நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு தீட்டியது. 2020-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10ஆம் நாள் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நான்கு தளங்களில் மொத்தம் 16,500 சதுர மீட்டர் பரப்பளவில் 862 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்ற மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இக்கட்டடம், கட்டி முடிப்பதற்குள் சுமார் 1200 கோடியை எட்டியுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு வேண்டுமென்றே இவர்களின் “இந்துத்துவா தத்துவ நாயகர்” சாவர்க்கரின் 150-வது பிறந்த நாளான மே மாதம் 28ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு குடிஅரசுத் தலைவர் முர்முவை மோடி அரசு புறக்கணித்தது. குடிஅரசுத் தலைவர் புதிய நாடாளு மன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் அதை மறுத்த மோடி அரசின் செயலைக் கண்டித்தும் காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட இருபது எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்தன.

குடிஅரசுத் தலைவர் ஒரு பெண் அதுவும் மலைவாழ் பழங்குடியினக் கைம்பெண் என்பதால் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இந்து சாத்திரங்கள் குறிப்பாக மனுதர்மம் பெண்களுக்குச் சடங்குகள் நடத்த உரிமை அளிப்ப தில்லை. அதன் காரணமாகத்தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா 28.5.2023 ஞாயிறு அன்று காலை தொடங்கியது. புதிய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் படத்திற்குத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், அவைத் தலைவர் ஓம் பிர்லாவும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

1947 ஆகஸ்டு 14 அன்று திருவாவடுதுறை சைவ மாடதிபதி சார்பில் வெள்ளியில் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் சுதந்திர இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த நேருவிடம் பரிசாக அளிக்கப்பட்டது. அலகாபாத்தில் நேரு வீட்டு அருங்காட்சியத்தில் அந்தச் செங்கோல் தங்கக் கைத்தடி என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியிரிடமிருந்து இந்தியர்களுக்கு ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதன் குறியீடாக இந்தச் செங்கோல் முதலில் மவுண்ட் பேட்டனிடம் தரப்பட்டது; பிறகு நேருவிடம் அளிக்கப்பட்டது என்று எத்தகையச் சான்றுமில்லாமல் பா.ச.க. கற்பனை கதையைப் பரப்பியது.

மன்னராட்சிக் காலத்தின் அதிகாரக் குறியீடான செங்கோலை இந்தியாவின் பழைய மரபுகளைக் காத்தல் என்ற பெயரால் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சியில், நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோலைத் தமிழ்நாட்டிலிருந்து திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் சென்ற 20 சைவ மடங்களின் ஆதீன கர்த்தர்கள் மோடியிடம் வழங்கினர். மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அச்செங்கோலை வணங்கினார். பின்பு அவைத் தலைவர் இருக்கை அருகே அதை நிறுவினார். இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் காலத்து ஆட்சியா? ஆர்எஸ்எஸ் தீட்டித்தரும் திட்டத்தின்படி இந்தியாவில் மன்னர் காலத்து வருணாசிரம-சாதியக் கட்டமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதன் அறிகுறியே நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் ஆகும்.

கருநாடகத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் கணபதி ஹோமம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். அங்கிருந்தவர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டனர். இந்நிகழ்வு பேரரசர்கள் முடிசூட்டு விழாவைப் போல் காட்சி அளித்தது.

அதன்பிறகு பேசிய தலைமை அமைச்சர் மோடி, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரக் கூடிய வாய்ப்பு உள்ளது; எனவேதான் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது என்று பேசினார். தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும் மாநிலங்கள் அவையில் 238 உறுப்பினர்களும் உள்ளனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் 1272 இருக்கைகள் வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மாநிலங்கள் அவையில் 384 இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் வடிவமைப்பு முழுக்க முழுக்க இந்துத்துவா கலாச்சாரத்தையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணாக்கியருக்கு 30 அடி உயரப் புடைப்புச் சிலையை நிறுவியுள்ளனர்.

மைய மண்டபத்தில் 250 அடி நீளத்தில் விட்ணு புராணத்தில் இடம்பெற்றிருக்கும் அசுரர்களும் - தேவர்களும் பாற்கடலை கடைவதைப் போன்ற காட்சி புடைப்புச் சிற்பக் கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வேத காலம் முதல் தற்போது வரையிலான இந்து புராணங்களின் படங்களை வரைந்து வைத்துள்ளனர். ஆங்காங்கே சமசுகிருத வரி வடிவ எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. யாகம் வளர்ப்பது முனிவர்கள் தவம் செய்வது போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆர்.எசு.எசு. அமைப்பினர் அடைய நினைக்கும் ‘இந்து ராஷ்டிரா’ வரைபடமும் அந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல போதாமைகள் இருப்பினும் மக்களாட்சிக் கூறுகள், மதச்சார்பின்மை, போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த அடிப்படைக் கூறுகளைத் திருத்தவோ மாற்றவோ நாடாளுமன்றத் திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட பேராயம் தீர்ப்பளித்துள்ளது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே ஆட்சியதிகாரத்தின் துணையுடன் அனைத்துத் துறைகளையும் சமூகத்தையும் இந்தத்துவ மயமாக்கும் செயல்பாடுகள் தொடங் கப்பட்டன. 2014இல் மோடி தலைமையமைச்சரான பிறகு இந்துத்துவ மயமாக்கம் நடைமுறைகள் பாசிச வடிவம் எடுத்துள்ளன. ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்று பல்வேறு பெயர்களில் இந்தியாவின் பன்மைத்துவம் அழிக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு எல்லா அதிகாரமும் ஒன்றிய அரசில் குவிக்கப்பட்டு வருகின்றன. இப்பாசிசப் போக்கை எதிர்ப்பவர்கள், கட்சிகள், இயக்கங்கள் தேச விரோத சக்திகள் என்ற முத்திரைக் குத்தப்பட்டுக் கொடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.

மோடி தலைமையிலான பத்து ஆண்டுக்கால பாசகவின் பாசிச ஆட்சி யின் காலடியின் கீழ் இந்திய அரச மைப்புச் சட்டம் நசுக்கப்பட்டுக் கிடக் கிறது. நாடாளுமன்றத்தின் பிரம் மாண்டமான புதியக் கட்டடம் என்பது கண்ணை (சனநாயகத்தை) விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதே ஆகும்.

வாலாசா வல்லவன்

Pin It