jayalalitha sarathkumar

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தங்களை கொள்ளையடிக்கும் நபரை மட்டுமே மாற்றிக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்தத் தேர்தல்முறை இந்திய ஜனநாயகத்தின் மிகச்சிறந்த கூறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிகளை பூர்த்தி செய்தாலே போதும்... நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சட்டப்படி தகுதியானவர். மற்றபடி உங்களுடைய கொள்கை என்ன, கோட்பாடு என்ன போன்ற கன்றாவிகளை எல்லாம் தேர்தல் ஆணையம் கேட்பது கிடையாது. தேர்தல் நடத்துவதே திருடர்களை தேர்ந்தெடுக்கத்தான் எனும் போது இதையெல்லாம் கேட்டு என்ன ஆகிவிடப் போகின்றது?

 தேர்தல் பாதையில் நம்பிக்கை உள்ள ஒருவன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை உற்றுப் பார்த்தான் என்றால், அவன் என்ன மாதிரியான முடிவுக்கு வருவான்? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், கையைப் பிடிக்கலாம், காலைப் பிடிக்கலாம், கட்சி மாறலாம், கட்சியை உடைக்கலாம், கூட்டணி மாறலாம், சீட்டுக்காக லாவணி பாடலாம்... மற்றபடி கொள்கைகளை நீட்டி முழங்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது என்ற முடிவுக்குதான் வருவான். மேலும் கொள்கைகளை பேசிக் கொண்டு இருந்தோம் என்றால் கட்சியில் சீட்டும் கிடைக்காது; மக்களிடம் ஓட்டும் கிடைக்காது என்பதையும் நன்றாக புரிந்துகொள்வான்.

  தேர்தல் பாதையின் மூலம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற கிளம்பி இருக்கும் இந்த ஜனநாயகக் காவலர்களின் அரசியல் நேர்மை எப்படிப்பட்டதாய் உள்ளது? தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவில் சீட்டு கிடைப்பதற்காக இங்கே இருக்கும் உதிரிக் கட்சிகள் செய்யும் அலப்பறை கண்கொண்டு பார்க்க முடியாத அளவிற்கு இருக்கின்றது.  

   கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அ.தி.மு.கவை நக்கிப் பிழைப்பதையே தன்னுடைய வாழ்க்கையின் ஒரே லட்சியமாகக் கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதா கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கடைசிவரை காலைப் பிடித்துக் கொண்டு ‘ஒரு சீட்டாவது கொடுங்க அம்மா…..’ என்று கதறிக் கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடாத இடங்களில் தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, உதயகுமாரின் பச்சைத் தமிழகம், பொன்ராஜின் அப்துல் கலாம் கட்சி போன்றவற்றிற்கு ஆதரவு கொடுக்கப் போகின்றாராம். அணு உலையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டையே நாசம் ஆக்கத் துடிக்கும் பொன்ராஜிக்கும் ஆதரவு கொடுப்பாராம், அணு உலையை எதிர்த்துப் போராடும் உதயகுமாருக்கும் ஆதரவு கொடுப்பாராம். ஜெயலலிதா சீட்டு கொடுக்காத விரக்தியில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டுதான் போய்விட்டார் என்று தோன்றுகின்றது.

  தன்னை ஜெயலலிதா கருவேப்பிலையாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி, ஒரு மாதத்திற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்து கழன்றுகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் புரட்சித் திலகம் சரத்குமார், ஜெயலலிதா வீசிய எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு மீண்டும் அதிமுக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அண்ணன் சமத்துவம் என்று வந்துவிட்டால் கருவேப்பிலையாக என்ன... கக்கூஸ் துடைக்கும் பிரஷ்சாக கூட மாறுவதற்குத் தயங்க மாட்டார் என்பதை  நிரூபித்துவிட்டார்.

   அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தேவர்சாதிக் கட்சி கழன்று கொண்டுள்ளது. எந்தக் கட்சியில் தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கின்றதோ, அந்தக் கட்சியுடன் தாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்று சேதுராமன் கூறுகின்றார். தற்போதைக்கு டிராபிக் ராமசாமியிடம்தான் நிறைய சீட்டுகள் உள்ளது, எனவே யாருக்காவது டிராபிக் ராமசாமியின் முகவரி தெரிந்தால் சேதுராமனுக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  இந்தத் தேர்தலில் யாருக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டதோ இல்லையோ, நம்ம கேப்டனுக்குப் பெரிய ஆப்பாக வைக்கப்பட்டுவிட்டது. கூப்பிட்டு பார்த்தும் கூட்டணிக்கு வராத கோபத்தில் இருந்த தி.மு.க கடைசியில் தே.மு.தி.கவை இரண்டாக உடைத்தே விட்டது. தே.மு.தி.கவையே எப்படி ஜீரணிப்பது எனத் தெரியாமல் இன்னும் அழுது கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு, மக்கள் தே.மு.தி.க என்றொரு கட்சி சந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சி ஆரம்பித்த வேகத்தில் மூன்று சீட்டுகளையும் வாங்கிவிட்டார் சந்திரகுமார். அவரைப் பொருத்தவரை அதிமுகவை வீழ்த்தவேண்டும் என்றால் அதற்குச் சரியான கட்சி திமுக தான். 'மக்கள் நலக்கூட்டணி ஜெயலலிதாவிடம் 1500 கோடிகள் வாங்கிக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது, அது ஜெயலலிதாவின் பினாமி அமைப்பு' என்று சொல்லி, ‘நேர்மைக்குப் பெயர்போன’ சந்திரகுமார் தி.மு.கவில் இருப்பதே நாட்டு மக்களுக்கு நல்லது என திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

  காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டு கொதித்துப்போய் அதில் இருந்து விலகி தன்னுடைய தந்தை ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டிய ஜி.கே வாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டுவந்தார். கடைசியில் பண்ருட்டி வேல்முருகனை கழற்றிவிட்டது போலவே ஜி.கே வாசனையும் கழற்றி விட்டுவிட்டார் ஜெயலலிதா. (இது காய்க்காத தென்னைமரம் என்று உளவுப்படை மூலம் ஜெயலலிதாவுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கலாம்) அப்போதும் மனம் தளராத ஜி.கே வாசன் மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவுக்குத் தூது அனுப்பிப் பார்த்தார். தனக்கு எப்படியும் ஜெயலலிதா சீட்டு கொடுப்பார் என கடைசி வரை ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். ஜெயலலிதா ஏறெடுத்தும் பார்க்காததால் பி.ஜே.பியுடன் கூட கூட்டணி பேரம் பேசினார். இதனால் கட்சியில் இருந்த சில ‘கொள்கைவாதிகள்’ காந்தியைக் கொன்றவர்களிடம் கூட்டணி பேசுகின்றீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சொல்லி மீண்டும் காங்கிரசிலேயே சேர்ந்து கொண்டனர். கடைசியில் வேறுவழியே இல்லாமல் வந்தாரை வாழவைக்கும்  மக்கள் நலக்கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏனெனில் அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் அல்லவா?

    பா.ம.க, தேமுதிக, ஜி.கே.வாசன் என அனைவரிடமும் கூட்டணி பேரம் பேசி கடையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் தனித்து அநாதையாக விடப்பட்டிருக்கின்றது பா.ஜ.க. தற்போது அதனுடன் கூட்டணி வைத்திருப்பது இந்திய ஜனநாயகக் கட்சியின் கைப்பிள்ளை பாரிவேந்தனும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தேவநாதனும் (இவனும் காஞ்சிபுரம் தேவநாதனும் ஒன்றா என்று தெரியவில்லை) தான். இப்படி சில டுபாக்கூருகளை ஒன்றாக சேர்த்து ஒரு கருமம் பிடித்த கூட்டணியை அமைத்திருக்கின்றது பாஜக. இந்தக் கருமம் பிடித்த கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்குப் பிரபல செக்ஸ் சாமியார் காஞ்சி ஜெயேந்திரனின் நண்பர் அமித்ஷா வேறு தலைமை தாங்கியுள்ளார்.

  இதுதான் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் நிலைப்பாடு. எவனுக்காவது, எதாவது கொள்கை இருப்பது போல உங்களுக்குத் தெரிகின்றதா?  எதற்காக கட்சி ஆரம்பித்தார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள், பிறகு என்ன கொள்கைப் பிரச்சினை ஏற்பட்டு கூட்டணியை முறித்துக் கொண்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா? கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, கல்வி நிறுவனங்கள் என பலவகைகளிலும் சேர்த்த பணத்தை வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்து, திடீரென தேர்தல் அரசியலுக்குள் நுழையும் இவர்கள் தங்களை மக்களைக் காப்பாற்ற வந்த தேவதூதன்களாக அறிவித்துக் கொள்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதோ அந்தக் கட்சியில் சில கோடிகளை கட்சி வளர்ச்சி நிதியாக கொடுத்து, தங்களை இணைத்துக் கொள்கின்றார்கள். இதுதான் எதார்த்த நிலவரம். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்கை, கோட்பாடு, சுயமரியாதை போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது.

   கொள்கையற்றவன், பிழைப்புவாதி, பொறுக்கித் தின்பவன், மக்களை சுரண்டி கொள்ளையடிப்பவன் என பலர் இன்று அரசியல்வாதிகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுவதால் நம்மால் இந்தத் தேர்தல் அரசியலை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக பார்க்கமுடியவில்லை. உங்களால் பார்க்க முடிகின்றதா?

- செ.கார்கி

Pin It