கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்டமான சொல் எது?

பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல்.

கேள்வி : அது என்ன,கடவுள் என்பதைவிட மகா பித்தலாட்டமான சொல்லா?

பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்தலாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக்காரனுக்கு - அயோக்கியனுக்கு - இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி - ஜனநாயகம் தான்.

கேள்வி : இதுவே இப்படியானால் - ஜனநாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜனநாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி - என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன ஆவது?

பதில் : அவைகளா? துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல். அது மகா பித்தலாட்டமானால், இவை மகா மகா பித்தலாட்டமாகும்; ஏன் - பித்தலாட்டத்தில் எல்லையென்றே சொல்லலாம். சந்தேகமிருந்தால் இவைகளில் இருக்கின்ற - இவைகளில் சேர்ந்த தனித்தனி ஆள்களை எடுத்துக் கொண்டு, அவர்களது சென்ற கால, நிகழ்கால, எதிர்கால பலனைக் கொண்டே ‘சாதக’த்தையும், அவர்களது கொடிவழிப் பட்டியையும் பார்.

எங்கேயோ போகிறபனாதி; பிழைப்புக்கு எத்தனையோ வழியில் வகை பார்த்து உதைபட்டு வந்த உதவாக்கரை; மற்றும் சகலவிதமான அயோக்கியத் தனங்களுக்கும் புகலிடமாக இருக்கிற பரம அயோக்கியர்கள்; தினம் ஒரு கட்சி புகுகிறவர்கள்; சமயத்திற்கேற்ற கொள்கைகளைப் பேசுகிறவர்கள்; எதைச் சொன்னால் மக்கள் ஏமாறுவார்களோ அதைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்கள்; கலவரம் உண்டாக்குவதாலேயே பிழைக்கக் கூடியவர்கள் - இவர்களும், இவர்களைப் போன்றவர்களையும் பெரிதும் கொண்ட ஸ்தாபனங்கள்தானே! எந்தப் பெயர் இருந்தாலும் - அதற்குச் சொந்தப் பெயர், ‘பித்தலாட்ட மோசடி ஸ்தாபனம்’ என்றுதானே சொல்ல வேண்டும்?

கேள்வி : சிலர் - இரண்டொரு, அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்களே?

பதில் : இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளுவோமே! இருந்தால் அவர்களை மோசடிப் பித்தலாட்ட  அயோக்கியர் என்று சொல்ல வேண்டாம்; முட்டாள்கள் என்று சொல்லு!

கேள்வி : இப்படிச் சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்களா?

பதில் : யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தேவடியாளை, ‘விலைமாதர்’ என்றால் கோபிப்பார்களா? நியாயவாதியைப் பொய் விற்பனையாளர்கள் என்றால் கோபிப்பார்களா? வாணிபர்களை ஏமாற்றுக்காரர்கள் என்றால் கோபிப்பார்களா? அதுபோல்தானே இதுவும். ஆதலால், கோபித்துக் கொள்ளுபவர்கள் யாராய் இருந்தாலும் - அவர்கள் தலைக்கு இந்தக் குல்லாய் சரியாய் இருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொள்ளுவதாகத்தான் அர்த்தமாகும்.

கேள்வி : சரி.

பதில் : சரி!

கேள்வி : வணக்கம்.

பதில் : வணக்கம்; வணக்கம்!

(‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் ஈ.வெ.ரா எழுதியது. ‘விடுதலை’ 4.10.1952)

Pin It