ஆரவாரமாக நடந்து முடிந்து விட்டது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம். தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒதுக்கித் தள்ளிவைத்துவிட்டு, தங்களது கேமராக்களை ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பக்கம் மட்டுமே திருப்பி, 24X7 ஒளிபரப்பிய ஊடகங்கள் இப்போது இளைப்பாறிக் கொண்டு இருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் இப்போது மீண்டும் தங்கள் கவனத்தை பாடப் புத்தகங்களை மனனம் செய்வதற்குத் திருப்பி இருக்கின்றார்கள். அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. தமிழ் மக்களின் அனைத்துத் தரப்பினரையும் கட்சி வித்தியாசம் இல்லாமல், கொள்கை வித்தியாசம் இல்லாமல் களமாட வைத்துள்ளது ஜல்லிக்கட்டு. திராவிடம், தமிழ்த்தேசியம், பொதுவுடமை என அனைத்துச் சித்தாந்தங்களும் தங்களுக்குள் பல்வேறு தீவிரமான கருத்து மோதல்களை செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபடும் புள்ளியாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. சில கோயிகளுக்குப் போனால் அனைவரும் வேட்டி கட்டிக்கொண்டுதான் போக வேண்டும். அதே போல சில கோயில்களுக்குப் போனால் அனைவரும் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் வழிபட போக வேண்டும். அப்போதுதான் அந்தக் கோயிலில் குந்தவைத்து உட்கார்ந்திருக்கும் கடவுள் வரம் கொடுப்பார். அதே போல ஜல்லிக்கட்டு என்று வந்துவிட்டால் முதலில் கழற்றி வைக்க வேண்டியது கொள்கைகளைத்தான். ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை மாடுகளுக்கு அடுத்தபடியாக அடங்க மறுப்பது மனிதர்களும், அவர்களின் சித்தாந்தங்களும் தான். இஷ்டத்துக்குப் பூந்து விளையாடலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது.

   nandhini ariyalurஆனால், ‘ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் உரிமை’ என்று தங்கள் கொள்கைகளை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, களத்தில் இறங்கிப் போராடிய எவரும் திரும்பிக்கூட பார்க்க விரும்பாத செய்தியாக மறைந்துபோனது அரியலூர் நந்தினியின் கதை. பதைபதைக்க வைக்கும் படுகொலை. மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடூரம். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி நந்தினி. அவரை இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி இருக்கின்றார். திருமணம் செய்துகொள்ளச் சொல்லி அந்தப் பெண் வற்புறுத்தியபோது மணிகண்டனும், அவனது நண்பர்கள் திருமுருகன், வெற்றிச்செல்வன் ஆகியோரு கூட்டு சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்து நிர்வாணமாக கீழமாளிகைக் கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். இதிலே மிகக் கொடூரம் என்னவென்றால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து உள்ளே இருந்த ஆறுமாத சிசுவை வெளியே எடுத்து அந்தப் பெண்ணின் சுடிதாரில் வைத்து எரித்துள்ளனர்.

 இப்படி எல்லாம் கூட மனிதர்கள் செய்வார்களா என்று உங்களுக்குள் நடுக்கம் ஏற்படலாம். எல்லா மனிதர்களும் அப்படியான அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபடமாட்டார்கள். அப்படியான கீழ்த்தரமான சிந்தனையை ஒருவன் புற உலகில் இருந்தே பெறுகின்றான். ஒரு மோசமான புத்தகத்தைப் படித்துவிட்டோ, இல்லை ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டோ பல பேர் அதே போன்று நாமும் செய்து பார்த்தால் என்ன என்று செய்துவிடுவார்கள். ஆனால் ஒரு இந்துவுக்கு இது எதுவும் தேவையில்லை. ஏனென்றால் அவனுக்கு இந்தத் தேவையை அவன் சார்ந்த மதப் புனித நூல்களே கொடுக்கின்றது. பெண்ணை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம், அவள் இந்த உலகத்தில் ஆணுக்காகவே படைக்கப்பட்டவள், ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்து செய்வது மட்டுமே அவள் பிறப்பின் ஒரே நோக்கம், அதைத்தாண்டி வேறு எந்தச் சிந்தனையும் அவளுக்கு இருக்கக்கூடாது என்பதுதான் இந்தப் பார்ப்பன இந்துமதம் தனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. அதுவும் அப்படிப்பட்ட சித்தாந்தத்தை தனது லட்சியமாக ஏற்று, அதை ஊர்முழுவதும் பரப்பும் ஒருவனாக இருந்தால் அவன் எப்படி  இருப்பான்? அவன் மணிகண்டனைப் போலத்தான் இருப்பான். அவன் சார்ந்த கட்சி எப்படிபட்டதாய் இருக்கும். அது காமவெறியர்களின் கூடாரமாகவே இருக்கும்.

 இப்படி ஒரு கீழ்த்தரமான செயலை தனது கட்சிக்காரன் செய்துவிட்டான், அவனைத் தண்டியுங்கள் என்று இதுவரை இந்துமுன்னணித் தலைவன் இராமகோபாலன் வாய்கூட திறக்காமல் இருக்கின்றான் என்றால், அவனது யோக்கியதை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட அயோக்கியன் தான் வீரத்துறவியாம். கலவரம் செய்வது, பிரியாணி திருடித் தின்பது, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்வது என தமிழ்நாட்டில் ஒரு குட்டி ராமராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டு இருக்கின்றான் இந்தப் பார்ப்பன பரதேசி. தமிழக காவல்துறை இதுபோன்ற காவிபயங்கரவாதிகளின் கூலிப்படையாகவே செயல்பட்டு வருகின்றது. நந்தினியைக் காணவில்லை என அவரின் தாய் ராசக்கிளி இரும்புலி குறிச்சி காவல்நிலையத்தில் புகார்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சும்மானாட்சிக்குக் கூப்பிட்டு விசாரிப்பதுபோல விசாரித்துவிட்டு அவனை அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.  17 நாட்கள் கழித்தே நந்தினியின் அழுகிய உடல் மீட்கப்பட்டிருக்கின்றது. அடையாளத்தை அழிக்க காவல்துறையும், மணிகண்டனும் சேர்ந்து சதி செய்ததாகவே ஊர்மக்கள் சொல்கின்றார்கள். நடந்ததை எல்லாம் பார்க்கும் போது நமக்கும் அப்படித்தான் தெரிகின்றது. தமிழக காவல்துறை காசுகொடுத்தால் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பல வழக்குகளில் நாம் பார்த்திருக்கின்றோம்.

  இவ்வளவு மோசமான, தமிழகத்தையே தலைகுணிய வைத்திருக்கும் இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகளின் எதிர்வினை என்பதுதான் அந்தப் பெண்ணின் கொடூர கொலையைவிட மோசமானதாக இருக்கின்றது. விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை நந்தினிக்காகப் போராடின. நமக்குத் தெரிந்து இந்தப் பிரச்சினையில் மிகத் தீவிரமாக போராடியது திராவிடர் விடுதலைக்கழகம் மட்டும்தான். மற்றவை எல்லாம் ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு அல்லது தங்களது இணையப்பக்கத்தில் ஒரு கட்டுரையை மட்டும் கண்துடைப்புக்காக வெளியிட்டுவிட்டு தனது கவனம் முழுவதையும் ஜல்லிக்கட்டின் மீது குவித்துவிட்டார்கள். அவர்களுக்கு ஜல்லிக்கட்டிற்காக குரல் கொடுப்பதால் இருக்கும் பயன் நந்தினிக்காக குரல் கொடுப்பதால் கிடைக்காது என்பதால் நந்தினியின் கொலையை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு மாட்டிற்கு இருக்கும் மரியாதைகூட ஒரு ஏழை தலித் பெண்ணின் வாழ்க்கைக்குக் கிடையாது

 நந்தினிக்காக பேசுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் ஒரு காரணம் தேவைப்படுகின்றது. அது ஏனோ இந்த இந்திய சமூக அமைப்பில் எப்போதுமே நந்தினிகளுக்குக் கிடைக்காத அரிய பொருளாகவே இருக்கின்றது. அதை அன்று மனு தடுத்தான், இன்று அவனின் வாரிசுகள் தடுக்கின்றார்கள். இன்னும் எத்தனை நந்தினிகளின் மரணம் இங்கு ஒரு பெரும் போராட்டத்தைக் கொண்டுவரும் என்று தெரியவில்லை. நந்தினிகள் மனிதர்களாய் பிறந்ததற்குப் பதில் மாடுகளாய் பிறந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 தலித் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள். ஆனால் இந்தச் சமூகம் எந்தவித அசைவும் அற்று, வயிறு புடைக்க உண்ட மலைப் பாம்பைப்போல படுத்துக் கிடக்கின்றது. தலித்துகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க பல சட்டங்களை இந்த அரசு இயற்றியுள்ளது. ஆனால் சட்டங்கள் எப்போதுமே தாங்கள் ஆதிக்க சாதிகளின் நண்பன் என்பதைத்தான் அடக்கமாக காட்டி வருகின்றன. காவல் நிலையத்தில் ஒரு தலித்தே உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், அவர் ஆதிக்க சாதிகளின் சார்பாகவே செயல்படுபவராக இருப்பார். கூடுமானவரை கட்டப்பஞ்சாயத்து பேசப்படும். அதற்கும் படியவில்லை என்றால் ஏதாவது நீர்த்துப் போக வைக்கும் வழக்காக அதை மாற்ற முயற்சி நடக்கும். அதையும் மீறி மக்கள் போராட்டங்களால் வழக்குப் பதியப்பட்டாலும் நீதிமன்றங்கள் அவர்களை விடுதலை செய்துவிடும். இதுதான் பல ஆண்டுகளாக நாம் இந்திய நீதிமன்றங்களில் பார்த்துவரும் துயரக்காட்சி.

  மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலன் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி தன்னை உறவு கொண்டுவிட்டு ஏமாற்றிவிட்டார், அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மும்பை உயர்நீதி மன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் 21/01/2017 அன்று தீர்ப்பு கொடுத்தார். அதில் “திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளிப்பதை, உறவுக்குத் தூண்டியதாக ஒவ்வொரு பலாத்கார வழக்கிலும் கருத முடியாது. படித்த இளம்பெண் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித்தால் அவருடைய முடிவுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி தூண்டினார் என்று கூற முடியாது. மேலும் இந்தச் சமுதாயம் மாறி வருகிறது. அதே வேளையில் பல நடத்தை நெறிகளை இந்தச் சமுதாயம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக திருமணத்தின் போது கற்புடையவளாக இருக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றது. இந்தச் சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கின்றது” எனத் தீர்ப்பளித்துள்ளார்.( நன்றி: தமிழ் இந்து)

  பெண்கள் மீது ஆண்களால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோலத்தான் நீதிமன்றங்கள் எப்போதுமே தீர்ப்பு வழங்குகின்றது. ஒரு பெண் திருமணத்திற்குப் பின்தான் பாலியல் உறவை மேற்கொள்ள வேண்டும் என்ற இந்து சமூக கருத்தியலின் பிரதிநிதியாக இருந்து, நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரைப் பொருத்தவரை அந்தப் பெண்ணுக்கு அவளுடைய காதலன் திருமணம் செய்துகொள்வதாய் சொல்லி, உறவுகொண்டுவிட்டு ஏமாற்றியதைவிட, அந்தப் பெண் திருமணத்திற்கு முன் உறவுகொண்டு இந்துசமயக் கருத்தியலை ஏமாற்றியதைத்தான் அவர் குற்றமாகப் பார்த்திருக்கின்றார். அந்தப் பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் ஒரு பொருட்டாகக்கூட அவருக்குத் தெரியவில்லை. திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் உனக்கு இதுதான் நிலைமை என்று அந்த நீதிபதி தனது தீர்ப்பால் எச்சரிக்கின்றார். ஒரு பெண்ணை நம்பவைத்து ஏமாற்றும் ஆண்களின் அயோக்கியத்தனத்தைப் பற்றி இந்த நீதிபதிக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஏனென்றால் இந்து சமூக அமைப்பில் ஒரு ஆணுக்கு உள்ள அடிப்படை உரிமை அது. பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கு முழுப்பொறுப்பும் அவர்களையே சாரும், ஆண்களைக் குற்றம் சாட்டமுடியாது என்பதுதான் இந்தக் கேடுகெட்ட நீதிபதியின் கருத்து.

நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இப்படி மனுதர்மத்தை அடிப்படையாக வைத்து நீதிவழங்கும் ஒரு நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்னும் குறிப்பாக தலித் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் அரசு அமைப்புகளை நம்பி தலித்துகள் தங்களை காத்துக் கொள்வது முடியாத காரியம் என்கின்றோம். அரசு அமைப்புகளின் இந்த அநீதியான செயல்பாடுகள் தான், மணிகண்டன்கள் போன்ற கழிசடைகள் பெண்களைத் துணிந்து ஏமாற்றுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றது. ஆட்சியாளர்களுக்கு சவால்விடும், அவர்களின் இருத்தலையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் பெரும் மக்கள் போராட்டங்கள் இன்றி தலித்துக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியாது. ஆனால் அப்படியான ஒரு நிகழ்வு நிகழுமா என்பதுதான் நம்முன்  உள்ள மிகப்பெரிய கேள்வி.

 ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த போது, ஜல்லிக்கட்டைத் தண்டி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதில் யாருமே வைக்காத கோரிக்கை தலித்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது. ஒரு கோரிக்கையாகக் கூட வைக்கும் தகுதியை அது இன்னும் எட்டவில்லை என்பது எவ்வளவு கேவலமானது! பார்ப்பனிய ஒழிப்பும்,ஏகாதிபத்திய எதிர்ப்பும் எங்களின் கொள்கைகள் என்று ஊரை ஏமாற்றிவரும் அயோக்கியர்கள் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று ஆதிக்க சாதிகளை குளிர்விக்கத் தெரிந்தவர்களுக்கு ‘நந்தினிக்கு நீதி வேண்டும்’ என்று கேட்கவோ, இல்லை ‘தலித்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்கவோ தோன்றாதது தற்செயலான ஒன்றல்ல. அது அவர்களின் எண்ணத்தில் இரண்டறக் கலந்த பார்ப்பனியத்தின் வெளிப்பாடு. போராட்டத்தில் பிடிக்கப்பட்ட பதாகைகளில் ஒன்று கூட நந்தினிக்கு நீதி கேட்கவில்லை. இத்தனைக்கும் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபிக்கு எதிரான கருத்தியல் இழையோடி இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நந்தினியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்பது உள்ளபடியே பார்ப்பன எதிர்ப்புகூட தலித்துகளை ஒதுக்கி வைத்துவிட்டுதான் நடைபெறுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

 உண்மையிலேயே பெரியாரின் கொள்கைகளையும், மார்க்சின் கொள்கைகளையும் கடைபிடிப்பதாய் சொல்பவர்கள் ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குப் குரல் கொடுப்பதா, இல்லை நந்தினியின் படுகொலைக்குக் குரல் கொடுப்பதா என்ற நிலையில் அவர்கள் நந்தினியின் படுகொலைக்குத் தான் முன்னுரிமை கொடுத்து, அதை தமிழகம் தழுவிய பிரச்சினையாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் ஆதிக்க சாதி ஆண்டைகளுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே போராடிய போலி ஜாதி ஒழிப்புப் போராளிகளை நிச்சயம் வரலாறு குப்பைத்தொட்டியில் தான் வீசி எறியும். அதை அவர்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

- செ.கார்கி

Pin It