உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் கவிதை உண்டு, கவிதை இலக்கியக் கலைகளுள் மிகச் சிறந்ததாய்ப் போற்றப்படுவதாகும். கவிதைக்கு அடிப்படையிலும் இருப்பது கற்பனை. கற்பனை நிரம்பி முழுமையாகும் போது அதனை உருவமாக வெளிக்காட்ட மொழி துணை செய்கிறது. மொழியும் கற்பனையும் இணைந்து அழகான சித்திரமொன்றைத் தீட்டுகின்றன. அந்தச் சித்திரத்திற்குத்தான் பா, பாடல், கவி, கவிதை என்றெல்லாம் பெயர் சூட்டப் படுகிறது. உயர்ந்த உணர்ச்சியின் உயர்ந்த வெளிப் பாடு கவிதை என்று ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ் ஒர்த் குறிப்பிடுகின்றார். உள்ளத்து உள்ளது கவிதை என்று தமிழ்க்கவி ஒருவர் பாடியிருக்கிறார். ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்கிறார் பாரதிதாசன். அந்த வகையில் முனைவர் சே.இளமதி எழுதிய உறங்க மறந்த நினைவுகள் என்னும் கவிதை தொகுப்பு நூல் பல தலைப்புகளை உள்ளடக்கிய நிலையில் அமைந்துள்ளது.

ilamathy bookகவிதைக்கு உடலும் உயிரும் உண்டு. உடல் கவிதையின் வடிவம். உயிர் அதன் உள்ளடக்கம். இவை இரண்டும் பொருத்தமுற அமையும்போது அது தரமான கவிதை என்று பெயர் பெறுகிறது. உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது அன்பு. அந்த அன்பின் அடையாளமாகத் திகழ்பவள் தாய். அத்தாயின் அன்பினைப் பற்றிக் கவிஞர் சே.இளமதி குறிப்பிடுகையில்,

ஆசையாய் இருக்கிறது மறுபடியும் / உன் கருவறையில் குடியிருக்க / இன்னும் பத்துமாதம் / கனத்த இதயத்தோடு / சோம்பும் போது / உன் கனிவான வார்த்தைகள் / ஊற்றாய்ப் பொழியுமே / உயிரோடு கலக்குமே... / குஞ்சுகளுடன் திரியும் / கோழி கூட / உன்னைத் தானே / உணர வைக்கிறது.     - (பக்கம் - 20, 22)

என்னும் வரிகளில் தாயின் அன்பினை ஆழ் மனதில் ஆணி அடித்ததுபோல் மேலும் பதிய வைக்கிறார்.

மனிதன் என்றாலே ஆசைகள் இருக்கத்தான் செய்யும். கவிஞரும் தன் ஆசைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறார்.

அவள் கன்னக்குழியில் தடுக்கி / விழ ஆசை / ஆயுளுக்கும் அதில் மட்டுமே / கிடந்து நீந்திவிட ஆசை / மின்னலைப் பிடுங்கி / மழைத்துளி சேர்த்துக் / கோர்த்தெடுக்க ஆசை / அவள் மணிக்கழுத்தில் அதை / மாட்டிவிட ஆசை / - (பக்கம் - 24 - 25)

செந்தமிழ் தேனைப் பருகி / உருகிவிட ஆசை / தாய்மொழியை வாசிக்கும்போது / எமன் என் உயிரை நேசிக்க ஆசை.

இக்கவிதை வரிகளில் இவருக்கு இருக்கக்கூடிய தாய்மொழிப் பற்றைப் பறைசாற்றியிருப்பதை அறிய முடிகிறது.

குறிப்பிட்ட பருவவயது வந்தவுடன் ஓசையின்றி ஆசையாய் உள்ளத்தில் நுழைவது காதல்... காதல் மட்டும் தான். இவரின் கற்பனையிலும் காதல் விரிகிறது.

மாயக்காட்டில் / மச்சக்கன்னியாய் நான் / கண்டுபிடித்து விடு / காதல் கண்ணாமூச்சியால் / ஆயுள் கைதியாய் நான் / உன் அன்புச்சிறையில் / விடுதலை பெற விருப்பமில்லை / இரட்டை ஆயுள் தண்டனை / வேண்டுமானாலும் தா... / நீ பின்னிய பாசவலையில் / பரிதவிக்கும் சிலந்தி நான் / நம் உறவுகளோ நமக்கிடையில் / சிவநந்தியாய்... - (பக்கம் 30, 31)

என்னும்போது காதலை வார்த்தைகளில் கட்டிப் போட்டு விளையாடியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு பெண்ணும் முழுமையடைவது தாய்மையில்தான். ஒவ்வொரு தாயும் உயிர்வாழ்வது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கனவில்தான் என்பவை அனைவரும் அறிந்ததே. இவரும் தன் மகளை எண்ணி உருகி உருகிக் கவிதை வரைந் திருப்பதை இவ் வரிகளில் காணமுடிகிறது.

நான் மகிழ்ச்சியாய் / இருந்துவிட்டுப் போகட்டும் என்று / இறைவன் என் பிச்சைப் பாத்திரத்தில் / வழங்கிய அன்பு அட்சய பாத்திரம் பாலின் துளி / உன் பல் / தேனடை பிழி / உன் சொல் / கட்டு விரியனில் / கலந்த நஞ்சும் முறியும் / உன் இதழோரம் சிந்தும் / புன்னகை கண்டு / யுத்தத்தில் கலந்ததுபோல் / கலக்கமுறுகிறேன் / உன் முத்தம் தந்த / ஈரம் காயும்போது உன்னால் / பாதுகாக்கப்படும் / பச்சிளம் குழந்தையாய் / மாறினேன் நான் / என்மீது அக்கறை காட்டக் / கிடைத்துவிட்டாள் / இரண்டாவது அம்மா... - (பக்கம் 26, 28)

என்னும் வரிகளில் மகள் மீது கொண்ட பாசப் பிணைப்பினை உணர முடிகிறது.

புதுக்கவிதையென்னும் புதுப்பாதை போட்டுத் தந்தவர் பாரதியார். நாடு, மொழி, இனம் கடந்தது இவருடைய கருத்துக்கள் எனலாம். எட்டயபுரத்துக் கவிஞனைப் பற்றி இவர் கூறுகையில்

எட்டயபுரத்தில் பிறந்த / எட்டா உயரம் நீ / அடையப்போகும் / சுதந்திரத்தை / முன் கூட்டியே / அறிந்தவன் தனியருவனின் / உணவு குறித்துக் / கருத்துப் பதிவு / பகிர்ந்தவன் பாரதி மட்டுமல்ல நீ / இந்த தேசத்தின் / பாரத தீபமும் நீ தான்... - (பக்கம் 39 - 40)

என்னும் சொல்லாடல் வரிகளுக்கு மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது.

மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைப்பட உலகிலும் இலக்கிய உலகிலும் தமக்கென தனியிடத்தைப் பெற்றுத் தனிக்காட்டு ராஜாவாகத் திகழக் கூடியவர் கவிப்பேரரசு வைரமுத்து. சங்க இலக்கியத்தை எளிமைப்படுத்திப் பாமர மக்களிடம் சேர்த்தவர். தமிழைச் செழுமைப்படுத்திக் கவியாய் வழங்கியவர்.

இவரைப் பற்றிக் கூறுகையில் கறுப்புச் சிங்கம் / கர்ஜித்தது கவிதைக் காட்டில் / கவிமழை பொழிந்தது / இந்திய நாட்டில் / உனக்கு நிகர் நீயே / வார்த்தை விளையாட்டில் விருதுகள் / விரும்பி உண்ணும் / விருந்து நீ / ஐம்பூதம் அடைக்கலம் / உன் பாதம் / பாட்டை ஏட்டில் வடிக்கும் / சிற்பி நீ       - (பக்கம் 43, 45) எனக் குறிப்பிடுகின்றார்.

பெண்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகளும், எல்லை வரையறைகளும் எல்லா இடங்களிலும் உண்டு, எண்ணியது போன்று வாழ்வதற்கு தடைகள் அதிகம் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

யார்? யார் எப்படி என்னை / எதிர்பார்க் கிறார்களோ / அப்படியே இருக்கிறேன் / என் சுயம் எதுவென்று / எனக்கே தெரியாமல் / சமாதியாகிறது சில சமயம் / உலகத்தைப் பற்றி / உதறல் எடுக்கிறது உள்ளுக்குள் / பூட்டுப் போடப்பட்டது / பெண் சுதந்திரத்திற்கு / அதன் திறவுகோல் / குடும்பம், சமூகம், அலுவலகம் / மாறி மாறி வலம் வருகிறது / உறுதியாகச் சொல்வேன் / இறுதியில் கூட வாழ முடியாது / நான் நானாக... - (பக்கம் 49 -50) என்கிறார்.

கவிஞர் கல்லூரிப் பேராசிரியராக இருப்பதினால் மாணவர்கள் தேர்வறையில் செய்யும் செய்கை களையும் குறும்புகளையும் கண்டு துல்லியமாக எழுதியுள்ளார்.

விரிவாக நடத்தினாலும் / விளங்காத மாணவனுக்குச் / சுருக்கக் குறியீட்டில் / துல்லியமாகப் புரியும் இடம் / சத்தமாகக் கூற வேண்டியதில்லை விடை சமிக்ஞை காட்டினாலே / போதும் போதும்...

சுருட்டிய துண்டுத்தாள் / ஒற்றைக்கால் இடுக்கில் / அடங்கி அடங்கி இருக்கும் / இரு உலகப் போரும் / இது விந்தையன்று / மாணவரின் வித்தை புத்திசாலி அவன் / படிக்காத கேள்விக்கும் / பக்கம் பக்கமாய் பதில் / வினாக்களையே / விடைகளாக்கும் சதி / மதிப்பீட்டாளருக்கு மட்டும் / புதியாத புதிர் - (பக்கம் - 59)

இவ்வாறு தேர்வுத்தாள் பற்றியும் தேர்வறை பற்றியும் தம் கவிதையில் பதிவு செய்கின்றார்.

நீண்ட நெடுங்காலமாய் இசை சக்கரவர்த்தியாய் மக்களின் மனதை ஆட்சிசெய்யும் இசைஞானி இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

கோடி இதயங்களின் / நோய் தீர்க்கும் வைத்திய சாலை / வெட்டி எடுத்த வெண்ணெய்த் துண்டு / வாயில் விழுந்து வழுக்கி வயிற்றுக்குள் / போவது போன்ற இசை / திருக்குறளும் உன் குரலும் / முக்காலத்துக்கும் மட்டுமல்ல / எக்காலத்திற்கும் பொருந்தும். - (பக்கம் 41)

என்று குறிப்பிடுகின்றார்.

மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

இவர் மகளிர் தினம் பற்றிய கவிதையில் பெண்மையின் மென்மையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றார்.

அன்பென்ற சொல்லின் / அகராதி... / அறிவு பொதிந்த அரிவை இன்னல் சுமக்கும் மின்னல் / மலரிலும் மெல்லிது அவள் குணம் / மலையினும் வலியது அவள் மனம் / அனைத்து உறவுகளும் / அவள் கொடுத்த வரம் / அவள் அடிமை அல்லள் / அவளின் அன்பிற்கு இந்த / அகிலமே அடிமை / எல்லாம் பெண்ணால் / எல்லாமே பெண்ணாய்... - (பக்கம் - 51)

என்று விரிக்கின்றார்.

சங்க இலக்கிய புலவர்களும், இளங்கோவடிகளும், தொண்ரடிப் பொடியாழ்வாரும், பாரதியாரும் புகழ்ந்த காவிரியைக் கவிஞர் தற்கால காவிரியுடனும், விவசாயிகளின் நிலைகளையும் ஒப்பிட்டு கவிதை புனைந்துள்ளார்.

நடந்தாய் வாழியெனப் / புலவன் நா புகழ்ந்த காவிரி / இன்று அவன் இருந்திருந்தால் / ஒப்பாரி வைத்து ஓலமிட்டிருப்பான் உனக்குச் சோழநாடு இலக்கு / இருந்தும் உன்மீது பல வழக்கு / நீ இல்லாததால் உருக்குலைந்தது உழவு உழவனின் வீட்டினிலோ இழவு புனல் பரந்து பொன் கொழித்த காவிரி / அனல் பரந்து ஆள் கொல்கின்றது. / சாயம் போனது விவசாயம் / உழுபவன் உன்னையெண்ணி அழுதால் / கரைபுரண்டோடும் கண்ணீர் / அறமிருந்தால் அறுத்துக் கொண்டுவா / கர்நாடக அணைகளை / உன் தண்ணீரே / எங்கள் நாளங்களில் / ஓடும் செந்நீர்... - (பக்கம் 67 - 98)

என்று தமிழக நீர்நிலையினையும் வறட்சியையும் குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் கனவாகவும் கடமையாகவும் எண்ணுவது தங்கள் மகளின் திருமணத்தை ஊர் மெச்சும்படி செய்து அழகு பார்க்கவேண்டும் என்பதுதான். அவளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே இலட்சியமாக இருக்கும். எதிர்பாரத விதமாக இல்லறவாழ்வு இனிமையாக அமையாது பிரிவு ஏற்படின் வாழ்க்கை எத்துனை சோகம் நிரம்பியதாக இருக்கும் என்பதினை இவரின் வரிகள் மனதை உறைய வைக்கின்றன.

தலையில் விழுந்த / அட்சதை அரிசியில் / சில வாயிலும் விழுந்தன / உமிழ்நீர் கலந்ததில் / மஞ்சள் வாசனை இல்லை / ஒரு மடிசல் வாடை / போகப் போகத் தெரிந்தது / வாயில் விழுந்தவை / அட்சதை இல்லை / வாழ்வில் விழுந்த / வாய்க்கரிசி என்பது / கழுத்தில் விழுந்த சுருக்குக் / கயிறுக்கு / லட்சம் பல செலவு செய்து / விருந்து உபசரிப்பு / சிறகொடிந்த பாவையாய் அவள் / ஓரிரு வருடங்களில் / குடும்ப விளக்கு / இருண்ட வீடாய் / திருமணநாள் ஒவ்வொரு வருடம் / அனுசரிக்கப்படுகிறது கருப்பு உடையில் - (பக்கம் 72 -73)

விரக்தியின் விளிம்பில் விழுந்த அடிகளாய் இக்கவிதை இருப்பதை உணரமுடிகிறது.

இன்றைய காலத்தில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான தொடர்பும் உறவும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இருவருக்குமான இடை வெளி அதிகம் என்றே சொல்லலாம். ஆனால் கவிஞர் சே.இளமதி இருபது வருடகாலமாக தனது ஆசிரியருடன் அன்பு, நட்பு, மரியாதை கொண்டிருப் பதை அவரது கவிதையின் வழி அறிய முடிகிறது. தன்னம்பிக்கை புகட்டும் வழிகாட்டியாக அறிய முடிகிறது. தன்னம்பிக்கை புகட்டும் வழிகாட்டியாக இவரது ஆசான் திகழ்வதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் போட்ட பாதையில் / விழுந்த விதை நான் / ஆற்றுநீரில் விண்மீன் பிடிக்க / நம்பிக்கை புகட்டிய தன்னம்பிக்கை / இயல்பாய் இருப்பதால் தானோ / எல்லோர் இதயத்திலும் நீங்கள் / எளிமையின் எதார்த்தம் / சுயநலமில்லாப் பொதுநலம் / எந்தையே உந்தன் அன்பினில் / மறந்தே போனேன் மறைந்த / என் தந்தையை... - (பக்கம் - 77)

என்று குருவை தந்தையாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறாக பல தலைப்புகள் உள்ளடக்கிய இக்கவிதை தொகுப்பு நூலில் சொல்வளம், கருத்தாழம், மொழிநடை முதலியன காணக்கிடைக் கின்றன. தனக்குக் கிடைத்த அனுபவம் வாயிலாக உறங்க மறந்த நினைவுகள் என்னும் நூலை இயற்றியுள்ளார் என்று சொல்லலாம்.

இக்கவிதை நூலுக்குள் இறங்கியவுடன் கவிதையின் நடையை விட அதில் பொதிந்துள்ள உணர்வுகள் படிப்போரைத் திக்குமுக்காட வைத்து விடும். படிப்பவர்கள் யதார்த்த உலகிற்கு வர நிண்ட நேரம் ஆகும் என்பது எதார்த்தமான உண்மை.

உறங்க மறந்த நினைவுகள்

சே.இளமதி

வெளியீடு: இயல்

23பி/2379, தொப்புள் பிள்ளையார் கோயில் தெரு,

தெற்கலங்கம், தஞ்சாவூர் - 613 001

ரூ.70.00

போன் : 9940558934

Pin It