தமிழ்நாட்டில் சாராயக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து அதன்படி கடையை ஒருநாள் மூடினார்கள். ஒரு நிறுவனம் அல்லது ஒரு தொழிற்சாலை வேலைநிறுத்தம் செய்கிறதென்றால் அவர்கள் செய்யும் தொழிலில் உற்பத்தி லாபம் கூடுதலாக இருக்கிறது. அதில் தமக்கான ஊதியம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காகத்தான் இருக்கும். ஆக, சாராய கடைகளை மூடி வைப்பதின்மூலம் தங்கள் எதிர்ப்பை இவர்கள் தெரிவிக்கிறார்கள் என்றால், இதில் கிடைக்கும் லாபத்தில் எங்களுக்கு குறைவான அளவே ஊதியம் அளிக்கிறார்கள் என்பதை வலியுறுத்தத்தான் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் புரியும்.

tasmac_240ஒரு காலத்தில் சாராயம் விற்பது ஒரு ஈனத் தொழிலாக கருதப்பட்டது. சாராயம் விற்பவர்களை ஊரிலிருப்பவர்கள் ஏதோ அவன் இச்சமூகத்தைவிட்டு விலக்கப்பட்டவனைப்போல் பார்ப்பார்கள். சாராயம் விற்பனையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆற்றோரங்களில் அல்லது கருவேலங்காடுகளில் இல்லையெனில் சுடுகாட்டு புறங்களில் தான் அதற்கான விற்பனை மையங்கள் இருக்கும். குடிப்பவர்களை குடிகாரன் என்று அழைக்கும்போதே அதற்குள் அவன் இச்சமூகத்திற்கு எதிரானவன் அல்லது இவனால் இச்சமூகத்திற்கு பயனில்லை என்கின்ற பொருள் பொதிந்திருப்பதை உணர முடியும். ஆனால் படிப்படியாக வளர்ந்து, இன்று அரசே சாராயக் கடைகளை நடத்தி, அதன்மூலம் பொருளீட்ட துவங்கி இருப்பதின்மூலம் இது எந்த அளவிற்கு இந்த நாட்டையும், இந்த சமூகத்தையும் கீழ் நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் மேலே கூறியதுபோன்று, சாராயக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நிலைமாறி, இன்று வீட்டிற்கு அருகிலேயே அவை திறந்திருப்பதை காண்கிறோம். படித்த, பட்டம் பெற்ற, பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்று சாராயம் ஊற்றித் தரும் தொழிலை தமது வாழ்வாதாரமாய் கொண்டிருக்கக்கூடிய அவல நிலை, அல்லது கேடு இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதை தவிர்க்கவே முடியாதா? என்ற கேள்வி பல்வேறு தளங்களிலிருந்து புறப்பட்டாலும், இதற்கான சரியான பதில் இதுவரை எழவில்லை. மாறாக இந்த அரசு சாராய விற்பனையின் அளவை விழுக்காடு வைத்து உயர்த்துகிறது. ஆண்டிற்கு பத்தாயிரம் கோடிக்கும் மேலாக சாராயத்தின் மூலம் லாபம் கிடைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

நாம் முன்பெல்லாம் சாராய கடை நடத்துபவர்கள் ஊருக்கு ஒருவராக இருப்பார்கள். அவர்கள் அதிகப்பட்சமாக ஒருநாளைக்கு நூறிலிருந்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிப்பார்கள். ஆனால் இன்று சாராய தொழிற்சாலைகள் வைத்திருக்கும் சாராய தொழிற்சாலை முதலாளிகள், பல்லாயிரக் கோடிகளின் அதிபதிகளாக வலம்வருகிறார்கள். ஆக, இந்த நாட்டின் ஏழை பாழைகளின் வருமானம் ஒட்டுமொத்தமாய் ஒருசில சாராய உற்பத்தியாளர்களை வளர்த்தெடுக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு அடித்தட்டு குடும்பங்களிலும் வறுமையும், வாழ்வின் மகிழ்வும் சூறையாடப்படுகின்றது. நாம் சாராயக் கடை என்று சொல்வது ஒருவேளை அரசுக்கு பிடிக்காமல் போகலாம், அல்லது இந்த சாராயக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். அதுவும் இல்லையெனில் இவர்கள் இந்த சாராயத்திற்கு ஆங்கிலத்தில் பல பெயர்களை வைத்து அழைக்கலாம்.

ஆனால் எப்படிச் சொன்னாலும் அது அடிப்படையில் சாராயம் என்பதிலிருந்து மாறப் போவது கிடையாது. ஆகவே நாம் சாராய கடை என்று சொல்வதிலிருந்து எந்த மாற்றத்தையும் செய்து கொள்ள வேண்டாம். இந்த சாராய கடைகள் ஆரம்ப நிலையில் தனி மனிதனின் குத்தகையாக இருந்தது. அது படிப்படியாக உருமாற்றம் அடைந்து, இன்று அரசே சாராய வியாபாரம் செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கான அதிகாரிகள், அதற்கான அளவீட்டாளர்கள், கொள்முதல் செய்பவர்கள், விற்பனையாளர்கள் என இந்த தீயச் செயலுக்கு ஒரு அரசு தன்னுடைய முழு பரிவாரங்களையும் பயன்படுத்துகிறதே? இது சரிதானா? என்று கேட்டால் ஒருவேளை அரசு சாராயம் விற்காவிட்டால் தனியாக கள்ளச்சாராயம் விற்பனையாகும்.

அதன்மூலம் பலர் நச்சு சாராயம் குடித்து பலியாகலாம். ஆகவே தான் அதைத் தடுக்க அரசு இந்த சாராய கடைகளை திறந்திருக்கிறது. சாராயம் விற்பனையின்மூலம் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய லாபம் நேரிடையாக அரசுக்கேக் கிடைக்கிறது என்று அரசு தமது மக்களிடம் நியாயம் கற்பிக்கிறது. ஆனால் சாராயம் குடிப்பதின் மூலம் வரும் வியாதிகளிலிருந்து அவர்கள் விடுதலைப் பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்பதை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், இந்த சாராயம் திருட்டுத்தனமாக கிடைக்கும்போது குடிப்பது தவறு என்ற மனநிலையில் குடித்துக் கொண்டிருந்த பலர், இன்று நேரிடையாக இது சரிதான் என்ற ஒரு உளவியல் பக்குவநிலைக்கு வருவதற்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

காரணம், அரசே தமது குடிமக்களின் மீது அக்கறையற்று, அவர்களை குடிகாரர்களாக உருமாற்றியது என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமிருக்காது. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரக்கணக்கான காவல்துறை அங்கத்தினர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நவீன கருவிகள், பணிமனைகள், குடியிருப்புகள் என பலநூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு இந்த நாட்டின் மக்களை அச்சமற்று தீய வழிகளில் இருந்து அவர்களை காப்பாற்றி, அவர்களின் செயல்பாடுகளின்மூலம் இந்த மக்களுக்கு நேர்மையை போதிப்பதாக அமைய வேண்டும். இதுதான் காவல் துறையினரின் கடமையாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கோடிக்கணக்கில் கொட்டி வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு துறை இந்த நாட்டின் அதிகார நடுவமாக இருக்கும்போது, எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு தவறிவிடும் என்கிற நியாயமாக கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பானதுதானே? அதே கேள்விதான் நம் மனதிலும் எழுகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசு, இந்த மக்களை மேலும் மேலும் படிப்படியாக குடிகாரர்களாக மாற்றி வரும் அவலப்போக்கு இந்த சமூக சீரழிவின் அடையாளம் என்பதை நாம் அழுத்தமாக பதிவு செய்கிறோம். ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட வயதினர் விழாக்களிலும், அல்லது பொது நிகழ்வுகளிலும் குடிப்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாக இருந்தது. ஆனால் இன்றோ இது முற்றிலுமாக மாறி, ஒவ்வொரு சாராய கடையும் திருவிழா நிகழ்வாக மாறியிருக்கிறது.

சாராயம் குடிக்கும் வயதும் மிக குறைந்த நிலையில், அதாவது உயர்நிலைக் கல்வி மாணாக்கர்கள் எல்லாம் மிகச் சாதாரணமாக சாராயக் கடைகளில் குழுமி இருப்பதைக் காண முடிகிறது. பள்ளி இறுதித் தேர்வுகளின்போது, அல்லது பள்ளியின் இறுதி நாட்களின்போது அவர்கள் சேர்ந்து சாராயம் குடிப்பதை ஒரு நடைமுறை நிகழ்ச்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது நாளடைவில் அவர்களின் பழக்கமாக மாற்றப்படலாம். அதுவே அவர்களின் வாழ்வை சீரழிக்கலாம். அவர்களின் வாழ்வு சீரழிவதற்கும் இந்த அடிப்படை வாழ்வியல் மாற்றத்திற்கும் இந்த அரசுதான் காரணம் என்பதை நாம் மறுதலிக்க முடியாது. ஒரு நாட்டில் வாழும் மக்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினர் சாராயம் குடிக்கிறார்கள். ஆகையால் அவர்கள் நச்சுச்சாராயம் குடிக்கக் கூடாது என்பதற்காக சாராயக்கடை திறக்கிறோம் என்பது ஒரு சரியான பொருள் பதிந்த நியாயம் கிடையாது என்பதே எமது வாதம். நாம் நினைப்பது ஒருவேளை தவறு என்று சிலர் கருதக் கூடும்.

ஆனாலும் இதை பதிவு செய்வது சரியென்றே நாம் நினைக்கிறோம். சாராய கடைகளை ஒட்டுமொத்தமாய் மூடிவிட்டு சாராயமே கிடைக்காத ஒரு வறண்ட நிலையை உருவாக்கினால் சாராயத்திற்கு அடிமையான ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் நச்சுச் சாராயம் குடித்து இறந்து போகலாம். அப்படி ஒரு சாரார் இந்த சமூகத்தின் அழுக்கடைந்த, அழுகிப்போன ஒரு பகுதி ஒழிந்து தான் போகட்டுமே. புதிதாக வரும் இச்சமூக அமைப்பு சாராயம் என்றால் என்னதென்றே தெரியாத ஒரு வாழ்வு வாழட்டுமே. இதை அரசு நினைத்தால் செய்ய முடியாதா? பழங்குடியின மக்களின் வாழ்வை சூறையாட நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏக போக முதலாளிகளுக்கும் துணைநிற்கும் இந்த அரசு, பல்வேறு பெயர்களில் புதிய புதிய படைகளை கட்டி, பல நவீன ஆயுதங்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு எதிரான சமர் நடத்துவதாக காரணம் சொல்லி மக்களை அழித்தொழிக்கிறதே? அதேப்போன்று இந்த சாராய சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒரு புதிய படையை கட்டி, அதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு முயற்சிக்க தயங்குவது ஏன்? ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது லாப வெறி.

சாராயத்தின் மூலம் கிடைக்கும் பணம். சாராய ஆலை முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை, கையூட்டு, கழிவுத்தொகை. இதுதான் இந்த புதிய புதிய சாராய கடைகளை வரம்பில்லாமல் திறந்து வைக்கக் காரணமாக இருக்கிறது. ஒரு காலத்தில் வரலாறு இதை கடுமையாக விமர்சிக்கும். அப்போது இந்த நாடே போதை நாடாக மாறியிருக்கும். இதை மாற்ற சமூக அக்கறையும், இந்த மக்களின் மீது உள்ளார்ந்த அன்பும் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் அவர்களின் வாழ்வை மீட்டெடுக்க உறுதுணை புரியும் என்பதை நாம் மீண்டும் பதிவு செய்கிறோம்.

ஒரு கதை இருக்கிறது. ஒரு ஊரில் கதை சொல்லி ஒருவன் இருந்தான். அவன் வேலைவெட்டிக்கு செல்வது கிடையாது. அதே ஊரில் ஒரு தையல்காரன் இருந்தான். ஆனால் தையல் காரனுக்கு வாய்பேச வராது. கதை சொல்லி அந்த தையல் காரன் கடையில் வந்து அமர்ந்து, கதை சொல்லிக் கொண்டிருப்பான். அதைக் கேட்டுக் கொண்டே தையல்காரன் மகிழ்ச்சியோடு வேலை செய்து கொண்டிருந்தான். ஒருநாள் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பில் செத்துப்போய் விட்டான். தையல்காரன் மிரண்டுபோய் அவனின் மார்பில் கைவைத்தான். இதயத்துடிப்பு நின்றிருந்தது. ஐயோ! நம் கடையில் இறந்தால் வீண்பழி நமக்கல்லவா? என்று நினைத்த தையல்காரன், கதைச் சொல்லியின் பிணத்தை பக்கத்து வீட்டில் கொண்டுபோய் போட்டான்.

பக்கத்து வீட்டுக்காரனுக்கு மாலைக்கண் நோய். ஆகவே அவன் வெளியே சென்று வீடு திரும்பியவன் தெரியாத்தனமாக பிணத்தின் கழுத்திலே காலை வைத்து மிதித்துவிட்டான். மிதிப்பட்ட பிணத்தின் நாசியில் சுவாசம் தெரிகிறதா என சோதித்துப் பார்த்தான். மூச்சுக்காற்று வரவில்லை. ஐயோ! ஒரு மனிதனின் கழுத்தில் கால் வைத்து மிதித்து கொன்று விட்டோமே என்று பயந்துபோய், அவன் அந்த பிணத்தை தமக்குப் பக்கத்திலிருந்த வீட்டின் தோட்டத்தில் கொண்டுபோய் ஒரு மரத்தின்மீது சாய்த்து அமரச் செய்தான். அந்த தோட்டத்து உரிமையாளன் செவிடன். அவன் யாரோ தோட்டத்தில் திருட வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, பிணத்தின் அருகே சென்று நீ யார்? எதற்கு இங்கே வந்தாய் என்று கேட்டுக் கொண்டு பிணத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பிணம் சரிந்து கீழே விழுந்தது.

நான் ஒருவனை கன்னத்தில் அறைந்து கொன்றுவிட்டேனே என்று நினைத்துக் கொண்ட அந்த செவிடன் அந்த பிணத்தின்மீது கைவைத்துப் பார்த்தான் அது சில்லிட்டுப் போயிருந்தது. அக்கம்பக்கம் பார்த்த அந்த செவிடன் அந்த பிணத்தை எதிர்வீட்டு திண்ணையில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் இருந்துவிட்டான். அந்த திண்ணை வீட்டுக்குச் சொந்தக்காரன் குடிகாரன். அவன் அந்த வீட்டிற்கு வந்தான். தமது வீட்டு திண்ணையில் யாரோ படுத்திருப்பதைக் கண்டதும், கோபத்தில், ஏய்! எழுந்திரு என்று கத்தினான். பிணம் எழுந்திருக்குமா! அந்த பிணத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பிறகு அவன் பிணத்தின் நாசியில் கைவைத்துப் பார்த்தான் சுவாசம் இல்லை.

அரண்டுபோன குடிகாரன், பிணத்தைப் பிடித்துக் கொண்டு ஐயோ! குடிவெறியில் ஒருவனை நான் அடித்து கொன்றுவிட்டேனே என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினான். இவனின் அழுகை சத்தத்தைக் கேட்டு ஊர்மக்கள் கூடினார்கள். காவலர்கள் வந்தார்கள். கூடி நின்றவர்களில் பலர் காவலரிடம், ஐயா! குடிவெறியில் இந்த மனிதனை தாம் அடித்துக் கொன்றதாக இவனே சொல்கிறான் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அந்த குடிகாரனை அழைத்துச் சென்றான். வழக்குப்பதிவு செய்தான். சிறையில் அடைத்தான். தான் குடித்த ஒரு குற்றத்திற்காக கொலை குற்றம் அவன்மீது வந்து விழுந்தது! இதுதான் குடி குடியைக் கெடுக்கும் பழமொழியோ!

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It