இந்தியாவிலே மாநில அரசு குடிநீர் வாரியம் தொடங்கியது கலைஞர் ஆட்சியில் தன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வருமான இலக்கு இல்லாமல் அனைவருக்கும் ரேஷன் கார்டு திட்டங்களை அமுலாக்கியதும் தமிழ்நாடு தான் - என்றார் முனைவர் ஜெயரஞ்சன்.

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

அடுத்ததாக நீர்ப் பாசனத்தை எடுத்துக் கொண்டால், குடிநீராக இருக்கட்டும்; பாசனத் திற்கான நீராக இருக்கட்டும்; இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் தொடங்குகிறார். ஏனென்றால், அன்று குடிநீர் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.

எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருந்ததோ, ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாக டாங்குகளில் தண்ணீர் ஏற்றி, எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்தார்.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், எல்லா ஊர்களிலும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஊர்களில் உப்பாக இருக்கும், சில ஊர்களில் உவர்ப்பாக இருக்கும். கிடைக்கின்ற தண்ணீரை வைத்துக் கொண்டு, காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

அன்றைய காலகட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்தான்.

முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் சேர்ந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இராமேஸ்வரம் எங்கே இருக்கிறது - திருச்சி எங்கே இருக்கிறது? திருச்சியிலிருந்து பைப் லைன் போட்டு, பம்ப் செய்து, போகிற ஊர்களுக்கெல்லாம் நல்ல குடிதண்ணீர்தான்.

சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்று சொன்னால், நமக்கு நேரிடை வரி விதிக்கும் அதிகாரம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சிறப்பாக செயல்பட முடியும். வரி விதிக்கும் முறையில் இரண்டு முறை இருக்கின்றன. ஒன்று, மறைமுக வரி விதிப்பு - இன்னொன்று நேரிடை வரி விதிக்கும் முறை.

நேரிடை வரி விதிக்கும் முறை என்ன வென்று சொன்னால், யாருக்கு வரி செலுத் தும் திறன் இருக்கிறதோ, அவர்களிடம் வரியை வாங்கி, இல்லாதவர்களுக்குக் கொடுப்பது.

எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரம் என்னவென்றால், நேரடி வரி விதிக்கும் முறை - ஒன்றுக்கு மட்டும்தான் உண்டு. அது என்னவென்றால், வேளாண் துறையிலிருந்து வருகின்ற வருமானத்திற்கு வரி விதிக்கும் உரிமைதான்.

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு இல்லாத கிராமமே கிடையாது என்ற ஒரு நிலையை உருவாக்குகிறார். இந்தத் தொழில்நுட்பத்தால், இலவச மின்சாரத்தை வழங்கினார். இந்த முறையால், விவசாயிகள் தங்கள் உற்பத்தியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்தாக போக்குவரத்து -

வட மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரியும் - இங்கே இருப்பதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் போக்குவரத்து வசதிகள் கிடையாது.

கிராமப்புற சாலைகள் என்ற ஒரு அணியை ஏற்படுத்தி, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில், பேருந்துகள் இயங்குகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண் டிருக்கிறது என்றால், அது தலைவர் கலைஞர் அவர்களால்தான்.

அதனுடைய தொடர்ச்சிதான் தற்பொழுது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.

அடுத்ததாக கல்வி,

கல்வியில் இட ஒதுக்கீடு மிகப் பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்கியது.

தமிழ்நாடு இன்றைக்குப் பொருளாதாரத்தில் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது என்று சொன்னால், இதை சாத்தியப் படுத்தியது நம்முடைய இருக்கும் இயற்கையான வளங்கள் அல்ல. அதற்குக் காரணம், கல்விதான். மக்களை அதற்குத் தயார்படுத்தியதுதான்.

கல்வியை முன்பு 3 சதவிகித ஆட்கள்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படித்தால் மட்டும் பொருளாதாரத்தில் இரண்டாவதாக வந்துவிட முடியுமா?

கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு கொள்கையை தொடர்ந்து செய்ததுதான்.

பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவிலேயே, யார் எல்லாம் வாய்ப்பு பெறாமல் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தனிப் பிரிவாக ஆக்கினார்.

எஸ்.சி., பிரிவில் இட ஒதுக்கீடு என்றால், அந்தப் பிரிவுக்குள் யார் வர முடிய வில்லையோ, அவர்களுக்குத் தனியாக அருந்ததியார் பிரிவு என்று பிரித்தார்.

அதன் காரணமாக அனைவருக்கும் கல்வி கிடைத்ததினுடைய பலன்தான், இன்றைக்கு பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பது.

தமிழ்நாட்டில் மட்டும்தான் சமுதாயத் தினுடைய அனைத்துப் பிரிவில் இருந்தும் கல்வியைப் பெற்று உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

ஒரு பண்பட்ட ஜனநாயகமாக மாறவேண்டும் என்று சொன்னால், குடும்பம் மாறவேண்டும். குடும்பத்தில் ஆண் - பெண் இருக்கிறார்கள் என்றால், ஆண்களுக்கு மட்டும்தான் சொத்தில் பங்கு உண்டு என்ற நிலையை மாற்றி, பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்ற நிலையைக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

என்றைக்கும் கலைஞர் அவர்கள் நான் வெற்றி அடைந்துவிட்டேன் என்று சொன்னது கிடையாது.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் பொழுது, ஒவ்வொன்றையும் செய்து கொண்டே இருந்தார்.

அதேபோன்று, இன்று முதல்வர், திராவிட மாடல் அரசு என்று சொல்லும்பொழுது, அதை எதிர்த்து ஆளாளாளுக்கு எதிர்த்து சொல்கிறார்கள். பரவாயில்லை சொல்லி விட்டுப் போகட்டும்; அது நமக்கு நல்லது தான்.

முதலில் அவர்களை அது எரிச்சல் படுத்துகிறது; இரண்டாவது அதை நீ என்கவுண்டர் செய்துதான் ஆகவேண்டும்.

திராவிட மாடல் என்று நான் சொல்கிறேன் - நீ ஆரிய மாடல் என்று சொல்கின்ற தைரியம் இருக்கிறதா?

இதற்குப் பதில் புதிதாக ஒன்றை சொல்கிறார்கள் - தமிழ் மாடலாம்.

தமிழன் ஆட்சியில் இருந்தான். ஆனால், அவன் வைத்த கொள்கை என்ன? சமூகநீதி.

அந்தக் கொள்கை யாருடையது?

திராவிட இயக்கத்திற்குச் சொந்தமானது.

திராவிட மாடல் என்று சொல்வாயா? தமிழ் மாடல் என்று சொல்வாயா?

நமக்கு அந்தப் பெருமை வந்துவிடக் கூடாதாம்.

அதற்குப் பிறகு ஒருவன் வந்தான், இராமானுஜர் எல்லாம் இதில் சேர்ந்தவர் தான் என்றான்.

வரட்டும் - யார் வரவேண்டாம் என்கிறோம்.

இதுதான் பாதை - இந்தப் பாதையில் எல்லோரும் வாருங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

தாராளமாக வாருங்கள் - பயணிப்போம் - அருமையான ஒரு சமுதாயத்தைக் கட்டமைப்போம்.

அந்தப் பாதை என்பது மளிகைக் கடை பட்டியல் போன்று முடிந்துபோன விஷயமல்ல. தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டிய பணியாகும்.

(நிறைவு)

Pin It