பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் வருகைக்கு முன்னால் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பெரும்பாலும் வார இதழ்கள், மாத இதழ்கள், சிறுபத்திரிக்கைகள், நாளேடுகள் போன்றவற்றையே சார்ந்திருந்தனர். அது போன்ற ஊடகங்களில் எழுதும் போது தங்களது கருத்துக்கள் மக்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்ற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டார்கள். இன்று தமிழ் நாட்டில் முக்கிய ஆளுமைகளாக அறியப்பட்ட பலபேர் அப்படி எழுதி எழுதியே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தான். மக்களுக்கு முதலில் ஒரு எழுத்தாளன் அறிமுகம் ஆவதற்கு முன் அவனின் எழுத்துக்கள் அறிமுகமாகி இருக்கும். தங்களுக்குப் பிடித்த தங்களது சிந்தனையைத் தூண்டும் எழுத்தாளனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கும். எழுத்தாளர்களும் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல் தங்களது கருத்துக்களையே முதன்மைப்படுத்திக் கொண்டனர். அவர்களின் கருத்துக்களின் வாயிலாகவே மக்கள் அவர்களை எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

social media 2கலை, அரசியல், இலக்கியம் போன்றவற்றை எழுதுவது என்பது மிகப்பெரிய அறிவுஜீவிகளின் செயலாக பார்க்கப்பட்ட நாட்கள் அவை. இதனால் எழுத்தாளர்களுக்கு என்று சமூக வெளியில் ஒரு நல்ல மரியாதை இருந்தது. ஒரு செய்தியை பற்றி பிசுறு தட்டாமல் ஐந்தாறு பக்கம் எழுதுவது என்பது அனைவராலும் முடியாத காரியம் என்பதால் எழுத்தாளர்களுக்கு என்று தொடர்ந்து ஒரு பஞ்சம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. எழுவதற்கென்று பிரத்தியோகமாக தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள எந்த அவசியமும் இல்லாமல் செய்துவிட்டது சமூக வலைத்தளங்கள். தங்கள் கருத்துக்களைப் பக்கம் பக்கமாக எழுதித்தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் செய்துவிட்டது. ஒரு நாலு வரியில் நறுக்கு தெறித்தது போல தங்கள் கருத்துக்களை இன்று யார் வேண்டும் என்றாலும் எழுதி வெளியிட முடியும். அதற்கான களத்தை சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி. சில நூறு மூளைகளின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செய்துவந்த நிலையில் லட்சக்கணக்கான மூளைகள் இன்று தங்கள் கருத்துக்களை சமூகத்தின் முன் வைக்கின்றன. இதனால் சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் தனது கருத்தை வளப்படுத்திக்கொள்ள ஒரு பெரிய எழுத்தாளனை, பேச்சாளனையோ சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை அது உடைத்திருக்கின்றது.

இதனால் எழுத்தாளன் என்ற சமூக அந்தஸ்த்தில் உயர அமர்ந்திருந்த பல பேர் சறுக்கிவிழும் நிலை ஏற்பட்டது. சில பேர் தங்கள் இருத்தலை சமூக வலைத்தளங்களில் நிலை நிறுத்திக்கொண்டார்கள். இன்று புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர் உருவாவதற்கு களம் அமைத்துக் கொடுத்த அந்த முந்திய தலைமுறை எழுத்தாளர்களில் பலபேர் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்கள் கிடையாது. அவர்களின் எழுத்துக்களே அவர்களை முன்னிலைப்படுத்தின. ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் எழுதும் பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துக்களை முன்னிலைப்படுத்துவதற்கு மாறாக தங்களையே முன்னிலைப்படுத்திக் கொள்கின்றார்கள். எந்தவித சித்தாந்தப் பின்புலமும் இன்றி எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததைக் கடைபிடிப்பதாய் சொல்லும் எழுத்தாளர்களும் அதே மனநிலையில் தான் சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றார்கள்.

சமூக மற்றம் நிச்சயம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையில் அதனையே தனது வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக்கொண்ட அந்த எழுத்தாளர்கள் இன்று எந்தவித அரசியல் சிந்தனைகளும் அற்ற ஒரு சராசரி எழுத்தாளர்களை விடவும், பேச்சாளர்களை விடவும் மிக கேவலமாக சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றார்கள். தன்னைப்பற்றி தானே சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது, தனது முகத்தை விதவிதமாக செல்பி எடுத்து அதையே செய்தியாகப் பதிவிடுவது என அவர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி நடந்துகொண்டிருக்கின்றன. பெரியாரையோ, மார்க்சையோ, இல்லை அம்பேத்கரையோ கடைபிடிப்பதாய் சொல்லும் அவர்கள் அவர்களின் கொள்கைகளைப் பரப்புகின்றார்களோ, இல்லையோ தங்களைப் பற்றிய புகழை எந்தவித கூச்சமும் இன்றி சூடு சுரணையற்று பரப்புகின்றார்கள். மேலும் அதற்கும் கருத்து சொல்லும் பல கருத்துச்சொல்லிகள் வேறு இருக்கின்றார்கள். “தல கலக்கீட்டீங்க தல, உங்கள அடிச்சிக்க தமிழ்நாட்டுல எவனும் இல்லை, அடுத்து பெரியார் நீங்கதான், தமிழ்நாட்டின் கார்ல்மார்க்ஸ் நீங்கள்தான்” என்று ரத்தம் வரும் அளவுக்கு சொறிந்துவிடுகின்றார்கள். இந்தப் புகழில் மயங்கிய அந்த எழுத்தாளார்கள் தான் எதற்காக ஒரு பேச்சாளனாக, எழுத்தாளனாக இந்தச் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதையே மறந்து சொறிந்துவிடுவதில் சுகம் கண்டுகொண்டு இருக்கின்றார்கள்.

இந்திய சமூகம் ஒரு மோசமான நிலையில் மத வெறியர்களால் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் முன்பைவிட போராட்டக் களத்தை தேர்ந்தெடுக்கும் போக்கு தற்போது அதிகரித்து இருக்கின்றது. தனது எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு போராட்டம் ஒன்றே என்று அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான கருத்தாக இருக்கட்டும், இல்லை பெரும் முதலாளிகளுக்கு எதிரான கருத்தாக இருக்கட்டும் இன்று முன்பைவிட சமூக வலைத்தளங்களின் வாயிலாக அது அனைவரிடமும் வீச்சாக சென்று சேர்கின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையில் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அறிவுஜீவிகள் மக்களின் உணர்வு மட்டம் குறைந்துவிடாமல் தொடர்ந்து தங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத சுயதம்பட்டங்கள் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை வீழ்ச்சி அடையச்செய்யும். மேலும் அது உங்களை சமூக வலைத்தளங்களில் தொடரும் ஆயிரக்கணக்கான மக்களை உங்களைப் போன்றோ சுய மோகிகளாக மாற்றிவிடும்.

மக்களிடம் பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்களின் சிந்தனையை கொண்டுசெல்லவே எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் மாறினோம் என்பதையும் சமூக மற்றம் ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்பதையும் மறந்து, ஒரு சராசரி மனிதனைப் போல நடந்துகொள்வதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. அப்படி எந்தச் சமூக செயல்பாட்டாளர்களாவது தங்களது பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தன்னைப் புகழ்ந்து சுயதம்பட்டம் அடித்தால் அது போன்ற நிகழ்வுகளை அவர்களைப் பின் தொடர்கின்றவர்கள் நிச்சயம் கண்டிக்க வேண்டும். “நான் உன் பேஸ்புக் பக்கத்திற்கோ, இல்லை ட்விட்டர் பக்கத்திற்கோ வருவது உன்னுடைய சிந்தனையை தெரிந்துகொள்ளவே அன்றி உன்னைப்பற்றிய பிதற்றல்களைக் கேட்க அல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்ல வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை சமூக செயல்பாட்டாளர்கள் நல்ல விவாதக் களமாக மாற்றி ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

- செ.கார்கி

Pin It