தமிழக அரசின் கனிசமான வருவாயை ஈட்டித்தருவது டாஸ்மாக் மதுக்கடைகளே. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது இதுவே. ஒரு ஊரில் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருக்கின்றதோ இல்லையோ ஆனால், கண்டிப்பாக அங்கு மதுக்கடை இருக்கும் அந்த அளவிற்கு மதுக்கடை இன்றியமையாததாக உள்ளது. எந்த வசதி இருக்கின்றதோ இல்லையோ ஆனால், மதுக்கடை இருந்தாக வேண்டும். இல்லையென்றால் மதுப்பிரியர்களுக்கு மிகவும் சிரமம் (தற்போது நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடியதால் மற்ற கடைகளில் கூட்டம் நிறம்பி வழிவதைப் பார்த்தாலே புரியும். மேலும், அந்த சிரமத்தைப் போக்கத்தான் தற்போது குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறப்பது தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது).

“தமிழகத்தில் மதுவை சில்லறை விற்பனை செய்வது Tamilnadu State Marketing Corporation Limited (TASMAC - டாஸ்மாக்) எனப்படும் அரசு நிறுவனம் தான். இது 1983ல் தொடங்கப்பட்டது. இதுவே, தமிழகம் முழுவதும் சுமார் 5,672 சில்லரை விற்பனை மதுக்கடைகளை நடத்துகின்றது. ஜூன் 2016 கணக்கின்படி மதுக்கடைகளில்  7,204 மேற்பார்வையாளர்களும், 15,677 விற்பனையாளர்களும் மற்றும் 3,753 உதவி விற்பனையாளர்களும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். டாஸ்மாக் கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் ஒரு நாளைய மது வருமானம் 68 முதல் 70 கோடி ரூபாய். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்க கருவூலங்களுக்கான மது விற்பனையின் பங்களிப்பு 2011-12ம் ஆண்டு, ரூபாய் 18,081.16 கோடி. 2012-13ம் ஆண்டு, ரூபாய் 21,680.67 கோடி. 2013-14ம் ஆண்டு, ரூபாய் 21,674.89 கோடி. 2014-15ம் ஆண்டு, ரூபாய் 24,164.95 கோடி. 2015-16ம் ஆண்டு, ரூபாய் 25,845.58 கோடி”1. இன்று டாஸ்மாக் (TASMAC) என்றாலே அது மதுக்கடையைக் (WINE SHOP) குறிக்கின்ற சொல்லாக மாறிப் பயன்பாட்டில் இருக்கின்றது.

மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் இடம்பெற்றிருக்கும் வாசகமான “மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு” என்பது யாரிடமும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் பயனற்று இடம் பெற்றிருக்கும். மது நாட்டிற்கு கேடு என்று நம்மிடம் கூரும் இந்த வாசகம் பற்றி அரசுகளுக்குக் கவலை இல்லை. நாட்டிற்குக் கேடுதரும் எந்த விசயத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று எண்ணாமல் மாறாக அதை அதிகமாக விற்பதில் இலக்கு வைத்து வேலை செய்கின்றன. மது வீட்டிற்குக் கேடு என்பதைப் புரிந்து கொண்ட வீட்டு உருப்பினர்கள் யாரும் தன் வீட்டில் குடிப்பழக்கம் உள்ளோரை திருத்துவதற்கோ அல்லது கண்டிப்பதற்கோ முனைவதில்லை (பீர் குடிப்பது குடும்பத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒன்றாகிவிட்டது). மது உயிருக்குக் கேடு என்று தெரிந்தும் அதை ஒரு தனி மனிதன் உணராமல் தன்னுடைய உயிர் பற்றி கவலைப்படாமல் அப்பழக்கத்தைக் கைக்கொண்டிருகின்றான். ஆகா, இந்த வாசகம் மது பாட்டில்களின் மேல் ஒரு கடமைக்காகவே அச்சிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய நடைமுறைபடுத்துவதற்கு அல்ல. இது, ஒரு தனிமனிதன் தன் உயிர் பற்றியோ, ஒரு குடும்பம் தன் வீட்டைப் பற்றியோ, ஒரு அரசு தன் நாட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை என்பதையே காட்டுகிறது.

இன்றைய சூழலில் மது அறுந்துவது என்பது மதிப்புமிக்க ஒரு கலாச்சார குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. ஒரு தனிமனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்து விசயங்களுக்கும், அது நல்லதோ கெட்டதோ மது இல்லாமல் இருக்காது. மது வழங்கப்படவில்லையென்றால் நண்பர்களும், சொந்தக்காரர்களும், கட்சிக்காரர்களும், இப்படி அனைவரும் மதிக்காமல் போய்விடுவார்கள். இதற்காகவே இன்று மதுவை ஒரு மரியாதைக்குறிய விசயமாக மாற்றிவிட்டனர். மதுவினால் ஏற்படும் தீமைகள் தெரிந்தும் சமூகத்தில் இந்த கலாச்சாரம் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது. ஆனால், தற்போது அனைத்து இடங்களிலும் மதுவுக்கு எதிரான போராட்டமும் ஆரம்பமாகிவிட்டது.

தமிழகத்தில், தற்போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் வலுவாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த 15 டிசம்பர் 2016, அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் மதுக்கடைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராட ஒரு தீப்பொறி கிடைத்தது, அதன் மூலம் தற்பொழுது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் ஈடுபடுகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் ஒரு வழியாக காவல்த்துறை தடியடி நடத்தினாலும், கைது செய்தாலும் போராட்டக்காரர்கள் சலைப்பதாக இல்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் காணமுடிகின்றது. பெண்கள் தங்கள் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்குள் புகுந்து மதுபாட்டில்களை வெளியே கொட்டி அதை உடைத்து தங்களின் எதிர்ப்பைக் காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் இப்போராட்டத்தில் மிகத் தீவிரமாக இறங்குவதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே.

இந்தப் போராட்டத்தின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தோமானால், கடந்த 2016 டிசம்பர் 15 ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இயங்கும் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டது. இதன்மூலம் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டுவந்த 3,321 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெரும் வருவாயை ஈட்டிவந்த இக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு விரும்பவில்லை. எனவே, நெடுஞ்சாலைகளில் செயல்பட்டுவந்த அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மக்களின் வசிப்பிடங்களுக்குள் மாற்றினர். இதுவே போராட்டத்தின் ஆரம்பம். குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைத் திறக்கப்பட்டால் குடிகாரர்களால், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பதால், ஆங்காங்கே சிறு சிறு எதிர்ப்புகள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக கிளம்பின. ஆனால், அரசு மக்களின் எதிர்ப்புகளையும் அவர்களின் உண்மையான காரணங்களையும் கண்டுகொள்ளாமல் மதுக்கடைகளைத் திறப்பதிலேயே குறியாக இருந்தது. இதனால் ஆங்காங்கு அமைதியான முறையில் காட்டப்பட்ட சிறு சிறு எதிர்ப்புகள் பின்பு பெரும் போராட்டங்களாக மாறின. அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். டாஸ்மாக் மதுக்கடைகளை சூறையாட ஆரம்பித்தனர். தங்கள் பகுதியில் மதுக்கடை இருக்கக்கூடாது என்று சமாதானம் பேசவந்த அரசு அதிகாரிகளிடம் ஒருமித்தக் குறலில் கூறினர். காவல்துறையின் தடியடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டனர். அனைத்துப் பகுதிகளிலும் போராட்டத்தின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது; அது தங்களின் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்பதே. அப்படி மீறித் திறக்கப்பட்ட கடைகளை உடனடியாக மூடவேண்டும் இதுவே அவர்களின் கோரிக்கை.

இங்கே, அரசு, மக்கள் கேட்பதைக் கொடுக்காமல், அவர்கள் விரும்பாததை, எதிர்ப்பதை வலுக்கட்டாயமாக தினிக்கின்றது. சாலையோர மதுக்கடைகளின் மூலமே சாலைவிபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என்ற காரணத்தினால்தான் உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஆணையிட்டது. அதே மதுக்கடைகளை மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும், பள்ளிகளின் அறுகாமையிலும், வழிபாட்டுத் தளங்களின் அருகிலும் இடம் மாற்றுவதன் மூலம் பல விதங்களில் பெரும் பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. இதைக் கவனத்தில் கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்படுகின்றது. மேலும் பொதுமக்கள், “இந்த மதுக்கடைகளால் பெண்கள் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. மாலை ஆகிவிட்டால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. “குடிமகன்”களின் ஆபாச வார்த்தைகளைத் தாங்கமுடியவில்லை. பெண் குழந்தைகள் பள்ளி சென்றுவர முடியவில்லை மேலும் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர். குடிகாரர்களைப் பார்த்துத் தங்கள் குழந்தைகளும் பின்னாளில் குடிகாரர்களாகிவிடுவர்” என்று கூறுகின்றனர். இம் மதுக்கடைகளின் மூலம் புதுப்புது பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர்.

எனவே, அரசு நிர்வாகம் மது வருவாயைப் பிரதானமாக எண்ணாமல், மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டும் சட்ட ஒழுங்கையும், சமூக அமைதியையும் காத்திடும் பொருட்டும், மக்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து மதுவினால் ஏற்படும் சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். மதுவின் மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு நன்மை செய்வதில் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் பிற்காலத்தில் மதுவினால் கிடைத்த வருமானம் இருக்கும். ஆனால், நன்மை செய்ய மக்கள் இருக்கமாட்டார்கள்.                

பார்வை நூல்கள்

1. K.V.Prasad. (2017, April 23). Treading a thin line on Tasmac. The Hindu News Paper , p. 2.

சி. வெங்கடேஸ்வரன்

முனைவர் பட்ட ஆய்வாளர்

அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.  

Pin It