நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது எப்படி மாற்ற முடியாத உண்மையோ அதே போலத்தான் பிஜேபியை எப்பாடு பட்டாவது தலித்துகளின் நலம்விரும்பியாக காட்ட முயற்சிப்பதும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்து அவர்களை உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கியும், அவர்களின் மீது தொடர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டும் மிருகங்களை விட கேவலமாக நடத்தி, அதன் மூலம் தங்களுக்கான பொருளாதர நலன்களை மேம்படுத்திக்கொண்ட ஆதிக்க சாதிகள், இன்று அவர்களிடம் பரிவோடு பேசுவதும், அவர்களைத் தாங்கள் அரவணைத்துச் செல்வதாக சொல்வதும், அவர்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடு என்று தலித்துகளை நம்பும்படி செய்வதும், நாடகமே ஒழிய வேறல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளின் மனதில் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக ஊறிப்போன வெறுப்பு ஒரு பெரும் புரட்சியில் முடிந்துவிடக்கூடாது, தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முயற்சிக்கும் அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான மனநிலையை மடைமாற்ற வேண்டும், அதுவே தொடர்ச்சியாக அவர்களை இந்து மதத்தில் இருக்க வைத்துத் தாங்கள் சுரண்டிக் கொழுக்க பயன்படும் என்ற சிந்தனைதான் பிஜேபியைத் திடீரென தலித்துகளின் மீது பாச மழையை பொழிய வைக்கின்றது.
ஆனால் அந்த முயற்சி சாத்தியப்படாமல் தன்னைத்தானே தினம்தோறும் அம்பலப்படுத்திக் கொண்டு ஒரடி முன்னால் ஈரடி பின்னால் வீழ்ச்சியடைகின்றது. பார்ப்பனிய சிந்தனா முறையில் புடம்போட்டு வளர்க்கப்பட்ட ஒருவன் எந்தச் சூழ்நிலையிலும் தன்னை அதற்கு மாறான சிந்தனை முறையோடு நிச்சயம் பொறுத்திக் கொள்ள முடியாது. ஒரு கட்சி எந்த மாதிரியான சிந்தனைப் போக்கு உள்ளவர்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றதோ, அந்தச் சிந்தனைதான் கட்சியின் பொதுச்சிந்தனையாக பொதுவெளியில் அறியப்படும். கட்சியில் இருக்கும் ஒரு சிலர் மாற்றுக்கருத்து கொண்டிருந்தால் அது எப்போதுமே அந்த குறிப்பிட்ட கட்சியின் பொதுக்கருத்தாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. சங்பரிவாரமும் அதன் அரசியல் பிரிவான பிஜேபியும் பார்ப்பன சனாதன சிந்தனையில் தோய்ந்து போன ஆதிக்க சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் என்பது ஏதோ அருவமான விடயங்களில் இருந்து பெறப்படும் ஆதாரமில்லாத செய்திகள் அல்ல. அவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே பார்ப்பனிய மேலாண்மையைக் காத்துக் கொள்வதும் அதற்காக பார்ப்பனியத்தை தேசியத்துடன் கலந்து விற்பனை செய்வதுமே என்றிருக்கும்போது அது போன்ற கட்சியிடம் இருந்து தலித் மக்கள் தங்களுக்கான விடுதலையை அல்லது ஏதோ ஒரு ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பது அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட சுயமரியாதையை மறந்த அதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் அற்ற நபர்களின் செயல்பாடாகும்.
அது போன்ற நபர்கள் எவ்வளவுதான் விசுவாசமாக ஆதிக்க சாதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்களது விசுவாசத்தைக் காட்டினாலும், அவர்களின் உழைப்பால் விளைந்த பயன்கள் அனைத்தையும் நிச்சயம் ஆதிக்க சாதிகள்தான் அறுவடை செய்துகொள்ளும். அதனால் விளைந்த எந்தப் பயன்மதிப்பையும் நிச்சயம் அதில் ஒரு சிறிய பகுதியைக்கூட தலித்துகள் அடைவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆதிக்கசாதிகளைப் பொருத்தவரை அவர்கள் தலித்துகளை ஆதரிப்பது போன்று காட்டுவது என்பதே இந்தத் தேர்தல் அரசியலில் வெற்றிபெற அவர்களின் ஓட்டு நிச்சயம் தேவை என்ற நிர்பந்தத்தின் பேரில்தான். அப்படியான ஒரு நிலை இல்லை என்றால், அவர்கள் இன்னமும் கூட தலித்துகளைப் பொதுச்சமூகத்தில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கும் தீண்டாமை கொள்கையைக் கடைபிடிக்க முற்படுவார்கள். பெரும்பாலான தலித்மக்கள் முற்போக்கு அரசியலின் பக்கம் இன்னமும் வென்றெடுக்கப்படாமல் உள்ள இந்தச் சூழ்நிலையை ஆதிக்க சாதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வலதுசாரிக் கட்சிகளே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன. அதில் முன்னிலையில் நிற்பது பிஜேபி ஆகும்.
என்னதான் பிஜேபி தன்னை தலித்துகளின் தோழனாக காட்டிக்கொண்டாலும் அதன் மரபணுவில் கலந்திருக்கும் மனுவின் சிந்தனைகள் அதை அவ்வப்போது அம்பலப்படுத்தி அதன் தலித் விரோத அரசியலை பொதுவெளியில் காட்சிப்படுத்திவிடுகின்றது. தலித்துகளின் வீட்டில் போய் சாப்பிடுவதையே ஒரு பெரும் புரட்சிகர நடவடிக்கையாக காட்ட விரும்பிய ஆதிக்க சாதிவெறி பிடித்த அமித்ஷாக்களும், தமிழிசைகளும் அந்த முயற்சியில் பரிதாபமாகத் தோற்று அவமானப்பட்டு நிற்கின்றார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போதும் கமலாலயத்தின் கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு அதற்கு முகம் கொடுக்க மறுக்கும் இந்த ஆதிக்க சாதி கோழைகள் எப்படி தலித்துகளின் நலம் விரும்பிகளாக இருக்க முடியும் என்ற கேள்வி அவர்களின் ஆதிக்கசாதி பார்ப்பன அடிவருடி அரசியலை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டு இருக்கின்றது. தலித்துகளின் மீதான அவர்களின் பாசம் என்பது எவ்வளவு அருவருப்பு நிறைந்த சிந்தனையின் வெளிப்பாடு என்பது அவர்களின் சாப்பாட்டு அரசியலில் இருந்தே அம்பலமாகின்றது.
கர்நாடக பிஜேபி தலைவராக இருக்கும் எடியூரப்பா ஒட்டுமொத்த பிஜேபியின் தலித்துகளின் மீதான உண்மையான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எடியூரப்பா தன் தலைவர் அமித்ஷாவின் ஆணைக்கிணங்க துமக்கூரு மாவட்டத்தில் குப்பியில் உள்ள ருத்ரமுனி என்ற தலித் வீட்டில் சாப்பிட சென்றிருக்கின்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே போன்றோரும் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ருத்ரமுனி வீட்டில் சாப்பிட்டால் மனுதர்மத்தின்படியும் தனது கட்சியின் கொள்கைபடியும் தீட்டு என்பதால் உயர்தர சைவ உணவகத்தில் இருந்து உணவை வாங்கிவந்து எடியூரப்பாவும் அவர் உடன் சென்றவர்களும் சாப்பிட்டு இருக்கின்றார்கள். மேலும் அவர் வீட்டில் இருந்து தண்ணியைக்கூட குடிப்பதற்குப் பயன்படுத்தாமல் அதையும் வெளியில் இருந்து கொண்டுவந்து குடித்துத் தங்கள் கட்சியின் தலித்துகளின் மீதான அன்பை காட்டியிருக்கின்றார்கள். இதுதான் பிஜேபியின் உண்மையான முகம். இதை நாம் எடியூரப்பா என்ற தனிநபருடன் சுருக்கிப் பார்த்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
எடியூரப்பா டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டிற்கு வருகை தந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார், அண்ணன் திருமாவின் வீட்டிற்கு வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். ஏன் அர்ஜூன் சம்பத் வீட்டிற்கு வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். எடியூரப்பாவை பொருத்தவரை அவர் இருபிறப்பாளர் அவர் ஒரு தலித்வீட்டில் சாப்பிடுவது என்பது பெரும் பாவம். தீட்டுக்கழிக்க வேண்டிய இழிச்செயல். ஒரு சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும்போது இறந்து போன பார்ப்பனன் மறுபிறவியில் பன்றியாக பிறப்பான் என்றும், நாய், சண்டாளன் போன்றோரின் பார்வையில் பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்றும் வசிஷ்டர் குறிப்பிடுகின்றார். இதையே தான் மனுவும் வலியுறுத்துகின்றான். அதே போல அங்கிராஸ் என்ற முனிவன் சண்டாளனிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்த பிராமணன் அதற்குப் பரிகாரமாகப் பல நாள்கள் பசுமாட்டின் சிறுநீரை பருக வேண்டும் என்று சொல்கின்றான். இதை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றோம் என்றால் இதுதான் பிஜேபி ஆர்எஸ்எஸ்சின் கொள்கை. அதைத்தான் எடியூரப்பா ருத்ரமுனி வீட்டில் செயல்படுத்திக் காட்டியிருக்கின்றார். அவருக்கு அதில் எந்தக் கூச்சமும் இல்லை. ஏனென்றால் அது அவரைப் பொருத்தவரை இயல்பான ஒன்று. அவருக்கு மட்டும் அல்லாமல் சங்பரிவாரத்தில் உள்ள ஆதிக்கசாதிக் கும்பலின் இயல்பான மரபார்ந்த சிந்தனா முறையே அதுதான். தலித்துகள் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்க படுகின்றார்கள். பாவம் அந்தத் தலித் மக்களால் தான் சங்பரிவாரத்தின் இந்தக் கபட நாடகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று சம்பவங்கள் நடக்கும் போதுதான் அவர்கள் தாங்கள் இத்தனை நாட்களாக தங்கள் ஆதிக்கசாதி தலைவர்களின் மனதில் எந்த இடத்தில் இருந்தோம் என்பதை புரிந்துகொள்கின்றார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த ருத்ரமுனி கடந்த பத்து ஆண்டுகளாக தான் பிஜேபியில் இருந்தபோதும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தை சாதி ரீதியாக அவமானப்படுத்திவிட்டதாக கூறியிருக்கின்றார். தங்களை இப்படி அவமானப்படுத்தியதற்கு அவர் எங்கள் வீட்டிற்கு வராமலே இருந்திருக்கலாம் என்றும் புலம்பி இருக்கின்றார். இந்நிலையில் எடியூரப்பா மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்று அங்குள்ள முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். வழக்குப் பதியவேண்டும் என்றால் ஒட்டுமொத்த பிஜேபி சங்பரிவார கும்பல்கள் அனைவரின் மீது வழக்குப் பதிய வேண்டிவரும். பார்ப்பன சனாதன தர்மத்தைக் கட்சியின் கொள்கையாக வைத்துக்கொண்டு அதை நிலை நாட்டுவதையே கடமையாக ஏற்றிருக்கும் இவர்கள் ஒருநாளும் தலித்துகளின் ஆதரவாளர்களாக ஆகமுடியாது என்பதை தலித்துகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பசுமாட்டின் தோலை உரித்ததற்காக உனாவில் நான்கு தலித் இளைஞர்கள் மீது மிருகத்தனமாக பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பார்ப்பன ஆதிக்கசாதி கும்பலின் தாக்குதலும் கடந்த மாதம் உத்திரபிரதேசத்தில் சப்பிர்பூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க விரும்பிய தலித்துகளின் 58 வீடுகளை கொளுத்திய ஆதிக்கசாதி பிஜேபி கும்பலின் தாக்குதலும், மத்தியப் பிரதேசத்தில் திருமணத்தில் பேன்ட்வாத்தியம் வைத்ததற்காக தலித்துகளின் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றி அதைப் பயன்படுத்தவிடாமல் செய்த பாஜகவை சேர்ந்த ஆதிக்கசாதிகளின் அருவருப்பான செயலும் அப்பட்டமாக பிஜேபி எப்போதுமே தலித்துகளுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட தகுதியற்ற கட்சி என்பதைத்தான் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது.
எனவே சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தலித்தும் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என விரும்பினால் உடனடியாக முதலில் செய்ய வேண்டியது பிஜேபி சங்பரிவார அமைப்புகளில் இருந்து வெளியேறுவதுதான். யாரால் அடிமைப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே தீண்டப்படாதவர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டோமோ அவர்களிடமே சென்று அடைக்கலம் தேடுவது வெட்கக்கேடான செயலாகும். ஒருகாலத்திலும் பிஜேபி சங்பரிவார கும்பலால் தலித்துகளுக்கு எந்த நன்மையும் செய்துவிடமுடியாது. வேண்டுமென்றால் உங்களின் குடிசைகளைக் கொளுத்துவார்கள், உங்களின் பொருளாதாரத்தை அழிப்பார்கள், இல்லை என்றால் அப்படி செய்பவர்கள் உடன் கைகோர்த்து உங்களை அச்சுறுத்துவார்கள். இதுதான் பிஜேபி சங்பரிவாரத்தின் உண்மையான முகம். தங்களுக்கான எதிரி யார்? நண்பன் யார்? என்று தலித்துகள் கண்டுபிடிக்க தெரிந்துகொள்ள வேண்டும். பிஜேபி சங்பரிவாரத்துடனான உங்களது தொடர்பு என்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். அவருக்கு நீங்கள் இழைக்கும் மாபெரும் துரோகமாகும். உங்களது வீட்டில் உணவு உண்பதையும், தண்ணீர் குடிப்பதையும் தீட்டாக நினைக்கும் ஒரு கட்சி எப்படி உங்களை மட்டும் புனிதமாகப் பார்க்கும்? உங்களைப் பற்றிய அவர்களின் நினைவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கட்டியமைக்கப்பட்டது. அதை இன்று அவர்கள் மாற்றிக் கொண்டுவிட்டார்கள் என்று சொல்லும் புரட்டுகளை நம்பி ஆதிக்கசாதிகளின் அடியாளாக உங்களை மாற்றப் பார்க்கும் அவர்களின் வலையில் விழுந்துவிடாதீர்கள். அம்பேத்கரின் சிந்தனைகளையும் அவரது உழைப்பையும் திருடித்தின்க காத்திருக்கும் வல்லூறுகள்தான் பிஜேபி சங்பரிவார கும்பல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- செ.கார்கி