நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் மீண்டும் அதிமுகவையே ஆட்சிக் கட்டிலில் ஏற்றி இருக்கின்றார்கள். அந்தக் கட்சி 134 இடங்களை கைப்பற்றி இருக்கின்றது. ஜெயலலிதா மீது எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வைத்த அனைத்து விமர்சனங்களுக்கும் மக்கள் தம்முடைய தீர்ப்பை கொடுத்திருக்கின்றார்கள். ஊழல் நிறைந்த ஆட்சி, மதுவால் தமிழகத்தை சீரழித்த ஆட்சி, சட்டம் ஒழுங்கில் சந்தி சிரிக்கும் ஆட்சி என இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும்  மக்கள் கொடுத்திருக்கும் பதில் மிக எளிமையானதாக இருக்கின்றது.

  jayalalitha 348 கொள்கை சார்ந்த அரசியல் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தனி மனித அரசியல் முன்னிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா என்ற பிம்பத்தின் மீது எவ்வளவுதான் வெறுப்பை உமிழும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பெரிய அளவில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. திமுக கூட்டணி 98 இடங்களில் வென்று கணிசமான வெற்றியை பெற்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மையாக ஆட்சியை அதிமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

 அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா காய்கறிக்கடை, அம்மா குடிநீர் என ‘அம்மா’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட கவர்ச்சியான பல திட்டங்கள் சாமானிய மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தொழிற்துறை வளர்ச்சி இல்லை என்பதையோ, படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதையோ இந்த மக்கள் ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் மதுவினால் லட்சக்கணக்கான பெண்கள் தாலியை இழந்த போதும் அந்தக் கோபத்தைத் திருப்பிக் காட்டும் இடமாக அவர்கள் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஜெயலலிதா தருவதாகச் சொன்ன 50% மானியத்துடன் கூடிய டிவிஎஸ் ஸ்கூட்டிக்கும், 8 கிராம் தங்கத்துக்கும் கொடுத்த மரியாதையைத் தங்களுடைய கணவனோ, அண்ணனோ, தம்பியோ மதுவால் அழிகின்றார்களே என்பதற்குக் கொடுக்கவில்லை.

  சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் ஒன்று கூட செயல்வடிவம் பெறாதபோதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வளர்ச்சியின் எந்த அறிகுறிகளும் தென்படாத போதும்  இந்த மக்கள் ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புகின்றார்கள். அரசியல் கட்சிகள் அனைத்தும் ஊழலிலும், லஞ்சத்திலும் ஊறிப்போய் கிடக்கும் போது மக்கள் தானாகவே சகித்துப்போகும் மனநிலைக்கு வந்துவிடுகின்றார்கள். யாருக்கு ஓட்டு போட்டாலும் ஊழல் நடைபெறத்தான் போகின்றது எனும் போது ஏன் நாம் திரும்ப திமுகவை தேந்தெடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்திருக்கின்றார்கள்.

 அதிமுக பணம் கொடுத்துத்தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் சொல்லலாம். ஆனால் தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுமே பணத்தை வாரி இறைத்தன என்பதுதான் உண்மை. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்களை விட திமுக வேட்பாளர்கள் அதிக பணம் கொடுத்தார்கள். சில இடங்களில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைக் கொடுத்தார்கள். வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் அதிக பணம் யார் கொடுத்தார்களோ அந்தக் கட்சிக்கே மக்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி இருக்கின்றார்கள்.

 இந்தத் தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்கப் போவதால் பெரிய மாற்றம் நிகழப் போகின்றது என மக்கள் நலக் கூட்டணி போன்றவை சொல்லிக் கொண்டிருந்தன. தமிழக இளைஞர்களின் அரசியல் அறிவின் மீது அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனால் உண்மை நிலவரம் பெரும்பான்மையான தமிழக இளைஞர்கள் அரசியல் அறிவு அற்ற பிழைப்புவாதிகள் என்பதுதான். நாம் நேரடியாக பல இளைஞர்களை சந்தித்து உரையாடியதில் இருந்து இந்த உண்மையைச் சொல்கின்றேன். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்களுக்குத் தமிழ்நாட்டின் ஆளுநர் யார் என்று கூட தெரியாது. அவர்கள் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை ஜெயலலிதா கொடுத்த மடிக்கணினியை வைத்துக் கொண்டு பேஸ்புக்கில் , வாட்ஸ் ஆப், போன்றவற்றில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பதிலும், போனோகிராபிக்களை பார்ப்பதிலுமே செலவழிக்கின்றார்கள். இளைஞர்களில் கணிசமான பேர் மதுவுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். நான் அனைத்து இளைஞர்களையும் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற இளைஞர்கள் தான் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

 அதனால் தமிழக இளைஞர்களை வைத்து எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் நாம் இப்போதைக்குத் திட்டமிட முடியாது என்பதுதான் எதார்த்த நிலவரம். இன்னும் மக்கள் போதிய அரசியல் அறிவை எட்டவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்திய அளவிலும் அதுதான் நிலவரம். மோடி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதை நாம் மறந்துவிட முடியாது. ஜெயலலிதா, மோடி போன்ற பாசிஸ்ட்டுகள் வெற்றி பெறுகின்றார்கள் என்றால் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் அரசியல் அறிவையும் நாம் கண்டிப்பாக மதிப்பிட வேண்டும். மாற்றம் என்றால் அவர்களைப் பொருத்தவரை கருணாநிதியா, ஜெயலலிதாவா என்பதுதான். இந்த முறை அப்படி ஒரு மாற்றத்தைக்கூட தமிழக மக்களில் கணிசமான பகுதியினர் எதிர்பார்க்கவில்லை.

 பல முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் இருந்திருந்தாலும் அனைவரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். சொல்லப் போனால் அவர்களின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சி தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வி இருக்கின்றது. அது பெற்ற மொத்த ஓட்டு சதவீதம் 5.3% ஆகும்.

 அடுத்து தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்  என்ற கொள்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை களம் இறக்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சுத்தமான தமிழர்களால் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார். ஒட்டுமொத்தமாக 1.1% வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சி பெற்றிருக்கின்றது.  ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறமுடியவில்லை. எனவே தமிழ்மக்களால் கேவலமான முறையில் தோற்கடிக்கப்பட்ட சீமான் தன்னுடைய கட்சியைக் கூடிய விரைவில் கலைத்துவிடுவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

  முன்றாவது அணி என்ற பெயரில் உருவான மக்கள் நலக் கூட்டணி இந்தத் தேர்தலில் அவமானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. தேமுதிக 2.4% மதிமுக 0.9%, சிபிஎம், சிபிஐ தலா 0.8 சதவீத வாக்குகளையும், தமாகா 0.5% பெற்றிருக்கின்றன. விஜயகாந்த் என்ற சினிமா கழிசடையை வைத்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க திட்டமிட்ட புரட்சிகர கம்யூனிஸ்டுகள் , பிழைப்புவாதி வைகோ, அரசியல் அநாதை ஜி.கே. வாசன் போன்றோர் தமிழக அரசியல் களத்தில் அவரவர்களுக்கான சரியான இடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மக்கள் நலக் கூட்டணி தோற்றதில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ தா.பாண்டியனுக்கு தலைகால் தெரியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.  

  தோர்தலுக்கு முன்னால் தாம் CPM வை விட குறைவாக ஓட்டுவாங்கினால் தான் CPM கட்சியிலேயே சேர்ந்துவிடுவதாக தந்தி தொலைக்காட்சியில் நடந்த ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சீமான், பேராசிரியர் அருணனிடம் சவால் விட்டார். நேற்று கட்சி ஆரம்பித்த சீமான் கூட 1.1% ஓட்டுக்களை வாங்கி நூறாண்டுகள் பழமையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் முகத்தில் கரியைப் பூச முடிகின்றதென்றால் அவர்களின் நிலை தமிழ்நாட்டில் என்ன? தாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்வதற்கு மருந்தளவுக்குக் கூட அவர்களிடம் கம்யூனிசம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. கட்சித் தொண்டர்கள் யாருக்கும் கம்யூனிசமென்றால் என்னவென்றே தெரியாது.

   நாம் நிறைய CPI, CPM தோழர்களிடம் பேசியிருக்கின்றோம். அவர்களில் பெரும்பாலான தோழர்களுக்கு பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு முதலாளித்துவக் கட்சியைவிட மிக மோசமான நபர்களை எல்லாம் அது தன்னுடைய தொண்டர்களாகக் கொண்டுள்ளது. CPI மற்றும் CPM-ன் இந்த வீழ்ச்சி என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

 மதமாற்ற தடைச் சட்டம் போன்ற கீழ்த்தரமான வாக்குறுதிகளை கொடுத்து ‘இந்து’ ஓட்டு வங்கியை நம்பி தேர்தலைச் சந்தித்த தமிழக பாரதிய ஜனதாவுக்கு பெரியாரிய மண் சரியான பாடத்தைக் கற்பித்து இருக்கின்றது. அந்தக் கட்சியின் தலைவர் தமிழிசை மற்றும் பொறுக்கி ஹெச். ராஜா போன்றவர்கள் டெபாசிட் இழந்திருக்கின்றார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் இந்தப் பார்ப்பன பயங்கரவாத கூட்டத்தால் காலூன்ற முடியாது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதுமட்டும் அல்லாமல் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பல சிறிய கட்சிகள் குறிப்பாக உதயகுமார், பொன்ராஜ் போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

  தமிழக மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றது. அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் அவர்கள் மிகவும் வேறுபட்ட தன்மையைக் கொண்டவர்களாக உள்ளனர். சாதியும், பணமும், தனிமனித செல்வாக்கும் தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றன. தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துவிடலாம் என செயல்பட்டுக் கொண்டிக்கும் அனைவருக்கும் தமிழக தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல பாடம். தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளே தமிழக மக்களால் மிக கேவலமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் போது தேர்தலில் பங்கெடுக்காத அரசியல் கட்சிகளின் நிலையை நாம் சொல்லவே தேவையில்லை. அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்துச் சமூக மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும் அனைவரும் கடக்க வேண்டிய தூரம் இன்னும் வெகுதொலைவில் உள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

- செ.கார்கி

Pin It