புரட்சி! தமிழகத்தில் அரசியல் தலைவர்களின், சினிமா நடிகர்களின் பெயர்களோடு மட்டும் இணைக்கப்பட்டிருந்த அர்த்தமற்ற வார்த்தை இது. ஆனால் இன்று “ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி” என பாரதி மெய்சிலிர்த்து வர்ணித்த ருசியப் பிரளயத்தை நினைவூட்டும் உண்மைச் சமராக உருமாற்றம் பெற்றிருக்கிறது.. “பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால் புரட்சி அதுவாகும்” என்று விவரித்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அய்யா. தமிழகத்துக்கு ஒரு புதுவழியை தந்திருக்கின்றன(ர்) காளைகள்.

தமிழ் வசந்தம், தமிழர் புரட்சி, தைப் புரட்சி, ரத்தமில்லா யுத்தம் என்றெல்லாம் பலவாறாக வர்ணிக்கப்படுகிற “சல்லிக்கட்டுப் போராட்டம்” தமிழகத்தை ஓர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அடித்து எழுப்பியிருக்கிறது. தலைநகராம் சென்னை முதல் காலூராம் கன்னியாகுமரி வரை இந்தப் போராட்டம் நடைபெறாத இடமே இல்லை.

இனப்படுகொலை, கொலைப்பொருள் அணுஉலை, முல்லைப்பெரியார் நீரணை, நீரின்றி வறண்ட காவிரி என எதற்குமே அசையாதத் தமிழர் கூட்டம் ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே நடக்கும் ஏறு தழுவலுக்காக இறங்கி வருவானேன்? பற்பல பதில்களைப் பகர்கின்றனர் பண்டிதர்கள். சமூக ஊடகங்கள் சாதித்தனவாம்; தமிழர் பெருமை தறிகெட்டு எழுகிறதாம்; அக்கிரமங்கள் எழச்செய்த ஆத்திரங்கள் தடுப்பணை உடைத்து தகதகக் கின்றனவாம்.

தனித்தனியான இப்பதில்கள் தவறானவை. இவ்விடைகளின் கூட்டுக்கலவை உன்னதமானா லும், இன்னும்பல வினையூக்கிகள் கலந்த விளக்கமே உண்மையானது. இந்தி எதிர்ப்புப் போர் தந்த எழுச்சியின் ஆணிவேர் அசையாமல் இருந்தாலும், அரசியல் கொண்டை கோடம்பாக்கத்திற்குள் குப்புற விழுந்தது. தலைவர்கள் நடிகராயினர், நடிகர்கள் தலைவராயினர். பின்னர் ஈழப் பிரச்சினை எழுந்தபோது இங்குள்ளத் தமிழரின் சதையும் ஆடிற்று. தமிழக ஊசல் இந்தியம்--தமிழம் என ஊடாடி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தமிழம் முனையில் தட்டி நிற்கிறது. தமிழரெல்லாம் கொதிநிலை அடைந்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் ஆழ் கலாச்சாரம், அன்றாடப் பொருளாதாரம், அடிமைத்தளை அரசியல் என முப்பெரும் விடயங்களை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

புறநானூற்றுக் காலம் முதலே போற்றிவரப்படும் ஏறு தழுவல், மஞ்சு விரட்டு என பற்பல பெயர்களில் அழைக்கப்படும் சல்லிக்கட்டு ஓர் ஆழமான தாக்கத்தை தமிழர் வாழ்வில், கலாச்சாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. நம்மில் பலர் மாட்டையேப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம், வீர விளையாட்டுக்கு எதிராகக்கூடக் களமாடலாம். ஆனாலும் நம்மனைவருக்குள்ளும் ஊடாடிக் கொண்டிருக்கும் ஆழ் கலாச்சாரம் மிக முக்கியமான ஒன்று.

உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் தனிமனிதனின் மனப்பாங்கிற்குக் கீழே, ஆழமான மனப்பாங்கு ஒன்று இருப்பதாகச் சொல்கிறார். கார்ல் யங் என்பவர் குழுக்களின் மனப்பாங்கிற்குக் கீழே ஆழமான ஒன்றுபட்டக் குழு மனப்பாங்கு ஒன்று இருப்பதாகச் சொல்கிறார். இந்த ஆழ் மனப்பாங்குகளைத் தனிமனித ஆழ்மனம் என்றும், குழும ஆழ்மனம் என்றும் பார்க்கலாம். ஒரு குழுமத்தில் நிலவும் ஒரே மாதிரியான எண்ணப் பதிவுகள் அம்மனிதர்களை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உருவாக்குகின்றன. இந்தக் குழும ஆழ்மனத்தை ஆழ் கலாச்சாரம் என்றும் அழைக்கலாம். இந்த ஆழ் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கை பற்றிய மனப்பாங்குகளையும், செயல்பாடுகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்றாட வாழ்வின் இன்றியமையா அம்சங் களுள் ஒன்று கதை சொல்லல். இலைமறை காய்மறையாக வெளியாகும் கருத்துக்கள் (subtexts, undertexts), வெளிப்படையாகத் தோன்றும் கருத்துக்கள் (overtexts), சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்றவற்றின் உதவியோடுதான் இந்த கதைகளை நாம் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும். ஆழ்மனதில் உறைந்திருக்கும் ஆழ் கதைகளும் (deep texts) முக்கியமானவை. நமக்குள் புதைக்கப்பட்டு, நமது பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப்போன இந்த ஆழ்கதைகள்தான் நம்மை அறியாமலேயே நம்மை இயக்குகின்றன.

காளையடக்குதல் ஒரு கலாச்சாரக் கதையினை சொல்கிறது. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டைக்கும் தமிழக சல்லிக்கட்டுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. அங்கே ஒரே ஒரு முரட்டுக் காளையும், ஒரே ஒரு மாடுபிடி வீரரும் மட்டும் முட்டிமோதுவர். மிகப் பெரும்பாலான போட்டிகளில் வீரர் காளையைக் கொல்வார், காளை கசாப்புக்கடைக்குப் போகும். வெகுசில தருணங்களில் காளை வீரரைத் தாக்கும், வீரர் மருத்துவமனைக்குப் போவார்.

ஆனால் தமிழகத்தில் முரட்டுக் காளை களும், அடக்கும் வீரர்களும் கூட்டமாக மல்லுக்கட்டி நிற்கின்றனர் பொதுவெளியில். பார்வையாளர்களும் அந்த பரபரப்பில் தம்மை மறந்து குதூகலிக்கின்றனர். சில நேரங்களில் அவர்களும் காளையடக்குவதில் தற்செயலாகப் பங்கேற்பதுண்டு. நம் நாட்டில் நடப்பது ஸ்பெயின் நாட்டில் நடப்பது போல ஒரு கொலைவெறிச் செயலல்ல, இது ஒரு வெகுசனக் கொண்டாட்டம். உடல் பலம், உள நலம், அச்சமின்மை, ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் என பல அம்சங்கள் கொண்ட வீர விளையாட்டு இது. தமிழர் ஆழ் கலாச்சாரத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் புதைந்து கிடப்பது தெளிவு.

police students 600வாடிவாசல்களில் மாடுகளை உசுப்பிவிட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துன்புறுத்தல்கள் நடந்தாலும், சல்லிக்கட்டு மாடுகளுக்கு பெரும் சங்கடங்கள் தருவதில்லை. அப்படியே வீர விளையாட்டில் குறைகள் இருந்தாலும் அவற்றை தமிழ் மக்கள்தான் மேலாண்மை செய்து மாற்றியமைக்க வேண்டுமே தவிர, எங்கிருந்தோ வந்த ஓர் அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனம் இங்கே வந்து நம்மிடையே நாட்டாமை செய்ய முடியாது. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய், காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி கடிதம் போட்டான் வெள்ளைக்காரன் என்கிற கதையாக இருக்கிறதே? அப்பட்டமான அரசியல் காலனியாதிக்கம் மருவி நேரடி பொருளாதார, கலாச்சார காலனியாதிக்கமாகி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும்போது, பீட்டாவையும் ஒரு பீடையாகத்தான் பார்த்தாக வேண்டும்.

சல்லிக்கட்டுக் காளைகள் வீட்டு செல்லப் பிராணிகளாகவே போற்றி வளர்க்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் போற்றுதலின் பின்னால் ஏழை விவசாயிகளின் அன்றாடப் பொருளாதாரம் புதைந்து கிடக்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவ சாயிகளிடம் விவசாயத்தை கைவிட்டு சேவைத் துறைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரைத்தார். அடுத்து வந்த பிரதமர் மோடியோ, இன்னும் ஒருபடி மேலே போய், விவசாயிகளுக்கு ரூபே கார்ட் கொடுத்து அவர்களை டிஜிட்டல் மய மாக்குவேன் என்கிறார். இவர்கள் இருவரின் பன்னாட்டு நிறுவன அடிமை அரசுகளும் மாபெரும் இந்திய உணவுச் சந்தையை தங்கள் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர், வார்க்கின்றனர். இதற்குத் தடையாக இருக்கும் நமது நாட்டு மாடுகளையும், நமது வேளாண் பாரம்பரியத்தையும் அழித்தொழிக்க கடிதில் முனைகின்றனர்.

நமது பாரம்பரிய காளை ரகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கலப்பின மாடுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல நாட்டு மாடு இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஏறத்தாழ அறுபது விழுக்காடு பாரம்பரியக் காளைகள் அழிந்துவிட்டனவாம். மதுரைப் பகுதியில் காணப்படும் புளிக்குளம் மாடுகள்

35,000 மட்டுமே இருப்பதாகவும், இவற்றுள் காளைகள் வெறும்

4,000 மட்டும்தான் என்றும் சொல்கிறார்கள். மரபை இழந்து, மாடுகளை இழந்து, மண்ணை இழந்து, இன்றைய விவசாயி மாண்பையும் இழந்து நிற்கிறார்.

எங்கே எதைக் கொள்ளையடிப்பது, அதை யாரிடம் எவ்வளவுக்கு கைமாற்றுவது என்று சிந்திக்கும், செயல் படும் மாநில அரசுக்கு பாரம் பரிய காளைகளைக் கணக் கெடுப்பதற்கும், அவற்றை வளர்ப்போரை ஊக்குவிப் பதற்கும், நம் வேளாண் பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் நேரம் இருப்பதில்லை. இதற்கிடையே லட்சக்கணக்கான தமிழ் இளை ஞர்களும், மாணவர்களும் மெரீனா கடற் கரையில் போராடும் போதே, டென் மார்க் நாட்டிலிருந்து நூறு காளைகள் சென்னைக்கு வந்துஇறங்குகின்றன.

சல்லிக்கட்டில் காளைகளை அடித்தார்கள், குத்தினார்கள் என்று ஆதங்கப்படும் பீட்டா அமைப்பு, குளிர்ப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டுக் காளைகளை சுட்டெரிக்கும் வெயிலடிக்கும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து திணிப்பதை ஏன் எதிர்க்கவில்லை? அவற்றின் விந்துக்களை சேகரித்து செயற்கை முறையில் பசுக்களைக் கருத்தரிக்க வைக்கும் அயோக்கியத்தனத்தை ஏன் கேள்விக்குள்ளாக்குவதில்லை?

உலகெங்குமுள்ள மனிதர்களை மேற்கத்திய தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் எனும் மும்மைக்கு அடிமைப் படுத்திவிட்டவர்கள், நாட்டு மாடுகளைக்கூட விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக் கிறார்கள். முதலாளித்துவ உலகமயத்தின் அம்சங்களான தாராளமயமாக்கப்பட்டச் சந்தை, ஒருங்கிணைக்கப்படாத தொழிலா ளர்கள், சுருங்கிப்போகும் அரசு, சிக்கனப் போக்கு, சனநாயகமின்மை, உள்கட்டமைப்புகளைச் சரி செய்தல், (பொருளாதார) நிலைநிறுத்தல் நடவடிக்கைகள் போன்றவை ஓர் அடிமைத் தளை பூட்டிய அரசியலையே எளிய மக்கள் மீது திணிக்கின்றன. பொருளாதார அமைப்புக்களான உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதிக் குழுமம் போன்றவை ஒரு பக்கம் ஏழை எளியோரை பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்த, சார்பு நிறுவனங்கள் அதே வேலையை கலாச்சார, அரசியல் தளங்களில் இன்னும் அழுத்தமாகச் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக, பீட்டா (PETA) எனும் விலங்குகள் பாதுகாப்பு நிறுவனம் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவேப் பாடுபடுகிறது. விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் இந்த நிறுவனம் விலங்குகளை உணவாக பாவிக்கக்கூடாது, அவற்றிலிருந்து பெறப்படும் தோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது; விலங்குகளை வைத்து மருத்துவ ஆய்வுகள் செய்யக் கூடாது என்று போராடுகிறது. பெரும் செல்வம் பெற்றிருக்கும் இந்த அமைப்பு அநாதை விலங்குகளுக்குப் புகலிடம் கொடுக்கும் சரணாலயமாகவும் இயங்குகிறது. அதே நேரம், தன்னால் நீண்ட நாட்களாகக் காப்பாற்ற முடியாத விலங்குகளை கருணைக் கொலை செய்வதாகவும் குற்றச் சாட்டு எழுகிறது.

தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை ஒரு வருடத்துக்கு ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் மாபெரும் வர்த்தகமாக இருக்கிறது.

இனவிருத்திக்கு பயன்படும் நாட்டுக் காளைகள் இந்த வர்த்தகத்தில் மிக முக்கிய மான அங்கங்கள். சல்லிக்கட்டை அழித்து விட்டால், நாட்டுக் காளைகள் இனம் அழியத் துவங்கும், அதன் மூலம் கலப்பினக் காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வரலாம். இன்னோரன்ன காரணங்களால்தான் பீட்டா சல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கிறது. மாட்டுத்தீவன நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் போன்றவையும், அவற்றின் லாபம் பெறும் நடவடிக்கைகளும் பீட்டாவின் எதிர்ப்புக்குப் பின்னால் இருக்கின்றன என்றும் சந்தேகிக்கின்றனர் பலர்.

இப்படியாக தமிழர்களின் ஆழ் கலாச்சாரம், அன்றாடப் பொருளாதாரம், அடிமைத்தளை அரசியல் எனும் மூன்று விடயங்களும் சல்லிக்கட்டு பிரச்சினையில் விரவிக் கிடப்பதை நாம் பார்க்கலாம்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் விலங்குகள் நலப் பிரிவு, சல்லிக்கட்டு விளையாட்டு பழக்கப்படுத்திய விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துகிறது, எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்றும், விலங்குகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் போன்ற விலங்குகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. காங்கிரசுக் கட்சி தலைமை வகித்த மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம் பெற்றிருந்தாலும், அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உரிய அறிவிப்பை உடனே வெளியிட்டனர். அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை போல, இதையும் இவ்விரண்டு பெரிய கட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டன.

கடந்த 2011 யூலை 7 அன்று மன்மோகன் சிங்கின் காங்கிரசு அரசு காளை மாடுகளை காட்சி விலங்குகளாக பயன்படுத்துவதை தடை செய்து அறிவிப்பாணை ஒன்றைக் கொண்டு வந்ததும் சல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் சட்ட விரோதமாயின. அதனையடுத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2014 மே 7 அன்று சல்லிக்கட்டுத் தடையை உறுதி செய்தது. பிரிவு 77-ல் இந்திய விலங்குகள் நல வாரியம் சொல்வதுபோல சல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் போட்டி போன்ற நிகழ்வுகள் 1960 மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் சில சரத்துக்களை மீறுகின்றன. கடந்த 2011 அறிவிப்பாணையை உயர்த்திப் பிடித்த உச்சநீதிமன்றம் காளைகளை காட்சி விலங்குகளாக பயன்படுத்துவது கூடாது என்று அறிவித்தது. தமிழ் நாடு சல்லிக்கட்டு மேலாண்மைச் சட்டம் இந்தியாவின் மிருக வதைத் தடுப்பு சட்டத்தோடு முரண்படுவதால், அது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேற்கண்ட சட்ட சிக்கல்களால் 2015, 2016-ஆம் ஆண்டுகளில் சல்லிக்கட்டு நடத்தப் படவில்லை. டிசம்பர் 22, 2015 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அது கொண்டுவரப்படவுமில்லை, சல்லிக்கட்டு நடத்தப்படவுமில்லை. மத்திய அரசு இந்த விவகாரத்திலும் நமக்கு சாதகமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2016-ஆம் ஆண்டு பொங்கலுக்கு முந்தைய வாரம் (சனவரி 8, 2016) மத்திய அரசு சல்லிக்கட்டு நடத்துவதற்கான ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்தது. தமிழக மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் திரண்டு தொடர் போராட்டம் நடத்தத் துவங்கினர். போராட்டத்தின் அழுத்தத்தால், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தில்லிக்குச் சென்று பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று, தமிழக பொறுப்பு ஆளுனரால் பிரகடனப்படுத்தி, சட்டமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தார்கள்.

மத்திய, மாநில அரசுகளும், பெரிய அரசியல் கட்சிகளும் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக இயங்குவது போதாதென்று, பீட்டா போன்ற அமைப்புகளும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றன. இந்த அரசுகளும், மிருக உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் அடுத்து என்னென்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

சல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். சிங்களப் பேரினவாதமும் இருபது நாடுகளும் சேர்ந்து ஈழத்தில் நடத்திய இனப்படுகொலை, அப்போது இங்கே ஆட்சியிலிருந்த தி.மு.க. அரங்கேற்றிய கபட நாடகங்கள் எல்லாமே தமிழகத் தமிழர்களை பெருங்கோபம் கொள்ளச் செய்தன. தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னோ டிகள் கொல்லப்பட்டதாக அறிவித்துக் கொண் டாடியது இன்னும் சீற்றத்தை உருவாக்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான நீண்ட நெடிய அறப்போராட்டம், முல்லைப்பெரியார் அணையைக் காத்திட நடந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டம், கெயில் குழாய் பதிப்புக்கு எதிரான கொங்கு மண்டல விவசாயிகளின் போராட்டம், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிரான காவிரி டெல்டா மக்கள் போராட்டம், காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிய மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு எதிரானப் போராட்டம், தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான போராட்டம், குளச்சல் / இனையம் துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் என தமிழ் இளைஞர்கள் நிறையப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக் கப்படுவதுபோல, தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆற்று மணலைத் திருட ஒருவர், கடல் மணலை அபகரிக்க இன்னொ ருவர், கிரானைட் கற்களை ஏப்பம் விட மற்றொருவர், காடுகளை அழிக்கப் பிறிதொருவர் என்று இலாகா ஒதுக்கி ஸ்வாகா பண்ணுகிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி மக்கள் வளங்கள் கூறுபோட்டுக் கொள்ளையடிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் குடிநீருக்கு அலைமோதும்போது, பெப்சி, கோக் கம்பெனிகள் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மேற்படி நிகழ்வுகளோடு, நிலத்தடி நீரின் அளவு பெருமளவு குறைந்துபோய், மழை பொய்த்து, விவசாயம் அழிந்து, விவசாயிகள் தற்கொலை செய்யத் துவங்கியதையும் தமிழ் இளைஞர்கள் கவனித்திருக்கிறார்கள். தாங்கள் பெறும் தரமற்ற கல்வி, நீட் நுழைவுத் தேர்வுத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படை ஊதியமின்மை, வருங்காலம் குறித்த நம்பிக்கையின்மை போன்றவையும் அவர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன.

இன்னொரு புறம் மாஃபியா அரசியல், அடிமைத்தனம் போன்றவற்றில் ஊறித் திளைத்த மாநில அமைச்சர்கள் பல்லாயிரம் கோடிகளை அள்ளிச் சுருட்டுவதும், ஊழல் ஊரெங்கும் தலைவிரித்தாடுவதும் நடந்து கொண்டிருந்தது. மத்திய அரசு மக்களை முற்றிலுமாகக் கைவிட்டு, வெளிநாடுகளுக்கும், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்களுக்குமாக செயல்படத் துவங்கிற்று. பணமதிப்பு நீக்கம் இன்னும் கோபமூட்டியது. சல்லிக்கட்டு எனும் பாரம்பரிய பண்பாட்டு உரிமைகளிலும், உணர்வுகளிலும்கூட அரசு கைவைத்தபோது

“அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்”

என வள்ளுவம் எச்சரித்ததுபோல, தமிழ் மாணவர் களின், இளைஞர்களின் பொறுமைத் தேரின் அச்சு ஒடிந்தது. நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம், நம் தமிழர் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனும் வைராக்கியம் அவர்களின் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் பரிணமித்தது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம் நம்பிக்கை. ஆனால் தைப் புரட்சியே பிறக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

சனவரி 16 அன்று மாலையில் அடுத்த நாள் காலை “நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பாகக் கூடுவோம்” என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஏதாவது நடக்கிறதா, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவேச் சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட இளைஞர்கள் போராட்டத்தில் பேசச் சொன்னார்கள். சல்லிக்கட்டுப் பற்றி மட்டுமே பேசுங்கள், அரசியல் பேசுவதைத் தவிர்த்திடுங்கள் என்று அறிவுரைத்தனர். தமிழக அரசியல் சூழல்; மத்திய மாநில அரசுகள் பற்றியெல்லாம் அவர்கள் பெற்றிருந்த அறிவு; சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகள் குறித்த ஆழமானப் புரிதல்; தெளிவான தீர்க்கமான நிலைப்பாடுகள்; சாதி, மதம், கட்சிகள், ஊர், தொழில் போன்றவைக் கடந்து அவர்களை ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்த பாங்கு; வெறுப்பு கோபமின்றி அதிகாரிகளைக் கையாண்ட சாதுரியம்; அறிவார்ந்த பேச்சுக்கள் எழுத்துக்கள் அனைத்துமே பெரிதும் மெச்சும்படியாக இருந்தன.

சல்லிக்கட்டுப் பிரச்சினையில் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுத்து களம்கண்ட மாணவர்கள், இளைஞர்களின் மேடைப் பேச்சுக்களில், முழக்கங்களில், தனிப்பட்ட அளவளாவல்களில் மேற்குறிப்பிட்ட பல்வேறு தமிழகப் பிரச்சினைகளும் நீக்கமற நிறைந்திருந்தன. சல்லிக்கட்டு ஒரு குறியீடுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளான

“தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” “தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு!”

அனைவராலும் முழங்கப்பட்டன. போராட்டம் தமிழகம் முழுவதும் பரந்து வியாபித்தது. சனவரி 19 அன்று பாம்பனில் நின்று கொண்டிருந்தேன். அப்பகுதி கல்லூரி மாணவர்கள் சாரை சாரையாக அறுபது கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள இராமநாதபுரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

“மீசையை முறுக்கு,

பீட்டாவை நொறுக்கு!”

“சின்னம்மா, சின்னம்மா,

ஓ.பி.எஸ். எங்கம்மா?”

“முட்டைன்னா ஒயிட்டு,

தமிழன்னா வெயிட்டு!”

“தடை அதை உடை!”

“தமிழன்டா!”

என்பன போன்ற முழக்கங்களை உரத்தக் குரலில் எழுப்பிச் சென்றார்கள். நாமக்கல்லார் கவிதை வரிகளும் நீக்கமற நிறைந்திருந்தன.

அடுத்து இராமநாதபுரத்துக்குச் சென்றேன். மாணவர்களும், மாணவியரும் அடுத்தடுத்து தனித்தனி கூட்டமாகக் கூடியிருந்து முழக்கங் கள் எழுப்பினர். பிரதமர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என முதல்வரிடம் கையை விரித்திருந்த தருணம் அது. அடுத்து என்ன நடக்குமோ என்று யாரும் அறியாதிருந்த நேரம். ஒரு போராளியாகப் பேசுவதா, அல்லது ஒரு தந்தையாகப் பேசுவதா என என்னுள் ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டி ருந்தது. இறுதியில் ஒரு தந்தையாக அந்த மாணவ, மாணவியரை எச்சரிக்கையுடன் போராடும்படி அறிவுரைத்தேன். அங்கிருந்து பரமக்குடி போனோம். சாலையோரத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள் பேசச் சொன்னார்கள். சிக்கலான ஊர் என் றாலும், சிறப்பாக நடந்து கொண்டிருந்தது போராட்டம்.

திருப்புவனம், மானாமதுரை என போகும் வழி தோறும் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக மாண வர்கள், இளைஞர்கள் பதாகைகளுடன் அமர்ந் திருந்தனர், முழக்கங்களுடன் ஆர்ப்பரித் தனர். கனவுலகின் பரந்த தெருக்களில் கோலா கலமும் கொண்டாட்டமுமாக, உவகையும் உற் சாகமுமாக மக்கள் கூடி நின்று ஏதோ ஒரு பிரமாண்டத்தை வரவேற்றுக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும், உணர்வும் என்னுள் எழுந்தது. அது எல்லோருக்குள்ளும் எழுகிறது என்பதையும் ஒவ்வொருவராலும் உணர முடிந்தது.

முன்னிருட்டுக் குவிகின்ற மாலை வேளை யில் மதுரை மாநகருக்குள் நுழைந்தோம். பரபரப்பும், விறுவிறுப்புமாக மதுரை குதிரை போன்று எழுந்து நின்றது. கொட்ட வந்தக் கொடுந்தேளை ஒரு கூட்டம் கட்டெறும்புகள் கடித்துப் பிடித்து வைத்திருப்பதைப் போல, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏதோ ஓர் ரயிலை மடக்கிப் பிடித்து வைகை ஆற்றின் குறுக்கே நிறுத்தி விட்டிருந்தனர். ரயிலின் மீது, பாலத்தின் மீது, ஆற்றின் மீது, கரைகளின் மீது, காணும் இடமெல்லாம் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொது மக்கள். ஒட்டு மொத்த மதுரையே ஊருக்குப் போகிறதா, அல்லது உலகமே ஓடிவந்து மதுரையில் இறங்கியதா என்று வியக்கும் வண்ணம் மக்கள், மக்கள், மக்கள் வெள்ளம்! அவர்கள் மூச்சினிலே வெளிவந்த வீரமோ என்னவோ, அப்படி ஓர் அபார சக்தி காணுமிடமெல்லாம் கரைபுரண்டு ஓடியது. “எங்கெங்கு காணினும் சக்தியடா, எழுகடல் அவள் வண்ணமடா!” என பாரதிதாசன் பாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை பிடித்தாட்டியது. குதூகலம், நம்பிக்கை, புத்துணர்ச்சி -- அதுதான் புரட்சி என்பதை வாழ்நாளில் முதன்முறையாக நான் உணர்ந்தேன்.

அலங்காநல்லூருக்குப் போவோம் என்றனர் நண்பர்கள். அது ஓர் இடிந்தகரையாக சிலிர்த்து நின்றது. ஏராளமான மக்கள் கூட்டம் -- பெரும்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள்! இயற்கை உபாதைகளுக்காகக்கூட எவரும் எழாத கட்டுப்பாடு, அதீத கவனம், அபரிமித எழுச்சி! எனது கால்கள் தரையில் பட முடியாதவாறே இழுத்தும், தள்ளியும் கூட்டத்துக்கு நடுவே கொண்டு சென்றனர் தோழர்கள். மக்களின் நடுவே நிற்பது மந்திரம் போன்றது என்றறிவேன். ஆனால் மந்திரவாத மாமகத்தின் நடுவே நிற்பது? இரவு பாலமேடு சென்றபோது, அந்த ஊர்ப் பெரியவர்கள் வரவேற்றனர். அங்கே மட்டும்தான் நான் என் வயதொத்தவர்களைப் பார்த்தேன் இந்தப் புரட்சியில்.

“மதுரைப் போர்க்களம் தமுக்கம் பகுதியில் அமைந்திருக்கிறது, அங்கேயும் போங்கள்” என்றார்கள் உள்ளூர் தோழர்கள். எண்ணிலடங்கா மக்கள் கண்மூடாதிருந்து ஆடியும், பாடியும், ஆகாவென முழங்கியும் புரட்சி போற்றிக் கொண்டிருந்தனர். புரட்சியின் எழுச்சி அதன் வெளிச்சத்தைவிட வீரியமிக்கதாய் இருந்தது.

“புரட்சி என்பது ஓர் இரவு விருந்தல்ல...அது ஒரு கிளர்ச்சி, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்பைத் தூக்கி எறியும் வன்முறைச் செயல்”

என்றார் மாவோ. ஆனால் தமிழகத்தின் குறுக்கும், நெடுக்கும் நான் கண்டது சாதி, மதம், கட்சி, ஊர், தொழில், பாலினம், பாலியல் பேதங்களற்ற அறவழி அரசியல் பொங்கல். எனது வாழ்நாளில் நான் மகிழ்ந்து நெகிழ்ந்து கொண்டாடிய மாபெரும் பொங்கல் இந்தப் பொங்கல்தான். புரட்சிப் பொங்கல்!

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர் களும், இளைஞர்களும் ஆறு நாட்கள் அற்புதமான ஓர் அறவழிப் போராட்டத்தை எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி அருமையாக நடத்தினார்கள். ஆனால் சனவரி 23, 24 ஆகிய நாட்களில் தமிழகக் காவல்துறையினர் ஒரு மாபெரும் வன்முறை வெறியாட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள், மீனவ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.

சனவரி 27, 2017 அன்று பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்கள் சுப. உதயகுமாரன், ஆண்டனி கெபிஸ்டன், கதிரவன் ராயன், அருள் தாஸ், சி. பிரான்சிஸ், அ. ரே. அபினேஷ், அஜு அரவிந்த், வழ. வி. நடராஜன், இளவரசன் அப்பு உள்ளிட்டோர் நொச்சிக்குப்பம், மாட்டான்குப்பம், நடுக்குப்பம், வெங்கடரங்கன் பிள்ளைத் தெரு உள்ளிட்டப் பகுதிகளுக்குச சென்று அங்குள்ள மக்களை சந்தித்தோம்.

நொச்சிக்குப்பம் பகுதியில் வாழும் மீனவப் பெண்கள் கடந்த 23 அன்று காவல்துறையினர் மாணவர்களை, பெண்களை அடித்து நொறுக்கியதாகவும், பலரும் இருசக்கர வாகனங்களை அப்படியேப் போட்டுவிட்டு ஓடியதாகவும் சொன்னார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒரு சில காவல்துறையினர் வயிற்றில் உதைத்ததால் அவருக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டு அவதியுற்றதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் மாட்டான்குப்பம் கெனால் தெரு பகுதிக்குச் சென்றோம். அங்கே வசிக்கும் பல பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் தாங்களும், தங்கள் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். முரளி என்கிற இளைஞர் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்ட தனது முதுகையும், தலையையும், கால்களையும் காட்டினார். வினோத் என்கிற இன்னொரு இளைஞர் தனது முகத்தில் காவல்துறையினர் அடித்து மூன்று பற்களை உடைத்ததைக் காட்டினார். அஸ்வினி என்கிற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தை காவலர்கள் அடித்து உடைத்தபோது, தட்டிக்கேட்டதால் அவரையும் மூர்க்கத்தனத்துடன் அடித்து உதைத்ததாகத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியின் பெண்கள் தாங்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டதையும், தங்கள் வீடுகளிலுள்ள டி.வி., பாத்திரங்கள், நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டதையும் காண்பித்தனர். பல வீடுகளில் காவல் துறையினர் ஓட்டுக் கூரைகளை உடைத்து நொறுக்கியதையும் காண்பித்தனர். சில காவலர்கள் தங்கள் கால்சட்டைகளின் சிப்களைத் திறந்து, உடலுறுப்பை எடுத்துக்காட்டி, தகாத உறவுக்கு அழைத்ததாகவும் சொன்னார்கள். வாயால் பேச முடியாத ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லி தங்களைத் திட்டியதாகவும் முறையிட்டார்கள். பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

பின்னர் நடுக்குப்பம் கிராமத்துக்குச் சென் றோம். அங்குள்ள ஆண்களும், பெண் களும் தங்கள் பகுதியில் பெண்களால் நடத்தப் பட்ட பல மீன் கடைகள், வாகனங்கள், குடிசைகள் காவல் துறையினரால் எரித்து அழிக்கப் பட்டதையும், ஒருவிதப் பொடியைத் தூவி தீ மூட்டியதையும், பெண் காவலர்கள் தீ வைத்தத்தையும் சொன்னார்கள். வீடு வீடாக காவலர்கள் நுழைந்து அராஜகம் செய்ததாகவும், மக்களை பயங்கரமாகத் தாக்கியதாகவும் சொன்னார்கள். வெங்கடரங்கன் பிள்ளைத் தெருவில் வசிக்கும் மக்களும் தாங்கள் தாக்கப்பட்டதையும் ஏறத்தாழ பதினைந்து பேர் காவலர்களால் தாக்கப்பட்டு கைகள், விரல்கள் உடைக்கப்பட்டதையும் சொன்னார்கள். காவல்துறையினர் அவ்வப்போது வந்து பெரும் உளவியல் தாக்குதல் நடத்துவதையும் குறிப்பிட்டார்கள். சிவராஜபுரம், ரூதர்புரம் போன்ற பகுதி மக்களின் அனுபவங்களும் இதே மாதிரியானவைதான் என்று தோழர்கள் சொன்னார்கள்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் அலுவலகம் போன்றவற்றின் மிக அருகில் இருக்கும் இந்தப் பகுதியில் முதல்வரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்து மக்களை சந்திக்கவுமில்லை, என்ன நடந்தது என்று விசாரிக்கவுமில்லை. மாறாக, மத்திய அரசை மகிழ்விக்கும் விதத்தில் தீவிரவாதிகள் புகுந்தார்கள், தேசவிரோதிகள் நுழைந்தார்கள் என்றெல்லாம் கதைகள் சொல்வதும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சொல்லும் புனைகதைகளைத் திரும்பச் சொல்வதுமாக இருந்தார்கள்.

இம்மாதிரியான தேசவிரோத குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உளவுத் துறைகள், புலனாய்வுத் துறைகள் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஏன் இவர்களைப் பற்றி அரசுக்கு முன்னரே சொல்லவில்லை. மெரீனா போராட்டத்தின் முதல் ஆறு நாட்களில்கூட எதுவும் தெரிவிக்கவில்லையே ஏன்? சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்தேறிய தமிழகக் காவல்துறையின் அராஜகங்கள் பற்றி நீதி விசாரணை ஒன்று நடத்த வேண்டுமென்றும், குற்றம் செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு வேண்டி போராடிய மாணவர்கள், இளைஞர்கள், அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மீனவர்கள், பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழகத்திற்கு ஒரு புது வழி தந்த நமது மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து நொறுக்கி, அவர்களின் ஒப்பற்ற போராட்டத்தை வன்முறைக் காடாக்கி, அவர்கள் காட்டும் வழியை அடைக்க முயல்கின்றனர் பல ஆதிக்க சக்திகள். தில்லியில் எழுதி தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை உடனடியாக போராட்டக்காரர்களோடும், பொதுமக்களோடும் பகிர்ந்துகொண்டு, அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டுப் பெற்று, சனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். புதிய அவசரச் சட்டம் மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் பிரிவு 22-ஐ நீக்குவதாலும், சல்லிக்கட்டு என்பதை மறு விவரணம் செய்வதாலும் மாணவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அதை குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அங்கீகரித்ததும், போராட்டம் வெற்றிக் களிப்போடு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் இந்தச் சட்ட வரைவை யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்தது ஏன்? மறைத்தது யார்? வன்முறை வெறியாட்டம் துவங்கிய பிறகே அது வாட்ஸ் அப்பில் வெளிவந்ததன் மர்மம் என்ன?

போராட்டத்தை வெற்றியோடு, கொண்டாட்டத்தோடு முடிக்கவிடக் கூடாது என்று முன்னரே தீர்மானித்திருந்தனர் ஆதிக்க சக்திகள் என்கிற சந்தேகம் எழுகிறது. அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேசிக்கொண்டிருந்த வேளையில், நம் மாணவர்களின் போராட்டம் பி.சி.ஏ. சட்டத்தில் தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது, அவர்களின் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைத்தது. இது சங்கப் பரிவாரத்தை சங்கடப்படுத்தியது. காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்களாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கீழடிப் பெருமைகளை மறைத்து நம்மை கீழே தள்ளப் பார்க்கிறவர்கள் நாம் மேலே எழுந்து வருவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

தில்லி நிலைமை இதுவென்றால், சென்னை நிலைமை இன்னும் மோசம். தமிழரின் பாரம்பரிய உரிமைகளையும், பெருமைகளையும் மீட்டெடுக்கும் பொருட்டு தமிழக மாணவர்களும், இளைஞர்களும் அற்புதமான போராட்டமொன்றைக் கையிலெடுத்து, எள்ளளவும் வன்முறையின்றி அழகுற நடத்தி, மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பது திராவிடஸ்தான் பிரகஸ்பதிகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியது. ஊழலும், ஊதாரித்தனமும், வளக்கொள்ளையும், பணக்கொள்ளையுமாக ஐம்பது ஆண்டுகள் ஆண்டு அனுபவித்தவர்களுக்கு இது நிச்சயமாக ஏற்புடையதாய் இருக்கவில்லை. கடிதம் எழுதிப் போடுவதும், கதைகள் சொல்வதும், ஒருவரையொருவர் குறை சொல்வதுமாக நம்மை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு, மாணவர் காட்டும் புதுவழி கிலி பிடிக்கச் செய்தது. போராட்டத்தை திசை திருப்புவதிலும், வன்முறையை நிகழ்த்துவதிலும் பிரகஸ்பதிகள் பலர் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அதேபோல, ஆளும் கட்சியில் அதிகாரத்துக்கு வர விரும்பும் தரப்பு ஆண்டுகொண்டிருக்கும் தரப்பை வீழ்த்த வன்முறையைத் தூண்டியதாகவும் சொன்னார்கள். தில்லிக் காரர்களும் வன்முறையையே காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து கொல்லைப்புறமாக உள்ளே நுழையவும் ஆசைப்பட்டதாகவும் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், ஆதிக்க சக்திகள் அனைத்தும் அம்பலப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை. மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாணவர்கள் காட்டும் இந்தப் புதுவழியில் தொடர்ந்து பயணம் செய்து தமிழர் எல்லோரும் நம் வளங்களை, வாழ்வாதாரங்களை, வாழ்க்கையை, வருங் காலத்தை செழுமைப்படுத்த சபதமேற்போம்.

நம் மாணவர்களால், இளைஞர்களால் நாம் இன்று ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். தமிழரை கிள்ளுக்கீரை என்று நினைத்தவர்கள் எல்லாம் இன்று அண்ணாந்து ஆச்சரியத்தோடும், மரியாதையோடும் பார்க்கிறார்கள். தில்லி எசமானர்களும், சென்னை அடிமைகளும் அவர்களைக் கண்டுகொள்ளாதது போல நடித்தாலும், உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மாபெரும் வெற்றி!

போராட்டம் தோல்வி என்றோ, முடிந்து விட்டது என்றோ சொல்பவர்களை அருகே வரவிடாமல் துரத்தி விடுவோம். போராட்டக் களத்தில் தோல்வியே கிடையாது. அண்மை வெற்றி, தாமதமான வெற்றி என இரண்டு வெற்றிகள் மட்டுமே அங்கேக் கிடைக்கின்றன. அதே போல, தமிழ் மக்கள் போராட்டம் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. இந்தத் தண்டமிழ் நாட்டை தூய்மைப்படுத்தும் பணி, நமது குழந்தைகளுக்கும், அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் நம் நாட்டை வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றும் பணி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது தொடர்ந்தாக வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான இடிந்தகரைப் போராட்டம் தோல்வியில் முடிந்தது என்று முடிவுரை எழுதிய மூடர்கள் முழி பிதுங்கி நிற்கிறார்கள். தமிழகமெங்கும் நம் பிள்ளைகள் நடத்திய அசம்பாவிதம் ஏதுமில்லா அறவழிப் போராட்டம், பெண்களை முன்னிலைப்படுத்தி மகிமைப்படுத்திய விதம், சாதி மதம் பாரா சன்மார்க்க நெறிமுறை, சமரசமில்லா உறுதிப்பாடு, கடலுக்குள்ளே இறங்கி உயிரையேத் துச்சமென மதித்து நின்ற துணிச்சல் போன்றவையெல்லாம் இடிந்தகரை முடிந்தகரையல்ல, அது தமிழினத்தின் விடிந்தகரை என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன.

போராட்டத்தைத் தொடரும் விதமாக தமிழ் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் அனைவரும் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தை உடனே கையிலெடுப்போம்:

[1]        சினிமாக்காரர்களை பொழுது போக்குக்காக மட்டுமே பயன்படுத்து வோம். சினிமாவை விட்டு விலகி குறிப்பிட்ட காலம் மக்கள் தொண்டு ஆற்றாத வரை, இவர்கள் பொதுவாழ்க் கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

[2]        பணமில்லாப் பரிவர்த்தனைகளில் இயன்றவரை ஈடுபட மாட்டோம். சிறு குறு வியாபாரிகள், உள்ளூர் கடைகளையே ஆதரிப்போம். பன் னாட்டு நிறுவனங்களை, அவர்கள் ஊக்குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்.

[3]        கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களைத் தொடவே மாட் டோம்.

[4]       தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்களை அன்றாட வாழ்வில் அதிகம் சேர்த்துக் கொள்வோம். உள்ளூர் விவசாயத்தை பேணிக் காப்போம்.

[5]        தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்கரையில் அமைக்கப்படும் அழிவுத் திட்டங்களை ஏற்க மறுப்போம்.

[6]        தமிழர்களுக்கு எதிராக எழுதும், பேசும் பத்திரிகைகள், இதழ்கள், டி.வி. ஊடகங்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

[7]        பெயருக்குப் பின்னால் 'ஜி' போட்டு யாரையும் அழைக்க மாட்டோம், அந்த அடைமொழியை சேர்த்துப் பேச மாட்டோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமது மாணவர்களில், இளைஞர்களில் உண்மை, உறுதி, ஒழுக்கம் கொண்ட ஒவ்வொருவரும் தலைவர்களாக முகிழ்த்தாக வேண்டும். நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போட்டியிட வேண்டும்.

மெரீனா, அலங்காநல்லூர், கோவை போன்ற பகுதிகளில் நடத்திய துரோகங்களுக்கு, துயரங்களுக்கு பதிலளிக்கும் அடுத்தக்கட்டப் போராட்டமாக அது அமையட்டும். தொடரட்டும் மக்கள் புரட்சி!