12/05/2016 அன்று வெளியான தமிழ் தி இந்துவின் இரண்டாவது பக்கத்தில், தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர்கள் யார்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் வகுத்திருந்த வரையறைகள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் தமிழ்நாட்டில் நிலவிய குடவோலை முறை பற்றியும், அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் சேலம் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியரான ஜே.ஆர். சிவராம கிருஷ்ணன் என்பவரது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நபர் வரலாற்று ஆய்வாளர் என்று வேறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வரலாற்று ஆய்வாளர்? தனது கருத்துக்களைச் சொல்லத் துவங்கும் முன்பே பார்ப்பன தமிழ் ‘தி இந்து’ “ பதினைந்தாவது தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தலில் தமிழகம் திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய தமிழர்கள் கடைபிடித்த தேர்தல் நடத்தை விதிகளைப் புரட்டிப் படித்தால் பிரமிக்க வைக்கிறது”. என்று சொல்லி பூரித்துப் போகின்றது. பின்னே பூரிப்பு வராதா? ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமல்லவா’
இந்த வரலாற்று ஆய்வாளர் உத்திரமேரூர் கல்வெட்டில் தான் கண்டு, படித்து உணர்ந்ததை தமிழ்கூறும் நல் உலகத்திற்கு பின் வருமாறு எடுத்தியம்புகின்றார். “மன்னராட்சியில் உள்ளாட்சி நிர்வாகங்கள்தான் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்திருக்கின்றன. அதனால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுக்க நெறி தவறாதவர்களாகவும் நாணயமானர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். 30 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உத்திர மேரூர் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளைத்தான் வைகுந்த பெருமாள் கோவில் கல்வெட்டு விளக்குகின்றது. உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் 360 நாட்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் அரசுக்கு வரி செலுத்தும் வகையில் கால்வேலி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும். தமது சொந்த மனையில் வீடுகட்டி வசிக்க வேண்டும். அதாவது மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும். வயது வரம்பு 30இல் இருந்து 60 வயதுக்குள்.தூயவழியில் பொருளீட்டி அறவழியில் நடப்பவராக இருப்பதுடன் உள்ளாட்சி வாரியத்தில் முறையாக கணக்குக் காட்டியவராகவும் இருக்க வேண்டும்………”.
“ ……..தகுதியான வேட்பாளர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் தனித் தனியாக ஓலையில் எழுதி ஒரு பானைக்குள் போட்டு பால்மணம் மாறா சிறுவன் ஒருவன் மூலமாக அதிலுள்ள ஓலைகளை ஒவ்வொன்றாக எடுக்க வைத்து உள்ளாட்சி நிர்வாகத்துக்குத் தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்”
“சிறுவன் எடுத்துத் தரும் ஓலைகளில் உள்ள நபர்களின் பெயர்களைத் தேர்தல் நடத்தும் அதிகாரியானவர், சபையோர் முன்னிலையில் உரக்கப் படிப்பார். இதுதான் உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதுக்கான அங்கீகாரம். இப்படித்தான் அந்தக் காலத்தில் ஆட்சியாளர்களை தேர்வு செய்திருக்கின்றார்கள். அதுபோன்ற சட்டத் திட்டங்கள் இந்தக் காலத்திலும் இருந்தால் எப்படி இருக்கும்?”.
குடவோலை முறையைப் பற்றி பல பேர் இப்படித்தான் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அது என்னவோ ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தல் போலவும் அதில் யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அது தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்களால் திட்டமிட்ட பரப்பட்ட பொய் ஆகும்.
இந்த குடவோலை முறை என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட ஒரு தேர்வு முறையாகும். தமிழர்கள் சாதிய சமூகமாக பிரிந்திருந்த அந்தக் காலத்தில் இப்படியோரு தேர்தல் முறை தமிழ்நாட்டில் நடந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? வரலாற்று ஆய்வாளர் கே.கே. பிள்ளை இவ்வாறு கூறுகின்றார். “உத்திரமேரூர்க் கல்வெட்டுகள் அக்காலத்தில் வழங்கிய கிராமச் சபைகளின் அமைப்பு முதலியவற்றைப் பற்றிய விரிவான செய்திகளைத் தருகின்றன. உத்திரமேரூர்க் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடைவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாவன: குறைந்த அளவு கால்வேலி நிலத்துக்காவது உரிமை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குடியிருந்த வீட்டுமனை அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும்: அவர்களுடைய வயது முப்பத்தைந்துக்குக் குறைந்திருக்கக் கூடாது. எழுபதுக்கு மேற்பட்டிருக்கக் கூடாது.
“மேலும் அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களைப் பயின்றிருக்க வேண்டும். அல்லது குறைந்த அளவு அரைக்கால் வேலி நில உரிமையும், ஒரு வேதத்தையோ ,ஒரு பாடியத்தையோ ஓதும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்……………”.
“……. குடும்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இக்காலத்தைப் போலவே. அக்காலத்திலும் வாக்குப் பதிவு முறை ஒன்று பிராமணர் கிராமங்களில் கையாளப்பட்டது. அம்முறைக்குக் ‘குடவோலை முறை’ என்று பெயர்……..”.( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்: கே.கே. பிள்ளை: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்).
இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1972 ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஏறக்குறைய 44 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்னும் இந்தக் குடவோலை முறை பற்றிய பார்ப்பன புரட்டு நடந்துகொண்டுதான் உள்ளது. தங்களை வரலாற்றுப் பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில மண்ணாங்கட்டிகள் வெட்கமே இல்லாமல் இன்னும் இதே பார்ப்பன புரட்டையே பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு வரலாற்றுப் பேராசிரியரின் வரலாற்று அறிவே இந்த நிலையில் இருக்கின்றதென்றால் சாமானிய மக்களின் வரலாற்று அறிவைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. இது போன்ற ஆய்வுத் திறனற்ற மடப்பயல்கள் எல்லாம் வரலாற்றுப் பேராசியராக இருந்தால் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனை மாணவர்களின் மூளையில் இந்த முட்டாள் விளையாடி இருப்பான் என்று. எந்த ஆய்வுக் கண்ணோட்டமும் இல்லாமல் அரசு பாடப் புத்தகத்தில் படித்ததையே பேராசியர் ஆனபின்பும் மாற்றிக் கொள்ள திராணியற்ற இதுபோன்ற முட்டாள்கள் தான் பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்களாக நிரம்பி வழிகின்றார்கள்.
இதில் குடும்பு என்று குறிப்பிடப்படுவது குறிப்பிட்ட ஒரு பார்ப்பன குலம் மட்டுமே வாழும் பகுதியாகும். மேலும் இந்த நிலங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது. அதை அனுபவிப்பதற்கான முழு உரிமையும் அந்தப் பார்ப்பனக் கூட்டத்திற்கு மட்டுமே உரியது. இந்தக் காலத்தில் சூத்திர சாதித் தமிழர்களுக்கு நில உரிமை இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை. குடத்தில் போட்ட ஓலையை எடுத்துத் தருவதாக வரலாற்று பேராசிரியர் கூறும் பால் மணம் மாறா சிறுவனும் ஒரு பார்ப்பன சிறுவனே ஆவான். உத்திரமேரூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சதுர்வேதி மங்கலம் என்பது பார்ப்பனர்களுக்கு மானியமாக கொடுக்கப்பட்ட நிலப்பகுதியாகும். இந்த நிலப்பகுதியை நிர்வகிக்க நடந்த ஒரு முறையே குடவோலை முறையாகும்.
ஆனால் நம் அறிஞர் பெருமக்களில் பலர் இதைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் திரும்பத் திரும்ப குடவோலை முறை என்பது ஒரு ஜனநாயக முறை என்று கூச்சமே இல்லாமல் சொல்லித் திரிகின்றார்கள். மாணவர்களுக்கு வரலாறு பயிற்றுவிக்கும் பொழுது பல அறிஞர்களின் நூல்களை கற்று நேர்மையான முறையில் தவறு இல்லாமல் கற்பிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. வரலாற்று நூல்களைப் படிக்கும் போது அந்த வரலாற்று நூலை எழுதிய ஆசிரியர்களின் வர்க்கச்சார்பு என்பது மிக முக்கியம். தமிழ் இலக்கியத்தில் பெரும்பகுதி பார்ப்பனர்களால் எழுதப்பட்டது என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் தமிழக வரலாறு எழுதிய பல பேர் தங்களுடைய சாதிய மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள வரலாற்றை திரித்து எழுதிய துரோகிகள் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
சம்பளம் வாங்குவதற்காக மட்டுமே கல்லூரிக்கு வந்து, எதாவது ஒரு கேடுகெட்ட புத்தகத்தைப் பார்த்து அப்படியே படித்து வாந்தி எடுத்துவிட்டு செல்லும் அற்பப்பிறவிகளாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். தான் சொல்லும் ஒரு தவறான தகவலால் அந்த மாணவனின் எதிர்காலமே பாதிப்புக்கு உள்ளாகும் என்ற எந்த அச்சமும் அவர்களுக்குக் கிடையாது. இது போன்ற பிற்போக்குத்தனமான முட்டாள்கள் தான் அறிவியல் அறிஞர்களாகவும், வரலாற்றை கரைத்துக் குடித்த மேதாவிகளாகவும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள்.
எப்படியோ பார்ப்பன தமிழ் தி இந்துவுக்குத் தன்னுடைய பார்ப்பனிய கருத்தியலை பரப்புவதற்கு எவனாவது மாட்டிக் கொள்கின்றான். தமிழக மக்களிடம் சொஞ்சம் நஞ்சம் இருக்கும் அரசியல் அறிவையும் சுத்தமாக இல்லாமல் செய்ய, அரசியல் கத்துக் கொடுக்கின்றேன் பேர்வழி என்று பிற்போக்குதனத்தையும் மொக்கை அரசியலையும் கத்துக் கொடுக்க சமஸ் என்ற பார்ப்பன அடிமையையும், அதற்கு ஒரு வரலாற்றுத் தன்மை கொடுக்க இது போன்ற முட்டாள் பேராசிரியர்களும் தமிழ் ‘தி இந்து’ வுக்குக் கிடைத்து விடுகின்றார்கள். என்னதான் இருந்தாலும் ‘இனம் இனத்தோடுதானே சேரும்’.
- செ.கார்கி