ஆறு காட்டுத் துறை என்ற நாவல் சு.தமிழ்ச்செல்வி என்பாரால் எழுதப்பட்டு 2013 ஆம் ஆண்டு முதற் பதிப்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் நூலாகும். 311 பக்கங்களோடும் நல்ல முகப்பு அட்டையோடும் பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தால் தரமான, எழுத்துப் பிழைகளற்ற, அச்சில் வெளிவந்திருக்கும் அருமையான நூல் இது.

திருவாரூர் மாவட்டம் கற்பக நாதர் குளம் என்னும் சிற்றூரில் பிறந்த இந்த நாவலின் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி முதுகலைத் தமிழ் பயின்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை ஆகியவை இவர் எழுதிய புதினங்களாகும். சாமுண்டி என்னும் சிறுகதை நூலையும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான மாணிக்கம் தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்றுள்ளது. இவரது கற்றாழை நாவலுக்கு 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த நாவலுக்கான விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

சு.தமிழ்ச்செல்வியின் முன்னுரைக்குள் நுழைகிறோம். "எழுதுவதற்கு சாதகமான காரணிகள் எதுவுமில்லாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்த எனக்கு வாசிப்பு வேட்கையின் மூலமே இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டது. விளையாட்டாகத் தொடங்கிய எனது படைப்பு முயற்சியில் நாவல் கட்டுமானம், நாவல் அழகியல் போன்றவை என் உள்ளுணர்வின் வழிகாட்டுதலாலேயே அமைந்திருந்தது. எனது பிறந்த மண்ணிற்கு அருகிலுள்ள கடலோர கிராமமான ஆறு காட்டுத்துறையின் நெகிழ்ச்சியும் தார்மீகப் பண்புகளும் நிறைந்த மனிதர்கள் குறித்த புதினம் இது” என்று குறிப்பிடுகிறார்.

aarukaattu thuraiநாவலின் பின் அட்டையில், “இந்த நாவல், தமிழ்ப் பெரு நிலத்தின் சிறு நிலக் கூறுகளுள் ஒன்றான நெய்தல் புலத்தினுடைய மீன்பிடி மக்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கடற்காற்றின் குளிர்ச்சியோடு நம் முன் விரிக்கிறது. எளிமையான மீனவப் பெண் ஒருத்தியை, அனுபவத்தில் தகிக்கும் வெம்மையாலும் தனது ஆளுமையாலும் வாசக நெஞ்சில் நீங்கா இடம் பெறச் செய்து விடுகிறார் சு.தமிழ்ச்செல்வி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மிகையல்ல.

மொத்தம் 32 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போதும் அந்த அத்தியாயத்தின் கதை நகர்த்தலுக்கு ஏதுவாக அகநானூற்றில் நெய்தல் திணைப் பாடல்களில் பொருந்தி வரும் வரிகளை தலைப்பில் தொடுத்துத் தொடங்குகிறார் ஆசிரியர்.

"திக்குத் திசை தெரியாத நீர்ப்பரப்பு எங்கும் ஒரே அமைதியாய் இருந்தது. ஒன்றன் பின் ஒன்றாகத் தட்டித் தட்டிச் செல்லும் சிறு அலைகள். மின்னல் வெட்டோ இடி முழக்க அறிகுறியோ இன்றி இருண்டு திரண்டு வரும் வானம் காற்றின் அலைக்கழிப்பு எதுவுமின்றி சுருள் சுருளாய் கவிந்து வரும் மழை மேகம். ஆழ்கடலின் நிரந்தரமற்ற இச்சிறு பொழுது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து விடாத வண்ணம் ஒரே இடத்தில் மிதந்து கொண்டிருந்தது” என்று நாவல் தொடங்குகிற போதும்,

"நாட்டு இங்கன நிறுத்தியிருந்தம். இங்குன இருந்து பார்த்தா எல்லாப் பக்கமும் ஒண்ணுமேரியே தான் தெரியுது” என்றான் சேகர்.”அணியத்த திருப்பாம நிக்கிற லெக்குலயே போயிக்கிட்டிருந்த முன்ன கர புடிச்சிறலாம்” என்றார் சுப்பு. பாகக் கயிற்றை இறக்கிப் பார்த்துக் கொண்டே வந்தார் சுப்பு. “ஏலேய் பதினாரு பாவந்தாண்டாலே இருக்கு; பதிஞ்சிருவமுண்டா”

மரக்கணத்தைப் பதிய விட்டு உள்ளிறங்கி குறுக்கு மரத்திற்கு ஒருவராய் உட்கார்ந்து கொண்டார்கள். ஊ ஊ என்ற பேரிரைச்சலுடன் சுழன்றடித்தது காற்று. காற்றின் போக்கையும் வேகத்தையும் கண்டிக்கும் விதமாய் உயர்ந்தெழுந்தன அலைகள். ஆழ்கடலும் புரண்டு எழுந்து மேலே வந்து தாண்டவமாடியது. அணியமும் அட்டியும் மேலும் கீழுமாய் குத்த வைப்பது போல் ராட்டினம் ஆடியது”

என்று முதல் அத்தியாயத்தின் இடையில் எழுதுகிற போதும் எழுத்தாளரின் பேனாவே தேர்ந்த திரைப்படக் கலைஞரின் காமிராவைப் போல் நாவலைத் தொடங்கித் தொடர்கிறது.

தமிழர் கண்ட ஐந்நில வாழ்க்கையில் எழுத்தாகும் போது தகழியின் “செம்மீன்” தொடங்கித் தொடரும் நாவல்கள் அனைத்திலும் எப்போதும் சுவை கூட்டும் ஆற்றலை இயல்பிலேயே கொண்டிருப்பது நெய்தல் வாழ்க்கை ஆகும். நெய்தல் நிலத்திற்கே உரிய பண் செவ்வழிப் பண். இது இப்போது நடப்பில் வழங்கும் சோக ராகமான சுப பந்துவராளியின் சாயலில் அல்லது ஹிந்துஸ்தானி இசையின் லலித் சாயலில் இரு மத்திமைத் தோடியாக ஒலிக்கும் இராகம். ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் கடல் நாகைக் காரோணத் திருப்பதிகத்தை இந்த செவ்வழிப்பண்ணில் பாடியிருக்கிறார். இந்தப் பண் சோக ரசத்தைச் சுவையாக வழங்கும் பண் ஆகும். இந்த நாவலைப் படிக்கும் போது லலித் ராகத்தில் சௌரேஷியா வாசித்துள்ள புல்லாங்குழல் இசையைக் காதில் கேட்பதைப் போன்ற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. நெய்தல் களத் தேர்வே நாவலாசிரியருக்கு இந்த நாவலின் பாதி வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

சவரிமுத்துவுக்கு சொந்த ஊர் திருச்செந்தூர். அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியத்தின் மீது ஆசைப்பட்டு இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடி வந்து விட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே இடம் வேளாங்கண்ணி தான். ஆறு காட்டுத்துறை­யிலிருந்து வந்த சிங்கார வேலு நாட்டார் குடும்பம் அவர்களுக்கு அடைக்கலம் தருகிறது. அன்றாடப் பாட்டுக்கு உழைக்கும் தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்; சாமுவேல்; அருள்தாஸ். கருவாட்டு மூட்டையை உப்பு மூட்டை வண்டியின் மீது ஏற்றிச் சென்ற தாய் ஆரோக்கிய மேரி தூக்கக் கலக்கத்தில் வண்டியிலிருந்து தலைகுத்த தரையில் விழுந்து இறந்து போனாள்.

பெண்டாட்டி செத்த எட்டாம் நாள் “நெழலுக்கு சோறூட்டுற வேலை தான் இந்த துக்கம் காக்குற வேலையெல்லாம். பாவம். பொழப்புக் கெடுதுன்னு கெஞ்சுறாரு. நாலு குடும்பத்து வயித்துப் பாடு கெடுதுல்ல. பாத்துக்கிட்டு சும்மாருந்தா அப்புறம் என்ன முழுக்காளி?" என்று தன்னை மறித்த சுப்புவுக்கு பதில் சொல்லி விட்டு முழுக்குக் கிளம்பினான் அப்பன் சவரிமுத்து. ஆழ்கடலில் எப்போதோ உடைந்து புதைந்து கிடந்தது ஒரு கப்பலின் பகுதி. அதன் கம்பிகளிலும் வளைவான மரங்களிலும் வாகாய் மாட்டிக் கொண்ட மடியை சேதமில்லாமல் எடுத்து விட்டுத்” திருப்தியில் உடம்பைச் சுழற்றி மீண்டும் ஆழ்கடலில் இருந்து மேலே வர எத்தனித்த அந்தக் கணத்தில் பெரிய வேளா ஒன்றின் முன் பகுதியில் முன் நோக்கி நீண்டிருந்த கத்தி போன்ற முள் சவரிமுத்துவின் நெஞ்சில் குத்தி உடம்பைக் கிழித்தது” என்று தொடர்கிறது நாவல்.

இந்த முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில் தொடுத்த “எல்லுத் தொழிலின் மடுத்த வல்வினைப் பரதவர் கூர் உளிக் கடுவிசை மாட்டலின்" - நக்கீரர் பாடிய 340 ஆம் பாட்டின் பொருளாவது “பகலில் மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய தொழிலையுடைய நெய்தல்நில மக்கள் மிகுந்த விசையுடன் எறிந்த கூர்மையான உளி மாட்டிக்கொள்வதால்” என்பதாம். சவரிமுத்துவுக்கு ஆழ்கடலில் காத்திருந்தது அந்தக் கூர் உளி தானோ?

பெற்றோரை இழந்த சாமுவேலின் துயரத்­திலிருந்தும் “நான் இந்தக் கடலுல கெடக்குற எல்லா வேளாவையும் வேட்டையாடணும். அதோட முள்ள வெட்டி மலையாள வீரனுக்கு முன்னாடி மலமாதிரிக் குவிக்கணும்” என்று பின்னாளில் நாவல் முழுதும் தொடரப் போகும் அவனின் பழி வாங்கும் உணர்விலிருந்தும் தொடங்கி கதாபாத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு அறிமுகமாகின்றன.

கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை

தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு

முன்றில் தாழை தூங்கும்

தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே

என்று சென்ற அகப்பாட்டின் விட்ட இடத்திலிருந்து அடுத்த அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

சிங்காரவேலு நாட்டார் கடலையே கடவுளாக வேண்டிப் பெற்ற மகள் சமுத்திரவல்லி. ஆண்டு தோறும் மாசி மகத்தன்று நடைபெறும் காமதகன நாடகத்தில் சிங்கார வேலு நாட்டாரின் மன்மத வேடத்தில் கிராமமே இலயித்திருக்க மாமன் மகள் தங்கலெட்சுமியைச் சாட்சியாக்கி நிறுத்தி விட்டு சாமுவேலுடன் தனிமையில் நாட்டாரின் மகள் சமுத்திர வல்லி கட்டுமரத்தில் சந்திக்கிறாள்.

சிங்காரவேலு நாட்டாரின் முயற்சியில் ஆறுகாட்டுத்துறைக்கு விசைப்படகுகள் வந்து சேர்கின்றன. ஆறுகாட்டுத்துறை என்ற ஊரின் பெயருக்குக் காரணமான ஆறு பாகத்தவருக்கும் சுமுகமாக முதன் முறையாய் விசைப்படகுகள் கடலுக்குள் செல்கின்றன.

உழைக்க அசராத கிழவி தனுசம்மா, ஊருக்காக தான் சிறைவாசம் ஏற்ற முப்பாட்டன் இராமு படையாச்சி, வேதாரண்யம் பள்ளித்தோப்பிலிருந்து மெல்ல மெல்ல ஆறு காட்டுத்துறைக்குப் புலம் பெயர்ந்த கதை, அடப்பங்கொடியைப் போட்டு மீன் பிடித்தது. சணல் வலையில் மீன் பிடித்தது, கந்தப்ப படையாச்சி காலத்தில் ஆறுகாட்டுத்துறையில் குடியிருந்த 54 குடும்பங்களுக்கும் ஆதீனம் கொடுத்த கூட்டுப்பட்டா, கந்தப் படையாச்சி செய்து கொண்ட காதல் திருமணம் என கதைகளையும் மாந்தர்களையும் சொல்லி நகர்கிறது நாவல்.

ஏழு, எட்டாம் அத்தியாயங்களில் நாவலின் பிரதான நீரோட்டத்தின் முடிச்சுக்குள் வந்து நிற்கிறது. சாமுவேல் சமுத்திரவல்லியின் காதலை அறிந்து கொண்ட சேதுபதி தன் தந்தை சிங்காரவேலு நாட்டார் கவனத்திற்கு அதைக் கொண்டு வருகிறான். சித்திரை மாதம் மீன்பிடிக் காலம் அல்ல என்பதால் ஆறு காட்டுத்துறை படகுகள் மல்லிப்பட்டினத்திற்கு நிலை நிறுத்தப்படுகின்றன. சாமுவேல் மல்லிப்பட்டினத்தில் இருக்கும் போது, நாட்டார் தன் மனைவி பூங்காவனத்திடம் மகளின் கூடாக் காதலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒட்டுக் கேட்ட சமுத்திரவல்லி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் காளியம்மன் கோவிலில் அடைக்கலமாகிறாள்.

சாமுவேலின் தம்பி அருள்தாசுடனான சமுத்திரவல்லியின் முதல் சந்திப்பு, சாமுவேலின் மனத் தவிப்பு, சுப்புவின் யோசனை, மொட்டையம்மனைக் காப்பாற்றிய காளியம்மனின் சக்தி, சாமியாடி, காளியம்மன் கோயிலில் அடைக்கலமாகும் சமுத்திரவல்லி, தங்கலெட்சுமியின் பரிதவிப்பு, சேதுபதிக்கும் தங்கலெட்சுமிக்குமான கலியாணம், சாமுவேலை அதற்கு அழைக்காதது, சமுத்திரவல்லியை சாமுவேல் வீட்டுக்கு அழைத்து வந்தது, சுப்பு கட்டுமரம் வாங்கியது, ஊர்ப் புறக்கணிப்பால் சாமுவேலிடம் ஏற்பட்ட குண மாற்றம், வேளா வேட்டைக்குச் செல்லும் ஆத்திரமும் ஆவேசமும், சமுத்திரவல்லியை பெண் குழந்தை பெற்றவுடன் தனியாக விட்டு விட்டுச் சென்றது, என்று நாவலின் பக்கங்கள் விறு விறு என்று சமுத்திரத்தின் மையத்தில் சாமுவேலைப் போல நம்மை நீந்த வைக்கின்றன. சாமுவேல் கட்டுமரம் சுக்கு நூறாகி கடலில் காணாமல் போனான். நாட்டாரின் மருமகள் தங்கலெட்சுமியின் தவிப்பு இப்போது சமுத்திரவல்லியை தன் பிறந்த வீட்டு சொந்தங்களோடு இணைத்து வைத்தது போலும் நாவலாசிரியர் நம்மை நாவலுக்குள் மீண்டும் தைத்து வைக்கிறார்.

காணாமல் போன சாமுவேலைக் குறித்த கவலையிலிருந்த நாட்டாருக்குள் ஆறுகாட்டுத்துறை சனங்களுக்கு கண் கண்ட தெய்வமான மலையாள வீரனின் “ஓம் மருமவன் உசுரோட இருக்கான்” என்று வாக்கு நம்பிக்கையை வார்த்தது. தந்தையின் வீட்டிலிருந்து எவ்வளவோ சொல்லியும் கேட்காதவளாய் சாமுவேலின் வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள் சமுத்திரவல்லி. தஞ்சாவூரில் படிக்கும் சாமுவேலின் தம்பி அருள்தாசின் படிப்புக்கு காசு அனுப்ப வேண்டுமே? காட்டுக்குள் விறகெடுக்கப் போனாள் சமுத்திர வல்லி. தொடர்கிறது அவளது கருவாட்டுக் கூடை யாவாரம்.

பேத்தி பூவழகி நாட்டார் வீட்டிலேயே வளர்கிறாள். இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்து அருள்தாசு ஊருக்கு வருகிறான். குழந்தை பிறந்ததை ஏன் சொல்லவில்லை எனக் கேட்கிறான். சுப்பு அவனுக்கு விஷயங்களைக் கூறுகிறார். அருள் தாசு தானும் கடலுக்கு வேலைக்கு வருகிறேன் என்கிறான். அவனை மீண்டும் கல்லூரிக்கு அனுப்புகிறாள் சமுத்திரவல்லி. சர்வே டிபார்ட்மெண்டில் அரசு வேலையும் கிடைத்து விடுகிறது அவனுக்கு. அவன் நண்பன் மூலம் காணாமல் போன அண்ணன் சாமுவேலால் ஆதரவற்று நிற்கும் அண்ணியை தானே மறுமணம் முடிக்க எண்ணுகிறான் அருள் தாசு.

கதை என்னமோ இதிகாசக் கதை தான். துந்துபி என்னும் அரக்கனைக் கொல்ல குகைக்குள் புகுந்து மீள வாராத வாலியின் மனைவியையும் அரசையும் தனதாக்கிக் கொண்ட சுக்ரீவன்; பின் மீண்டு வந்த வாலியிடம் அடி வாங்கி மதங்கரின் மலைக்குள் அடைக்கலம் தேடி ஓடிய சுக்ரீவன் என்று இதிகாசப் பழசு தான். ஒரு வகையில் எல்லாக் கதைகளுமே ஏற்கனவே சொல்லப்பட்டவை தான். உணவு அல்ல இங்கு பிரதானம். சமையலும் விளம்பலுமே நாக்கில் சுவை நரம்புகளைத் தட்டி எழுப்புபவை.

குஞ்சம்மாக் கெழவி, கோணன், கடல் கக்கி விடும் சக்கியில் வந்த பாட்டிலைக் குடித்து உயிர் தொலைத்த தனுசம்மாவின் புருஷன், முன் பணம் கொடுத்து மீனவர்களைச் சுரண்டும் கம்பெனிகளைத் தடுக்க குத்தகைதாரராக போராடி எண்ணெய் கிணறு கொண்டு வந்தவராக, ஆறுகாட்டுத்துறை மீனவர் நலச்சங்கம் கண்டவராக நாட்டார், அழகேசன், குழந்தை பூவழகி, மீன்வளத்துறைப் பொறியாளர் முத்துச்சாமி என்று யதார்த்தப் பிசகல் இல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்தையும் படைப்பதில் தேர்ந்த கவனம் செலுத்தியிருக்கிறார் ஆசிரியை:

 ‘நம்ம கெணத்துக்கு மேல தொங்குறம். கயத்தோட பலத்த மட்டும் பாத்துக்கிட்டிருக்க முடியுமா? கெணத்தோட ஆழத்தப் பத்தியும் யோசிச்சுப் பாக்கணுமுல்ல. அப்பத்தான தப்பிக்க முடியும்” - சுப்பு

“எனக்கும் யாம் புள்ளைக்கும்கூட நீங்க சம்பாரிச்சிக் கொடுக்கலாம். ஆனா அருள்தாசுக்கும் சேத்து ஒங்கள எப்புடி நான் செரமப்படுத்துறது? அந்தப் புள்ளய நானும் கை விட்டுட்டா அதுக்கு யாரு இருக்குறா?"- சமுத்திரவல்லி

“அப்பன் வீடு அரண்மனையா இருந்தும்கூட யாம் பொண்ணு புகுந்த வூட்டுக்கு அவச்சொல்ல தேடிறக்கூடாதுன்னு கருவாட்டுக்கூடை தூக்குதுடி. ஆனானப்பட்ட ஆம்பளப்புள்ளவொளே பெத்த புள்ளைவொள படிக்க வைக்க மலைக்கிறானுவொ. ஆம்புள தொணயில்லாத பொம்பளப்புள்ள நம்ம, நம்மளால எப்புடி படிக்க வைக்க முடியுமுன்னு நெனக்காம கொழுந்தன படிக்க வைக்கிறன்னு சொல்லுதுடி யாம் பொண்ணு. இப்படியாப்பட்ட யாம் பொண்ணு கூட வாழக் குடுத்து வைக்கல அந்தப் போக்காளிக்கு” - நாட்டார்

"மீனோ மீனு” சமுத்திரவல்லியின் குரல் தேத்தாங்குடி எங்கும் எதிரொலித்தது. தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள், முந்திரி மரங்கள், சவுக்கு, தைல மரங்கள், அவற்றில் வசிக்கும் பறவைகள், அணில் பிள்ளை, ஆங்காங்கே கிடக்கும் குளம் குட்டைகள், அவற்றில் நீந்தும் மீன்கள் எல்லாவற்றிற்கும் சமுத்திரவல்லியின் குரல் பழக்கப்பட்டிருந்தது.

"என்ன மாமா, நீங்களும் புரியாமப் பேசுறிய? பாவம் அண்ணி. நாட்டாரு மவளா செல்லமா வளந்துட்டு இப்ப எனக்காவ ஒரு வருசம் கருவாட்டுக் கூட தூக்குனத்த நெனச்சாலே நெஞ்சு தெறிக்கிது. இதுக்கு மேலயும் நீங்க செரமப்பட்டு பணம் அனுப்புங்க. நான் போயி பெருசா படிக்கிறன்னு சொல்லுறது ஞாயமா மாமா? அப்புறம் நான் என்ன மனுசன்?" - அருள் தாசு

"ஒரு வருசம் நான் தலயால சொமந்துதான் ஒனக்கு பணம் அனுப்புனன். அதெல்லாம் பாழாவணூமா? படிப்ப நீ எடயில நெறுத்தறுங்குறியே, நான் பட்ட செருமயெல்லாம் பயனத்துப் போவணுமா/ ஒனக்கு நல்லது செய்ய நெனச்ச எனக்கு நீ காட்டுற மரியாத இது தானா?" - சமுத்திரவல்லி

*********

"பொண்ணுவ தான தொணய தேடிக்கிர்றது தப்புங்கிறியா"

“அப்படிச் சொல்லல"

"பெறவு"

"என்னமேரி நாட்டாரு வீட்டுல பொறந்த பொண்ணு இப்புடி செஞ்சுருக்கக்கூடாது"

"நாட்டாரூட்டு பொண்ணு மட்டும் மண்ண அள்ளித்தின்னு வளரணமுன்னு சொல்லுறியா"

"அப்பறம் யாண்டி என்னோட வாழ்க்க மட்டும் இப்புடி ஆயிட்டு"

"நீ தேடிக்கிட்ட தொண அப்புடி"

"சாமுவேல கெட்டவங்கிறியா?"

"பின்ன நல்லவன்னு சொல்லச் சொல்லுறியா"

"நல்லவரு தான் எனக்குத் தெரிஞ்சி சாமுவேலு எவ்வளவோ நல்ல மனுசன்தான். எடயில புத்தி மாறுனத்தாலதான் பெசகாயிட்டு"

"புத்தி மாறலடி சமுத்திரவல்லி .சாமுவேலோட புத்தியே அதுதான். நல்லவனா இருந்தா புள்ள பெத்த ஒன்ன அம்போன்னு போட்டுட்டு ஓடுமா"

"அது பொண்ணா பொறந்துட்டுதேங்குற வெறுப்புல செஞ்சுது"

"பொண்ணா பொறந்தான்ன? பொண்ண வெறுக்குறவன் எப்புடி நல்லவனா இருக்க முடியும்?"

*******

"எந்த வேலய நம்ம காச சேத்துவச்சிகிட்டு செஞ்சிருக்குறம் சொல்லுங்க. ஓலய ஊத்தி அடுப்புல போட்டுட்டு பைய எடுத்துக்கிட்டு கடலுக்கு ஓடுன குடும்பந்தான் நம்ம குடும்பமெல்லாம். எந்த நம்பிக்கையில் ஓடுனம். கடல் தாயி குடுப்பா. ஏமாத்தமாட்டாங்குற நம்பிக்கையிலதான ஓடுனம். இப்பம் மட்டும் நம்மள அவ ஏமாத்திடுவாளா? நமக்கு என்ன வேணுங்கிறது அவளுக்குத் தெரியும். ராவுக்கு வேணுங்குறத்த பகல்ல குடுப்பா. பகலுக்கு வேணுங்குறத்த ராவுல குடுப்பா." - சிங்கார வேலு நாட்டார்

"பெத்தவங்க கண்ணு தான் பொல்லாத கண்ணும்பாவொ. புள்ளய இனிமே அப்புடிப் பாக்காதே" - தங்கலெட்சுமி

சாமுவேலும் அருள்தாசும் ஒத்துப் போய் ஒரே வீட்டில் இருந்த தன் பிள்ளைகள் இரண்டும் தன்னுடனேயே இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? இருவரும் அண்ணன் தம்பி தானே. கட்டிக் கொண்டவளுக்காக இவள் ஏன் பகையாளியாக வேண்டும்? இருவரையும் அனுசரித்துப் போவது எனக்கே ஒரு பெரிய விஷயமாகத் தெரியாத போது இவர்கள் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? இரண்டு பெண்டாட்டிகளை கட்டியிருக்கும் மூணாம் பாகத்து பூராசாமி வீட்டிலும் ஐந்தாம் பாகத்து முத்தப்பன் வீட்டிலும் இதுபோல் தான் நடக்கிறதா? - சமுத்திரவல்லியின் உள் மனம்.

நதிகளை பெண் பாலாகவும் சமுத்திரத்தை எப்போதும் ஆண் பாலாகவும் வர்ணிக்கும் இயல்பில் இருந்து மாறி சமுத்திரத்தைத் தாயாக பெண் பாலாக மாற்றிய ஆசிரியர் பாராட்டிற்குரியவர். அருள் தாசின் பிள்ளையின் பெயர் வேல் முருகன் என்று சூட்டியதும் பாராட்டிற்கு உரியது. ஆனாலும் பழி வாங்கும் உணர்ச்சியுடைய பாத்திரத்தின் பெயர் தமிழ் சினிமாக்களின் மரபுப்படி கிறிஸ்தவப் பெயர் சூட்டிக் கொண்டிருப்பதும், பக்கம் 79 இல் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைச் சித்தரிக்கும் விதமும் சற்றே நெருடலானவை.

மற்றபடி பாத்திரப் படைப்புகளாலும், எழுதப்பட்ட கூர்மையான வசனங்களாலும், ஆறுகாட்டுத்துறைக்குள் நம்மை இழுத்து அழைத்து வந்து விடுகிறார் நாவலாசிரியர். பாராட்டிற்குரிய நாவல். கடல் காற்றின் உப்புசம் மேனியில் படிய நாவலைப் படித்துப் பாருங்களேன்.

நாவலாசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் நம் நல் வாழ்த்துக்கள்.

- சண்முக.ஞானசம்பந்தன், இலக்கியத் திறனாய்வாளர்; மதுரை அகில இந்திய வானொலியின் ஓய்வுபெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

Pin It