குடிபோதையின் மூலம் சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் அரசு உடந்தையாக இருப்பதால் இனிமேல் குடிபோதை காரணமாக குற்றம் நடைபெற்று, அதன் மூலம் பாதிக்கப்படும் எல்லா குடும்பங்களுக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்று இழப்பீடு தர கடமைப்பட்டுள்ளது என தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு, இது பற்றி தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுள்ளது. பல குடும்பங்களில் கணவன், மணைவி, பிள்ளை என குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் மது என்னும் மாயைக்குள் சிக்கி பலியாகி வருவதையும், குடிகாரர்கள் குடித்துவிட்டு வம்பு வளர்த்து, அதன் மூலம் பெருகும் கொலை, பாலியல் வன்புண‌ர்ச்சி, அடிதடி மற்றும் மோட்டர் வாகன விபத்துக்களையும் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவிற்கு உயர்நீதிமன்றம் வந்துள்ளது.

tasmac 636மதுவிற்கு அடிமையாகிப் போன ஒவ்வொரு கணவனையும், தந்தையையும், மகனையும் மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும், மனைவியும், சகோதரியும் படும் துயரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இளம் வயது இளைஞர்களை திருத்துவதற்கு குடிபோதை மறுவாழ்வு மையத்திற்க்குள் நுழைகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. குடித்துவிட்டு வீட்டிற்கு வராமல் சாக்கடை ஓரங்களில் வீழ்ந்து கிடப்பது, மனைவியின் மேல் சந்தேகப்பட்டு சண்டை வளர்ப்பது, மனைவியை அடித்து துன்புறுத்துவது என குடிகார கணவன் செய்யும் செயலை இலட்சக்கணக்கான பெண்கள் அனுபவித்து ஒவ்வொரு நாளும் செத்து வருகிறார்கள். 2003-ம் ஆண்டிற்குப் பிறகான ஆய்வுகளின் படி குடும்ப வன்முறை அதிகரிப்பதற்கு மது தான் காரணம் என சொல்லப்படுகிறது.

நம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட டாஸ்மாக் கடைகள் ஊர்தோறும் திறக்காத வரை, குடிகாரர்களின் எண்ணிக்கை இந்தளவுக்குப் பெருகவில்லை. ஐந்தில் ஒரு பங்கு வருவாய் அரசிற்கு மக்களிடமிருந்து டாஸ்மாக் கடைகளின் மூலம் வருகிறது என்று சொல்வது எவ்வளவு வேதனையான விஷயம்! மக்களின் உழைப்பை சுரண்டி, வருவாயைப் பெருக்குவது தமிழக அரசு அரசின் கொள்கை முடிவு என எப்படி சொல்ல முடியும்? வருவாய் இழப்பு பற்றி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. டாஸ்மாக் கடைகள் இல்லாமல் வருவாயைப் பெருக்குவதற்கு எவ்விதமான மாற்று யோசனைகளையும் எடுக்க அரசு தயாராக இல்லை. அடிப்படையில் ஆட்சியாளர்கள் இரண்டு விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஒன்று டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசின் வருவாய் என்ன என்பதைப் பற்றியும், உழைக்க வேண்டிய மக்கள் குடித்துவிட்டு முடங்குவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பின் பண மதிப்பையும் கணக்கிட வேண்டும். நிச்சயமாக உற்பத்தி இழப்புதான் அதிகமான வருவாய் இழப்பிற்கு காரணமாக இருக்கும். உழைக்க வேண்டிய இளைஞர்களை கை கால் நடுக்கத்துடன் எப்போது டாஸ்மாக் கடை திறப்பார்கள் என வாசலில் நிற்க வைத்தால் எப்படி அந்த சமூகம் உருப்படும்?

முன்பெல்லாம் மது அருந்தும் கல்லூரி மாணவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவு வந்தது இல்லை. 2005ம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு குடிபோதையில் வருவதாகக் கூறி மாற்று சான்றிதழ் பெற்றுச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒழுக்கத்தை காரணம் சொல்லி பள்ளி, கல்லூரிகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். படிக்கும் சிறார்கள் ஊறுகாய் கொண்டு வந்து சரக்கு சாப்பிடுகிறார்கள் என்ற செய்தியை செய்தித்தாளில் படிக்கும்போது அரசை ஆளுபவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டாமா? சமீப காலங்களில் வெளியாகும் திரைபடங்களில் ஆரம்பக் காட்சியே ஹீரோ மதுபாட்டிலுடன் புகைபிடிப்பது தான் வைக்கப்படுகிற‌து. குடியைக் கொண்டாடி கும்மாளம் போட்டால் தான் அந்தப் படம் நன்றாக ஓடும் என்ற மாயை சினிமாவில் ஊறிவிட்டது. முன்னணி கதாநாயகன் உள்ளிட்டோர் ஸ்டைலாகக் குடிப்பதைப் பார்க்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மனதளவில் சீரழிந்து வருவதை அரசு கவனிக்காமலே உள்ளது. அடிப்படையான உண்மை என்னவென்றால், டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயை விட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விற்கும் நிறுவனங்களின் லாபத்தை ஒரு மக்கள் நலன் அரசு பார்ப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

உயர் நீதிமன்றத்தின் கோபமும் இடைக்கால உத்தரவும்

மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் போதையூட்டும் பானங்களை பருகுவதைத் தடை செய்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அரசின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின் கீழ் உள்ள 47-வது ஷரத்து கூறுகிறது. இதற்காக சட்டங்களை இயற்றி மேற்படி நெறிமுறையைக் காப்பது அரசின் கடமை என ஷரத்து 37 கூறுகிறது.

இந்திய தேசிய குடும்ப நல சேவை அமைப்பின் ஆய்வுப்படி, தமிழகத்தில் உள்ள 47% ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக செல்கிறது. தேவைக்கேற்ப வகையில் சட்டம் இயற்றி மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, ஒவ்வொரு குற்றத்திற்கும் உடந்தையாய் மாறி இருப்பதை உயர் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்காது என கோபமாக தனது வார்த்தைகளில் அரசை எச்சரித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பளராக உயர்நீதிமன்றம் இருப்பதால், ஒவ்வொரு குற்றத்தின் பின்னால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது அரசின் கடமை என சொல்லியிருப்பது முக்கியமான அம்சம்.

இந்திய தண்டனைச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய தண்டனைச் சட்டத்தின் 107 –வது பிரிவு ஒரு செயலை செய்வதற்கு உடந்தையாய் இருப்பதைப் பற்றி மூன்று விசயங்களை சொல்கிறது. இப்பிரிவின் மூன்றாவது வகைப்பாட்டின்படி, வேண்டுமென்றே ஒரு செயலுக்கு உதவி அளிப்பது அல்லது சட்டத்திற்கு மாறான வகையில் ஒரு செயலைச் செய்யாமல் விட்டுவிடுதல் எனக் கூறுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 108 –வது பிரிவின்படி ஒரு குற்றத்திற்கு உடந்தையாய் இருப்பதற்கு செய்யப்படுகின்ற குற்றம் பற்றிய அறிவு இருந்தாலே போதும் எனக் கூறுகிறது. ஒரு குற்றத்தை செய்வதற்கு குற்ற எண்ணம் அவசியமாக இருப்பதால் எப்படி அரசை குற்றத்திற்கு உடந்தை என்று சொல்ல முடியும் என்ற கேள்வி எழும். அபரிமிதமாக ஊரெங்கும் கடைகளைத் திறந்து பெரும்பாலான இளைஞர்கள் சீரழிந்து குற்றச்செயல் பெருகுவதற்கு ஒருவகையில் காரணமாய் இருக்கும் அரசை நிச்சயமாக குற்ற உடைந்தையாளி எனக் குறிப்பிடலாம். ஒரு குற்றச்செயலை செய்ய மன ரீதியாக ஒருவரைத் தயார் செய்வது குற்றத்திற்கான உடந்தை என்ற பொருளில் வரும் என பெரும்பாலான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 80 சதவீதப் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மதுதான் காரணம் என தேசிய குற்றப் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் மதுவே மூலகாரணம். ஆகவே நம் மக்களுக்கு மதுவை விற்கின்ற அரசு குற்றத்திற்கான உடந்தையாளி என்ற வரையறைக்குள் கட்டாயம் வரும்.

2014-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 67,250 பேர் வாகன விபத்துகளில் குடித்துவிட்டு இறந்துள்ளார்கள். 15,190 பேர் குடிபோதையால் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்கள். ஆனால் அரசின் ஆண்டு வருமான‌ம் 31,757 கோடி என கடந்த ஆண்டு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. ஒரு மாவட்ட ஆட்சியரின் முக்கிய பணி டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு வேதனையை அளிக்கிறது? ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யப் பதிவாகும் பொதுநலன் சார்ந்த வழக்குகள் நெஞ்சை உலுக்குகிறது. ஊர்தோறும் நூலகங்களை உருவாக்க வேண்டிய அரசு ஊத்திக் கொடுப்பதற்கு டாஸ்மாக் கடைகளைத் திறப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. நம் தமிழ்ச் சமூகத்தின் அடுத்த தலைமுறை என்னவாக மாற வேண்டும் என்பதை ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் சிந்திக்காத காரணத்தால்தான் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 1937-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்தின் கீழ்தான் 2003-ம் ஆண்டு தமிழ்நாடு சில்லரை (கடை மற்றும் மதுக்கூடம்) விற்பனை விதிகள் இயற்றப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அரசாங்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

அரசு விற்கும் மதுவைக் குடித்துவிட்டு சென்று அதன் மூலம் தூண்டப்பட்டு செய்யப்படும் குற்றங்களுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின்படி அரசைப் பொறுப்பாக்கி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கும குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357-ன்படி இழப்பீடு தர வேண்டும். நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் மது விற்பனை ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் வைக்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்களுக்கு அருகே மதுக்கடைகளை காணவே முடியாது. அதே போன்று மாத இறுதியில் சம்பளம் வழங்கும் நாளன்று மதுக்கடைகளை அரசு மூடி விடுகிறது. இதனால் மது குடிப்பதை குறைந்தபட்சமாகத் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் கேரள அரசு செயல்படுகிறது. ஆனால் இங்கு அபரிமிதமாக கடைகள் திறந்து இருப்பதால் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளைத் தெரிந்து கொண்டுதான் 'மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு' என லேபில் போட்டு அரசு விற்கிறது. எனவே எல்லா தீங்குகளையும் தெரிந்துகொண்டே செய்வதால் நம்மை ஆளுகின்ற அரசை குற்ற உட‌ந்தையாளியாக சேர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும்!

- ர.கருணாநிதி, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

Pin It