கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் அறிவுத்துறையைச் சேர்ந்தவர்களே அந்த வரலாற்றின் போக்கை மாற்றியமைப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். நிகழ்கால அரசியலை மக்களுக்கு படம்பிடித்துக் காட்டுபவர்களும், அந்த அரசியலை மாற்றி அமைப்பதற்கான பாதையை வகுத்துக் கொடுப்பவர்களும் அவர்கள்தான்.

இதில் இரண்டு வகையான அறிவுத்துறையினர் இருக்கின்றார்கள். ஒருவர் இருக்கும் சமூக அமைப்பை அப்படியே கட்டிக் காப்பாற்றுவதற்கான கருத்தியலை உற்பத்தி செய்பவர். இன்னொருவர் அதை மாற்றி அமைப்பதற்கான கருத்தியலை உற்பத்தி செய்பவர்.

இதில் முதல் வகையைச் சேர்ந்த அறிவுத்துறையினரை எப்போதுமே வரலாறு நினைவில் வைத்துக் கொண்டது கிடையாது. ஆனால் இரண்டாவது வகை அறிவுத்துறையினர் வரலாற்றின் பக்கங்களில் தனக்கான அடையாளத்தை எப்போதுமே தக்க வைத்துக் கொண்டவர்கள். 

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின், சேகுவேரா, ரோசா லக்சம்பர்க் என சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் தான் வாழ்ந்த காலத்தின் மீது எதிர்வினை புரிந்தார்கள். அதை மாற்றி அமைப்பதற்காக போராடினார்கள். அரசியல் துறையில் மட்டுமல்ல இன்னும் அறிவியல் துறையிலும் பலர் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் தாம் வாழ்வதற்கான அடையாளமாகவே சமூக மாற்றத்தைப் பார்த்தார்கள்.

ஆனால் முதலாளித்துவ சமூகமும் அது உருவாக்கி வைத்திருக்கும் அறிவுத்துறையினரும் முந்தைய கால அறிவுஜீவிகளிடம் இருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்ட அறிவுஜீவிகள் காலத்திற்கு ஏற்றார்போல நிறம் மாறும் பச்சோந்திகளாகவும் அறிவு விபச்சாரம் செய்பவர்களாகவும் எந்த குற்ற உணர்வுக்கும் ஆட்படாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

நான் இந்த அறிவுஜீவிகள் என்ற வரையறைக்குள் இங்கிருக்கும் ஊடவியலாளர்கள், எழுத்தாளர்கள், தேர்தல் பாதையில் பங்கெடுக்காத புரட்சிகர இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள் போன்றவற்றை சேர்ந்தவர்களைக் குறிப்பிடுகின்றேன்.

ஆங்கிலத்தில் Transformation என்று சொல்லுவார்கள். அதாவது முற்றும் மாறுபட்ட ஒரு நிலைக்கு மாற்றம் அடைவது. இங்கே அப்படியான ஒரு மாற்றத்தை தமிழக அறிவுஜீவிக் கூட்டம் அடைந்திருக்கின்றது.

சமூக மாற்றம் ஒன்றே தங்களின் இலக்கு என்று கடந்த அதிமுக ஆட்சியின் போது பேசியவர்கள், எழுதியவர்கள், களத்தில் இறங்கி செயல்பட்டவர்கள் என அனைவரும் Transformation ஆகி தற்போதைய திமுக ஆட்சியில் கருத்தியல் கோழைகளாக, ஆளும் கட்சியின் அடிவருடிகளாக மாறி இருக்கின்றார்கள்.

தினம் தினம் திமுக அரசால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளை ஏன் என்று கேள்வி கேட்கத் திராணியற்றவர்களாக இருப்பதோடு அதை எல்லாம் நியாயப்படுத்தும் இழிந்த நிலைக்கு சென்றிருக்கின்றார்கள்.

எப்படி வட இந்திய ஊடகங்கள் அனைத்தும் மோடியின் ஊதுகுழலாக மாற்றப்பட்டதோ, அதே போல பெரும்பாலான தமிழ் நாட்டு ஊடகங்கள் திமுகவின் கூலிப்படை பட்டாளமாக மாறியிருக்கின்றது.

மேலும் பாஜக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளால் வெள்ளமெனப் பரப்பும் ஒரு ட்ரோல் படையை வைத்துக் கொண்டு தனக்கு எதிரான பத்திரிகையாளர்கள், விமர்சகர்களை மிரட்டுவதோடு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறு செய்வது போல திமுகவின் இணைய கூலிப்படையும் செய்து கொண்டிருக்கின்றது.

கடந்த ஆட்சியில் அதிமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக களமாடியவர்கள் இப்போது அறிவாலயத்துக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதிமுக சீரழித்துவிட்ட போன தமிழ்நாட்டை திமுக மேலும் சீரழித்திருக்கின்றது என்பதுதான் உண்மை.

குறிப்பாக கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கிற்கு எதிராக கம்பு சுற்றிய கூட்டம் இந்த ஆட்சியில் 24 மணி நேரமும் சட்டவிரோத சாராய விற்பனை செய்யப்படுவதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மெளனம் காத்துக் கொண்டிருக்கின்றத்உ. அவர்களின் வாய்கள் பணத்தால் அடைக்கப்பட்டு விட்டதையே இது காட்டுகின்றது.

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக எதிரான மக்கள் போராட்டம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான போராட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை எடுக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் போன்ற எல்லாவற்றிலும் இங்கிருக்கும் அறிவிஜீவி கூட்டம் அந்நியப்பட்டே இருந்தது.

இவர்களை எல்லாம் நேர்மையான ஆட்கள் என இத்தனை நாள் தமிழ்நாட்டு மக்கள் எப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை. ஆனால் திமுக ஆட்சி இவர்களை எல்லாம் அம்மணமாக்கி காட்டியிருக்கின்றது. கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதை அம்பலமாக்கி இருக்கின்றது.

திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு, திமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, போலி என்கவுண்டர்கள், லாக்கப் கொலைகள் என ஒரு மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கின்றது. அந்த கேடுகெட்ட ஆட்சியின் உச்சமாகத்தான் திருப்புவனம் காவல் துறையினரால் அஜித்குமார் படுகொலை அரங்கேற்றப்பட்டது.

ஆனால் இதில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை திமுக அரசு கைது செய்யவில்லை. எப்படி கடந்த ஆட்சியில் நிர்மலா தேவி வழக்கு ஆளும்வர்க்கத்தின் பாலியல் குற்றவாளிகளை அம்பலப்படுத்தியதோ அதே போல நிகிதாவின் கைதும் நிச்சயம் அம்பலப்படுத்தி விடும் என்பதால்தான் இதுவரை நிகிதாவை திமுக அரசு சீண்டவில்லை. இத்தனைக்கும் அவர்மீது பல பேர் மோசடி புகார்களும் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கு எதிராகவும் பல அறிவுஜீவிகள் மெளனம் காத்தார்கள். அவர்களுக்கு காவலர்களின் கைதே போதுமானதாக இருந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் படுகொலை அதே போல நிர்மலா தேவி வழக்கு போன்றவற்றுக்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீதி பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, வக்கற்று தங்களைப் போல ஏமாற்றுக்கூட்டம் இந்திய அரசியலிலேயே கிடையாது என்பதை நிரூபித்து இருக்கின்றது. கடந்த ஆட்சியில் இதற்கெல்லாம் நீதி கேட்டு எடப்பாடியின் வேட்டியை உருவப் பார்த்தவர்கள் இந்த ஆட்சியில் அறிவாலயத்தில் அணடர்வேர் துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மாதம் ஒருமுறை மின் கட்டணம், நீட் தேர்வு ரத்து என்று சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், ஆறாக ஓடும் சாராய விற்பனை, கட்டற்ற கஞ்சா விற்பனை, வெளிநாட்டு போதைப் பொருள் விற்பனை, கூலிப்படை கொலைகள், ரவுடிகளின் அட்டகாசம் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சீரழிந்து இருக்கின்றது.

ஆனால்ல், பத்துபைசா செலவில்லாத வெற்று விளம்பர அறிவிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை திமுக நடத்திக் கொண்டு இருக்கின்றது. அதற்கு கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாத ஒரு கூலிப்படை அறிவுஜீவிகளின் கூட்டம் வேலை செய்துகொண்டு இருக்கின்றது.

நமக்கு என்ன சந்தேகம் என்றால், ஒருவேளை இந்தத் தேர்தலில் திமுக தோற்றுவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர்கள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் என்பதுதான். மக்களிடம் திரும்பவும் போய் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களிடம் உள்ளது என்றோ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு, சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி வாங்கித் தருவேன் என்றோ, டாஸ்மாக்கிற்கு எதிராகவோ பேசினால் மக்கள் காறி உமிழ மாட்டார்களா? செருப்பால் அடிக்க மாட்டார்களா?

பாசிசம் உள்ளே வந்துவிடும் என்று பயமுறுத்தி ஆட்சிக்கு வந்த திமுக, பாஜக ஆட்சியில் இருந்தால் என்னென்ன சங்கி வேலைகளை எல்லாம் செய்யுமோ அதை எல்லாம் சேகர்பாபுவை வைத்து மிகச் சிறப்பாகவே செய்து கொண்டிருக்கின்றது.

திமுக ஆட்சிக்கு வர தங்களுடைய மொத்த விசுவாசத்தையும் காட்டி வேலை செய்த அறிவாளிகளுக்கு எல்லாம் அரசில் ஏதோ ஒரு பொறுப்பையும், பதவியையும், பட்டத்தையும் அளித்து தங்களுடனேயே கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டது. இருந்தும் கொத்தடிமைகள் பட்டாளம் நீண்டுகொண்டே செல்கின்றது.

ஓர் அறிவுஜீவி என்பவன் எப்போதுமே ஆளும்வர்க்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுபவனாக இருக்க வேண்டுமே தவிர, அறிவு விபச்சாரம் செய்பவனாக இருக்கக்கூடாது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் அப்படியானயான அறிவுஜீவிகள்தான் அதிகம் இருக்கின்றார்கள். நமக்கு அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் கோமாளிகளாக மட்டுமே தெரிகின்றார்கள்.

- செ.கார்கி