கடந்த மே 28ஆம் நாள் முதல் அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும் பொய்களையும் புரட்டுகளையும் அவிழ்த்து விட்டு திகைப்பை ஏற்படுத்திய காட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் நடந்தேறின.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய நாடாளு மன்றக் கட்டடத் திறப்பில் முக்கிய நிகழ்வாக இருந்தது, தமிழ்நாட்டின் 21 சைவ மடாதிபதிகள் கொண்டு போய்ச் சேர்த்த செங்கோலை, பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவிய நிகழ்ச்சி ஆகும்.

இந்தியாவுக்குப் புதிய நாடாளுமன்றம் ஒன்றை 970 கோடி செலவில் மோடி அரசு கட்டியுள்ளது. இதில் ‘மத்திய விஸ்டா மறு வளர்ச்சி திட்டம்' என்ற பெயரில் கட்டப்பட்ட நாடாளுமன்றம் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் தத்துவத் தலைவரும், இந்துராஷ்டிரப் படைப்பு என்ற இலக்கை வழங்கியவருமான சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 அன்று திறந்து வைக்கப்பட்டது. மே 24 அன்று அமித்ஷா நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்படும் என்று அறிவித்தார். அதுவும் மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில் வைக்கப்படும் என்று அறிவித்தார். இவர்கள் முன்னமே திட்டமிட்டு, தமிழ்நாட்டின் மடாதிபதிகளைத் தங்கள் திட்டத்தின் பங்காளிகளாக மாற்றி வைத்திருந்தது யாருக்கும் தெரியாது.modi infront of sengol1947-இல் பரிசுப் பொருளாக அளிக்கப்பட்ட செங்கோல்! ஆன்மிக அரசியலுக்கான வரலாற்றுத் திரிப்புகள்!

இதற்கு முன்னால் 1947 ஆகஸ்ட் 14 அன்று, தமிழ் நாட்டில் திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து ஆதினகர்த்தரின் ஆன்மிகப் பிரதிநிதிகள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பரிசுப் பொருளாக சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகை நிறுவனம் தயாரித்து வழங்கிய ஒரு செங்கோலை ஜவஹர்லால் நேருவின் வீட்டில் வழங்கியிருக்கிறார்கள். நேருவுக்கு அளிக்கப்பட்ட அப்பரிசுப் பொருள் நேருவின் கைத்தடி என்று அழைக்கப்பட்டது. அலகாபாத்தில் நேருவின் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட போது, அருங்காட்சியகத்தில் அக்கைத்தடி அல்லது செங்கோல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. அதன் முக்கியத்துவம் அவ்வளவே. சமீபத்தில் நேருவின் வீட்டில் பரிசுப் பொருளாகக் கொண்டு சேர்த்த செங்கோல் அளிப்பு நிகழ்ச்சியை செங்கோல் வரலாறு வீடியோவாக அந்த நகை நிறுவனமே தயாரித்து பெருமை பொங்க வெளியிட்டு இருந்தார்கள். இது இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணில் பட்டுவிட்டது. இந்த வீடியோ முற்றிலுமாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இதைத் தந்திரமாகத் தங்களுடைய மதவாத அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடிய உத்தியை மோடிக்கும்பல் கையாண்டிருக்கிறது.

நேருவின் வீட்டில் பரிசுப் பொருளாக அளிக்கப்பட்ட செங்கோல், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு “அதிகார மாற்றம்” ” (Transfer of Power) செய்ததன் அடையாளம் என்ற பொய்ப் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது.

சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோவில், தமிழ்நாட்டு திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதிகள் கொண்டு சென்ற செங்கோலை மவுண்ட்பேட்டன் பிரபுவின் கையில் கொடுத்து வாங்கி, அதை ஜவகர்லால் நேருவிடம் கொடுப்ப தாகக் காட்டப்பட்டது. மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் செங்கோல் அளிக்கப்படும் புகைப்படம் எதுவும் இல்லை. நேரு செங்கோலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய புகைப்படத்தில் நேருவின் அருகில் மவுண்ட் பேட்டன் பிரபு இல்லை. ராஜாஜிதான் திருவாவடு துறை மடத்திடம் கூறி இந்த ஏற்பாட்டை செய்தார் என்று புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் ராஜாஜியின் படமும் அதில் இல்லை.

1947 ஆகஸ்ட் 14-ம் தேதி நேருக்கு அளிக்கப்பட்ட செங்கோல் பற்றிய செய்தி ‘தி இந்து’ இதழில் ஒரு விளம்பரமாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளிவந்திருக்கிறது. எந்த இடத்திலும் எந்த பத்திரிக்கையிலும் செங்கோல் அதிகார மாற்றத்தின் சின்னம் என்று கூறப்படவில்லை. ராஜாஜி ஆலோசனை வழங்கினார் என்பதற்கும், அது மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டு நேருவிடம் அளிக்கப்பட்டது என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

அந்தச் செங்கோல் பற்றிய வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று; உண்மையானது அல்ல. இதைப் பார்ப்பவர்கள் ஏதோ அப்போதே இதையெல்லாம் படமாக்கி வைத்திருக் கிறார்கள் என்று கருதிக் கொள்வார்கள். அந்த வீடியோ கூறும் செய்தி :

இந்தியர்களுக்கு ஆட்சியைக் கைமாற்ற எம்மாதிரியான நிகழ்வு பின்பற்ற உள்ளது என்ற கேள்வியினை மவுண்ட் பேட்டன் நேருவிடம் கேட்டார். நேரு, ராஜாஜியிடம் இது குறித்துக் கேட்க; அவரோ, சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியை ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு மாற்றச் செங்கோலினை ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினர் என்று கூறினார்.

எனவே, ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அவரும் சென்னை உம்மிடி பங்காரு செட்டி ஜுவல்லர்ஸ் மூலம் செங்கோலினைச் செய்து பெற்றார். பின்னர் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ஆம் நாள் ஆதீனம் மடத்தின் இளைய மடாதிபதி குமாரசாமி தம்பிரான், ஓதுவார் மாணிக்கம் மற்றும் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் மவுண்ட்பேட்டனிடம் செங்கோலினைக் கொடுத்துத் திரும்பப் பெற்று, பிறகு நேருவிடம் அளித்தனர். இம்மாதிரி நாட்டின் ஆட்சி மாற்ற நிகழ்வானது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய முறையைப் பின்பற்றி நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ராஜ குருமார்கள் கையால் மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வதைப் போல, மதத்தலைவர்களின் கையால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் செங்கோல் வழங்கப்பட்டு ஆட்சி தொடங்கியது என்று காட்ட விரும்புகிறார்கள்.

இந்த வீடியோவின் கடைசியில் நேருவின் கையில் செங்கோல் உள்ளது போல் புகைப்படம் ஒன்று காட்டப் படுகிறது. இதைத் தவிர மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எந்த புகைப்பட ஆதாரங்களும் காட்டப்படவில்லை. இராசகோபாலாச்சாரியார் இதில் தொடர்புடையவர் என்பதற்கு எந்தச் சான்றும் காட்டப்படவில்லை.

1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு அடிமைத்தனம் முடிந்துவிட்டதாக மோடி வகையறாக்கள் கருதுவதில்லை; ஆங்கிலேயர்கள் கட்டிய பாராளுமன்றக் கட்டடம்கூட அவர்களுக்கு அடிமைச் சின்னம்தான். அதிலிருந்து வெளியேறியது அவர்களுக்கு அடிமைத்தனத்தின் முடிவாகத் தெரிகிறது.

இந்துராஷ்டிர உருவாக்கத்தின் முக்கியக் கட்டம் மதசார்பற்ற இந்தியாவை மதவாத இந்தியாவாக மாற்றுவது. புதிய நாடாளுமன்றத் திறப்பு அச்சதித்திட்டத்தின் முக்கிய கட்டம் என அவர்கள் கருதுகிறார்கள். நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் மோடி முழங்கினார்: “ஆதீனகர்த்தர்கள் வழங்கிய இந்தப் புனிதச் செங்கோல் சோழ அரசில் நீதி, நேர்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றைப் அடையாளப்படுத்தும் ஒன்றாக விளங்கியுள்ளது. அத்தகைய புனித செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்திருப்பது நமக்கு அதிர்ஷ்டம் தான்” என்று பேசினார். இதைப் பார்த்தவர்கள், கேட்டவர்கள், சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோலையே மீட்டுக் கொண்டு வந்து நிறுவுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் சோழர்களுக்கும் இவர்கள் நிறுவும் செங்கோலுக்கும் என்ன தொடர்பு?

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு இப்படியொரு காரணம்!

நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. எதிர்க்கட்சிகளும் பெரிய கோரிக்கை ஒன்றையும் வைத்து விடவில்லை. “நரேந்திர மோடிக்கு பதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் கோரிக்கை.” திரௌபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்; தாழ்ந்த சாதிக்காரர். அது மட்டுமின்றி, அவர் கணவனை இழந்தவர். ஆகவே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க, அவர் குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் கூட, அனுமதிக்க முடியாது என்பதுதான் சனாதனவாதி களுடைய பார்வை.

1947-இல் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு செங்கோலைப் பரிசுப் பொருளாக அவரது வீட்டில் அளித்துவிட்டு இப்போது ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் மாற்றம் நடந்ததற்கு அடையாளமாகவே இச்செங்கோல் வழங்கப்பட்டது என்று ஆதீனமும், இந்திய ஒன்றிய அரசும் சாதிப்பதற்கு அடிப்படை காரணம் இருக்கிறது. இந்தியாவில் பாரம்பரியமாக ராஜ குருக்கள் மன்னர்களுக்கு முடி சூடுவது அல்லது செங்கோல் அளிப்பது என்ற பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அந்த வகையிலேயே, மரபு மாறாமல் ஆதீனகர்த்தர் ஒருவரால் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமருக்கு செங்கோல் வழங்கப்பட்டது; அந்த மரபு தொடரப்பட வேண்டும் என்று இந்துராஷ்டிரத்தை படைப்பதில் முனைப்பாக இருக்கும் பாஜக அரசு கருதுகிறது.

இந்துத்துவவாதிகளால் ஓர் அரசியல் சக்தியாக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத நிலையில், எப்படியாவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட வேண்டும்; அது எதிர்கால இந்துராஷ்டிர உருவாக்கத்துக்கு அவசியம் என்று கருதி, அனைத்து வகையிலும் ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது. பார்ப்பன மடங்களைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டிவிட முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, இப்போது சூத்திர சாதி மடாதிபதிகளைப் பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறார்கள்.

இந்துராஷ்டிரத்தின் நாடாளுமன்றம்!

திறக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றம் அனைத்து வகையிலும் ஆரியப் பண்பாட்டை, சனாதனத்தை, இந்து மதவாதத்தை, கட்டிடமாகவும் கலைப் படைப்பாகவும் பதிவு செய்துள்ளது. எங்கு திரும்பினாலும் வேத, இதிகாச, புராணக் காட்சிகள் காணக் கிடக்கின்றன. அவர்களே அறிவித்துள்ளபடி, “சனாதன பரம்பரா” படி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துத்துவ இந்தியா உருவாக்கம் அதிதீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்றத்தில் அசுரர்கள்-தேவர்கள் பாற்கடலை கடையும் புராணக் காட்சி, நியாய உணர்வுக்கே தொடர்பற்ற நயவஞ்சக அரசியல் பேசும் சாணக்கியனுக்கு 30 அடி உயரத்தில் கலைப்படைப்பு சுவரில் பதிப்பு, ரிக்வேத காலம் முதல் இந்தியப் பண்பாடு தொடங்குவதாகக் காட்சிப்படுத்தும் கலைப் படைப்புகள், இந்திய வரலாற்றை ரிக் வேதகால ரிஷியின் உருவப்படத்துடன் தொடங்கும் காட்சிப்படுத்தல்கள் என இந்து ராஷ்டிரத்திற்கான படைப்புகள் 5000 என்ற அளவில் நிறைந்து கிடக்கின்றன.

இந்துத்துவ இந்தியா எந்தத் தடையும் இல்லாமல் படைக்கப்படுகிறது!

இப்படி எல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தெரியாது. எந்த எதிர்க் கட்சித் தலைவருக்கும் தெரியாது. எவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ்.-இன் பாஜக அரசு கருதுகிறது.

சமயச் சார்பற்ற அரசியல் சட்டம் பின்பற்றப்படும் ஒரு நாட்டில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியாவின் சமயச் சார்பின்மையை காக்க என்ன செய்வதாக இருக்கிறார்கள்? நடத்தப்பட்டு இருக்கும் - நாசகார செயலை, ஜனநாயக ஒழிப்பு சதி வேலையை, பேரழிவுத் திட்டத்தை, எப்படி சரி செய்வதாக இருக்கிறார்கள்?

புரட்டை வரலாறாக மாற்ற மற்றுமொரு முயற்சி!

கல்வெட்டு ஒன்று திருவாவடுதுறை ஆதினத்தில் புதிதாக முளைத்துள்ளது. “இன்றைய பொய், நாளைய வரலாறு” என்று ஆதீனங்கள் நம்புகின்றன. புகைப்படத்தைக் கல்வெட்டில் கணினி மூலம் பதிப்பது இன்றைய தொழில்நுட்பம். இந்தக் கல்வெட்டு இப்போதுதான் வெட்டி சுவரில் ஏற்றப்பட்டுள்ளது. நேரு மற்றும் கட்டளைத் தம்பிரான் உருவம் கணினியில் வடிவமைக்கப்பட்டு வெட்டப்பட்டுள்ளது. எழுத்துக்கள் கணினி யில் வடிவமைத்து வெட்டப்பட்டுள்ளன. இந்தத் தொழில் நுட்பம் மிக மிக நவீனமானது. 1947 செங்கோல் அளிப்பு நிகழ்ச்சியை வரலாறு போல காட்ட முயற்சித்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கல்வெட்டில், 1978-இல் தமிழ்நாடு அரசு அறிவித்த சீர்திருத்தப்பட்ட தமிழ் எழுத்து பயன்படுத்தப் பட்டுள்ளது. “ளை, னை” உள்ளிட்ட எழுத்துக்கள் பயன்படுத் தப்பட்டுள்ளன. பழைய சுவரில் புதிய கல்வெட்டைப் பதித்து, சிமெண்ட் காரை மீது வெள்ளை அடித்திருக்கிறார்கள். அனேகமாக, இந்தச் செங்கோல் பிரச்சினை தொடங்கிய பிறகு, இரண்டு தினங்களில் இதை செய்து முடித்திருக் கிறார்கள் என்று கருதலாம். வரலாற்றுப் புரட்டு வேலைகளில் ஆதீனங்கள் ஈடுபடுவது திகைப்பை உண்டாக்குகிறது.

நரேந்திர மோடியும் முக்கிய பிரமுகர்களும் செங்கோலை சோழர் காலத்து செங்கோல் என்று விவரித்து பேசி இருக்கிறார்கள், எழுதி இருக்கிறார்கள். சோழர்கள் காலத்தில் ஏது மடங்கள்? சோழர்கள் காலம் என்பது கி.பி.846 முதல் கி.பி.1279 வரை. கி.பி.14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சைவ மடங்கள் கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருஞான சம்பந்தரின் பெயரில் இயங்கும் மதுரை ஆதீனம் அவருடைய காலத்திலேயே உருவாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. அதுவும் பிற்காலத்தில் தான் ஏற்படுத்தப் பட்டது. எந்த ஆதீனகர்த்தரும் எந்த மன்னருக்கும் செங்கோல் அளித்ததில்லை.

சோழர்கள் காலம் 13-ஆம் நூற்றாண்டில் முடிந்தது. பிற்காலப் பாண்டியர்கள் காலம் கி.பி.1216 முதல் கி.பி.1311 வரை. பாண்டியர் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முடிந்தது. விஜயநகரப் பேரரசின் காலம் கி.பி.1336 முதல். அதற்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் (கி.பி.1335 முதல் கி.பி.1371 வரை) மதுரை சுல்தான்கள் ஆட்சி நடந்தது. எந்தச் சோழர்களுக்கு, பாண்டியர்களுக்கு மடாதிபதிகள் செங்கோல் அளித்தார்கள்?

1947-இல், திருவாவடுதுறை ஆதினத்தார் செங்கோலைப் பரிசுப் பொருளாகக் கொண்டு சேர்த்தபோது, மவுண்ட்பேட்டன் பிரபு பாகிஸ்தான் கராச்சியில் இருந்தார். ராஜாஜி வங்காளத்தில் இருந்தார். செங்கோல் அளிப்புக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

சாதாரண மனிதர்கள் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய் கூறுவதுண்டு. ஆன்மிக மடங்களும் இப்படித் தொடங்கினால் என்ன செய்வது? மடங்களிலும் மனிதர்கள் தாம் இருக்கிறார்கள். பெருமை கருதி இல்லாதவற்றை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள்.

அதிகார மாற்றத்தின் அடையாளமாகத்தான் செங்கோல் அளிக்கப்பட்டது என்பது உண்மையென்றால், அது இந்திய துணைக்கண்டம் முழுவதும் செய்தியாகப் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 15-16 ஆகஸ்ட் 1947 செய்தி இதழ்கள் அப்படிப் பதிவு செய்யவில்லை. செங்கோல் என்பது ஒரு பரிசுப் பொருள்தான் என்பதால் அதைப் பற்றி பேசத் தேவை யில்லை என்று செய்தித்தாள்கள் கருதியிருந்திருக்கின்றன.

எந்த அதிகார மாற்றத்தைக் குறிக்க இப்போது செங்கோல் அளித்தார்கள்?

இப்போது 21 மடாதிபதிகள் கூட்டமாகச் சென்று நரேந்திர மோடியிடம் ஒரு செங்கோலை அளித்திருக்கிறார்கள். இது எந்த அதிகார மாற்றத்தைக் குறிக்கிறது? அதிகாரம் அளிப்பின் குறியீடாகவே செங்கோல் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், எந்த அதிகாரத்தை வழங்கினார்கள்? யாருடைய சார்பில் இந்த அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள்? தமிழ் நாட்டின் சார்பாக இவர்கள் இதை வழங்கி இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் எந்த அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள்? அப்படி வழங்க அதிகாரம் அளித்தது யார்? - என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 21 மடாதிபதிகள் கூட்டாகச் சென்று ஒரு செங்கோலை வழங்குகிறார்கள் என்றால் அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல. அது ஒரு குறியீடு; பொருள் பொதிந்தது. அவ்வாறெனில் அந்தச் செங்கோல் எந்த அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? “அளிக்கப்பட்ட செங்கோல் பரிசுப் பொருள் அல்ல; அதிகாரத்தின் அடையாளம் தான்”-என்பது உண்மையானால், இதன்மூலம் தமிழ்நாட்டு மடாதிபதிகள் இந்திய அதிகார பீடத்துக்கு அள்ளிக் கொடுத் திருக்கும் அதிகாரத்துவம் என்ன?

பார்ப்பனியத்தின் அரசியல் முகம் தான் இந்திய தேசியம் என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. பார்ப்பனியமும் ஒளிவு மறைவு இன்றி, தன் மேலாளுகையை நிரந்தரப்படுத்தும் வகையில் இந்துராஷ்டிரத்தைப் படைப்பதை விரைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதேநேரம் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் தனி அடையாளத்தைப் பாதுகாக்கவும், தங்கள் மொழியின இறையாண்மையை மீட்டெடுக்கவும், இந்தியத்துக்கு எதிர் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றன. சில தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன. சில தேசிய இனங்கள் இந்தியாவுக்குள் தங்கள் அடையாளத்தையும், மொழியையும், தங்கள் அதிகாரத்தையும் உத்தரவாதப்படுத்திக் கொண்டு வாழத் தயாராக இருக்கின்றன.

ஆனால், இந்துத்துவவாதிகள், இந்து தேசியவாதிகள் இந்திய கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாகக் கலைத்துப் போட்டு, மொழியின் அடையாளமே இல்லாமல் ஒழித்துக் கட்டி, மொழிவாரி மாநிலங்களைக் கலைத்துவிட்டு, இந்தியா முழுவதையும் மாவட்டங்களைப் போன்று ஜனப்பதாக்களாகப் பிரித்து, அவற்றிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தில் அமர்த்தி, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம் என்பதை நிறுவும் நோக்கத்தில், வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்று, இந்த மடாதிபதிகள் செங்கோல் வடிவில் எந்த அதிகாரத்துவத்தை ஆர்.எஸ்.எஸ்.-இன் மோடி அரசுக்கு வழங்கினார்கள் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழ்த் தேச இறையாண்மையை மீட்க கடந்த காலத்தில் ஏராளமானவர்கள் சிறையில் வாடி இருக்கிறார்கள்; பலர் தமிழ்த் தேச விடுதலை முயற்சியில் பலியாகியிருக்கிறார்கள்; படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள்; வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அல்லல்பட்டு மடிந்திருக்கிறார்கள். இந்திய ஏகாதிபத்தியத் திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஒவ்வொரு தேசிய இனமும் ஏங்கிக் கொண்டிருக்கும்போது, தமிழ்த் தேசிய இனமும் நீண்ட காலமாக இதற்கான முன்னெடுப்புகளைச் செய்து, பல்வேறு வடிவத்தில் துன்பங்களை அனுபவித்திருக்கும்போது, திடீரென்று இந்த மடாதிபதிகள் தில்லிக்கு ஓடிச்சென்று தமிழினத்தின் வரலாற்றுவழிப் பகைவர்களான ஆரியத்தின் முகவர்களிடம் செங்கோல் கொடுக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

அதன் பொருள் இதுதான் : “இந்தியப் பார்ப்பனியமே எங்களை என்றென்றும் ஆளவேண்டும். தமிழகத்தின் சார்பாக எங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கிறோம். நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்ட அடிமைகள்” என்பது தான். தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய ஆன்மிகத் தலைவர்கள் ஓர் அதிகாரக் குறியீடாக செங்கோலை அளிப்பது என்பது, தமிழ்நாட்டின் இறையாண்மையை இந்திய ஏகாதிபத்தி யத்திற்கு சமர்ப்பிப்பது என்று பொருள்படும் (surrendering the sovereignty of Tamilnadu to the Indian Imperialism).. தமிழ்நாட்டின் அடிமைத்தனம் தொடரும், தொடர வேண்டும் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே ஆதீனகர்த்தர்கள் அளித்திருக்கும் செங்கோல்.

தமிழை, தமிழ் மக்களை, தமிழ் நாட்டை, தமிழ்த் தேசிய இறையாண்மையை நேசிக்கின்ற எந்த மனிதனும், தமிழ்த் தேசியக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கின்ற எந்த தமிழ் மகனும் மடாதிபதிகளின் இச்செயலை ஏற்க முடியாது.

கருத்துக் குருடர்கள் பாய்கிறார்கள்!

ஒரு செங்கோலை நிறுவுவது என்றால் என்ன பொருள்?

மடாதிபதிகளின் “செங்கோல் கேலிக்கூத்து” பற்றி இரண்டு வரி பதிவிட்டவுடன், ஆத்திரத்துடன் பாய்ந்து வருகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், நாடாளுமன்ற அதிகாரத்தின் படிநிலை வளர்ச்சியையும், சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்ற முப்பெரும் அதிகாரப் பிரிவினையின் தனித்தன்மை மற்றும் அவற்றின் இறை யாண்மை குறித்தும், ஒரு நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு இணையாக அல்லது அவருக்கும் மேலான தகுதியுடன் ஒரு செங்கோலை நிறுவமுடியாது, அது ஜனநாயக விரோதமானது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கும் என்ற அடிப்படை அறிவையும் பெறாதவர்கள், செங்கோல் கொடுத்தால் என்ன தப்பு என்கிறார்கள். இந்த நாட்டில் ‘தாலி' என்பதற்கு ஒரு பொருள் இருக்கிறது. தாலி என்பது முழம் நீளமுள்ள கயிறுதானே, அதை ஏதோ சாலையில் போய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டினால் என்ன தப்பு என்று கேட்பவருக்கு, தாலி பற்றி ஏதும் தெரியாது என்பதுபோன்றே, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளு மன்றத்தின் இறையாண்மை குறித்து அறியாதவர்கள், நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அருகில் ஒரு செங்கோலை நிறுவினால் என்ன தப்பு என்று கேட்கிறார்கள். நாடாளு மன்ற ஜனநாயக (Parliamentary Democracy) வரலாறையும், அதன் தனித்துவத்தையும், இவர்களுக்குப் பாடம் நடத்தி புரிய வைத்துவிட்டு, விவாதிப்பது என்பது அயர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆன்மிகவாதியாக இருந்தால் அதற்காக அடுக்கடுக்கான பிழையான கருத்துக்களை ஆதரிப்பது சரியாகுமா?

அரசியல் சட்டம் என்ன கூறுகிறது? வரலாற்றில் என்ன நிகழ்ந்தது? இங்கிலாந்தில் இருந்து நாம் பெற்ற நாடாளு மன்ற ஜனநாயக முறைமை(Parliamentary Democracy), இறையாண்மை மிக்க பாராளுமன்றம், அதில் சபாநாயகரின் நிலை ஆகிய அரசியல் சட்டக் கூறுகளை கவனத்தில் கொண்டு அங்கே ஒரு செங்கோலையின் நிறுவமுடியுமா? நிறுவ அனுமதிக்கலாமா? அப்படி நிறுவினால் அதற்கு பொருள் என்ன? என்பதையெல்லாம் பலரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

1947-இல் இருந்த நிலை வேறு. அன்று இந்தியக் குடியரசு அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வராத காலகட்டம். 1950இல் குடியரசு வகைப்பட்ட அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு செங்கோலை அளிப்பதும் அதை ஒரு பிரதமர் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத் துக்குள் நிறுவுவதும் எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்! மன்னர் காலத்தில் இருந்தது போல, ராஜகுரு கொண்டு வந்து மணி முடியையும் செங்கோலையும் அளிப்பதை காலில் விழுந்து வணங்கி, காலை முத்தமிட்டு மன்னர்கள் தலையில் ஏந்துவதைப் போல கற்பனை செய்து கொண்டு, சமய சார்பற்ற ஒரு அரசியலமைப்பு நிலவும் நாட்டில், அதுவும் குடியாட்சி நிலவும் நாட்டில், செய்ய முற்படுவது மிகப்பெரிய கொடூரம்! முட்டாள்தனத்தின் உச்சகட்டம்! அது ஒரு கேலிக்கூத்து!

ஒளிந்திருக்கும் அரசியல் நோக்கம்!

செங்கோல் அளித்தபோது ஒரு மணி நேரம் பூஜை நடைபெற்றது. நரேந்திர மோடி செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்டார். இந்த கும்பிடுக்கு பின்னாலே ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. இந்துத்துவவாதிகளுக்கு தமிழ்நாட்டில் கால் ஊன்றியாக வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் இப்படிக் கூறுகிறார் :

“நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது, இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வரலாற்றுப் புகழை சேர்த்திருக்கிறது. இதைப் புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத் திற்கும் துரோகம் செய்து மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியுள்ளார்கள்” என்கிறார்.

தமிழர்கள் தமிழ் மொழியை உயிருக்கு நிகராகக் கருதுகிறவர்கள் என்பதால், தமிழின் பேரால் அரசியல் ஆதாயம் தேடுகிறார். உயிரற்ற தங்கத்தால் ஆன ஒரு கோலுக்குக் கொடுக்கும் மரியாதையை, தமிழக மக்களின் உணர்வுக்கு நரேந்திர மோடி கொடுத்திருக்கலாம். நீட் தேர்வு காரணமாக எத்தனை உயிர்களை இழந்து இருக்கிறோம்! நீட் தேர்வு வேண்டாம் என்று மசோதாவை நிறைவேற்றி விட்டு, எவ்வளவு காலமாக தமிழர்கள் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார்கள்! தமிழர்கள் மீது என்ன மரியாதை இவர்கள் வைத்திருக்கிறார்கள்?

புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளைத் திறந்திருக் கிறார்கள்; அவை சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய வற்றில் உள்ளன. தமிழுக்கு அங்கு இடமில்லை. இந்நிலை யில், தமிழ் ஒலித்தது; நம் தமிழரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என்று கூவுகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

நிறுவப்பட்டு உள்ள செங்கோலுக்கும் தமிழ் மன்னர் களுக்கும் என்ன தொடர்பு? அது சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நிறுவனம் தயாரித்தது. திறக்கப்பட்ட கல்வெட்டில் கூட தமிழ் இல்லை. மோடி உரையாற்றும் போது, இந்த செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது என்கிறார். சோழர்களுக்கும் உம்மிடி பங்காரு செட்டியார் தயாரித்த செங்கோலுக்கும் என்ன தொடர்பு? - “இப்படிப்பட்ட புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டம்” என்கிறார் மோடி.

தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்காக எவ்வளவு புளுகுகளை இவர்கள் அவிழ்த்து விடுகிறார்கள். கூடுதலாக ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாகக் கருதுகிறார் நரேந்திர மோடி. “இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டு மல்லாது, ஜனநாயகத்தின் தாயும் கூட” என்கிறார். இந்தியாவில் எந்த காலத்தில் ஜனநாயகம் நிலவியது? என்ன ஜனநாயக நிறுவனங்கள் இங்கே இருந்தன? கிரேக்கத்தை “ஜனநாய கத்தின் தாயகம்” என்று வரலாற்றில் கூறுவோம். இங்கிலாந்தை “நாடாளுமன்றத்தின் தாய்” என்று கூறுவோம். தங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நரேந்திர மோடி போன்றவர்கள் கருதுகிறார்கள். 1950-இல் புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு அளித்த இந்தியாவின் ஜனநாயக முகத்தையும் செங்கோல் நிறுவுதல் சிதைத்து இருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால் சைவ சமய அடையாளங்களுடன் கூடிய செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதன் மூலமாக, மதச்சார்பற்ற இந்தியா இப்போது மதச்சார்பு இந்தியாவாக மாறி இருக்கிறது.

சூத்திர சாதிகளைத் திரட்டும் உத்தி!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிராமண மடங்களின் ஆதரவைப் பெற்று பயனில்லை என்பதால், பார்ப்பனர் அல்லாத மதத் தலைவர்களின் ஆதரவை இந்துத்துவ வாதிகள் திரட்டுகிறார்கள். அனைத்துச் சாதிகளின் ஆதரவைப் பெற்ற பிரதிநிதியாக மடாதிபதிகளை பாஜக கருதுகிறது. சாதிய கட்சிகளின் ஆதரவையும், சாதிய அமைப்புகளின் ஆதர வையும், சனாதனிகளின் ஆதரவையும், சைவ மடங்களின் ஆதரவையும் தமிழ்நாட்டில் திரட்டுவதன் மூலமாக தமிழ் நாட்டில் பாஜக நிலைகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.

செங்கோல் என்பது மன்னர் ஆட்சி காலக் குறியீடு, மக்களாட்சிக் காலத்தில் அது ஏன்? இப்போது இவர்கள் நடத்தும் செங்கோல் நிறுவும் நாடகம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வரலாறாக நம்பப்படும். பாஜக தன்னுடைய இந்துராஷ்டிரப் படைப்புக்கான செயல்பாட்டில் இப்போது ஒரு செயல்திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் செங்கோல் காட்சி அரங்கேறி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி சாதி உணர்வைக் கிளறி விடுவதையும், மக்கள் தங்களை சாதிகளாக உணரச் செய்வதையும், தன்னுடைய செயல் திட்டத்தின் முக்கியக் கூறாகக் கருதுகிறது. சாதிய அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதை ஒரு பெரிய அரசியல் திட்டமாக வைத் திருக்கிறது. அதனுடைய பார்வையில் ஆதீனங்கள் என்பவை செல்வாக்குமிக்க, தெளிவான, துணிச்சலான, வெளிப்படை யான, மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கக் கூடிய இந்து ராஷ்டிர ஆதரவாளர்கள்.

2024ஆம் ஆண்டு தேர்தலுக்குள் மேலும் பல மாற்றங்களைக் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருக்கிறது. ஆரியத்தின் அரசியல் பீடத்திடம் செங்கோல் அளித்து, தமிழர்களின் சூத்திர விசுவாசத்தை, தமிழர்களின் தன்மானத்தை, அவர்கள் காலடியில் சமர்ப்பித்து விட்டு வந்திருக்கிறார்கள். வரலாறு முழுவதும் ஆரியத்தை எதிர்த்துப் போரிட்ட தமிழினத்தின் தன்மானத்தை மடாதிபதிகள் இப்போது கொலை செய்திருக்கிறார்கள்!

- பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

Pin It