சுஜா ராஜேஷ்

Pin It