மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோரி அலங்காநல்லூர், தமுக்கம், தத்தனேரி இரயில் பாலம் ஆகிய இடங்களில் பெருந்திரள் மாணவர்-மக்கள் போராட்டம் நடந்தது. இப்போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு 23.01.2017 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற இருந்தது. இச்சூழலில் காலை சுமார் 10.30 மணிக்கு அலங்காநல்லூர் மற்றும் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-செல்லூர் வைகை ஆற்றுப் பாலம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டு அலங்காநல்லூரில் சுமார் 162 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மதுரை மாநகரில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 100 பேர்வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டப் பகுதிகளில் காவல்துறையின் தேடுதல் வேட்டை, விசாரணை, கைது நீடிக்கும் சூழலில் மேற்கண்ட பிரச்சனைகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
உண்மை அறியும் குழு உறுப்பினார்கள்:-
1 பேராசிரியர் முரளி, மாநில பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
2 வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
3 இராஜேந்திரன், வழக்கறிஞர்
4 நாராயணன், வழக்கறிஞர்
5 நாகலிங்கம், வழக்கறிஞர்
6 பாரதி பாண்டியன், வழக்கறிஞர்
7 குருசாமி, வழக்கறிஞர்
8 திருமுருகன், வழக்கறிஞர்
9 முத்து கிருஸ்ணன், வழக்கறிஞர்
10 கதிர்வேல், வழக்கறிஞர்
11 மாறன், வழக்கறிஞர்
12 பொற்கொடி, வழக்கறிஞர்
13 அகராதி, வழக்கறிஞர்
14 யூசுப், வழக்கறிஞர்
15 அய்யப்பன், வழக்கறிஞர்
16 சுகதேவ், வழக்கறிஞர்
17 எழிலரசு, வழக்கறிஞர்
18 அப்துல்காதர், வழக்கறிஞர்
மேற்கண்ட குழு 24.01.2017 அன்று அலங்காநல்லூருக்கும், 28.01.2017 அன்று மதுரை மாநகர் தத்தனேரி இரயில்வே பாலம் அண்ணாதோப்பு, தாகூர் நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து விசாரித்தது. செல்லூர், தல்லாகுளம், அலங்காநல்லூர் காவல்நிலையங்களுக்கு சென்று விபரங்கள் சேகரித்தது. மக்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் பெயர் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அலங்காநல்லூர் போராட்டக் களத்தில் இருந்த கிருஸ்ணவேணி(வயது 60), சாலம்மா(70) மற்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத மக்கள் சொன்னது:
”மாணவர்கள்-இளைஞர்கள்-உள்ளூர்பொதுமக்கள் என தொடர்ந்து போராட்டத்தில் பங்குபெற்ற நூற்றுக்கணக்கானோர் காலை 09. 30 மணிக்குக் கூடியிருந்தோம். எங்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களுடன் வந்த காவல்துறை கலைந்து போகச் சொன்னது. ஊர்க்கமிட்டிக்காரர்களும் சொன்னார்கள். அப்போது மாணவர்கள்-இளைஞர்கள்-ஊர்மக்கள் ஒருமணிநேரம் கொடுங்கள், சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் கலைந்துசென்று விடுகிறோம்” என்று கோரிக்கை வைத்தனர். பின்பு மூன்று துண்டுகளை எடுத்து தேசியக் கொடி போல செய்து மேலே பிடித்தனர். உடனே 5, 4, 3, 2, 1 எனப் போலீசார் சொல்லி முடித்தவுடன், பின்னே சென்ற உள்ளூர் அ. தி. மு. க. வினர் போலீசார் மீது கற்களை வீசினர். உடனே கல் எறிகிறீர்களா? எனச் சொல்லி போலீசார் எங்களை தாக்கத் துவங்கினர். நாங்கள் எங்கள் ஊருக்கு வந்தவர்களை ஏன் அடிக்கிறீர்கள்? ஒருமணி நேரம்தானே கேட்கிறார்கள் என்று சொன்னவுடன், உள்ளூர்க்காரர்கள் விலகுங்கள் என்றனர். நாங்கள் மாட்டோம் என்றோம். உடனே எங்களை அடித்துத் தள்ளி விட்டனர். கெட்ட வார்த்தைகளில் திட்டினர். எங்களை கை, கால், பின்பகுதிகளில் அடித்தனர். கீதா என்ற சென்னைப் பெண்ணை நெற்றியின் அருகில் அடித்தனர். இரத்தம் கொட்டியது. கீதாவும், அருகில் இருந்தவர்களும் அம்மா, எங்கள விட்டுப் போகாதீங்கம்மா, காப்பாத்துங்கம்மா எனக் கதறி அழுதனர். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்களுக்கு இனி ஜல்லிக்கட்டு ரெண்டாம்பட்சம்தான், எங்களுக்காக இங்கு தங்கிப் போராடிய மாணவர்கள்-இளைஞர்களைக் காப்பாற்றுங்கள், அவர்கள் ஒரு வாரமாய் எங்களோடு பிள்ளைகள் போல இருந்தார்கள். ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள். அவர்களைப் போய் தீவிரவாதிகள் என்று போலீசார் சொல்கிறார்கள், உண்மையில் போலீசுதான் மோசமாய் நடந்து கொண்டது. இன்னும் எங்களை மிரட்டுகிறார்கள்”
போராட்டக் களத்தில் இருந்து முகிலன் உள்ளிட்டு கைதாகி விடுதலையானவர்கள் சொன்னது:
போராட்டத்தின் மையத்தில் நாங்கள் இருந்தோம். முகிலனான என்னைத் தனியே போலீசார் பிரித்து, பக்கத்தில் புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் பாலம் நடுவில் வைத்து அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் லத்தியை வைத்து, உன்னை மதுரப் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னோமுல்ல என்று சொல்லி, தலையைக் குறிவைத்து அடித்தனர். நான் கைகளால் தடுத்தேன். இதனால் என் கைகளில் கடுமையாக அடிவிழுந்தது. பின்பு கால், முதுகு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சரமாறியாக அடித்து என்னை வண்டியில் தூக்கிக் கொண்டுபோய் அடித்தனர். பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி போலீசாரை என்னுடன் நிறுத்திவைத்து மிரட்டினர். பின்பு மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும்போது கைது செய்ததாகச் சொல்லி கையொப்பம் கேட்டனர். மற்றவர்கள் போட்டு விட்டனர். நான் போட மறுத்து விட்டேன்.
மனோஜ்குமார், சென்னை & கார்த்திக், நெல்லை
“நாங்கள் ஒருமணி நேரம்தான் கேட்டோம். அதைதராமல் பின்னால் இருந்து கல்வந்தவுடன் திடீரென போலீசார் தாக்கினர். கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஈவிரக்கமில்லாமல் அடித்தனர். பின்பு எங்களைக் கைது செய்து மண்டபத்திற்குக் கொண்டுவந்து கடுமையாக அடித்தனர். பலருக்கு நடக்கவே முடியவில்லை. விசாரணை என்ற பெயரில் எப்படி நீ போராட்டத்துக்கு வந்த? எனக் கேட்டு சித்தரவதை செய்தனர். பேஸ்புக் மூலம் வந்தேன் என்றால் நம்பவில்லை. எங்களது விலைமதிப்புள்ள செல்போன்களை எடுத்துக் கொண்டனர். பர்ஸ், பணம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு எல்லாத்தையும் போலீசார் பறித்துக் கொண்டனர். இன்றுவரை தரமறுக்கிறார்கள். பெயிலில் விட்ட பின்பு, நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். இங்கும் போலீசார் வருகிறார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம்? எஙகளை நிம்மதியாக வாழ விட மாட்டார்களா?
போராட்டத்திற்கு வெளியே வீட்டில், தெருவில் இருந்தவர்கள் சொன்னது:
“நான் போராட்டத்திற்குச் செல்லவில்லை. என் கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு அலுவலகத்தில் கூட்டி பிழைப்பு நடத்துகிறேன். எனக்கு ஒரு பையன் உள்ளான். அவன் போரட்டத்துக்குச் சென்று வந்தான். அன்று பிரச்சனை என்று தேடிச் சென்றேன். போகும் வழியில் ஒரு லூசுப் பிள்ளையைப் போட்டு 7, 8 ஆண், பெண் போலீசார் சரமாறியாக அடித்துக் கொண்டிருந்தனர். நான் மனது கேட்காமல்’ லூசப் போட்டு அடிக்கிறீங்களே, இந்தப் பாவம், உங்களப் புடிக்காதா? விட்டிருங்க எனச் சொன்னேன். உடனே நீ என்னடி சொல்றது எனச் சொல்லி என்னை சரமாறியாக அடித்தனர். நான் கீழே விழுந்து விட்டேன். அதன்பின்னும் என்னை, விடாமல் அடித்தனர். நான் மயங்கி விட்டேன். பின்பு ஆசுபத்திரியில் முழித்தேன். என் மகனுக்கு வேறு நாதி இல்லாததால், உடனே வந்து விட்டேன். இடுப்பில் அடித்ததில் நடக்க, படுக்க முடியவில்லை. காலில் தையல் போடப்பட்டுள்ளது. போராட்டத்துக்குப் போகாத என்னைய ஏன் அடிச்சாங்கன்னு தெரியல”
”போலீசார் அடித்து விரட்டியபோது சில இளைஞர்களும், பெண்களும் எங்கள் வீட்டுப் பக்கம் ஓடி வந்தார்கள். வீட்டுத்திண்ணையில் அமர்ந்தார்கள். அப்போது அங்கு வந்த உள்ளூர் போலீசார். வீட்டுக்குள் இருங்கள். பிரச்சனை முடிந்தவுடன் போகலாம் என்றார்கள். உடனே சில பையன்களும், பெண்களும் என் வீட்டிற்குள் வந்தார்கள். நான், என் கணவர், இரண்டு மகன்கள் இருந்தோம். சிறிது நேரத்தில் திமுதிமுவென சிறப்பு போலீசார் வீட்டிற்குள் வந்து தீவிரவாதிகளுக்கு ஏன் இடம் கொடுத்தீர்கள் எனக் கேட்டு சரமாறியாக அடித்தனர். மாணவர்களின் செல்போன்கள், பர்சுகளை ஒரு பேக்கில் போட்டு எடுத்துக் கொண்டனர். என்னை அடித்துக் கொண்டே இத்தன பயலுகல வீட்டுக்குள்ளவிட்டுக் கதவடச்சிருக்கியே ………………. எனக் கொச்சையாகத் திட்டினார்கள். என் கண் முன்னே சிறுவர்களான என் மகன்களை அடித்தார்கள். உள்ளே இருந்து அனைவருக்கும் செமையாய் அடி விழுந்தது. பின்பு பையன்கள், பெண்களைப் பிடித்துச் சென்றுவிட்டார்கள்”
“ எங்க அப்பா, அம்மா, அண்ணன், என்னை போலீசார் அடித்தார்கள். போலீசு வீட்டிற்குள் வந்து முதல் வெளியே போவதுவரை ஒரு நல்லவார்த்தை கூடப் பேசவில்லை. எங்கள் வீட்டிற்குள் இருந்த போராட்டக்காரர்களின் பேக்கை எடுத்து கொட்டிப் பார்த்தார்கள். பேஸ்ட், பிரஸ், சோப் மட்டும்தான் இருந்தது. ரோட்டில் இருந்து ஆட்டோ, கார், பைக்குகளை போலீசார் உடைத்தார்கள். எங்கள் எதிர் வீட்டிலிருந்த நர்சம்மா கதவைத் திறந்தவுடன் கையில் அடித்தார்கள். அவர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இன்னும் வரவில்லை”
மதுரை மாநகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-செல்லூர் பகுதிகளில் நடந்தது:
ரயில் பாலத்துக்கு கீழே தள்ளுவண்டி பழக்கடை நடத்திவரும் இராஜேந்திரன்
”தடியடி நடந்த அன்று காலையிலேயே என்னைப் போலீசார் கடை வைக்கக் கூடாது, பிரச்சனை ஆகப் போகுது எனச் சொல்லி விட்டனர். அன்று இரயில் பாலத்தில் நடந்ததை நான் தூரத்தில் நின்று பார்த்தேன். போலீசார் முதலில் நன்றாகத்தான் பேசினார்கள். உடனே பெரும்பாலானோர் கலைந்து விட்டார்கள். ஒரு சிலர் கலையவில்லை. பின்பு போலீசார் செயின் போட்டு, எல்லோரையும் பிடித்து இறக்கி விட்டார்கள். அதன்பின் ரயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து முதலில் போலீசார் எறிந்தார்கள். பின்பு பதிலுக்கு கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கல் எறிந்தார்கள். நம்மை அடித்தால் நாமும் ஒரு அடியாவது அடிக்க மாட்டோமா? அதுதான் நடந்தது. உடனே கீழே இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து அடித்தார்கள். வைகை ஆற்றில் துணி துவைக்கும் வயதான ஒருவரை கடுமையாக அடிப்பதை நான் பார்த்தேன். பிறகு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிகளை போலீசார் உடைத்து, ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்”
மேல அண்ணாத்தோப்பு பகுதியில் பெட்டிக் கடை நடத்திவரும் தம்பதியினர்(பெயர் சொல்ல விரும்பவில்லை)
போலீசார் அமைதியாகத்தான் பேசினர். பின்பு ஆற்றில் கூடிய கூட்டத்தை விரட்டினர். எங்கள் பகுதியில் புகுந்து போலீசு அடிக்கவில்லை. சிலரை மட்டும் போட்டோ வைத்து பிடித்துச் சென்றுள்ளனர்”
குருவம்மாள், சுடலைமணி, இந்திராகாந்தி - மேல அண்ணாத்தோப்பு
’மாணவர்கள்-இளைஞர்கள் இரயிலை மறித்த இடத்தில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் வீட்டு சின்னப் பிள்ளைகளை தினமும் கூட்டிச் சென்று இரயிலில் விளையாட வைத்தோம். டி.வி.யில் படம் வருகிறது எனப் பலரும் சொன்னதால், தினமும் சென்று இரயில் முன்பு அமர்ந்தோம். தடியடி அன்று போலீசார் வந்து பேசினார்கள். இந்திராகாந்தி இளைஞர்களோடு பேசி கலைந்து போகச் செய்தார். பெரும்பாலானோர் கலைந்துவிட்டனர். ரயில் முன்பிருந்த ஒரு சிலரையும், பாலத்திலிருந்து குதிப்பேன் என்று சொன்ன சிலரையும், போலீசார் செயின் அமைத்து இறக்கிவிட்டனர். எங்களை மேலே அனுமதிக்கவில்லை. பின்பு பாலத்தின் மேலிருந்த போலீசார் கல்லை எடுத்து கீழிருந்தவர்கள் மீது எறிந்தனர். இதனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் திருப்பி கற்களை எறிந்தனர். உடனே வைகை ஆற்றில் இருந்து போலீசார் எல்லோரையும் சரமாறியாக அடித்தனர். பைக்குகளை உடைத்தனர். எங்கள் ஏரியாவரை வந்து அடித்தனர். இரவில் எங்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று, மறுநாள் ஜாமீனில் விட்டனர். காவல்நிலையத்தில், மத்திய அரசு இரயிலையே எதுக்குற ஆளுங்களா நீங்க? எனச் சொல்லி, இனி இந்த ஏரியாவுல எது நடந்தாலும், நீங்கதான் பொறுப்பு என மிரட்டி அனுப்பிவிட்டனர்’
தாகூர் நகர் முத்துலட்சுமி
என்கணவர் கணேசன் செல்லூரில் ஆட்டோ ஓட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரது போட்டோவை செல்லில் வைத்துக் கொண்டு தேடி செல்லூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து போலீசார் கூட்டிச் சென்றுவிட்டனர். செல்லூர் காவல்நிலையத்தில் சென்று பார்த்தேன். அவர் உடல் முழுவதும் இரத்தம் கட்டியிருந்தது. எஸ். ஜ. இராஜேந்திரன் அடித்ததாகச் சொன்னார். தற்போது அவர் மத்திய சிறையில் உள்ளார்”
தாகூர் நகர் மல்லிகா, அமுதா சொன்னது
“எங்கள் தெருவில் பல பையன்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாங்கள் எல்லோரும் கலந்துகொண்டோம். தினமும் பையன்களைத் தேடி போலீசார் இரவில் வருகிறார்கள். இதனால் பிரபாகரன்(17), அய்யனார்(18), ராஜா(20) உள்ளிட்ட பல பையன்கள் ஊரைவிட்டே ஓடி விட்டனர்”
கணேசபுரம் ஜோதிபாசு
நான் ஆட்டோ கன்சல்டிங் கடை வைத்துள்ளேன். தடியடி அன்று போலீசார் பலரை அடித்தார்கள். வண்டிகளை உடைத்தார்கள். இதை என்னுடன் இருந்து ஒருவர் செல்போனில் படம் எடுக்க முயன்றார். இதைப் போலீசார் பார்த்துவிட்டனர். உடனே கடைக்குள் நுழைந்து எங்கள் செல்லைக் கேட்டு கடுமையாக அடித்தனர். கடை முன்பிருந்த வண்டிகளையும் உடைத்தனர்”
தாகூர் நகர் முத்துப்பாண்டி
”நான் வேலை செய்யும் பட்டறையில் இருந்து 15 பேரை செல்லூர் போலீசார் அடித்து, கூட்டிச் சென்றனர். பின்பு எங்கள் ஓனர் தலைக்கு இவ்வளவு எனப் பணம் கொடுத்து அழைத்து வந்து விட்டார்”
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் மருது
”தடியடி நடந்த மறுநாள் காலை நான் செல்லூர் காவல்நிலையம் சென்றேன். அங்கு அஜய் என்ற 17 வயது சிறுவனை செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன், பெரிய கட்டையை வைத்து காலில் கடுமையாக அடித்தார். முதல்நாள் இரவும் கடுமையாக அடித்துள்ளனர். பலரையும் செல்லூர் காவல் நிலையத்தில் வைத்து தினமும் தாக்குகின்றனர். நேற்றிரவு கூட நள்ளிரவில் நான்கு பேரை கூட்டிச் சென்றுள்ளனர்”
வழக்கறிஞர் பகத்சிங்
“ தல்லாகுளம் காவல் நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை நான் சென்று பார்த்தேன். அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை. காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சக்கரவர்த்தி கடுமையாக அடித்துள்ளார். அதோடு நீதித்துறை நடுவரிடம் அடித்த விபரங்களை சொல்லக் கூடாதென மிரட்டியுள்ளார்”
அலங்காநல்லூர் ஆய்வாளர் அன்னராஜ்
”இப்பிரச்சனை தொடர்பான விபரங்களை நான் பேச முடியாது. உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்”
செல்லூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி கருப்பையா
”செல்லூர் காவல் நிலையத்தில் நான்கு குற்ற எண்களில் 44 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற விபரங்களுக்கு உயர் அதிகாரிகளிடம் பேசவும்”
மேற்கண்டவாறாக பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியான கள ஆய்வு, காவல்துறை அதிகாரிகளின் பதில்கள், பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 23.01.2017 அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மாநகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-மேல அண்ணாத்தோப்பு-தாகூர் நகர்-செல்லூர் பகுதிகளில் நடந்த காவல்துறை தடியடி குறித்து கீழ்க்கண்ட உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்:
1 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நூற்றுக் கணக்கானோரை கடுமையாக அடித்துள்ளனர். வீடுகளில்இருந்தவர்கள், போராட்டத்தில் இல்லாதவர்களையும் தாக்கிக் கைது செய்துள்ளனர். மக்கள் திருப்பித் தாக்கவில்லை.
2 அலங்காநல்லூர் வன்முறையில் மக்களை அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆவார். இவருக்கு உத்தரவு பிறப்பித்தவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி.
3 மதுரை தத்தனேரி இரயில் பாலம் தடியடியில் காவல்துறைதான் முதலில் கல் எறிந்து பிரச்சனையைத் துவக்கியுள்ளது. பின்பு வேடிக்கை பார்த்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது. பின் மக்களில் சிலரும் கல்லால் போலீசாரை எறிந்துள்ளனர். இதற்கு சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளே பொறுப்பு.
4 மதுரை அலங்காநல்லூர் மற்றும் தத்தனேரி இரயில் பாலத்தின் கீழ் இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் காவல்துறையால், எவ்விதத் தேவையும் இன்றி நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கான நேரடி புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. இனி, போராட்டங்களில் மக்கள் பங்கேற்கக் கூடாது என்ற அடிப்படையில் பொருட்சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மீதான காவல்துறையின் உளவியல் தாக்குதல் ஆகும்.
5 மதுரை நகர் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற நபர்களின் போட்டோக்களை வைத்துக் கொண்டு மாணவர்களை-இளைஞர்களை-மக்களை காவல்துறை அச்சுறுத்துகிறது. சுமார் 100 பேரைக் கைது செய்து, கடுமையாக அடித்து சிறையில் அடைத்துள்ளது. இன்னும் பலரை காவல்நிலையம் கொண்டுவந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்புகிறது. குறிப்பாக செல்லூர், கருப்பாயூரணி காவல் நிலையங்களில் பண வசூல் அதிகமாக நடக்கிறது. தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி, செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன் ஆகியோர் கைதானவர்களைத் தாக்குவதில் முதன்மையாக உள்ளனர்.
6 மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்கள் இன்றுவரை நீதிமன்றங்களில் ஒப்படைக்கப்படவில்லை.
7 மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி மற்றும் சென்னை, கோவையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்-இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முடிவு தமிழக காவல்துறை தலைமையால் எடுக்கப்பட்டு, அதனை அமல்படுத்தும் விதமாக எல்லாக் காவலர்களும் “தீவிரவாதிகளுக்கு ஏன் இடம் கொடுக்கிறீர்கள்” என்றே கேட்டு மக்களை அடித்து அச்சுறுத்தியுள்ளனர். தனிப்பட்ட ஒரு சில காவலர்களின் செயலாக இது இல்லை.
மேற்கண்ட முடிவுகள் அடிப்படையிலான பரிந்துரைகள்:
• மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-மேல அண்ணாத்தோப்பு பகுதிகளில் நடந்த தடியடி மற்றும் வன்முறை குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள பணியில் உள்ள நீதிபதி மூலம் வெளிப்படையான பொது விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை முடிவில் குற்றம் இழைத்தவர்கள் மீது கிரிமினல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பான காவல்துறை மீது அடித்தது, காயங்கள் ஏற்படுத்தியது, வாகனங்களை உடைத்தது உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ சிகிச்சை, புகைப்பட ஆதாரங்கள் உள்ள நிலையில் உடனே காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
• போராட்டத்தைக் கலைப்பதற்கு எவ்விதத் தேவையில்லாமல் வாகனங்களை உடைத்த காவலர்கள் மீது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தும் சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பளத்திலிருந்து நட்ட ஈடு பெறப்பட வேண்டும்.
• பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் குறித்து உடனே பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
• காவல்துறையும், போராடிய மக்களும் இருதரப்பாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை மதுரை மாநகர், புறநகர் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவின் கீழ் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணை அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும்.
• ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். உடனே இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
• தமிழகத்தின் உரிமைக்காக நடந்த பெருந்திரள் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.