அருகில் வந்ததும்
மூஞ்சை திருப்பிக் கொள்வது
போல தான்
நமது முகநூல் பக்கமென்றால்
அவர்களின் ஸ்க்ரோலிங் வேகம்

முப்பது எழுத்தாக இருந்தாலும்
நினைவிலிருக்கும்
பெண் பெயர்
மூன்றெழுத்து ஆண் பெயரை
மறந்து விடுகிறது

ஓடி ஓடி வாழ்த்துகள் சொல்ல
தேவையெல்லாம்
சுடிதாரும் புடவையுமா
அல்லது ஜீன்ஸ் டீ சர்ட் மிடியுமா

உச்சாணிக் கொம்பிலிருக்கும்
க்ரே முடியர்களின்
அநியாயத்தில் ஒன்றென
அல்லது அத்தியாயத்தில் ஒன்றென
விருப்பக் குறியீடும் தாண்டி
கமெண்ட் உடைசல்கள்
உள்பெட்டி விவகாரம் தனி

எப்படித்தான் வேர்த்துப் பூக்கிறதோ
பெண்களுக்கு என்றால்
ஓடோடி வந்து கொட்டும்
அறிவுரைகள்
ஆசுவாசங்கள்
அன்புகள்
ஆன்ம யோகாக்கள்

18 வயதுக்காரியின்
உளறல் புத்தகம் தெரிகிறதாம்
38 வயதுக்காரனின் உலகம்
தெரியவில்லையாம்

அயோக்கியத்தனங்களில்
மிக அழகானதாக இதையும்
எடுத்துக் கொள்ளலாம்
பல்லு போன பிறகும்
பட்டாணி கொறிக்க விளையும்
சில பெரிய மனிதர்களின்
etc எச்சங்கள்

- யுத்தன்

Pin It