TWITTER நிறுவனத்தின் பங்குகளை இப்போது வாங்கி இருப்பவர் தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க். "பேச்சு சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகத்தை" பாதுகாக்க விரும்புவதாலே உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளங்களில் ஒன்றான TWITTERஐ வாங்கி இருப்பதாக சொல்கிறார்.

TWITTER எனும் சமூக ஊடகம் தற்போது (330 மில்லியனுக்கும்) 33 கோடி மக்களுக்கும் அதிகமான உபயோகிப்பாளர்களை கொண்டு இருக்கும் மிகப்பெரிய நிறுவனம். இந்த உபயோகிப்பாளர்களை எல்லாம் தனக்கு கீழ் கொண்டு வருவதற்காக உலக பெரும் பணக்காரர். எலோன் மஸ்க் ஏறக்குறைய இந்திய மதிப்பில் 3,30,000 கோடி ரூபாய் ($ 44 பில்லியன்) செலவில் வாங்கி இருக்கிறார். பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தொழிலாளி வர்க்கத்தின் குரலை உயர்த்தி பிடிக்கவும் இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக இட்டு இந்த சமூக ஊடகத்தை வாங்கி இருக்கிறார். மஸ்க் என்று பலரும் பெருமையாக ஆங்காங்கே சமூக ஊடகங்களில் புழங்காகிதம் அடைவதை பார்க்கும் வேளையில் நாம் இவரைப்பற்றி கடந்த கால செயல்களை பற்றியும் பார்க்க வேண்டியது இருக்கிறது. அப்படி நாம் பார்க்கும்போது இவருக்கு இந்த மாதிரியான நல்லெண்ணம் இருப்பதாக எந்த இடத்திலும் தோன்றவில்லை..

சமீபத்தில் நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா எனும் நிறுவனத்திற்கு சென்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் என்பவரையும் சந்தித்து வந்திருப்பது செய்திகள் வாயிலாக நாம் பார்க்க முடிகிறது. இத்தனை ஆண்டுகளாக அமேரிக்கா சென்ற மோடி அவர்கள் இந்த முறை எலோன் மஸ்க். எனும் சர்ச்சைக்குரிய தொழிலதிபரை சந்தித்து இருக்கிறார்.

modi and elon muskஜனநாயகம் பேச்சு சுதந்திரம் என்று போலியாக பெருமை பேசும் தொழிலதிபர் மஸ்க்கை ஒவ்வொரு வருடமும் பேச்சு சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் பாரத பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பு என்பது யதார்த்தமாக ஏற்படக்கூடியது தான். 

சர்வாதிகாரிகள் ஒன்று கூடுவதும் வலது சாரிகள் ஒன்றிணைவதும் இயற்கை தான் என்பதை இந்த சந்திப்பு மீண்டும் உறுதி செய்து இருக்கிறது. 

நாம் மறக்க முடியாத தொழில் நுட்ப மோசடிகள் அல்லது முறைகேடுகளில் குறிப்பாக PIGASUS, FACEBOOK மற்றும் TWITTER ஆகியவை. 

எலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் கனடா நாட்டை பூர்வீகமாக கொண்ட எரோல் மஸ்க் எனும் மிக பிரபலமான தென்னாப்பிரிக்க வைர சுரங்க அதிபரின் மூத்த மகன்.

கனடாவில் கல்லூரியில் பட்டம் பெற்ற நேரத்தில் 1 லட்சம் டாலர் கடனாளியாக இருந்ததாகவும் தனது பாக்கெட்டில் வெறும் 2,000 அமெரிக்க டாலர்களை மட்டும் வைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு தனது 24 வயதில் வந்து அதன் பின் தனது கடின உழைப்பால் இன்று உலக பணக்காரர்களில் ஒருவராக ஆனதாகக் சுய புராணம் பேசுகிறார். தான் அமெரிக்காவிற்கு வந்து நிறுவிய முதல் நிறுவனம் zip2. இந்த Zip2 நிறுவனத்தை தொடக்கிய காலத்தில் இரண்டாவது கணினிக்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலையில் இருந்ததாக அவர் சொன்னாலும் கூட தென்னாப்பிரிக்க வைர சுரங்க முதலாளியின் மகன் என்பதையும் முதலீடு அங்கே இருந்தும் வந்தது என்பதையும் நாம் கடந்து சென்றுவிட முடியாது. தான் உருவாக்கிய அந்த Zip2 நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டார். .இப்படி பல இடங்களில் முன்னுக்கு பின் முரணாக சுய புராணங்களை நமது பாரத பிரதமரை போன்றே பேசிக்கொண்டு இருக்கும் நபர்.

பல ஆண்டுகளாக, மஸ்க் தன்னை ஒரு "பேச்சு சுதந்திரத்திற்காக போராடும் போராளி" என்று கூறி வருகிறார். கடந்த கால நிலைப்பாடுகள் நீதிமன்ற வழக்குகள், அவரது ட்வீட்கள் அவரது நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர் விரோத போக்குகள் மற்றும் அவரது வணிக நடைமுறைகள் ஆகியவற்றை ஆராயும்போது அவர் அடிப்படை உரிமைகளுக்கே கூட எதிரானவர் என்று புரியமுடியும்.

பங்கு பரிவர்த்தனை மோசடி

எரோல் மஸ்க்கின் Tesla எனும் நிறுவனமானது பங்கு பரிவர்த்தனைகளில் மோசடி செய்ததாக அமெரிக்க பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் (SEC) வழக்கு தொடர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில், தான் இப்போது இருக்கும் அரசை விமர்சிப்பதால் அரசாங்கம் தனது நிறுவனங்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக சொல்லி இருக்கிறார். அதாவது தன்னை யாரும் கேள்வி கேட்டுவிட கூடாது என்றும் தனக்கு உரிய பேச்சு & எழுத்து உரிமை இருப்பதாகவும் அடிக்கடி சொல்லி வருகிறார்.

ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம்

இவரது நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை தனது விருப்பம் போல பணிநீக்கம் செய்வது, பணிநீக்கம் செய்த பின்னர் வேலையை விட்டு செல்லும் ஊழியர்கள் நிறுவனத்தைப் பற்றி பொது வெளியில் எதிர்மறையான கருத்துக்களைப் பகிரக்கூடாது என்றும் ஊழியர்கள் தங்களை நிறுவனம் தவறாக நடத்தியதாகவோ, நிறுவனத்தைப் பற்றி ஊடகங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை கூறமாட்டோம் என்று பணி நீக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் தான் உரிய பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை டெஸ்லா கொண்டுள்ளது என்பது குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இப்படி அடிப்படை உரிமைகளை கூட மறுக்கும் அளவுக்கு தான் இவரின் நிறுவன வழக்கங்கள்.

இன பாகுபாடு 

சிஎன்பிசி எனும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி எலோன் மஸ்க்கின் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிச்சூழல் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் கிடைக்கபெற்று கலிபோர்னியா தொழிலாளர் நலத்துறை California’s Department of Fair Employment and Housing (DFEH) மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை செய்தத்தில் கீழிக்கண்ட உண்மைகளை கண்டறிந்தது:

  • பல ஆண்டுகளாக நீடித்து வரும் கறுப்பினத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவெறித் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு
  • கறுப்பினத் தொழிலாளர்களை நிறுவனத்தின் கீழ்மட்டத்தில் வைத்திருப்பது.
  • புகார் செய்த கறுப்பின ஊழியர்களை பழிவாங்குதல்,
  • பொது இடங்களில் கறுப்பின ஊழியர்களுக்கு என்று தனி வரிசை.
  • இனரீதியான அவதூறுகள் ஸ்வஸ்திக் எனும் ஹிட்லரின் சின்னம் உள்ளிட்ட பிற வெறுப்புச் சின்னங்கள் பொதுவான பகுதிகளில் பொறிக்கப்படுதல்.

முகாந்திரத்தின் அடிப்படையில் California’s Department of Fair Employment and Housing (DFEH) தற்போது டெஸ்லா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது, அதனை எதிர்த்து தான் இந்த அரசாங்கம் தனக்கு எதிராக பொய் வழக்குக்களை போடுவதாக எலோன் மஸ்க் கூறி வருகிறார்.

நீதிமன்ற அபராதம்

கடந்த ஆண்டு கலிபோர்னியா நடுவர் குழு டெஸ்லாவுக்கு, ஓவன் டயஸ் என்ற கறுப்பின முன்னாள் ஊழியருக்கு, அவர் பணியில் சந்தித்த இனவெறி பாகுபாட்டிற்கும், அதை கண்டுகொள்ளாத நிறுவனத்திற்கு 137 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இனவெறியை தூண்டுதல்


பணியிடத்தில் இனவெறி பாகுபாடு தொடர்பாக தொடர்பான மற்றொரு வழக்கில், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைக்கு மஸ்க் அனுப்பியதாகக் கூறப்படும் இன வெறி தூண்டுதலான மின்னஞ்சல் வெளிவந்தது,

வேலையில் இருக்கும் கருப்பர்கள் "தடிமனான தோலை" கொண்டிருக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார்,

ஊடக கட்டுப்பாடு 

மஸ்க் பெரும்பாலான ஊடகங்களிடம் NDA (NON DISCLOSURE AGREEMENT) களில் கையெழுத்திட்ட பின்னர் தான் பேட்டி மற்றும் அறிக்கைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அதாவது இந்த NDA மூலம் இவரைப்பற்றிய செய்திகளை கட்டுரை வரைவுகளை நிறுவனத்திடம் காட்டி வெளியிடுவதற்கு முன் ஒப்புதல் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பத்திரிக்கைகளுக்கே கருத்து சுதந்திரம் கொடுக்க மறுப்பவர் தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டு வருகிறார்.

துவேஷ பிரச்சாரம்

அமெரிக்காவில், COVID-19 தொற்றுநோய் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தது. மார்ச் 2020 இல், அவர் தனது 8 கோடி (80 மில்லியன்)க்கும் அதிகமான பின்தொடர்பவர்களுக்கு கொரோனா வைரஸ் என்பது ஏமாற்றுவேலை என்றும் அடுத்த ஆண்டு, அவர் தடுப்பூசிகளின் செயல்திறனைக் "எதிர்மறையான எதிர்வினைகளை" உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

கோவிட் வழக்குகள்

பெருந்தோற்று காலகட்டத்தில் அவரது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்து இருந்தபோதிலும் ஊழியர்களை கட்டாயமான முறையில் பணிகளை செய்ய வைத்தார். தேவையில்லாமல் அங்கிருந்த 10,000 தொழிலாளர்களை பாதிப்படையச் செய்தது. தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, ஆலைக்கு எதிராக 450 கோவிட்-19 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன .

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது, தொழிலாளர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாதது, தொழிற்சங்க எதிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் (UAW) மற்றும் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (NLRB) மஸ்க் தொழிலாளர்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு இவர் நிறுவனத்தின் பல மீறல்களை மேற்கோள் காட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மஸ்க்கின் பேச்சு சுதந்திரம் என்பது அவரது தனி நபர் சார்ந்ததாகவே இருக்கிறது.

அரசியல் நிலைப்பாடு

எலோன் மஸ்க் தான் இடதும் அல்ல வலதும் அல்ல.. நடுநிலை. மையம் என்று பலமுறை சொல்லி வந்தாலும் கூட இவரது நிலைப்பாடு முதலாளித்துவ வலதுசாரியாகவே காட்டுகிறார்.

பொலிவியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தபோது அவர் ட்வீட் செய்தார் , “நாங்கள் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்.” என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் அமெரிக்க ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி "தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுவிட்டது" என்று கூறி இருக்கிறார்.

அமெரிக்க குடியுரிமை விதியின் அடிப்படையில் இவரால் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் கூட தனக்கு வேண்டப்பட்டவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாளித்துவ திட்டங்களை அமல் படுத்த TWITTER மூலம் முயலுகிறார்..

TWITTER

இந்த TWITTER எனும் சமூக வலைத்தளம் இனி முதலாளிகளின் கைகளில் குறிப்பாக பொய் செய்திகளை பரப்புவோர் கைகளில் செல்லப்போகிறது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த முதலாளிகளுக்கு சாதகமான விடயங்களை இவர்கள் இன்னும் வேகமாக இன்னும் பல போலி கணக்குகள் மூலம் பரப்புவார்கள்.

ஏற்கனவே பிகாசுஸ் மூலம் ஒட்டுக்கேட்பும், FACEBOOK மூலம் பொய் செய்திகளை பரப்பியவர்கள் புதிதாக TWITTER ஐ விலைக்கு வாங்கி அதில் இருக்கும் வாடிக்கையாளர்களை வலதுசாரி மனநிலைக்கு மாற்றுவது தான் இவரது நோக்கம். இதை உறுதி செய்யும் நோக்கில் தான் மோடி & மஸ்க் சந்திப்புக்கள் நடந்திருக்கிறது. இந்தியாவிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பாஜக துவக்கி விட்டது. போலியாக கட்டமைக்கப்படும் ஜனநாயக விரோத சக்திகளை அடையாளம் கண்டு முறியடிப்போம்.

ஆர்.எம்.பாபு