1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது. கி.பி.1200 முதல் இசுலாமியர்கள் 500 ஆண்டுகளும் அதன்பின் கிறித்தவர்கள் 200 ஆண்டுகளும் இந்தியாவை ஆட்சி செய்ததால் இந்து மதத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்து, மீண்டும் சனாதன தர்மத்தை நிலைநாட்டி, இந்தியாவை இந்துமத அடிப்படையில் இந்துக்களுக்கான நாடாகக் கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் குறிக்கோள்.

எனவே ஆர்.எஸ்.எஸ்.ம் அதன் கிளை அமைப்புகளான சங் பரிவாரங்களும் இசுலாமியர்களையும் கிறித்துவர் களையும் இந்து மதத்தின் பகைவர்களாகக் கருதி ஒடுக்க முனைகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் அமைப்பான பா.ச.க. ஒன்றிய அரசிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியதி காரத்தில் அமர்ந்த பின், சட்ட ஏற்புடன் இசுலாமியர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

இசுலாமியர்களை ஒடுக்கும் திட்டத்தின் ஒரு கூறாக 2019 திசம்பரில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA-சிஏஏ) நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒரே நாளில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இச்சட்டத் திருத்தம் இந்தியாவின் அண்டை நாடுகளான பாக்கித்தான், வங்கதேசம், ஆப்கானித்தான் ஆகிய மூன்று நாடுகளில் இசுலாம் மதத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்கள், கிறித்தவர்கள் (இப்பட்டியலில் கடைசி நேரத்தில் கிறித்தவர்கள் சேர்க்கப்பட்டனர்) 2014 திசம்பர் 31க்கு முன் இந்தியாவுக்குள் வந்திருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.modi caa nrcஇச்சட்டத் திருத்தத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான சிறீலங்கா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகியவை சேர்க்கப்படவில்லை. ஏனெனில், இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே மத ஒடுக்குமுறை இருக்கிறது என்கிற நச்சுக் கருத்தை இந்துக்களிடம் பரப்ப வேண்டும் என்பதே ஆகும்.

சிறீலங்காவில் பௌத்த மதத்தின் பெயரால் தமிழர்கள் கொடுந்துன்புறுத்தலுக்குள்ளாகி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்து, ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களான இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க சிஏஏ-வில் ஏன் வழிவகை செய்யவில்லை. இவர்கள் தமிழர்கள் என்கிற பகை உணர்ச்சியா? இதேபோல், மியான்மரில் உலகிலேயே மிகக் கொடுமையான மத ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ரோஹிங்கியா முசுலீம்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வில்லை.

குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாகக் கொள்ளும் அணுகுமுறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. மதச்சார்பற்ற - குடியாட்சிய நாட்டில் குடியுரிமை வழங்கு வதற்கு ‘மத ஒடுக்குமுறை’ என்கிற அளவுகோல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 14க்கு முற்றிலும் எதிரானதாகும். இந்துத்துவப் பாசிச சிந்தனையில் மூழ்கிக் கிடககும் ஆர்.எஸ்.எஸ். -பா.ச.க.விற்கு முசுலீம்களை எப்போதும் அச்சத்திலிருக்கும்படி செய்வதற்கான ஆயுதமே சிஏஏ சட்டம்.

அதனால் இந்தியா முழுவதும் முசுலீம்கள் சிஏஏ-வை எதிர்த்துப் போராடினர். குறிப்பாக பெண்கள் வீதியில் அமர்ந்து தொடர்ந்து போராடினர். தில்லி ஷாகின்பாக்கில் இசுலாமியப் பெண்களின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. முசுலீம்-அல்லாத மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எனப் பல தரப்பினரும் சிஏஏ­வை எதிர்த்தனர். ஒன்றிய அரசு இப்போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கியது. 65 பேர் கொல்லப்பட்டனர். 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிய அரசு, இந்தியாவில் வாழும் இசுலாமியரின் குடியுரிமைக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது; சிஏஏ குடியுரிமை வழங்குவதற்கானதே தவிர, பறிப்பதானதற்கு அல்ல என்று தொடர்ந்து கூறிவந்தது. ஆனால் அது உண்மையன்று.

சிஏஏ-வை அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்- பாட்டன்- முப்பாட்டன் ஆகியோரின் பிறந்த நாள், இருப்பிடம், மதம் முதலான சான்றுகள் தரப்பட வேண்டும். அசாமில் அயலாரை வெளியேற்றும் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இராசிவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்த போது 1985இல் போராட்டக் குழுவினருடன் ஒன்றிய அரசு ஓர் ஒப்பந்தம் செய்தது. அதன்படி அசாமில் 3 கோடி மக்களுக்கான குடிமக்கள் பதிவேட்டிற்கான கணக்கீடு எடுக்கப்பட்டது. இதில், இந்தியக் குடியுரிமை இல்லாத ‘அந்நியர்கள்’ 19 இலட்சம் பேர் இருப்பதாகக் கண்டறியப் பட்டது. இவர்களில் 7 இலட்சம் பேர் இசுலாமியர், 12 இலட்சம் பேர் இந்துக்கள். சிஏஏ-இன்படி 12 இலட்சம் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். 7 இலட்சம் இசுலாமியர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியாவில் 18 கோடி இசுலாமியரும் 2.2 கோடி கிறித்தவர்களும் உள்ளனர் (உலக அளவில் கிறித்தவர் 238 கோடி, இசுலாமியர் 190 கோடி, மதநம்பிக்கையற்றவர் 119 கோடி. இந்துக்கள் 116 கோடி). இந்தியாவில் குடிமக்கள் பதிவேட்டிற்கான கணக்கெடுக்கும் போது எத்தனை இலட்சம் அல்லது கோடி முசுலீம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு ‘அந்நியர்களாக’ ஆக்கப்படுவார்களோ?

சிஏஏவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 237 வழக்குகள் தொடுக்கப்பட்டன. கரோனா பெருந்தொற்று 2020 மார்ச்சு முதல் தீவிரமடைந்து இரண்டு ஆண்டுகள் நீடித்ததால் சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடரவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்திற்கு ஆறு மாதங்களுக்குள் அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். கடும் எதிர்ப்பு காரணமாக மோடி அரசு சிஏஏ-விற்கான விதிமுறைகளை உருவாக்கவில்லை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இக்கால அளவை நீட்டித்துக் கொண்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைக்கு வருவதைத் தடுக்க இன்னும் விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று கூறி போக்குக் காட்டி வந்தது.

2024 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன், 11.3.2024 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதற் கான விதிமுறைகளை வெளியிட்டது. தேர்தலுக்கு முன் சிஏஏ-வை செயல்படுத்தவது குறித்து அறிவித்தால். பெரிய அளவில் போராட்டம் நடத்த இயலாது என்று பா.ச.க. கருதியிருக்கும். தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்ட தால் பா.ச.க.வின் ஊழலும் மிரட்டிப் பணம் பறிக்கும் போக்கும் அம்பலமாகி இந்தியா முழுவதும் முகாமையான பேசுபொருளானது. இதைத் திசைதிருப்பும் நோக்கில் சிஏஏ­வுக்கான விதிகளை பா.ச.க. வெளியிட்டது. ஏனெனில் குடியுரிமை வழங்குவது நீண்ட நடைமுறை கொண்டது. இதை இப்போது வெளியிட்டதன் மற்றொரு நோக்கம் நீண்டகால தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் காட்டி இந்துக்களின் வாக்குகளை ஈர்ப்பதாகும்.

வாய்ப்புள்ள போதெல்லாம் மாநில உரிமைகளைப் பறிப்பது ஒன்றிய அரசின் வழக்கமாகும். இதுவரை, இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் அயல்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முதலில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மாநில அரசுக்கு அனுப்புவார். மாநில அரசு தன் பரிந்துரையுடன் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். 2009ஆம் ஆண்டின் குடியுரிமை விதிகளின்படி, ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு முன்பு, மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும். 2024 மார்ச்சு 11 அன்று பிறப்பிக்கப்பட்ட சிஏஏ-வுக்கான விதிகளில் இந்த நடைமுறை அடியோடு நீக்கப்பட்டுள்ளது.

இப்போது ஒன்றிய அரசே நேரடியாக மாவட்டக் குழு, அதிகாரமளிக்கப்பட்ட குழு என இரண்டை ஏற்படுத்தும். குடியுரிமை பெற விரும்பும் ஒருவர் முதலில் மாவட்டக் குழுவுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இவர் ஆறு வகையான சான்றுகளை அளிக்க வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர், எந்த நாளில் இந்தியாவுக்குள் வந்தார், வாடகைக் குடியிருப்புச் சான்று, பிற அடையாளச் சான்றுகள், பாக்கித்தான், வங்கதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் ஒன்றால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமச் சான்று, கல்விச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். மாவட்டக் குழுவில் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது அஞ்சல் துறை கண்காணிப்பாளர் இருப்பார்.

மாநில அளவில் அதிகாரம் அளிக்கும் குழு செயல்படும். இதில் மாநிலத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர், உளவுத் துறை உயர் அலுவலர், தலைமை அஞ்சல் அலுவலர், மாநில அல்லது தேசிய தகவல் நடுவத்தின் அலுவலர், ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலர் ஒருவர், இரயில்வே மண்டல மேலாளர் ஆகியோர் இருப்பர். விண்ணப்பித்தவர் குறித்து உளவுத் துறையும், பாதுகாப்புத் துறையும் ஆய்வு செய்யும். இக்குழுவே குடியுரிமை வழங்கும் அதிகாரம் படைத்தது.

இந்திய முசுலீம்களின் குடியுரிமை சிஏஏ-வால் பாதிக்கப் படுமா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாவுக்கு “எந்தவொரு குடிமகனும் குடியுரிமைக்கான சான்றுகளைக் காட்டுமாறு கேட்கப்படமாட்டார்கள்” என்று ஒன்றிய அரசு விடை கூறியது. அதேபோன்று தேசியக் குடியுரிமைப் பதிவேட்டால் (NRC) பாதிக்கப்படுவார்களா என்ற வினாவுக்கு, “தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு எடுப்பது பற்றி இன்னும் அரசு முடிவு செய்யவில்லை. எனவே சிஏஏ-வையும் என்.ஆர்.சி.யையும் இணைத்துப் பேச வேண்டியதில்லை” என்று விடை கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியில் பா.ச.க. தலைவர்கள் என்.ஆர்.சி. எடுக்கப்படும் என்று இசுலாமியரை அச்சுறுத்தும் வகையில் பேசி வரு கின்றனர். மேலும் கடந்த பத்தாண்டுக் கால மோடி ஆட்சியில் பா.ச.க. தன் தேவைக்கு ஏற்ப பச்சோந்தித் தனமாக நடந்து கொண்டிருக்கிறது. 1991 பா.ச.க. ஆட்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண்சிங் பாபர் மசூதியைக் காப்போம் என்ற உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு இடித்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.இன் தத்துவகுருவான கோல்வால்கர், “இந்த நாட்டில் உள்ள முசுலீம்கள் இந்துக்களின் பழம் பெருமைகளையும் வாழ்வியல் முறைகளையும் போற்றி மதித்து நடக்க வேண்டும். இராமரை இந்நாட்டின் உத்தம புருஷனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு முசுலீம்கள் நடந்து கொண்டால் இந்நாட்டில் வாழலாம். இல்லையேல் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் வாழமுடியும். வாக்குரி மையும் கோரக்கூடாது” என்று கூறியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் மோடியின் ஆட்சி முசுலீம்களை இத்தன்மையில் நடத்தவே முயன்று வருகிறது. மாட்டுக்கறி வைத்திருக் கிறார்கள் என்றும், பசுக்களை இறைச்சிக்காக கொண்டு செல்கிறார்கள் என்றும் வடஇந்தியாவில் பல்வேறு இடங்களில் முசுலீம்கள் சங் பரிவாரக் குண்டர்களால் தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்.

நரேந்திர மோடியே மேடையில், “உடையை வைத்து யார் (முசுலீம்) என்று தெரிந்து கொள்ளலாம்” என்று பேசினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் சட்டப் பேரவைக்கான தேர்தல் பரப்புரையில் 80 விழுக்காடு (இந்துக்கள்) எதிர் 20 விழுக்காடு (முசுலீம்கள்) என்று கூறினார். 2019இல் இரண் டாவது தடவையாகத் தலைமை அமைச்சரானதும் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்படி சிறப்பு உரிமைகள் அளிக்கும் பிரிவு 370யை நீக்கினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, மாநிலம் என்கிற தகுதியையும் பறித்து, ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாக மாற்றினார். இது இந்தியா முழுவதும் உள்ள முசுலீம்களை அச்சுறுத்தும் நடவடிக்கையே ஆகும்.

இந்துக்களின் வாக்குகளைத் திரட்டுவதையும், இசுலாமியர்களை அச்சுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே தேர்தல் அறிவிப்புக்குமுன் சிஏஏவை செயல்படுத்துவதற்கான அறிவிப்பாணையை பா.ச.க. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அரசியலை இந்துமயமாக்கு என்று சாவர்கர் கூறியதை மோடி ஆட்சி செயல்படுத்தி வருகிறது.

மோடி மூன்றாவது தடவையாக தலைமை அமைச்ச ரானால், சிஏஏவும் தேசியக் குடிமக்கள் பதிவேடும் செயல்படுத்தப்படும். பல இலட்சம் இந்திய இசுலாமியர்கள் குடியுரிமை யற்றவர்களாக்கப்பட்டு, ஏதிலிகளாகத் தடுப்பு முகாம்களில் மந்தைகள் போல் அடைக்கப்பட வாய்ப்புண்டு. சிஏஏ இசுலாமியருக்கு மட்டுமின்றி சமத்துவக் குடியாட்சியம் இந்தியாவில் காப்பற்றப்பட வேண்டும் என்று விரும்புகிற அனைவருக்கும் எதிரானது. எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க.வை வீழ்த்த வேண்டும். சமூக தளத்திலும் பாசிச இந்துத்துவ ஆற்றல் முறியடிக்க வேண்டும்.

- க.முகிலன்

Pin It