தமிழ்நாட்டு மக்களிடம் இது போன்றதொரு மனநிலையை நாம் எப்போதும் பார்த்ததில்லை. அவர்கள் அண்ணாவை ஏற்றுக் கொண்டார்கள், கலைஞரை ஏற்றுக் கொண்டார்கள் சினிமா மூலம் தனக்கான ஒரு போலி பிம்பத்தை உருவாக்கிக் கொண்ட எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டார்கள், எம்ஜிஆர் உடன் தனக்கிருந்த அடையாளப்படுத்தப்படாத உறவின் மூலம் அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஜெயலலிதாவால் இரண்டு முறை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் அனைவரையும் விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொண்ட மக்கள், இப்போது சசிகலாவோ, இல்லை எடப்பாடியோ முதலமைச்சராக வருவதை மட்டும் ஏனோ மனதார வெறுக்கின்றார்கள். அவர்களின் வழிபாட்டுக்குரிய ஆட்சியாளரின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்கும் மனநிலையை அவர்கள் இன்னும் வந்தடையவில்லை. பிம்ப அரசியலில் அரைநூற்றாண்டு காலமாக ஊறிபோன ஒரு மக்கள் கூட்டம் அதைத் தவித்த வேறு எதையுமே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றது.
கொள்கைகளும், கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனிநபர் சார்ந்த வழிபாட்டு அரசியல் இன்று தமிழக மக்களிடம் பீடித்த நோயாக மாறியிருக்கின்றது. ஒரு மாற்று அரசியல் வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் தமிழர்களை ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்குள் நாம் கொண்டுவந்துவிடலாம். அவர்கள் எப்படிப் பார்த்தாலும் ஒரு 5 சதவீதத்திற்கு மேல் தாண்ட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது மாற்று அரசியல் பற்றிய சிந்தனையை வீச்சாக தமிழக மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டிய மிக முக்கியமான கட்டத்தில் இன்று தமிழகம் இருக்கின்றது. பிம்ப அரசியல் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. கலைஞர் அவர்களின் அரசியல் ஓய்வுக்குப் பின்னும், ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்னும், மாற்று அரசியல் என்ற சிந்தனையை நாம் இன்று முதன்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தை வரலாறு நமக்கு வழங்கியுள்ளது. இதை யார் சரியாக செய்கின்றார்களோ அவர்கள் தான் நிச்சயம் அடுத்து தமிழகத்தின் ஆளும் வர்க்கமாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியும்.
சரி, இங்கே என்ன மாற்று அரசியல் சிந்தனைகள் எல்லாம் உள்ளது என பார்த்தோம் என்றால் முதன்மையாக திராவிடம்,பொதுவுடமைச் சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தலித்தியம். இதில் ஒவ்வொரு சித்தாந்தத்திலும் தேர்தல் பாதையில் உள்ள அமைப்புகள் தேர்தல் பாதையை நிராகரித்த அமைப்புகள் என்ற இரண்டும் உள்ளன. இதில் தேர்தல் பாதையை நிராகரித்த அமைப்புகள் மட்டுமே இன்னும் தங்களுடைய சித்தாந்தங்களை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தேர்தல் பாதையில் சென்ற மேற்கூறிய அமைப்புகள் அனைத்தும் பெருமளவில் சமரசத்துக்கு இடம் கொடுத்துத் தன்னை சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தனக்கான இடத்தை தமிழக அரசியலில் பெற முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று பரிதாபகரமான நிலைமையில் உள்ளன.
தனித்து நின்றால் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியாது என்ற இழிந்த நிலையை அவை எட்டி இருக்கின்றன. இப்போது அவை என்ன செய்யப்போகின்றது என்பதுதான் அடுத்து தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமானதாக இருக்கப் போகின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்று அரசிலை தற்போது தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. இது எந்த அளவிற்கு அவர்களுக்குப் பயனைக் கொடுக்கப் போகின்றது என தெரியவில்லை. இத்தனை ஆண்டு காலமாக திமுக, அதிமுக, தேமுதிக என்ற மாறி மாறி கூட்டணி வைத்துவிட்டுத் தனித்து நிற்கும் அனைத்து திறனையும் இழந்துவிட்டு இப்போது இது போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்ளபடியே அவர்களின் தோல்வியையே காட்டுகின்றது. வரும் காலங்களில் இந்த மாற்று அரசியல் என்ற நிலைப்பாட்டில் அவர்களால் உறுதியாக நிற்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான்.
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக வேறு எந்த சித்தாந்தத்தை கடைபிடிக்கும் கட்சிகளாலும் 50 ஆண்டுகளாக கால் ஊன்ற முடியவில்லை என்பது வரலாறு. திராவிடக் கட்சிகள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும், திமுக, அதிமுக, மதிமுக (சத்தியமாக தேமுதிகவை நான் சொல்லமாட்டேன்) போன்றவை இன்று அதன் திராவிட கருத்தியலின் அடிப்படை சாரத்தை இழந்து, வெற்றுக் கூடாகவே இருக்கின்றன. அதிலும் அதிமுக ஒரு இந்துத்துவா கருத்தியலை மிகத்தீவிரமாக பரப்பும் கட்சியாகவே தன்னை எப்போதும் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றது. வைகோவின் பிழைப்புவாத அணுகுமுறை இன்று அவரை அரசியலில் அநாதை ஆக்கி விட்டிருக்கின்றது. அவரிடம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் திராவிட கருத்தியல் கூட பெரும்பாலும் தேர்தலில் தோற்ற சமயங்களில் மட்டுமே இருக்கும். கி.வீரமணி அவர்கள் சான்றிதழ் கொடுத்தது இரட்டைக்குழல் துப்பாக்கியான அதிமுக, திமுகவிற்கு மட்டுமே என்பதால் நமது விமர்சனப் பார்வையை இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியோடு நிறுத்திக் கொள்வோம். அதிமுக பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதன் அந்திமக் காலத்தை அது எட்டிக் கொண்டு இருக்கின்றது. பார்ப்பன தீபாவின் காலை நக்கும் ஒபிஎஸ்சும் மற்றும் தலித் விரோதி எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவை சவக்குழிக்குள் கூடிய விரைவில் கொண்டு சேர்த்து விடுவார்கள். இன்னும் இருப்பது திமுக மட்டும்தான். ஸ்டாலின் அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் தான் இனி திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாய் இருக்கப் போகின்றது. அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்த் தேசிய அமைப்புகளைப் பொருத்தவரை அவர்களுக்கு யாரும் குழி தோண்டத் தேவையில்லை. அவர்களாகவே குழி தோண்டி தானாகப் போய் படுத்துக்கொள்வார்கள். அவர்களது இனவாத, தலித் விரோத அரசியல் அவர்களை தமிழ்நாட்டில் என்றும் பெரிய அளவில் வளர்வதற்கு வாய்ப்பை நிச்சயம் வழங்காது. அடுத்தாக இருக்கும் தலித்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தமிழகத்தைப் பொருத்தவரை தனித்து நிற்கும் அளவிற்கு அவை இன்னும் தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை. மேலும் தலித்துக்கள் சிதறிக் கிடப்பதால் அவர்களால் ஒரு தனிப்பெரும் அரசியல் சக்தியாக வருவதும் முடியாத காரியமாக இருக்கின்றது. பாஜகவையும் அதன் தலைவர்களையும் தமிழ்நாட்டு மக்கள் மலத்தில் இருக்கும் புழுக்களைப் பார்ப்பதுபோல பார்ப்பதால் அதனால் என்றுமே தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியாது. காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், இங்கிருக்கும் திமுக, அதிமுக போன்றவை டெல்லியில் தங்களது காரியங்களை சாதித்துக்கொள்ள அதற்குக் கொஞ்சம் தீனிபோட்டு இங்கே பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். தனித்து நின்றால் பிஜேபிக்கு ஏற்படும் அதே நிலைதான் காங்கிரசுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படும்.
இப்போது இருப்பது இரண்டு வாய்ப்புகள் தான். ஒன்று திராவிடக் கட்சிகள், அடுத்து இருப்பது பொதுவுடமைக் கட்சிகள். இதில் திமுக தனக்கான மக்கள் செல்வாக்கை குறைந்தபட்சமாவது நிரந்தரமாக தக்க வைத்துக்கொண்டுள்ள கட்சி. எனவே அதைப் பற்றி இப்போதைக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பொதுவுடமைக் கட்சிகள்? கட்சி ஆரம்பித்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அதன் மக்கள் செல்வாக்கு? அது என்னவென்று அவர்களுக்கே தெரியும். எனவே மக்கள் மத்தியில் அதிமுக என்ற திருட்டுக்கும்பலை அம்பலப்படுத்தி அதை அரசியல் களத்தில் இருந்தே அகற்றி அந்த இடத்தை இப்போது அவர்கள் பிடிக்கப் போகின்றார்களா? இல்லை சசிகலாவிற்கும், விஜயகாந்திற்கும் சொம்பு தூக்கி தனது திட்டமிட்ட அரசியல் அடிமைத்தனத்தையே தொடர்ச்சியாக செய்யப் போகின்றார்களா என்பது அவர்கள் கையில்தான் உள்ளது. தமிழக அரசியல் களம் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. தங்களது முந்திய கேவலமான நிலைப்பாடுகளில் இருந்து அவர்கள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு, கட்சியின் உள்ளே நீக்கமற நிறைந்திருக்கும் புல்லுருவிகளையும், கழிசடைகளையும், பிழைப்புவாதிகளையும், கம்யூனிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் கட்சியின் மாவட்டச் செயலாளர் வரை வளர்ந்து இருக்கும் குப்பைகளையும் களை எடுத்து அது தன்னை மறுகட்டமைப்புச் செய்துகொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நிச்சயம் அது செய்துகொள்ளும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஆனால் தமிழக அரசியல் களத்தில் ஏற்படப்போகும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் இனி வேறு மாற்றுவழியே அவர்களுக்குக் கிடையாது.
இந்தத் தேர்தல் அரசியலில் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் ஒப்புக்குக்கூட இது நல்ல கட்சி, இதுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்ல முடியாத அவல நிலையில் இருப்பதுதான். ஊழல் செய்வதிலும், பார்ப்பனியத்துக்குக் காவடி தூக்குவதிலும், சாதி வெறியர்களை அரவணைத்துப் போவதிலும், பெருமுதலாளிகளின் காலை நக்குவதிலும் இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் நாம் கட்சிகளை அணுக வேண்டி இருக்கின்றது. தேர்தல் அரசியல் கட்சிகளின் நிலை இதுவென்றால், அதைப் புறக்கணிக்கும் கட்சிகளின் நிலையோ இன்னும் மோசமாக இருக்கின்றது. ஒரு பக்கம் தேர்தல் பாதையைப் புறக்கணித்தாலும், மற்றொரு பக்கம் அவை தேர்தல் சமயங்களில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தரும் வேலையை எப்படியாவது செய்துவிடுகின்றன. சில நேரடியாக ஆதரிக்கும், சில குறியீட்டு முறையில் ஆதரிக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.
எனவே மாற்று அரசியல் பற்றி இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் தருணம் கருத்தியல் தளத்தில் மக்களிடம் பெரிய மாறுதலை ஏற்படுத்தாமல், நாம் எந்தவித அரசியல் மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்பதைத்தான் முகத்தில் அறைந்தார்போலக் காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் இதுவே முதன்மையான பணியாகும். திராவிடர் விடுதலைக் கழகம் போன்றவைதான் இன்று சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, அரசு வன்முறைக்கு எதிரான போராட்டம், சாதி ஆணவக் கொலைக்களுக்கு எதிரான போராட்டம் என குறிப்பிட்டுச் சொல்லும்படி தனது பணியைச் சிறப்பாக செய்துவருகின்றன. கி.வீரமணி போன்றவர்கள் யார் என்ன என்று தாராதரம் பார்க்காமல் ஆதரவு தரும் வேளையில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் செயல்பாடு உண்மையில் பாராட்டத்தக்கதாகும். திராவிட சித்தாந்தத்தைப் பரப்புவதில் நம்பிக்கை நட்சத்திரமாய் இது போன்ற அமைப்புகள் உள்ளது போல பொதுவுடமை சித்தாந்தத்தை பரப்புவதில் கவனிக்கும்படியான அமைப்புகள் ஒன்றும் இல்லாதது மிகப்பெரிய குறையாகும். இருக்கும் சில அமைப்புகளும் போதிய பலமின்றியும், இன்னும் சில நேரத்திற்கு தக்கபடி அடிப்படையான பார்ப்பன எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கொள்கையிலேயே சமரசம் செய்துகொள்வதாகவும் உள்ளன.
இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில் தான் நாம் மக்களுக்கான மாற்று அரசியலை கொண்டுபோய் சேர்க்க வேண்டி இருக்கின்றது. தேர்தல் பாதையானலும் சரி, இல்லை என்றாலும் சரி நேர்மையான அமைப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம் தான் தமிழ்நாட்டில். திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற சில அமைப்புகள் இருப்பதால் தான் நம்மைப் போன்ற முற்போக்குவாதிகளால் கொஞ்சமாவது தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகின்றது. வரலாறு நமக்கு வழங்கியுள்ள இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிகத் தீவிரமாக மக்களிடம் திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தையும், பொதுவுடமை இயக்கத்தின் சித்தாந்தத்தையும் நாம் கொண்டு சேர்க்க வேண்டி இருக்கின்றது. அதுதான் தமிழகத்தில் இப்போது இருக்கும் அனைத்து சாதிய, மதவாத முதலாளித்துவ அடிவருடிக்கட்சிகளுக்கும் சாவு மணியை அடிக்கும் நேரத்தை விரைந்து கொண்டுவரும்.
- செ.கார்கி