"தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக" ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் தற்கொலைக்குக் காரணம் கடன் சுமை. கடந்த வருடம் தமிழகத்தில் 40% அளவிற்கே பருவமழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழையும் எதிர்பார்த்தபடி பொழியவில்லை.

இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா ஆகிய இரு சாகுபடிகளும் தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டுள்ளது. விவசாயம் செழிக்கவில்லை. பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து தண்ணீர் உரிய முறையில் திறக்கப்படாததாலும் காவிரி பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது. சம்பா நெற்பயிர்கள், பருத்தி, சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் காய்ந்து கிடக்கின்றன.

tamilnadu drought

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போய் இந்த ஆண்டும் சம்பாவும் முழுமையடையவில்லை. நவம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 98 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் வரவில்லை. கர்நாடகா இதில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு துணை நிற்பதால் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதித்து செயல்படவில்லை. அதனைப்போல் ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நீரும் முழுமையாக வரவில்லை. சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஆந்திர முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்ததின் விளைவு தற்போது தண்ணீர் தர ஆந்திரா முன்வந்துள்ளது. தமிழகத்திற்குரிய நீரைப் பெறுவதில் தமிழக அரசு அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட மறுக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது மட்டுமே போதும் என்ற மனநிலையில் அது இருக்கிறது. 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக, மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தம் தர ஏன் மறுக்கிறது என்பது புரியவில்லை.

பொதுப்பணித்துறையின் கீழுள்ள 89 அணைகளில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அணைகளில் நீர்மட்டம் வறண்டு போயுள்ளன. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளும் நீர் இல்லாமல், புதர் மண்டிப்போய் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது. இப்பிரச்சினைகளின் தீவிரத்தை தமிழக அரசு இன்னும் உணரவில்லை. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகளும், காலிக்குடங்களுடன் பொதுமக்களும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

"தமிழகத்திற்கு உரிய காவிரித் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடாததாலும், பருவமழை பொய்த்ததாலும் நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து சருகாகிக் கிடக்கின்றன. தமிழக அரசு இது குறித்து இதுவரை எந்த ஆறுதல் வார்த்தையும் தெரிவிக்கவில்லை. காவிரி டெல்டாவில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனனர். டெல்டா மாவட்ட அமைச்சர்கள்கூட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்கவில்லை" என குற்றம்சாட்டினார் காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.

நீண்ட துயிலில் இருந்த தமிழக அரசு ஒருவழியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க அமைச்சர்களை அனுப்பியது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணத்தை அறிவித்தது. அதிலும் விவசாயிகளின் உயிரிழப்பை குறைத்துக் காட்டியும், நிவாரணங்களைக் குறைத்து அறிவித்தும் விவசாயிகளை வஞ்சகம் செய்துள்ளது. ஏக்கருக்கு ரூ. 25000 வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை புறக்கணித்து வெறும் ரூ. 5,465 மட்டுமே நிவாரணமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தை சில மாதங்களுக்கு முன்பே வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்திருக்க வேண்டும். 30% மழை குறைவிற்கே கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் 70% மழை பொய்த்த நிலையிழும் வறட்சி மாநிலமாக அறிவிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டது மிகவும் தவறான அணுகுமுறை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இதுவே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணத்தைத் தழுவ காரணமாக இருந்திருக்கிறது.

கடந்த 16ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வறட்சி நிவாரணமாக ரூ. 39.565 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கு இதுவரை சாதகமான பதிலை மத்திய அரசு தரவில்லை. அதேபோல் வார்தா புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 22,573 கோடி நிதியும், இடைக்கால நிதியாக ரூ. 1000 கோடியும் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழக அரசு துரிதமாக செயல்படவேண்டிய தருணத்தில் இருக்கிறது. விவசாயமும், விவசாயிகளும் செழிக்க வேண்டுமானால் பல நடவடிக்கைகளை உடனே எடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வகை பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் தொழிலில் இலாபம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட வேண்டும். லாபகரமான சந்தை வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வை எட்ட வேண்டும். முதலில் அவர்களை அழைத்துப் பேச வேண்டும். தாமதப்படுத்தினால் விவசாயிகள் நிலை மேலும் நெருக்கடிக்குள் சென்றுவிடும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It