வறட்டுத்தனமும்
வருணப்பூச்சும் நிறைந்த சாதிய வெளியில்
எவற்றினைக் கூறிட்டுப் பார்த்தாலும்
கூர்தீட்டப்பட்டிருக்கிறது
தூய்மையும் தீட்டும்

சுயஅடையாளமற்று எவரொருவரும்
அசைந்திட முடியா
பிறப்பின் வாசத்தையும்
சாதியின் தோற்றத்தையும் வைத்தே
வெளியின் அதிகாரம் பரவலாக்கப்படக்கூடும்

வக்கிரப்படிநிலை கொண்ட
சாதியின் கொடுவாள்கள்
தேவையின் தன்மை உணர்ந்து
தக்கவைத்துக் கொள்ளும்
தன் அடையாள இருப்பை

எவற்றையெல்லாம் தீட்டென
ஒதுக்கி வைத்தாயோ
அதையும் சதுர்வர்ணத்தாலே
நக்கிடத்துடிக்கும் சபலப்புத்தியும்
வெக்கங்கெட்ட சாதிவெறியும்
தெறிக்கும் உன் விரைத்த குறியில்

பிய்த்தெறியப்பட்ட வெளியில்
உயிர் வதைக்கும் வலியாய்
சேரி தீட்டென
ஒதுக்கி வைத்த எம்குலப்பெண்களை
பொய்ப்பித்தலாட்ட வலையில் மல்லாரச்செய்து
மண்டியிட்டு நக்கும் போது
எங்கே போனது?
உனது சாதிய கோட்பாடு

நீ தொட்டு நக்குவது
காலையோ, கையையோ அல்ல
பிறப்பால் இழிவென ஒதுக்கித்தள்ளிய
சேரியின் பிறப்புறுப்பை

ச்சீ………..ச்சீ…….
நாய்கள் புணரும் நடுவீதியில்
நான்கைந்து பேர் சேர்ந்து
நக்கிடத்துணியும்
உரிமையை யார் தந்தது உனக்கு

புனிதமும் தீட்டும் மோதிக்கொள்ளும்
முரண்களுக்கிடையில் கிளர்ந்தெழும்
மானங்கெட்ட சாதிக்கோட்பாட்டின் வதை குழியில்
யாரை ஒதுக்கித் தள்ளுகிறாய்?

ஆகமக் குருதியையும், ஆதிக்கவெறியையும்
புறத்தே வைத்து முறுக்கேறிய
மிருகத்தின் வெறிகொண்டலையும் ஆண்குறியை
அறுத்தெறிய காத்திருக்கிறது
சேரியின் பண்ணரிவாள்கள்………

- நீதிமலர், வழக்குரைஞர்

Comments

7 comments

7
venkateswaran
இரசனைக்காக எழுதப்படுகின்ற கவிதைகளுக்கு மத்தியில் பாலின, சாதிய, பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கும், பாலியல் வனபுணர்சசிக்கும் ஆளாக்கப்படுகின்ற ஒவ்வொரு பெண்ணினுடைய இரணங்களும், அவள் முன்வைக்கின்ற கேள்விகளும் சாதிய சீழ்பிடித்த சமூகத்தின் மீது காரி உமிழ்வதாய் அமைந்துள்ளது இக்கவிதை. கவிதை எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்
uma
சாதியை கட்டித்தழுவும் சாதிவெறிபிடித்த ஜாம்பாவான்களுக்கு சாதியின் வறட்டுத்தனத்தை மீளாய்வுக்குட்படுத்திக் கொள்ளென எச்சரித்துப் போகிறது இக்கவிதை.
priya
ஆணுக்கு இயல்பாகவே இருக்கின்ற பாலியல் வக்கிரத்தன்மை என்பது வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளும் முதலையைப் போன்றது. ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் திணிக்கின்ற பாலியல் வன்புணர்ச்சி என்பது சாதி என்கிற வாய்ப்பினை பயன்படுத்தி கட்டாய வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிற மிருகத்தனம் போன்றது.. சாதியையும், பாலியல் வன்புணர்ச்சியையும் அறுத்தெறிய காத்திருக்கும் பேராயுதமாய் .சேரியின் பண்ணறிவாள்.. சாதியையும், சாதியுறுப்பு வக்கிரத்தையும் வெளிப்படுத்திய நல்ல கவிதை..
sathiya
மென்மையாய் சொல்லிப் போகும் கவிதைகளுக்கு மத்தியில் வன்மையாய், ஆங்காரமாய், நிதர்சனமாய், ஓங்காரமாய் முரசொலித்துப் போகிறது இக்கவிதை. குறிப்பாக “புனிதமும் தீட்டும் மோதிக்கொள்ளும் முரண்களுக்கிடையில் கிளர்ந்தெழும் மானங்கெட்ட சாதியக் கோட்பாட்டின் வதைகுழியில் யாரை ஒதுக்கித் தள்ளுகிறாய்?” என்கிற வரிகளில் வெளிப்படுத்தியுள்ள நியாயமும் உண்மையும் சாதியை தரைமட்டமாக்குகிறது. பார்ப்பனீயத்தை கேள்விக்குறியாக்குகிறது.
tamilinian
கவிதை என்பது தொடர்ந்து பலமுறை வாசித்தால் மட்டுமே அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் காத்திருக்கும் பண்ணறிவாள் நமக்கு உள்ளாந்த அர்த்தத்தை கொடுக்கவில்லை. வெளிப்படையாய் எச்சரித்துப் போகிறது.
bhakathsig
இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறதா என்று ஆச்சர்யப்படும் சம்பவத்தைப் போல் ஒரு படைப்பாளியின் கவிதை இருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
malathi
கவிதையின் வலியும் இரணமும் விலைமதிப்பற்றதாக இருக்கிறது. இதுபோன்ற கவிதைகள் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறோம். இப்படிப்பட்ட கவிதைகள் படைப்புலகிலும், சமூகத்திலும் பெருத்த மாற்றத்தை நிச்சயமாய் உருவாக்கும். தொடரட்டும் உங்களின் எழுத்து போராட்டம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.