கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம்தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது ஏன்? போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால்? இந்தக் கேள்விக்கான விடையில் தான் தமிழகம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள் புதைந்திருக்கின்றன.

ஜனவரி 17 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு அலங்காநல்லூரில் 135 பேர் கைது செய்யப்பட்டதோடு துவங்கியது இந்தப்போராட்டம். அடுத்தநாள் மாலை மெரினாவில் நிற்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத்தொட்டது. அதற்கு அடுத்தநாள் அதன் பெருக்கல் தொகையை தமிழகம் பார்த்தது. 135 பேர் சுமார் பத்து லட்சம் பேராக மாறியதற்கு இடையில் இருந்தது வெறும் ஐம்பது மணி நேரமே. இப்படி ஒரு பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது?

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது; எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான்.

தனி நபர்களோ, குழுக்களோ, இயக்கங் களோ இதனை கட்டி எழுப்பவில்லை. இது பின்னப்பட்ட வலைத்தொடர்புகளால் மட்டும் உருவானதல்ல. உணர்வுகளின் ஒருங்கிணைப்பால் மேலெழுந்த பேரலை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து கொடுத்துவந்த அடியின் அழுத்தம் தாங்காமல் ஏற்பட்ட வெடிப்பு. காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என நீளும் புறக்கணிப்பின் வலிதாங்காமல் வெளிவந்த குமுறல்.

அப்பல்லோ முதல் போயஸ் கார்டன் வரை, சேகர் ரெட்டி முதல் ராமமோகன ராவ் வரை முகம் சுழித்து, கூனிக்குறுக வைக்கும் தமிழக அரசியலின் அசூசையால் ஏற்பட்ட எழுச்சி. அதனால் தான் மக்கள் இவ்வளவு தூய்மையாக இதனை நடத்திக்காட்டினார்கள். நீங்கள் யார்? நாங்கள் யார்? என்பதை உலகுக்குச் சொல்ல ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்பட்டான். அந்த ஆசை எல்லோருக்கும் இருந்ததால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் கைஉயர்த்தி கோஷம் போடுவதை இத்தனை லட்சம் குடும்பங்கள் முதன் முறையாக அனுமதித்தன. அந்த ஆசைதான் இசைஞானியை போர்ப்பரணி பாடவைத்தது. அந்த ஆசை தான் காவலரை சீருடையோடு போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்தது. அந்த ஆசைதான் மீனவக் குப்பத்திலிருந்தும், மசூதியிலிருந்தும், உணவுப் பொருட்களை அள்ளிவழங்க வைத்தது. அந்த ஆசை தான் உணவும் உறைவிடமும் பார்க்காமல் ஊர்கள் தோறும் இளைஞர் கூட்டத்தைச் சுழல வைத்தது.

இன்னும் சொல்லப்போனால் உங்களை பயமுறுத்தியதும் அந்த ஆசைதான். ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் ஒற்றைக்கல்கூட வீசப்படவில்லை, பேருந்தின் சிறு கண்ணாடி கூட உடையவில்லை. இத்தனை லட்சம்பேர் பொதுவெளியில் இத்தனைநாட்கள் கூடியும் டாஸ்மாக்கின் வருமானம் துளிகூட உயரவில்லை. நீங்கள் எதிர்பார்த்த எந்த பலகீனமும் இல்லாமல் ஒரு கூட்டம் கண்ணுக்கு முன்னால் உருத்திரண்டு நின்றது. அதனால்தான் நீங்கள் பதற்றத்தின் உச்சிக்குப் போனீர்கள். இப்போராட்டத்துக்குள் இருந்த அறம் உங்களை நடுங்கச்செய்தது. அதனால்தான் அதற்கு நேரெதிரான சொற்களான, தீவிரவாதம், அல்கொய்தா, சமூகவிரோதிகள் எனப் பேச ஆரம்பித்தீர்கள். தேசியக்கொடியை போர்த்திக் கொண்டால் போலீஸ் அடிக்காது என்று நம்பி நீங்கள் ஓங்கிய லத்திக்கு முன் உடல்குறுகி உட்கார்ந்தான் மாணவன். கடற்கரைச் சாலையில் தேசியக்கொடிக்கு அவன் செய்த மரியாதையின் தூசிக்கு ஈடல்ல, அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் செய்தது.

பத்து மணிக்கு மேல் எங்கும் கூட்டம் நடத்தக்கூடாது, அப்படியே கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் மக்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒதுக்குப் புறத்தில் தான் கூட வேண்டும். அதற்கு அனுமதி வாங்க பலமுறை அலையவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் எத்தனையோ விதிகளை உருவாக்கி ஒன்று கூடும் மனிதச்செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்களின் அத்தனை உத்தரவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் தமிழகத்து இளைஞர்கள். அதுவும் உங்களின் தலைமையகத்து வாசலில். ஒரு நாள் இருநாள் அல்ல, ஏழுநாட்கள். எப்படிச் சகிக்க முடியும் உங்களால்?

காவல்துறையின் கணக்கும் ஆளுங்கட்சியின் கணக்கும் ஒன்றாயின. 17ஆம் தேதி போராட்டம் துவங்கியது. முதல்வரின் அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில்தான் அது நடந்தது. ஆனால், அந்த சில நூறடியை கடப்பது எளிதல்ல, பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தில்லிபோவது எளிது. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற பொய்களைச் சொல்லி ஏமாற்றிய மத்திய, மாநில அரசின் தலைமைகள் இருவரும் சந்தித்த பொழுது புதிதாய்ச் சொல்ல பொய்களற்று முழித்தீர்கள். ஏனென்றால் உண்மையின் ஆவேசம் தமிழகத்தின் வீதிகள் தோறும் எழுந்துநின்றது. வேறு வழியே இல்லாமல் 20ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்தீர்கள். ஒரே நாளில் அவசரச்சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதே நாளில் மத்தியஅரசின் அனைத்து துறைகளும் ஒப்புதல் கொடுத்தன. அன்றே ஆளுநரின் கையொப்பமும் பெற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் அமலானது. உங்கள் அதிகாரத்தின் ஆணவம் நொறுங்கிவிழ ஒற்றை நாள்தான் ஆனது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது.

mariana students protest 600ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி என்ற அறிவிப்பு, உங்களின் அரசியல் தோல்வியோடு நேரடியாக சம்பந்தப்பட்டது. திறந்துவிடப்படும் காளை முதலில் யாருடைய குரல்வளையை குத்தும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த உண்மைதான் உங்கள் இருவரையும் ஆத்திரங் கொள்ளச்செய்தது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான். இந்த மாபெரும் எழுச்சியோடு உங்களின் பூர்வபயமும் இணைந்து கொண்டது. ஜல்லிக்கட்டுக்கான கோபம், செத்து மடியும் விவசாயின் கோபமாக மாறிவிடக்கூடாது. ஏடிஎம் வாசல் மெரினா சாலையோடு இணைந்துவிடக்கூடாது. வாடிவாசலில் இருந்து காளைகள் துள்ளிக்குதிக்க வேண்டும்; ஆனால் திமிறும் அதன் திமில் ஒடுக்கப்பட வேண்டும். அதற்குத்தான் நீங்கள் திட்டம் வகுத்தீர்கள். நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டம் என்னவென்றே சொல்லாமல் வித்தை காட்டினீர்கள். சட்டத்தை கண்ணில் காட்டாமல் நம்பிக்கையைக் கோரினீர்கள். உங்கள் மீதான கடந்த கால அவநம்பிக்கையையே உங்களுக்கு சாதகமான கருவியாக மாற்றினீர்கள்.

நாங்கள் சட்டம் கொண்டுவந்துவிட்டோம்; அவர்கள் கலையாமல் இருக்கிறார்கள் என்றீர்கள். போராட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்களை நிறுத்த சாமர்த்தியமாய் செயல்பட்டீர்கள். ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கானவர்களாக நீங்கள் மாறி போராடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து யாரெனக் கேட்டீர்கள். போராட்டக்களத்தில் வேறு முழக்கம் கேட்கிறது என்று சொன்னீர்கள். தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்; அரசியல் பக்குவமற்றவர்கள் என்று, அழைத்துவரப்பட்டவர்களை வைத்து பேசவைத்தீர்கள். தலைமையற்ற போராட்டம் இப்படித்தான் ஆகும் என அக்கறையோடு முத்துக்கள் உதிர்த்தீர்கள். தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றீர்கள் கடைசியாக ஒசாமா பின்லேடனிடம் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். அலங்காநல்லூரின் பெயர்ப் பலகையில் ஆப்கானிஸ்தான் என்று எழுதி கதையை முடித்தீர்கள்.

நீங்கள் விரும்பும் நாளும் வந்தது. உங்களின் பூட்ஸ் கால்கள் உற்சாகமாக களம் இறங்கின. உங்களின் லத்திகள் தமிழகம் எங்கும் சுழன்றன. தடிகளையும், கற்களையும் கொண்டு பொதுவெளியில் ஒரு பேச்சுவார்த்தையை துவக்கினீர்கள். நீங்கள் விரும்பியதைப் போலவே எதிர்கற்கள் வீசப்பட்டவுடன் உற்சாகமடைந்து உலகத்தைப்பார்த்து நீதிசொல்ல ஆரம்பித்தீர்கள். சட்டம் - ஒழுங்கை காக்கும் வீரபுருஷர்களாக மாறினீர்கள்.இறுதியாக உங்களைப்பாராட்டி 27ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அறிக்கையும் வாசித்தார். அதில் அவர் குறிப்பிடுகிறார்: ‘ஜல்லிக்கட்டு தடை நீங்கிய மகிழ்ச்சியை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனுபவிக்க முடியாதபடி சமூகவிரோதிகள் செய்துவிட்டனர்’

எவ்வளவு உண்மையான வாசகம் இது. நீண்ட காலத்துக்குப்பின் முதலமைச்சரின் அறிக்கைக்கு எழுந்து நின்று மரியாதை செய்யத் தோன்றியது. முதல்வர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளின் நோக்கம் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்ல, போராட்டம் என்ற எண்ணத்தையே முறிப்பது. அதற்கான திட்டத்தைத்தான் அவர்கள் செயல்படுத்தினர். ஆனால் இயற்கையின் விதி வேறொன்று; முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்.