ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல இந்து மதவெறிக் கும்பல்களால் போலியாக உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்றன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை ‘அரசியல்படுத்தப் போகிறோம்’ என்றும், இது ‘தைஎழுச்சி’, ‘தமிழ்வசந்தம்’ என்றெல்லாம் அடைமொழிகளைக் கூறி ஜோதியில் அய்க்கிய மானார்கள் பல புரட்சியாளர்கள்.
அதாவது, போதையில் இருக்கும் ஒருவனை மாற்ற வேண்டுமானால், தானும் ஒரு ‘ஆஃப்’ ப அடிச்சிட்டு, டாஸ்மாக்ல ஒக்காந்துதான் மாத்துவாங்க போல... அதவிடக் கொடுமையான ஸ்டேட்மெண்ட் ஒன்னக் குடுத்தாங்க... “போராட்டத்தின் போது பெண்களிடம் மாணவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டார்கள்”.....இதவிட தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும், வழக்கமாக மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிவரும் பல்வேறு இயக்கத் தோழர்களையும் கொச்சைப்படுத்தும் வாக்கியம் எதுவுமே இருக்காது.
இதுவரை அனைத்து இயக்கங்களும் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும், ஆண் தோழர்கள், பெண் தோழர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லையா? இந்த வார்த்தையைச் சொல்லிய இயக்கங்களின் தோழர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லையா? கல்லூரி, கேண்டீன், பீச், பார்க், தியேட்டர், மால்ஸ் என பல பொதுஇடங்களில் ஆண் - பெண் பேதமின்றிப் பழகி வரும் மாணவர்களும், இளைஞர்களும் இதுவரை பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லையா? அந்தப் போராட்ட நாளில்தான் திடீரென கண்ணியம் கரைபுரண்டு ஓடியாதா? சரி அதெல்லாம் போகட்டும்...
இப்படியெல்லாம் சொல்லி மாணவர்களை அரசியல்படுத்தப் போகிறோம் என்று போனவர்கள், மெரினாவில் கடைசிநாளில் மாணவர்களும், இளைஞர்களும் அடித்து விரட்டப்பட்டபோது, யாரையுமே காணோமே? அம்பேத்கர் பாலம், ரூதர்புரம் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப் பட்டபோதும், குடிசைகள் கொளுத்தப்பட்ட போதும் ஒருவரையும் காணோமே? எல்லாம் முடிந்த பிறகுதான், கரைக்டா “எஸ்...பாஸ்” என்று ஆஜரானார்கள்.
இன்னும் சில போராளிகளோ, “தலித்துகளிடமிருந்து அப்படி கோரிக்கை வரவில்லை. வந்தால் அதை ஆதரிப்போம். ஆனால் இப்போது நடப்பது ஜல்லிக்கட்டைத் தாண்டிய புரட்சி” என்று பேசி வந்தார்கள். அதாவது தலித் மக்கள் ஜல்லிக்கட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டுமாம். அதன்பிறகுதான் இந்தப் போராளிகள் வந்து காப்பாற்றுவார்களாம். மேலும் பலர், “ஜல்லிக்கட்டில் ஜாதி இருப்பது உண்மைதான். ஆனால் அது நமது பாரம்பரியம், தமிழர் அடையாளம். அதை ஜனநாயகப் படுத்தவேண்டுமே ஒழிய முற்றிலும் அழிந்து போக வேண்டும் எனக்கூற முடியாது” எனக் கூறினர்.
மேற்கண்ட அனைத்துப் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், தினமும் தலமாட்டுல ஏ.கே 47 ஐ வச்சுக்கிட்டே தூங்கிறவங்களுக்கும், 24 மணி நேரமும் எதிரிகளின் ரத்தத்தோட கைநனைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கு... தேனி மாவட்டம் போடிக்குப் பக்கத்தில் உள்ள அய்யம்பட்டியில் சக்கிலியர் சமுதாய மக்களை இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விட்ட தில்லை. இந்தத் தைஎழுச்சிக்குப் பிறகாவது, தமிழ் வசந்தத்திற்குப் பிறகாவது எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றும், நாங்களும் தமிழரின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வருகிறோம், எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து ஒரு குரல் எழும்பியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக, அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் சக்கிலியர்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து, ‘தமிழ்ப்புலிகள் கட்சி’யின் தேனி மாவட்டச் செயலாளர் தோழர் வைரமுத்து அவர்கள், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதற்குத் தேனி மாவட்ட நிர்வாகம், அங்குள்ள பிற்படுத்தப்பட்ட ஜாதியினருடன் சேர்ந்து ஒரு அமைதிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் அருந்ததியர்கள் பங்கேற்பை மறுக்கும் நோக்கத்தோடு “உள்ளுர்க்காரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது” என கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல்செய்துள்ளது. அதை நீதிமன்றமும் ஏற்று கொண்டுள்ளது. ‘அரசியல்படுத்துபவர்கள்’, ‘தைஎழுச்சிக்காரர்கள்’, ‘தமிழ்வசந்தக் கம்பெனிகள்’ ‘ஜனநாயகக்காரர்கள்’ அனைவரையும் அய்யம்பட்டி அழைக்கிறது. தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களையும் அழைக்கிறது.
ஆதாரம்: இண்டியன் எக்ஸ்பிரஸ் 16.02.2017