social media 600இந்த உலகம் மிக விசித்திரமானது. இங்கே ஒருவன் எதற்காக சிரிக்க வேண்டும், எதற்காக கோபப்பட வேண்டும், எதற்காக கைதட்ட வேண்டும், எதற்கு முஷ்டியை முறுக்க வேண்டும் என்பதற்கெல்லாம் நிச்சயிக்கப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது. அவ்வப்போது எது சமூகத்தில் டிரண்டிங்கில் உள்ளதோ, அதற்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்வதுதான் உலக மக்களின் வழக்கம். அப்படி இல்லாமல் நீங்கள் சுயமாக சிந்தித்துச் செயல்பட்டீர்கள் என்றால், அவுட்டேட் ஆகி விடுவீர்கள். உங்கள் அம்மாவோ அப்பாவோ ஏன் மனைவியோ கூட செத்துப் போயிருக்கலாம் ஆனால் நீங்கள் அழ வேண்டுமா, சிரிக்க வேண்டுமா என்பதை டிரண்டிங்கே முடிவு செய்கின்றது.

பிணங்களோடு சிரித்துக் கொண்டே செல்பி எடுப்பது அப்போது டிரண்டிங்கில் இருந்தால், நிச்சயம் பிணங்களுக்கு மவுசு கூடி பிணவறையில் இருக்கும் சிதைந்து போன பிணங்கள், பாதி எரிந்த பிணங்கள், புதைக்கப்பட்டு சில நாட்கள் ஆன அழுகிப் போன பிணங்கள், தூக்கில் தொங்கும் நிர்வாணப் பிணங்கள், வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குழந்தைகளின் பிணங்கள், சாலை விபத்துகளில் அடிபட்டு உடல் உறுப்புகள் தெறித்துக் கிடக்கும் பிணங்கள் என அனைத்து வகையான பிணங்களுடனும் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்து பதிவேற்றுவார்கள். பிணங்கள் கிடைக்கவில்லை என்றால், தன்னுடைய கழுத்தை தானே அறுத்து செல்பி எடுத்து வெளியிடுவார்கள். அது தான் டிரண்டிங் உலகின் மகிமை.

இந்த டிரண்டிங்கை எல்லாம் யார் திடீரென உருவாக்குகின்றார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்கள் புதைகுழிகளில் இருந்து அவ்வப்போது எழுந்து வருபவர்கள் என்றும், பாதாள சாக்கடைக்கடியில் கூடுகட்டி வாழ்பவர்கள் என்றும், வேற்றுக் கிரகவாசிகள் என்றும், யார் கண்ணுக்கும் தெரியாமல் பூமியில் அரூபமாக வாழும் சித்தர்கள் என்றும் பொதுவாக நம்பப்படுகின்றது. அவர்கள் தான் எல்லாவற்றையும் இன்று முடிவு செய்பவர்களாக உள்ளார்கள். மக்களின் மனநிலையில் தாக்கம் செலுத்துபவர்களாக உள்ளார்கள். நீங்கள் பிரச்சினை என்று நினைப்பதை அவர்கள் நகைப்புக்குரியது என்று உங்களை நம்ப வைப்பார்கள். நீங்கள் சிரித்துவிட்டு கடந்து போகும் நினைக்கும் ஒன்றுக்காக உங்களை மாரடித்து அழச் சொல்வார்கள். நமது பாரம்பரியமே அதுதான் என்பதால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று நாமும் அதை வழிமொழிவோம்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக எந்தவித முன் ஏற்பாடும் செய்யாமல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், வாழ்தாரம் இழந்து நகரங்களில் இருந்து கைவிடப்பட்ட, விரட்டப்பட்ட கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடுவழியிலேயே செத்தனர். ஆனால் அது எல்லாம் ஒரு செய்தியாகக் கூட அறிந்து கொள்ள விரும்பாத ஒரு எலைட் டிரண்டிங் கும்பல் இருந்தது. அது இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றைப் பார்ப்பது போலவும், உடற்பயிற்சி செய்வது போன்றும், யோகா செய்வது போன்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, மூன்று வேளையும் வயிறு முட்ட தின்றுவிட்டு செரிக்காமல், வீட்டில் இருக்கும் அம்மாஞ்சிகள் எப்படி தங்களின் நேரத்தைக் கழிக்கலாம் என ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தன.

இன்று அதே கும்பல்தான் கேரளாவில் இறந்து போன ஒரு யானைக்காக கண்ணீர் சிந்தி சமூக வலைத்தளங்களில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங் செய்தனர். அவர்களின் கண்ணீரின் பின்னே எப்படியாவது யானையின் பிணத்தை வைத்து இஸ்லாமிய வெறுப்பைத் தூண்ட முடியுமா என்பதுதான் நோக்கமாக இருந்தது. அதனால்தான் பாலக்காட்டில் இறந்த யானையை மலப்புரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் கொன்று விட்டதாக செய்தி பரப்பினார்கள். ஆனால் அதே கும்பல் உத்தரகாண்ட்டில் பாஜக எம்எல்ஏ-வான கணேஷ் ஜோஷி ஒரு குதிரையின் காலை உடைத்ததையும், பிறகு அந்தக் குதிரை இறந்து போனதையும், அவர் மீது போடப்பட்ட வழக்கு கூட பாஜக ஆட்சிக்கு வந்ததும் திரும்ப பெறப்பட்டதையும் கண்டிக்கக் கூட துப்பில்லாததாக இருந்தது. யானையின் சாவுக்காக அனைவரும் அழ வேண்டும் என டிரண்டிங் கும்பலால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்த டிரண்டிங் கும்பல்கள் இப்படித்தான் இருந்தது. உதாரணமாக குஜராத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயிதத்தில் ஓர் இந்து பயங்கரவாதி குத்திக் கொன்ற போதும், உயிரோடு பலர் எரித்துக் கொல்லப்பட்ட போதும் ஒரு சிறுபான்மையின சமூகமே 'ஓ'வென்று ஆற்றாமையில் கண்ணீர்விட்டுக் கதறியது. இன்று வரை நீதிக்காக போராடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் அவர்களின் கண்ணீர் ஒரு போதும் டிரண்டிங் ஆவதில்லை. ஒரு பெண் சாமியாரிணி மசூதியிலும், தர்காவிலும், ரயிலிலும் குண்டுவைத்து பல பேரை உடல் சிதறி சாகடித்ததற்காக நாம் கோபப்பட நினைத்த போது, அவர்கள் தற்போது மோடி ஆட்சியில் டிரண்டிங் மாறி விட்டதை நமக்கு உணர்த்தினார்கள். மக்களும் அந்தக் குற்றவாளியை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து தாங்களும் டிரண்டிங்கில்தான் உள்ளோம் என காட்டிக் கொண்டார்கள்.

தண்டகாருண்ய காடுகளில் இருந்து சில பன்னாட்டு தரகு முதலாளிகளின் கம்பெனிகள் கனிம வளங்களை வெட்டி சூறையாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் புராதன வாழ்விடங்களில் இருந்து நாய்களைப் போல ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள், அவர்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டன, பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆனால் டிரண்டிங்கில் அவர்கள் தோற்றுப் போனார்கள். அப்போது ஒரு பன்றி ஒரே பிரசவத்தில் பத்துக் குட்டிகள் போட்ட அதிசய நிகழ்வு டிரண்டிங்கு உரிய முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதைவிட சோனி சோரி என்ற அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக கதை புனையப்பட்டு அவரது பிறப்புறுப்பில் இரண்டு கற்களும், அவரது ஆசனவாயில் ஒரு கல்லும் அன்கித் கார்க் என்ற எஸ்பியால் திணிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதுபோன்று செய்பவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது டிரண்டிங்கில் இருந்ததால், அந்த எஸ்.பிக்கு, குடியரசுத் தலைவரின் சிறந்த பணிக்கான உயரிய விருது கொடுத்து அவர் கவுரவிக்கப்பட்டார்.

கொலைகாரனையும், திருடனையும், பாலியல் குற்றவாளிகளையும் பதவிக்காவும் பணத்துக்காகவும் தண்டனையில் இருந்து தப்ப வைப்பது ஒரு டிரண்டிங்காக நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. அப்படி தப்ப வைக்கும் நீதிமான்கள் ஆளுநராகவும், எம்.பி.யாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது பலர் ஏடிஎம் வாசலிலேயே சுருண்டு விழுந்து செத்த போதும், நாட்டில் பொருளாதாரமே நடுத்தெருவுக்கு வந்த போதும் சிலர் மோடி கள்ள நோட்டை ஒழித்து விட்டதாகவும், கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாகவும், தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாகவும் டிரண்டிங் செய்து கொண்டிருந்தார்கள்.

காஷ்மீரில் கத்துவாவில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கோயிலில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது, அதே டிரண்டிங் குருப் நம்மை ‘பாரத் மாதா ஹீ ஜே’ என்றும், ‘இந்துக்களை அசிங்கப்படுத்த இஸ்லாமியர்கள் செய்யும் சதி’ என்றும் டிரண்டிங் செய்ய நம்மை கட்டாயப்படுத்தியது.

இந்தியா மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்த போது நாம் முகம்மது அக்லக்கை அடித்துக் கொன்றுவிட்டு, ‘பசுக்களை பாதுகாப்போம்’ என்ற ஹேஷ்டெக்கை டிரண்டிங்கை செய்து கொண்டிருந்தோம். ஆனால் கோசாலைகளில் நூற்றுக்கணக்கான பசுக்கள் உணவின்றி செத்த போது டிரண்டிங் குருப் மீளா உறக்கத்தில் இருந்தது.

பிணங்களை வைத்து அரசியல் செய்யும் மோசமான டிரண்டிங் கூட்டத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. அவர்கள் டிரண்டிங் செய்வதைப் பற்றித்தான் நீங்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், சிந்திக்க வேண்டும். இங்கே வஞ்சிக்கப்பட்டவர்களின், ஏமாற்றப்பட்டவர்களின், புறக்கணிக்கப் பட்டவர்களின் குரல்கள் ஒரு போதும் டிரண்டிங் ஆக்கப்படுவதில்லை. நிர்மலா தேவியும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் இதுவரை தண்டிக்கப் படவில்லை, பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சேலம், கன்னியாகுமரி என பல இடங்களில் இருந்தும், புதுப் புது பாலியல் குற்றவாளிகள் அவதாரம் எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு போதும் டிரண்டிங்குக்குரிய மதிப்பைப் பெறுவதில்லை.

ஒரு நடிகை பொதுவெளியில் வந்து தன்னை ஒருவன் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி சீரழித்ததாக பேட்டி கொடுத்தார். காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதற்கான ஆதாரத்தையும் கொடுத்தார். ஆனால் அவரின் கண்ணீர் கூட டிரண்டிங் கும்பலால் கண்டு கொள்ளப்படவே இல்லை. மாறாக குற்றம் செய்தவனின் விந்துக் கறை படிந்த பட்டாபட்டியை துவைத்துப் போட நீண்ட வரிசையில் ஒரு கூட்டம் இன்று வரை காத்துக் கிடக்கின்றது.

நாம் எப்போதும் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்போம். மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் டிரண்டிங் கும்பல்களின் குரலாக இல்லாமல் உண்மையில் சமூகத்தின் குரலாக இருப்போம். நீதி மறுக்கப்பட்ட மக்களின் கரங்களை உயர்த்த, வலுசேர்க்க அவர்களின் பின்னால் அணி திரள்வோம். மெய் நிகர் உலகத்திற்கும் உண்மை உலகத்திற்குமான வேறுபாட்டை உணர்ந்து உண்மையைக் கண்டறிய முயல்வோம்.

- செ.கார்கி

Pin It