அப்பாடா! ஒரு வழியாகத் தேர்தல் முடிந்து விட்டது. இனி நாம் நம்முடைய வேலைகளைப் பார்க்கலாம். முதலமைச்சர் யார் என்பது தெரிந்து விட்டது. அவருடைய அமைச்சரவை முடிவாகி விட்டது. நமக்கும் மே மாதம் ஒரு நாள் கூடுதல் லீவும் கிடைத்தாகி விட்டது. ‘கையில் மை, கடமை, பெருமை’ என்றெல்லாம் சொன்னார்கள். நாமும் ஓட்டு போட்டு அந்தக் கடமை, பெருமை ஆகியவற்றிற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டோம். இனி ஐந்து ஆண்டுகளுக்குக் கவலை இல்லை – ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்தக் கட்டுரை!

தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை:

இதுவரை இல்லாத ஒரு தேர்தல் முடிவை நம் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்திருக்கிறார்கள். ஒரே கட்சி ஆட்சிக்கு வருவது என்பது ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கு (கடைசியாக 1984இல்) முன்பாக நடந்தது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு தீர்ப்பு தரப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு செக்:

jayalalitha after electionமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு கொடுத்திருந்தாலும் முந்தைய 2011 தேர்தலை விடக் குறைவான ச.ம.உ.கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த மக்கள், அதே நேரத்தில் பல அமைச்சர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். பொது நிலையில் முதலமைச்சருக்குப் பெரிய எதிர்ப்பு இல்லை என்ற தோற்றத்தை இந்தத் தேர்தல் தந்தாலும் போன சட்டமன்றத்தை விட எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அமைச்சர்களே தோல்வியைத் தழுவியிருப்பது, வெள்ளம் பாதித்த சென்னையில் ஆளுங்கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது ஆகியன ஆளுங்கட்சியால் உற்றுக் கவனிக்க வேண்டிய விஷயங்களாகவே இருக்கின்றன.

இதுவரை இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போது முந்தைய ஆட்சியில் கஜானாவைக் காலி செய்து விட்டார்கள். நாங்கள் என்ன செய்வது? பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பஞ்சப்பாட்டு பாடுவது ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும் தொடர்கதையாகத் தான் இருந்தது. இந்த முறை அந்தப் பாட்டைப் பாட முடியாது. எனவே, அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதில் தொடங்கி எல்லோருக்கும் தேவையான கல்வி, மருத்துவம் ஆகியவற்றைத் தரமாக அரசே கொடுக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் ஆளும் அதிமுகவை பாஜகவுடன் எளிதில் பேச்சு வார்த்தை நடத்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணக்கமான சூழலை உருவாக்கித் தமிழகத்தின் நீண்ட காலச் சிக்கல்களைத் தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவும் மெஜாரிட்டி அரசாக இருப்பதால், தமிழக மீனவர் கொல்லப்படுவது, கூடங்குளம் அணு உலை பிரச்சினை, நியூட்ரினோ திட்டம், கெயில் குழாய் பதிப்பு, ஏழுதமிழர் விடுதலை போன்ற தீர்க்கப்படாத நீண்ட காலப் பிரச்சினைகளைத் தமிழக அரசு எளிதில் தீர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

மிகப் பெரிய எதிர்ப்பு அலை இல்லாத நிலை தான் ஆட்சியைத் தக்க வைக்க அதிமுகவிற்கு உதவியிருக்கிறது. ஆனால் இனி வரும் காலம் அப்படியிருக்க வாய்ப்பில்லை. வலுவான எதிர்க்கட்சி உருவாகியிருப்பதும் பிற எதிர்க்கட்சிகள் அணி சேர்ந்து நிற்பதும் அரசின் தவறுகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதை அதிமுக உணர வேண்டும். இவற்றில் எல்லாம் தமிழக அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமையும் என்பதை ஆளுங்கட்சி மறந்துவிடக் கூடாது.

எதிர்க்கட்சியிடம் எதிர்பார்ப்பது என்ன?

இந்தத் தேர்தல் முடிவுகள் முந்தைய ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்வதை விட, ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம், ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள், பலவீனமான எதிர்க்கட்சித் தலைவர் ஆகியவற்றினால் வந்த முடிவு என்பதே பொதுவாகச் சரியாக இருக்கும். முதல் ரேங்க் வருபவருக்கு மட்டுமே பதவி என்று இருக்கும் இந்தத் தேர்தல் முறையில் ‘முதலமைச்சர் ஆனால் தான் உண்டு’ என்று எல்லோரும் அடம் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை மக்களை விட எதிர்க்கட்சிகள் இந்நேரம் நன்றாக உணர்ந்திருப்பார்கள்.

ஆளுங்கட்சியின் தவறுகளைச் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும், மக்கள் எப்படியும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றுவார்கள். அதனால் நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கண்டு கொண்டிருந்த கனவை மக்கள் இந்த முறை சிதைத்திருக்கிறார்கள். இதை எதிர்க்கட்சிகள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியை ஐந்து ஆண்டுகள் நன்றாகத் தவறு செய்ய விட்டு விட்டு பின்னர் கண்டிப்பது என்பது வாக்கு வாங்கப் பயன்படலாம். மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படாது.

முன்னெப்போதும் இல்லாத அளவு பெரிய எதிர்க்கட்சியாகத் திமுக உருவாகியிருக்கிறது. ஓர் எதிர்க்கட்சித் தலைவர் நிழல் முதல்வர் போலச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படாமல் முதல்வரைத் திட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடந்தது போல அடுத்த தேர்தலில் கூடாரத்தையே காலி செய்ய வேண்டி வரும் என்பது தான் திமுக கற்க வேண்டிய பாடம்.

இந்தத் தேர்தலில் திமுகவின் தொகுதிவாரித் தேர்தல் அறிக்கை பலரையும் கவர்ந்தது. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்றப் போதுமான அழுத்தத்தைத் திமுக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் போன இடத்தில் எல்லாம் எங்கள் எம்.எல்.ஏ.கள் மக்களை வந்து 3 மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பார்கள். அப்படிச் சந்திக்கவில்லை என்றால் அவர்கள் பதவி பறிக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை எல்லாம் நம்பித் தான் பெரிய எதிர்க்கட்சியாகத் திமுகவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

கடந்த 2006ஆம் ஆண்டில் 96 எம்.எல்.ஏ.களை வைத்து ஆட்சி நடத்திய கட்சி திமுக. இப்போதும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.கள் அவர்களிடம் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நினைத்தால் ஒரு நிழல் அமைச்சரவையை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கலாம். எங்களுக்குத் தான் ஆட்சியைக் கொடுக்கவில்லையே என்று சொல்லித் திமுக தப்பி விடக்கூடாது. பாமக, நாம் தமிழர் என்று பல கட்சிகள் தனித்து வரும் சூழலில் அப்படிச் செய்தால் அடுத்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பல்லாண்டுகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சியாகவும் இருந்து வரும் திமுக தலைமைக்குப் பிறர் உணர்த்த வேண்டிய தேவையில்லை.

கரையேறிய காங்கிரஸ்:

இந்தத் தேர்தல் முடிவுகளால் பாதிக்கப்படாத ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் மட்டும் தான்! மொத்தமே மூன்று கட்சிகள் தாம் இருக்கும் இந்தச் சட்டப்பேரவையில் இருக்கும் மூன்றாவது கட்சி காங்கிரஸ். தமிழகச் சட்டப்பேரவையில் இருக்கும் ஒரே தேசியக் கட்சி. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை; எனவே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தயவும் இப்போதைக்குக் காங்கிரசுக்குத் தேவையில்லை. எனவே நடுநிலையாக நடந்து கொண்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கட்சியாக காங்கிரஸ் மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் நல்ல நிலைக்கு வர அது பயன்படும். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்னும் நிலையை மாற்ற காங்கிரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் வாய்ப்புத் தான் இந்தத் தேர்தல் முடிவுகள். அதை உணர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் செயல்பட வேண்டும்.

பிற கட்சிகள்

இப்போது அமைந்துள்ள சட்டசபையில் ‘இது தான் முதல்முறை’ என்று சொல்லக்கூடிய பல கூறுகள் இருக்கின்றன. ஒரு தலைமுறைக்குப் பிறகு மீண்டும் அதே ஆட்சி, மிக வலுவான எதிர்க்கட்சி, மொத்தமே 3 கட்சி உறுப்பினர்கள், கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை என்று எக்கச்சக்க வித்தியாசங்கள்!

இந்தத் தேர்தலில் பணநாயகம் வென்று விட்டது என்று ம.ந.கூ., பாமக, நாம்தமிழர் போன்ற கட்சிகளும் சுப. உதயகுமார் போன்ற சுயேட்சை வேட்பாளர்களும் சொல்வதை முழுதாக இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது என்று தேர்தலையே ஒத்தி வைக்கும் அளவுக்குத் தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டிருப்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

இவ்வளவு இருந்தாலும் ‘நோட்டா’வுக்கு வாக்களித்த மக்கள் கூடத் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க மறுத்தது ஏன் என்பது ஒவ்வொரு கட்சியும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய இடம்! தமிழகத் தேர்தல் வரலாற்றில் அதிமுக, திமுக இல்லாத ஒரு பெரிய கூட்டணியை யாரும் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு கூட்டணியை இந்தத் தேர்தலில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் ஒரு வருடத்திற்கு மேல் பாடுபட்டு உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கியும் மக்களிடம் நம்பிக்கை உருவாகவில்லை என்பதும் அவர்களின் முதல்வர் வேட்பாளரே டெபாசிட்டை பறி கொடுத்ததும் ஏன் என்பது தான் அவர்கள் சிந்திக்க வேண்டிய செக் பாயிண்ட். மக்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள் என்று நாடி பார்க்கத் தெரிந்த தலைவர்கள் எப்படிப்பட்ட மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ஆராயாமல் போனதன் விளைவு தான் இந்தத் தேர்தல் முடிவுகள். இதை உணர்ந்து இந்தக் கட்சிகள் மாறும் போது மக்களின் நம்பிக்கை அவர்களின் பக்கம் திரும்பும் என்பதைக் காலம் கட்டாயம் உணர்த்தும்.

அதெல்லாம் சரி! நாம் என்ன செய்ய வேண்டும்?

வீட்டு வேலைக்கு ஓர் ஆளை நியமிக்கிறோம். நியமித்த உடன் முடிந்தது நம்முடைய கடமை - இனி அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கும் போது அவர் எப்படி வேலை செய்கிறார் என்று பார்த்தால் போதும் என்று இருப்போமா? இருக்க மாட்டோம் அல்லவா? வேலைக்கு ஆள் வைத்த பிறகு தினமும் அவரைக் கண்காணித்து நிறைகுறைகளைச் சொல்ல வேண்டும். அப்போது தான் வேலையாள் நன்றாக வேலை செய்வார். வீட்டிற்கு எப்படியோ, அப்படித் தான் நாட்டிற்கும்!

நீங்கள் வாக்களித்த வேட்பாளர் ஜெயித்திருக்கலாம், தோற்றிருக்கலாம். அதெல்லாம் தேர்தலுடன் முடிந்தது. இப்போது உங்கள் தொகுதிக்கு நீங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர ஒருவர் தயார்! அவ்வளவு தான் ! இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர், அவர்

  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கிறாரா
  • மக்கள் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கிறாரா

என்பதைக் கண்காணியுங்கள். சரியான கண்காணிப்பு இல்லை என்பதே நல்லவரையும் கெட்டவராக மாற்றி விடும். எனவே, மக்கள் கண்காணிப்பே சிறந்த ஆட்சியைக் கொடுக்கும். இப்போது கண்காணிக்காமல் விட்டு விட்டு ஐந்து ஆண்டுகள் கழித்துப் புலம்புவதில் அர்த்தம் இல்லை. கண்காணிப்பது என்றால் எப்படி? எம்.எல்.ஏ., எங்கிருக்கிறார் என்று அக்கம்பக்கத்தாரிடம் கேட்டாலே சொல்வார்கள். அது முடியவில்லை என்றாலும் தமிழக அரசின் இணையத்தளத்திலேயே எல்லா ச.ம.உ. களின் முகவரி, செல்பேசி ஆகியன கிடைக்கின்றன. அவரை நேரில் பார்த்துத் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. அஞ்சலட்டை ஒன்று கூடப் போதும். ரோடு போட வேண்டும், தெரு விளக்கு எரியவில்லை என்பது மட்டும் இல்லை.

அரசின் இலவசத் திட்டங்கள் போன்ற திட்டங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இது போன்ற விசயத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொள்வதாலோ வீட்டிற்குள் செய்தி பார்க்கும் போது புலம்புவதாலோ ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது. அதற்குப் பதிலாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே முதலமைச்சருக்கு நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் கூடப் போதும். முடிந்தால் அதையே ஒரு கடிதமாக எழுதி, முதலமைச்சர், தலைமைச்செயலகம், சென்னை என்று அனுப்பினால் போதும். இப்படி நாம் செய்யும் போது அரசுக்கும் மக்களின் மனநிலை தெரிய வரும்.

மக்கள் விரும்பாத எதையும் செய்ய ஆட்சியாளர்கள் முன்வர மாட்டார்கள். மது விலக்கு சாத்தியமில்லை என்று அறிவித்த முதலமைச்சர், மக்களின் மனநிலை டாஸ்மாக்கிற்கு எதிராக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு ‘படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று சொன்னதை மறந்து விடாதீர்கள். எனவே, நாம் விழிப்பாகச் செயல்பட்டு அரசைக் கண்காணித்தால் போதும் – விரும்பும் மாற்றங்களை வேண்டிய நேரத்தில் கொண்டு வந்து விடலாம். இப்படிப்பட்ட கண்காணிப்புகள் ஒவ்வொரு கட்சியையும் நல்ல வேட்பாளர்களைக் களம் இறக்க நெருக்கடிகளை மறைமுகமாகக் கொடுக்கும். ஏறத்தாழ எல்லாக் கட்சிகளிலுமே கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டார்கள் என்பது மக்கள் கண்காணிப்பு இல்லை என்பதன் நேரடி விளைவு தான்! இதை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கண்காணிப்பு எதுவும் இல்லாமல் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் விட்டு விலகினால் ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் வரி, விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம் தனியார் மயம் என அனைத்தும் நம் தலையில் தான் வந்து விடியும்! ஆனவரை ஆடி விட்டு ‘சாகும் போது சங்கரா சங்கரா’ என்றால் சங்கரனும் வரமாட்டார், சங்கடமும் தீராது. நம்முடைய கும்பகர்ணத் தூக்கம் முடியட்டும்! கண்காணிப்புச் சூரியன் விடியட்டும்! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

- முத்துக்குட்டி

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் ஜூன் 1-15 2016 இதழில் வெளியானது)