ஜெயமோகனின் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் பற்றிய தோழர் பாவெல் சக்தியின் கட்டுரையின் மைய நோக்கில் உடன்பாடு இருந்தாலும், ஜெயமோகனை முதன்மையான எழுத்தாளர் அல்ல என்று மறுதலிப்பதற்கு புத்தக விற்பனையை மட்டுமே ஒரு அளவுகோலாக வைத்து தீர்மானிக்க முடியாது, கூடாது. ஜெயமோகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி வணிக திரையுலகின் நாயகன் கிடையாது, இந்தப் படம் இத்தனை கோடி லாபம் பார்த்தது என்று வசூலை வைத்து அளவிடுவதற்கு. இலக்கிய உலகின் பிதாமகன் என்று ‘அறிவுலகத்தால்’ ஊதிப் பெருக்கப்படுபவர். ஜெயமோகன் எதனால் முதன்மையான இடத்தில் இருக்கிறார் என்று கருதப்படுகிறது? அவர் எழுதும் படைப்புகளால் மட்டும் கிடையாது என்பது நிச்சயம். தேர்ந்த வாசகன் தகுதி, தரத்தின் அடிப்படையில் அவரை விட காத்திரமான படைப்புகளை எழுதி வருபவர்களை அறிவான். இணையத்தில் இயங்காமல் படைப்பிலக்கியத் தளத்தில் மட்டும் இயங்குபவர்களுக்கு இந்த ‘முதன்மையான’ எழுத்தாளர் அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஏன், ஜெயமோகன் உட்பட பலர் வியந்தோதும் காலஞ்சென்ற சுந்தர ராமசாமி, அசோகமித்திரனுக்கு கூட அவர்கள் இருந்த நாட்களில் எந்நாளும் ‘முதன்மைப்’ படைப்பாளி அந்தஸ்து கிடைத்ததில்லை, ‘முன்னணி படைப்பாளிகளுள் ஒருவராக’ தான் இருந்தார்கள். வேறு எந்தக் காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

jeyamohan 226இணையம் வந்த பிறகு தமிழ் இலக்கிய உலகில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது. நண்பர்களின் அறிமுகத்தில் வாசிப்பு அறிமுகமாகி, புத்தகங்கள் படித்து விவாதித்த வளர்ந்த தலைமுறையின் தொடர்ச்சியாக இணையம், வலைப்பூக்கள் மூலமாக இலக்கியம் அறிமுகமான ஒரு தலைமுறை உருவானது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது சாருவும் ஜெயமோகனும் தான். தொடர்ச்சியாக இணையத்தில் பத்தி எழுத ஆரம்பிக்கிறார்கள். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைத் தொகுப்புகளை படிப்பதற்கு சோம்பேறித்தனப்படும் கிசுகிசு நுனிப்புல் வாசகர்கள் சாரு, ஜெயமோகன் அன்றாடம் எழுதும் வம்பிலக்கிய பத்திகளை மட்டும் படித்துவிட்டு இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிப்பதால் தங்களை இலக்கிய வாசகர்கள் என்று திருப்திப்பட்டு இருவரையும் ஆராதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவரவர் அணிக்கு ஆதரவாக வாள் சுழற்றுகிறார்கள். இப்போதும் இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்து ஆதரிப்பவர்களை விட, படைப்புக்கு வெளியில் எழுதும் சில கட்டுரைகளைப் படித்து விட்டு கம்பு சுற்றுபவர்கள் தான் அதிகம். எதிர்ப்பவர்களிலும் இந்த எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதள டி.ஆர்.பி. ரேட்டிங் அடிப்படையில் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு சாரு தான் தமிழின் ‘முதன்மையான’ படைப்பாளியாக இருந்தார். தமிழ் இலக்கிய உலகின் ‘அவுட்காஸ்ட்’, ‘ட்ரான்ஸ்கிரேசிவ் எழுத்தாளன்’ என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டு, ‘தமிழ் இலக்கிய உலகம் ஒரு மொண்ணை’, ‘தான் மட்டும் தான் தமிழில் எழுதும் உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளன்’ என்றும், ஜெயமோகனை ‘உத்தம தமிழ் எழுத்தாளன்’ என்றும் ஆபாச வசைகளாலும் கடும் விமர்சனம் செய்து  வந்தார்.

அரசியலில் எப்படி சு.சாமி, ராமகோபாலனின் சர்ச்சைக்குரிய உளறல்கள் செய்தியாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதோ, அதே போன்று இணையத்திலும் ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ச்சியாக இவரது கட்டுரைகள் விவாதிக்கப்படுகின்றன. இதையொட்டி வணிக இதழ்களும் அவ்வப்போது இவரின் பேட்டிகள், தொடர்களை வெளியிடுகின்றன. எனவே, இவரை விட சிறந்த படைப்பாளிகள் சமகாலத்தில் இருந்தாலும், இரண்டு, மூன்று நாவல்களை மட்டும் எழுதிய இவர், தமிழின் ‘முன்னணி’ படைப்பாளியாக இணையத்தில் அவரது ரசிக குஞ்சுகளின் ஆதரவால் வலம் வந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களின் வரவுக்குப் பிறகு சில பல போலிச்சாமியார்களின் ஆதரவு, முன்னுக்குப் பின்னான உளறல்கள், போனாம்போக்கித்தனமாக எழுதுதல், கூறியது கூறல் போன்றவற்றால் ஆரம்பத்தில் அவரை ஒரு இலக்கியவாதி என்று மதித்தவர்கள் கூட சில காலம் கழித்து வெறும் சுவாரஸ்யமான பத்தி எழுத்தாளர் என்று நகர்ந்து விடுகிறார்கள்.

ஜெயமோகனைப் பொருத்தவரை, எழுத்தாளர்கள் என்றாலே இடதுசாரி சார்புடையவர்கள் அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சௌந்தர்யலகரி எழுத்தாளர்கள் என்ற தமிழ் இலக்கியப் பரப்பில் அதைத் தகர்த்து, முதன்முதலாக வலதுசாரி சிந்தனைப் போக்குடன் வெளிவந்த தமிழின் முதல் படைப்பாளி என்ற அளவில் மிகுந்த கவனத்துக்குரியவர் ஆகிறார். தோழர் பாவெல் குறிப்பிட்டுள்ளது போல சிறுபான்மையினர் எதிர்ப்பு, இடதுசாரி எதிர்ப்பு போன்ற காரணங்களினால் பார்ப்பன வாசகர்களாலும், ஊடகங்களாலும் ‘வாராது வந்த மாமணி’ என்று போற்றப்படுகிறார். ஜெயமோகன் தொடர்ச்சியாக ஒரேமாதிரியான இலக்கியத் தரத்துடனும், தொடர்ச்சியோடும் எழுதுவது கிடையாது. ‘காடு’ போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பும் எழுதுவார், அனுராதா ரமணன் போல் ‘அனல் காற்று’ம் எழுதுவார், ஜெயகாந்தன் போல ‘ஏழாம் உலகமும்’ எழுதுவார், ராஜேஷ் குமார் வகை த்ரில்லர் ‘உலோகமும்’ எழுதுவார், சராசரி பிளாக்கர் போல ‘இரவு’ம் எழுதுவார். மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளியின் வேண்டுகோளுக்கிணங்க எழுதும் கதை இலாகாவின் உறுப்பினர் போல பல்வேறு வகையிலான ‘இலக்கியங்களை’ எழுதியும், சிந்துசமவெளி போன்ற பலான படங்களுக்கு வசனம் எழுதியும் தான் இந்த இடத்தை அடைந்துள்ளார்.

ஜெயமோகன் சந்திக்கும் எதிர்ப்பு அல்லது வெறுப்பு ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்ற கம்யூனிச எதிர்ப்பு படைப்பிலக்கியங்களால் மட்டும் உருவானது கிடையாது. பெரும்பாலும் படைப்பிலக்கியத்திற்கு அப்பால் எழுதப்படும் சிறுபான்மையினர் எதிர்ப்பு, திராவிட, கம்யூனிச எதிர்ப்பு, கமலா தாஸ், அருந்ததி ராய் போன்ற ஆளுமைகள் மீதான தனிநபர் வசை கட்டுரைகளால் எழுவது. ஜெயமோகன் வெளிப்படையாக இந்துத்துவத்திற்கு ஆதரவாக எழுதுவது கிடையாது. ஆனால், இந்துத்துவ எதிர்ப்பாளர்களை தொடர்ச்சியாக வன்மம் கொண்டு தாக்கி வருவதால் இயல்பாகவே ஜெயமோகனை இந்துத்துவத்திற்கு ஆதரவான நபராகக் கருதி எதிர்ப்புக்குரல் எழவே செய்யும். அவர் என்ன தான் இந்துத்துவத்திற்கும் தன்னுடைய உள்ளொளி ஆன்மிக தரிசனம், இந்து ஞான மரபிற்கும் தொடர்பு கிடையாது என்று தன்னை வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக நிலைநிறுத்திக் கொண்டே இருந்தாலும், அவரின் செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும்.

அண்மைக்காலத்தில் கூட மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஓர் இஸ்லாமியரைக் கொன்ற சம்பவத்தை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அறிவுஜீவிகளும் பாசிச பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஜெயமோகன் அரசிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து, எதிர்வினையாற்றியவர்களை ‘அண்டிப் பிழைப்பவர்கள்’ என்று குற்றம் சாட்டினார். தமிழகம் முழுவதிலும் ஜக்கியின் சட்டவிரோத வன ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்த போதும், ஆர்.எஸ்.எஸ். தொண்டனின் மனநிலையில் ‘இந்துக்கள் என்பதால் எதிர்க்கிறார்கள்’ என்று நீண்ட கட்டுரை எழுதி எதிர்வினை புரிந்தார். இதை அவரது அனுமதியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழான விஜயபாரதம் வெளியிட்டது. இதை இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளாமல் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

தற்போது கூட வலுவான எதிர்ப்பு வரும் என்று அறிந்தும் ‘இஸ்லாமியர்கள் அனைவரும் நாணயம் அற்றவர்கள், வன்முறையாளர்கள்’ என்று பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டினார். ஒரு தரப்பினரின் எதிர்ப்பு வலுவாக, வலுவாக மாற்றுத் தரப்பினரின் ஆதரவு குவியும். அவ்வளவு தான், எளிமையான தர்க்கம். ஜெயமோகனை விமர்சிக்கும் போதெல்லாம் அவரது சிஷ்யகோடிகள் கண்டபடி முட்டுக் கொடுத்து ‘இலக்கிய வாசிப்பு இவர்களுக்கு என்ன கற்றுத் தந்தது’ என்று விமர்சிப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்புவார்கள். ஆனால் மறந்தும் கூட ஒரு படைப்பாளி சக மனிதனை அச்சத்துடனும், வெறுப்புடனும் பார்க்கும் மனநிலையைக் கண்டிக்க மாட்டார்கள். இதுபோன்ற கள்ள மௌனங்கள் ஜெயமோகன் மீது மட்டுமில்லாமல், அவரது ஆதரவாளர்கள் மீதும் விமர்சனம் கொள்ள வைக்கிறது. எனவே, அவர்கள் ஜெயமோகனுக்கு ஆதரவாக எதிர்ப்பாளர்களை சீண்டுவார்கள். விவாதம் வலுக்கும், குறிப்பிடத்தகுந்த வெளிச்சம் மீண்டும் மீண்டும் ஜெயமோகனை சுற்றிப் பாயும். ஜெயமோகனுக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரும்பாலும் பாஜகவை வெளிப்படையாக ஆதரிப்பவர்களாகவும், யோகி ஆதித்யநாத்தை கொண்டாடுபவர்களாகவும் திராவிட, கம்யூனிச எதிர்ப்பு ஆட்களாகவும் இருப்பது தற்செயலானது அல்ல.

ஜெயமோகன் மீது கடும் விமர்சனங்கள் இருந்தாலும் நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல தொடர்ச்சியான இலக்கியச் செயல்பாடுகளின் ஊடாக தமிழ் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தகுந்த பங்கு ஆற்றியுள்ளார் என்பதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால், இலக்கியத்தின் மூலமாக மட்டும் தான் ‘முதன்மை’ படைப்பாளியானார் என்பதை ஏற்க முடியாது என்பதே நமது தரப்பு. ஏற்கனவே குறிப்பட்டது போல இணையத்தில் ‘கலைஞர் இலக்கியவாதி கிடையாது’, எம்ஜிஆர் குரலை வைத்து அசட்டு காமெடி செய்வது, அருந்ததிராயை குருவி மண்டை என எழுதுவது போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகள் எழுதி ஊடக வெளிச்சத்தில் தன்னை வைத்துக் கொள்வது, விவாதங்களைக் கிளப்புவது, அறிமுகமில்லாத வாசகர்களின் கேள்விகளுக்கும் நீள நீளமாக பதில் எழுதுவது, அதில் ஒரு சர்ச்சை வருமாறு பார்த்துக் கொள்வது, அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் முன்னுரை, மதிப்புரை எழுதி ஒரு குறிப்பிட்ட அளவிலான எழுத்தாளர்களை நம்பிக்கைக்குரிய விசுவாசிகளாக்கிக் கொள்வது என அவரது ‘இலக்கிய’ செயல்பாடுகள் அதிகம்.

சந்தைப் பொருளாதாரத்தில் market share, mindshare பற்றி அறிந்திருப்பீர்கள் என்றால், இதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஏன் Colgate, Airtel போன்ற நிறுவனங்கள் market share-ஐ தங்கள் வசம் வைத்திருந்தாலும் தொடர்ச்ச்சியாக விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்கின்றன? ஒரு பொருளுக்கு market share-ஐ விட mindshare மிக முக்கியம். தொடர்ச்சியாக மக்களின் கண்ணில் பட்டுக்கொண்டே அந்தப் பொருள் மனதில் ஊடுருவ வேண்டும். Mindshare அதிகரிக்க, அதிகரிக்க market share அதிகரிக்கும். இந்த எளிய உத்தியை பயன்படுத்திதான் விற்பனை புள்ளிவிபரங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும், தமிழின் ‘முதன்மையான’ படைப்பாளியாக இருக்கிறார். இந்த உத்தி தெரியாததால்தான், இலக்கியத் தரத்திலும் சரி, தொடர்ச்சியான பங்களிப்பிலும் சரி, இவரை விட நேர்த்தியான சிறந்த படைப்புகளை தமிழுக்கு அளித்த அசோகமித்திரனோ, வண்ணநிலவனோ, கி.ராஜநாராயணனோ, இராசேந்திர சோழனோ, சு.வேணுகோபாலோ தமிழின் முதன்மை படைப்பாளியாக மாற முடியவில்லை.

- இராஜகோபால் சுப்பிரமணியம்

Pin It