நேரு, நவ இந்தியச்சிற்பி. இன்று நாம் காணும் ஸ்வதந்திர சுவாசத்திற்கும், பொருளாதாரரீதியிலான வளர்ச்சிக்கும், பல்வேறு கட்டமைப்பு மாற்றத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் வித்திட்டவர். அவர் நடந்து சென்ற கால்தடங்கள் வழியே இந்தியா, பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, தனி நபர் வருமானத்தில் அதிகரிப்பு, தரமான உயர்கல்வி நிறுவனங்கள், மக்களுக்கு பயனளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், கலாச்சாரத் தனித்தன்மை கெடாத வகையில் வளர்ச்சி என எண்ணற்ற சாதனைகள் நிகழ்ந்தன. அவர் கண்ட இந்தியாவிற்கும், மோடி காணும் 'ஹிந்தி'யா அல்லது ஹிந்துஸ்தானத்திற்குமான ஒரு சிறிய ஒப்பீடு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
மதச்சார்பின்மையும் மனித உரிமையும்
நாடு விடுதலையடைந்து ஏறத்தாழ 17 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள், தான் சமகாலத்தில் அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசாக உருப்பெற்ற சமயத்தில், இந்தியாவின் மதச்சார்பின்மையினைக் கட்டிக் காக்கும் விதமாக, இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற குடியரசாகவே தொடரும் என்று உறுதிமொழி அளித்தவர். ஒரு முறை இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், பூரி ஜகந்நாதர் ஆலயத் தேரோட்டத்தில் பங்கெடுத்தபோது, மத நம்பிக்கைகளையும், மத அடையாளங்களையும், ஆள்வோர் வெளிப்படுத்தக்கூடாது என்று கடிந்துரைத்தவர் நேரு. ஒவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற பரிபூரண உரிமை உண்டு என்று உத்தரவாதத்தை அளித்த அவர், சிறுபான்மையினர் பாதுகாப்பில் பெரும் அக்கறை செலுத்தியதும், ஊரக மக்கள் வாழ்விலும் ஒளி விளக்கேற பல்வேறு நவடிக்கைகள் எடுத்ததும் வரலாறு.
இன்றைய பிரதமர் மோடியின் ஆட்சியிலும் இந்தியா மதச்சார்பற்ற குடியரசாகத்தான் உள்ளது, ஆனால் பெயரளவில் மட்டுமே. தான் ஒரு இந்து தேசியவாதி என்று கூறிக்கொள்வதில் பேருவகை கொள்வதாக மார்தட்டிக் கொள்கிறார் நரேந்திர மோடி. தான் பின்பற்றும் மதம் என்பதைத் தாண்டி, தான் உண்ணும் உணவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கூட இந்துத்வவாதிகளே இன்றைய காலக்கட்டத்தில் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணமாக, யூனிபார்ம் சிவில் கோடு கொண்டு வரப்போகிறதாம் மோடி அரசு. சிறுபாண்மையினத் திருமணச்சடங்குகளில் பெண்களின் உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உண்மை என்றாலும் அந்த போர்வையில் அவர்களது பண்பாட்டுக்கூறுகளையும் தனித்தன்மையினையும் ஆய்வுக்குட்படுத்துவது கேலிக்கூத்தான ஒன்றாகும். இவ்வளவு அக்கறையுள்ள மனிதர் அனைத்து மதங்களிலும் பாதிப்புள்ளாகும் பட்டியலினத்தவருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டு முறையினை உறுதி செய்யலாமே.
மோடி ஆட்சி செய்து வந்த குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து, 2009-ஆம் ஆண்டில் வெளியான 'டைம்ஸ் ஆப் இந்தியா'நாளேட்டில் , குஜராத்தில் 98% கிராமங்களில் இரட்டைக்குவளை முறை பின்பற்றப்படுதல், மதிய உணவு திட்டத்தில் தலித் மக்கள் ஒடுக்கப்படுத்தல், ஆலய நுழைவு மறுப்பு, ஐந்தில் ஒரு குழந்தைக்கு தீண்டாமையினால் போலியோ சொட்டு மருந்து மறுப்பு என ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவர் தான் இன்று அம்பேத்கர் வழியில் பா. ஜ. க அரசு செயல்பட்டு வருவதாக பூரிப்படைகிறார்.
மொழியுரிமை
இந்தி திணிப்பு போராட்டத்திற்குப் பின் இனி ஒரு போதும் விருப்பத்திற்கு மாறாக இந்தி கட்டாயப்படுத்தப்படாது என்று உறுதிமொழி அளித்தார் நேரு.
மோடியோ கொல்லைப்புறம் வழியே மீண்டும் இந்தியைப் பரப்ப நினைக்கிறார். சமீபத்தில் தன்னிடத்தில் மும்பையில் அரசு அதிகாரிகள் அனைவரும் இந்தியில் பேசிய போது மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம் அவர். போதாக்குறைக்கு அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற போதனை வேறு. இவை போக இந்தியாவின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தை சிறப்பிக்கும் வண்ணம் பள்ளிகளில் 'சமஸ்கிருத வாரம்' கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பே இல்லாத போது எதற்காக அதனைக் கொண்டாட வேண்டும். பேச்சு வழக்கிலில்லா வடமொழியினும் மூத்த, தமிழ் மொழியை உயர்த்த ஒரு நடவடிக்கை கூட எடுத்ததில்லை. முந்தைய அரசுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கங்கைக்கரையில் வள்ளுவருக்கு சிலை வைக்க இயலா நிலையே வட இந்தியாவில் நிலவுகிறது. யாரைக் குளிர்விக்க இந்திக்கும், வடமொழிக்கும் இப்படி பல்லக்கு தூக்குகிறார்? ஒவ்வொரு இனத்திற்குமான தனித்தன்மையினை அழிக்கும் இத்தகைய சித்தாந்தம் ஆர். எஸ். எஸ் அமைப்புக்கே சொந்தமானதன்றோ.
பொருளாதாரம்
'தி இந்து' நாளேட்டில் உலகமயமாக்கலின் பரிணாம வளர்ச்சியையும் அதன் எதிர்மறை விளைவுகளையும் படித்து வருகிறேன். இந்திய அரசியலமைப்பில் நம் நாடு ஒரு 'சோஷலிஸக் குடியரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு நேரு காட்டிய பாதை சோஷலிஸப் பொருளாதாரம். கட்டமைப்பு வளர்ச்சியில் மட்டுமே தனியார் கூட்டு தேவை என்பதே அவர் வகுத்த கொள்கை. ஆனால் நரசிம்மராவ் (இத்தனைக்கும் அவர் காங்கிரஸ்காரர்) தொடங்கி நரேந்திர மோடி வரை முதலாளித்துவத்திற்கே கொடி பிடித்து வருகின்றனர். மோடி ஆட்சி ஆரம்பித்த பின் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் முதல் கல்வி வேளாண்மை, போக்குவரத்து என எல்லாவற்றிலும் தனியார் கையே ஓங்குகிறது.
பொது மக்களின் ஆபத்பந்தவனாய் கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்களிலும் (காப்பீட்டுத் துறையில் 51%அந்நிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது) தனியார்மயம் அனுமதிக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களின் அன்றாட பிழைப்பாம் சில்லரை வணிகத்திலும் பெரு நிறுவன முதலைகள் கோலோச்சத் துவங்கி விட்டன. கல்வி வியாபாரமாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. மன்மோகன் ஆட்சியில் அம்பானி காலமென்றால் மோடியின் ஆட்சி அதானியின் காலமாக உள்ளது. சமீபத்தில் ஊடகத்துறையிலும் 100%அந்நிய முதலீடு கொண்டு வர மோடி முடிவெடுத்துள்ளார். இவையெல்லாம் யாருக்கு சாதகமான முடிவுகள்?உங்களுக்கு வாக்களித்து வெற்றி தந்த மக்களுக்கு நீங்கள் செய்யப்போவது என்ன? தெரியவில்லை.
கல்வி படும் பாடு
நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குடிமக்களுக்கு எழுத்தறிவித்தலில் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு ஐ. ஐ. டி, எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை தொடங்கினார். கல்வியில் மதச்சார்பின்மையை ஊக்குவித்தார்.
மோடி அரசிலோ, மனிதவள மேம்பாட்டு அமைச்சராய் முதலில் நியமிக்கப்பட்ட ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதியே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பார்களே, அப்படித்தான் அமைந்தது அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும். உயர்கல்வி நிறுவனங்களில் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது(உதாரணம்-ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்). பா. ஜ. க உறுப்பினர்கள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ளனர். (உதாரணம்-பிலிம் இன்ஸ்டிடியூட்). தாழ்த்தப்பட்ட, வடகிழக்கு மாணவர்கள் தாக்குதலுக்காளானார்கள். (உதாரணம்-ரோஹித் வெமுலா தற்கொலை, டெல்லியில் வடகிழக்கு பகுதி மாணவர் மரணம் உள்ளிட்டவை). இவற்றைக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எப்படி நகர்த்துவது.
இறுதியாக. . .
மொத்தத்தில் நேருவின் கனவுகளெல்லாம் உச்சி வானில் பறக்க விடப்பட்ட பட்டங்களாய் மிதக்கின்றன. மோடியும் சதாசர்வ காலத்திற்கும் விமானங்களில் பறந்து நம் நாட்டின் கௌரவத்தை காப்பாற்றி வருகிறார்(!).
- செ.த.ஆகாஷ், தஞ்சாவூர்