Fire Accident Of Kerala

ஏன் இந்த மனிதர்கள் இப்படி முட்டாள்களாய் இருக்கின்றார்கள்? தன்னுடைய சொந்த வாழ்க்கையின் மீது முடிவெடுக்கும் திராணியில்லாத இந்த நவீன அடிமைகள் தன் வாழ்க்கையின் மீது மேலாதிக்கம் செய்யச் சொல்லி ஒவ்வொரு கடவுளாக ஒவ்வொரு கோயிலாக மன்றாடிக் கிடக்கின்றார்கள். தனக்கான விடியலை கோயிலில் இருக்கும் பல உருவங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மூலம் பெற முடியும் என அவனது ஆன்மீக உணர்வு அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றது. சக மனிதன் வறுமையாலும், அந்த வறுமை அவனுக்குள் கட்டமைத்துள்ள மன நெருக்கடிகளாலும் அவதியுறும் போது அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அவனுக்கு எந்த உதவியும் செய்யாத ஒரு இந்துவின் ஆன்மீக மனம் எங்கோ ஒரு தூர தேசத்தில் உள்ள ஒரு கடவுளுக்குத் திருவிழா என்றால் உடனே அவனை விரைந்து ஓடச் செய்கின்றது. அதற்காக தன்னுடைய வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியைச் செலவிடமும் அவனை தூண்டுகின்றது.

  நேர்மையும், நாணயத்தையும்,  தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாய் சொல்லிக் கொள்ளும் ஒரு இந்து அதற்கான மன வலிமையை இந்துக் கடவுள்கள் தனக்கு அளிப்பதாய் நம்புகின்றான். அப்படி தனக்கு நேர்மையும், நாணயத்தையும் கற்றுக் கொடுத்த அந்தக் கடவுளுக்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என எண்ணுகின்றான். ஆன்மீக வாழ்வே தன்னை இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துவிதமான தீமைகளில் இருந்தும் விடுபட வைக்கும் நிவாரணி என உளப்பூர்வமாக நம்புகின்றான். காலையில் இருந்து இரவு படுக்கப்போகும் வரை ஏதோ வடிவில் தன்னுடைய ஆன்மீக தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றான்.

  அவனுக்கு எல்லாமே பிடித்திருக்கின்றது. ஒரு பல்துறை மருத்துவமனையில் ஒவ்வொரு உடல்பாகத்தையும் சிறப்பாக கவனிக்க தனி மருத்துவர்கள் இருப்பது போன்று அவனது ஒவ்வொரு பிரச்சினைகளையும் சிறப்பாக கவனிக்க தனி தனி கடவுள்கள் அவனுக்குத் தேவைப்படுகின்றார்கள். உடல்நோய்களை தீர்க்க, செல்வம் கொடுக்க, தேர்வில் வெற்றிபெற, திருமணம் நடக்க, குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க, தான் செய்த பாவங்களை (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி…..) கழுவ, அப்புறம் தனது எதிரிகள் ஒழிந்துபோக அவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என அனைத்துச் செயல்களுக்கும் அவனுக்குத் தனி தனி கடவுள்கள் தேவைப்படுகின்றார்கள். அப்படி அந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த கடவுள்கள் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அதனைத் தொழுவதற்குப் புனித பயணம் மேற்கொள்கின்றார்கள்.

  அப்படி தனக்கான ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள காடுகளையும், மலைகளையும், கடல்களையும் கடந்து செல்லும் அவனைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும் அவன் இருப்பதாய் நம்பும் அந்தக் கடவுள்களையே சாரும். ஆனால் நிஜத்தில் தன்னை நம்பிவரும் அந்தப் பக்தர்களை அந்தக் கடவுள்களே கொத்துக்கொத்தாய் படுகொலை செய்தால் அந்தச் சர்வவல்லமை பொருந்திய சக்தியின் மீது நாம் தாக்குதல் தொடுப்பதைத் தவிர நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு வேறு என்னதான் மாற்றுவழி இருக்கின்றது?

  கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோயிலில் நடந்த திருவிழாவில் (ஏப்ரல் 10, 2016) பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு ஏறக்குறைய 110க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தனை மக்கள் கொடூரமாக சாவதற்கு யார் காரணம்? நிச்சயமாக மக்களுடைய முட்டாள் தனமும், அந்த முட்டாள் தனத்திற்குள்  குடிகொண்டு இருக்கும் கடவுளுமே காரணமாகும். மாவட்ட ஆட்சியர் பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்த போதும் கோயில் நிர்வாகம் கொடுத்த அனுமதியின் பேரில் கடவுளை திருப்தி படுத்த தடையை மீறி போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்துள்ளனர். இதன் காரணமாகவே பெரும் தீவிபத்து ஏற்பட்டு அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

  ஆன்மீக உணர்வானது அனைத்தையும் விட கடவுளையே பெரிதாக பார்க்கின்றது. அதனால் அதை திருப்திபடுத்த சட்டத்தை மீறினால் தவறில்லை என்ற மனநிலைக்கு அது வந்துவிடுகின்றது. கடவுளின் பெயரால் உயிரையும் எடுக்கலாம், கடவுளின் பெயரால் உயிரையும் கொடுக்கலாம் என்பதுதான் ஒரு ஆன்மீகவாதியின் கொள்கையாக இருக்கின்றது. எத்தனை பிணங்கள் விழுந்தாலும் அதை ஒரு ஆன்மீகவாதி கடவுளின் செயலாகவே எடுத்துக் கொள்கின்றான். கடவுள் ஏதோ ஒன்றை இந்த உலகத்திற்கு சொல்ல வருவதாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றான். மனிதன் ஒழுக்கமில்லாமல் நடப்பதாலேயே சுனாமி முதல் சூறாவளி வரை அனைத்தையும் கடவுள் கொண்டு வருவதாக கூப்பாடு போடுகின்றான்.

  2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள மந்தர் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்தனர், 2008 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 123 பேர் உயிரிழந்தனர். 2010 ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில், உள்ள கிருபால் மகராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர், 2011 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர், 2015 ஆம் ஆண்டு கோதாவரி புஷ்கரம் கூட்ட  நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். மேலும் அதே ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துர்காதேவி கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர்.

  இதுதான் கடவுள்களின் உண்மையான வலிமை. தன்னை நம்பி வந்த மக்களைக் காப்பாற்ற திராணியற்ற இந்தக் கடவுள்கள் தான் இந்த முட்டாள் மனிதர்களின் வழிகாட்டிகளாக அவர்களின் வாழ்க்கையைப் பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்படுத்துபவர்களாக உள்ளனர்.

    அவர்கள் ஒரு போதும் தீமையின் வடிவமாக கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. அதனால் தான் இன்னும் அவர்களின் மனங்களில் அந்தக் கடவுள்களால் ஆழமான செல்வாக்கு செலுத்த முடிகின்றது. ஒரு நல்லது நடக்கும் போது அது கடவுளின் செயல் என அகமகிழும் ஒரு ஆன்மீகவாதி ஒரு தீய செயல் நடக்கும் போது அதுவும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என சொல்வதில்லை. உதாரணத்திற்கு ஒரு கொலை நடைபெறும் போது ‘பார் எவ்வளவு அழகாக கொலை செய்கின்றான். கடவுள் துணை இல்லாமல் இப்படி எல்லாம் செய்யமுடிமா?' என்றோ, ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறும்போது 'கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார். அவன் இப்படி செய்வது கடவுளின் விருப்பம்' என்றோ சொல்வதில்லை. காரணம் நாம் எப்போதும் கடவுளை நல்ல செயல்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கின்றோம்.

  அதனால் தான் நாட்டில் நடக்கும் எல்லாவிதமான அராஜக செயல்களுக்கும் காரணம் மனிதன் தான் கடவுள் கிடையாது என கடவுளை குற்றச்செயல்களில் இருந்து விடுதலை செய்து விடுகின்றோம். அதனால் நல்லது நடப்பதற்கு  மனிதனை நம்புவதைவிட கடவுளை நம்புவதே சிறந்தது என முன்மொழிகின்றோம்.

 ஒரு ஆன்மீக முட்டாள் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் தன்னுடைய குற்றத்தை செய்கின்றான். அவனைப் பொறுத்தவரை அதற்கு அதற்கு உண்டான கடவுள்களிடம் குறிப்பிட்ட காணிக்கைகளைக் கொடுத்துக் கடவுள்களை சாந்திப்படுத்தி விடலாம் என அவன் உளப்பூர்வமாக நம்புகின்றான். தான் பார்க்காத, தன்னால் நிரூபிக்க முடியாத கடவுளை தன்னுடைய குழந்தைகளையும் நம்பும்படி கற்றுக்கொடுகின்றான். அதன்மூலம் சுயமாக சிந்திக்க திராணியற்ற ஒரு முட்டாளை இந்தச் சமூகத்திற்கு உருவாக்கி தனது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றான்.

  இந்த மக்களை இப்படி முட்டாள் தனத்தில் இருப்பதையே பெருமையான ஒன்றாக  நம்பச் சொல்லிக் கொடுக்கும் அற்பப்பிறவிகளான மதவாதிகள் இது போன்ற சமூக அவலங்களுக்குப் ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. நாமும் இத்தனை பேரின் சாவுக்கு நீயும் தான் காரணம் என அவனின் சட்டையைப் பிடித்து கேள்விகேட்கப் போவதில்லை. அந்தத் தைரியத்தில்தான் அவர்கள் தொடர்ச்சியாக உங்களிடன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள். பல வகையான கடவுள்களைப்பற்றி தன்னுடைய மூளையில் தோன்றிய குப்பைகளை எல்லாம் கூச்சமே இல்லாமல் உங்கள் முன் வாந்தி எடுக்கின்றார்கள். அதன்மூலம் தனக்கும் கடவுள்களின் அருள் இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள். ஆன்மீக முட்டாள்களோ சாவோம் என தெரியாமல் அவர்கள் சொல்லும் கோவிலுக்கு பய பக்தியோடு குடும்பத்துடன் புறப்பட தயாராகின்றனர். அவர்களுக்கு எப்போதுதான் புரியுமோ கடவுளை அடையும் வழி என்று சொல்லப்படும் இந்த வழி முழுவதும் வெறும் மனித பிணங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று.

- செ.கார்கி

Comments

21 comments

21
Manikandan
ஊருக்கு இளிச்சவாயன் ஹிந்து மத கடவுள், அதுவும் இந்த போலி மதசார்பின்மை பற்றி பேசும் அனைவருக்கும் இளிச்சவாயன் ஹிந்து கடவுள் தான், இதே கார்கி சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் பல நூறு மக்கள் இறந்தார்களே அதனால் கார்கி ஹிந்து கடவுளை பற்றி பேசியது போல் பேசுவாரா
Raghuvaran D
Superb !
Ms.Surya
Nice article. இவர்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.
தமிழ் முகில்
நன்றி கார்கி, இந்த கட்டுரை மிகவும் அர்த்தமுள்ள பல தகவல்களை தந்துள்ளது... இந்திய நாட்டில் பெறும்பான்மையான மக்கள் இந்து கடவுள்களின் பெயரால் தான் சபிக்கப்படுகிறார்கள். இதே கார்கி சவுதியில் பிறந்த்திருந்தால் அதைப்பற்றி எழுதியிருக்கலாம்.
Manikandan
தமிழ் முகில்: இதே கார்கி சவுதியில் பிறந்த்திருந்தால் நிச்சயம் இஸ்லாம் பற்றி எழுதியிருக்க மாட்டார் காரணம் இஸ்லாமிய மதத்தில் கடவுளை கேள்வி கேட்கும் உரிமை இல்லை, முழுமையாக ஏற்க வேண்டும் இல்லையென்றால் கடும் தண்டனை கிடைக்கும் ஆனால் இந்தியாவில் ஹிந்து மதகடவுளை எப்படி வேண்டுமானாலும் அவதூறு பேசலாம் கேள்வி கேட்கலாம் யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை, ராமர் ஒரு திருடர் என்று சொன்னால் அதிகபட்சம் ஹிந்து மக்கள் மனம் வேதனை அடைவார்கள். அவர்களை வேதனை அடைய வைப்பதில் கார்கி போன்றவர்கள் கருணாநிதி போன்றவர்கள் குருர திருப்தி அடைவார்கள்
Sivakumar
இந்து மதம் ஒன்று தான் மக்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கிறது. உலகில் வேறு எந்த மதமும் இதைச்செய்வதில்லை!!
Manikandan
Sivakumar: தவறான வாதம் மற்ற மதங்களிலும் வேற்றுமைகள் உண்டு ஆனால் அது பற்றி எல்லாம் மதசார்பின்மைவாதிகள் எழுதுவதும் இல்லை பேசுவதும் இல்லை காரணம் மற்ற மதங்களை பற்றி பேசினால் என்ன நடக்கும் என்பது இந்த போலி மதசார்பின்மைவாதிகளுக்கு நன்றாக தெரியும், அதனால் ஊருக்கு இளிச்சவாய மதமான ஹிந்து மதத்தின் மீது அவதூறுகளையும் சேற்றையும் வாரி இறைக்கிறார்கள்...
தமிழ் முகில்
ஆனால் என்னைப்போன்ற தமிழனை அதிகமாக அதிகமாக ஏமாற்றியது இந்து மதம்தானே
Ms.Surya
இந்து மதத்தில் மட்டும் தான் நீ தாழ்ந்த சாதி என்னை தொடாதே என்கிறான் பார்ப்பான். கிறித்தவ மதத்தில் எனக்கு கை குலுக்குகிறான். இஸ்லாமிய மதத்தில் என்னை கட்டி தழுவுகிறான். தன்னை இழிவு படுத்தும் இந்து மதத்தை ஒவ்வொருவரும் உதரித் தள்ள வேண்டும்.
siva
திரு மனிகண்டன்,

மற்ற மதங்களிலும் வேற்றுமைகள் உண்டு என்பது உண்மைதான, ஆனால் அவைகள் எல்லாம் நடைமுறையில் மதவாதிகளால் கற்பிக்கப்படுவ்தே தவிர தத்துவார்த்த அடிப்படையில் அந்த மதத்திற்கு என்று இருக்கும் புனித நூல்களில் மனிதர்களிடையே வேற்றுமைகளை வலியுறுத்தும் எதையும் தேடினாலும் பார்க்க முடியாது. ஆனால் இந்து மதத்தை பொறுத்த வரை நீங்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இந்து மத புனித நூல்களான ராமாயணமும் பகவத்கீதையும் வர்ண வேறுபாடுகளை விதைத்து மக்களை பிரிப்பதை மதமென்றும் கடவுளென்றும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
Manikandan
siva: போலி மதசார்பின்மைவாதிகளால் சொல்லப்படும் பல பொய்களில் நம்பி இப்படி நீங்கள் பேசுகிறிர்கள். ஹிந்து மதநூல்கள் எதுவும் மனிதனை பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லை. மகாபாரதத்தில் இதற்கான பதில் மிக தெளிவாகவே இருக்கிறது. நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடலில் யார் பிராமணன் என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார்கள். சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். ஒரு சூத்திரனிடம் இந்த குணங்கள் இருந்தால் அவன் பிராமணனே என்று தெளிவாக சொல்கிறார். பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராமணன் ஆகவில்லை குணத்தின் அடிப்படையில் தான் ஒருவர் பிராமணன் ஆகிறார்.

மற்ற மதங்களில் மதவாதிகளால் வேற்றுமை உண்டாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்வது ஹிந்து மதத்திற்கும் பொருந்தும். ஹிந்து மதம் தனி மனிதரின் குணத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கிறது, ஒரே குடும்பத்தில் பிராமணரும் இருக்கலாம் சூத்திரரும் இருக்கலாம்...

மேலும் இன்றைய உலகில் இரண்டு ஜாதிகள் தான் ஒன்று பணம் உள்ள ஜாதி இன்னொன்று ஏழை ஜாதி, இன்று அதிக பணம் உள்ளவன் தான் பிராமணன். பணம் இல்லாத ஏழை தான் சூத்திரன்.

நாம் ஹிந்து மத நூல்களை சரியாக படித்து புரிந்து கொள்ள சிறந்த சமஸ்கிரதம் மற்றும் சிறந்த தமிழ் அறிவு வேண்டும் ஆனால் அதையும் இந்த போலிகள் சமஸ்கிரதம் ஹிந்து மத மொழி என்று சொல்லி அதை அழிப்பதற்கு அனைத்து பொய்களை சொல்லி மக்களை மூளை சலவை செய்து வைத்து இருக்கிறார்கள். இத்தனைக்கும் சமஸ்கிரத நூல்களில் மனித குலத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கிறது ஆனாலும் நம் முட்டாள் தனத்தால் அதை அழிவில் தள்ளி இருக்கிறோம் அதை புரிந்துகொள்ளும் அறிவு தெளிவு கூட நம்மிடம் இல்லை.

தமிழும் சமஸ்கிரதமும் சரியாக தெரிந்தால் தான் ஹிந்து மத நூல்களின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
Manikandan
தமிழ் முகில்: நீங்கள் தமிழன் என்று சொல்வது இலங்கை தீவிரவாதிகளை என்று நினைக்கிறேன். இலங்கையில் நடந்த விஷயத்தின் அடிப்படையில் நீங்கள் ஹிந்து மதத்தை வெறுக்கிரிர்கள் என்றால் உங்களின் அறியாமையை நினைத்து வருத்தபடுகிறேன்.
Manikandan
நீங்கள் சொல்வது தவறு கிறிஸ்துவ நாடுகளில் ஆப்ரிக்கா கறுப்பின மக்களை நடத்திய விதம் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இன்றும் கூட மேற்கத்திய நாடுகளில் கறுப்பின மக்களுக்கு எதிரான தீண்டாமை மனநிலை உள்ளது. அதற்க்கு சமிபத்தில் நடந்த ஆஸ்கார் விருதின் போது கறுப்பின மக்களுக்கு எதிராக ஆஸ்கார் கமிட்டி செயல்படுகிறது என்று புறக்கணிப்பு எல்லாம் செய்தார்கள்.

தீண்டாமை என்பது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளிலும் உள்ளது ஆனால் இந்தியாவில் அதை மதத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள் மற்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள்.

அதனால் ஹிந்து மத்தத்தின் மீது வெறுப்பை தூண்டாமல் இருக்கும் தவறுகளை சரி செய்யும் காரியங்களை தான் செய்ய வேண்டும்.

என்னை பொருத்தவரையில் திட்டமிட்டு ஹிந்து மதத்தின் மீது அவதூறு பரப்படுகிறது என்றே நினைக்கிறன்.
siva
அப்படியா திரு மணிகண்டன் அவர்களே,

ராமன் சாம்பூகனை கொன்றதாக வால்மீகியே எழுதியுள்ளது, போர்களில் சத்திரியர்கள் கொல்லப்படுவதால் சத்திரிய குல பெண்கள் ஆண்துனைக்கு மற்ற வர்ண ஆண்களை மணந்து வர்ண கலப்பு ஏற்படுமே என்று போருக்கு அஞ்சும் அர்சுணனுக்கு, அப்படி ஒரு அநீதி இந்த உலகத்தில் நடக்க ஆரம்பித்தால் உலக நண்மைக்கா நானே பிறப்பெடுத்து ஆயுதமேந்துவேன் என பகவத்கீதையில் வருவது,வர்ண கலப்பு ஏற்பட்டால் என்ன தண்டனை என்று ஒரு தண்டனை சட்ட புத்தகத்தையே மனு எழுதி வைத்துள்ளது, எல்லாம் எந்த கணக்கில் என்று நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
siva
மற்ற மதங்களில் நிற அடிப்படையில் வேற்றுமைகள் உள்ளதாக சொல்லப்படும் பிரச்சினைகள் கூட நடைமுறையில் உள்ளதே தவிர அவ்வேற்றுமைகள் அவர்களின் புனித நூல் வழியக கடவுள் பெயர்சொல்லியே மனிதர்களை பிரிக்கிறதா என்பதுதான் என் கேள்வியே....
Manikandan
siva:நீங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரங்களை படித்து மூளை செய்யப்பட்டவர்கள் என்று நான் சொன்னதை உங்கள் வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

பைபளில் யூதர்களை பற்றி இப்படி சொல்லியிருக்கிறார்கள்

In Deuteronomy chapter 7 the God tells the Israelites that there are other ethnic groups living in the promised land (தற்போதைய இஸ்ரேல்) asked jews to smite them, and utterly destroy them; thou shalt make no covenant with them nor shew mercy unto them. Neither shalt thou make marriages with them

ஹிந்து மதத்தின் மீது திட்டமிட்டு பரப்பட்ட பொய்களை நம்பி உங்களை போன்றவர்கள் வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கிறிர்கள். கிறிஸ்துவ மதத்தில் வேற்றுமைகள் உண்டு என்பதற்கு நான் சொன்ன ஒரு எடுத்துகாட்டு உங்களுக்கு உரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஹிந்து மத நூல்களில் இப்படி ஒரு வேற்றுமை கிடையாது. ராமாயணம் மகாபாரதம் போன்ற நூல்களை சரியான முறையில் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் அதற்க்கு நல்ல சமஸ்கிரத தமிழ் அறிவு வேண்டும்.

இன்னும் சொல்ல போனால் ஹிந்து மதத்தின் மனிதர்களை பற்றிய வார்த்தைகள் மிக சரி, அதை இன்றைய corporate உலகம் ஏற்றுகொள்கிறது, அவர்கள் விளம்பரம் செய்யும் போது விண்ணப்பம் செய்பவர்களுக்கு leadership quality இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஹிந்து மதத்தில் leadership quality உள்ளவனை அரசன் என்கிறார்கள் (க்ஷத்ரியர்கள்) வியாபாரிகள் வைஷ்யர்கள் எல்லோராலும் வெற்றிகரமான வியாபாரிகள் ஆக முடியாது அந்த குணம் உள்ளவர்களால் தான் வெற்றிகரமான வியாபாரிகளாக ஆக முடிகிறது.

என்னை கேட்டால் ஹிந்து மதத்தில் மனிதர்களின் குணத்தின் அடிப்படையில் பிரித்தது சரியென்றே நினைக்கிறேன் அதை இன்றைய நிஜ வாழ்வில் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

ஜாதியால் பிரிவினையை உண்டாக்கியவர்கள் மனிதர்கள் மத நூல்கள் அல்ல.
siva
திரு மணிகண்டன் அவர்களே....

பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக நீங்கள் எடுத்துக்காட்டியுள்ளது தனக்கும் மற்ற இனத்துக்கும் உள்ள முரண்பாடுகளை பற்றி சொல்லியுள்ளதே அன்றி மனிதர்களை பிறப்பின் அடிப்படையிலேயே பிளவுபடுத்துவது அல்ல, இந்து மதத்திலோ பிறப்பின் அடிப்படையில் மற்றுமின்றி நீங்கள் இந்துக்களாக இன்று உங்களில் சேர்த்துகொள்ளும் உங்கள் சொந்த‌ மக்களையே அவ்வாறு பிளவுபடுத்தியதை பற்றி. அதைத்தான் கீதையிலிருந்தும் இராமயணத்திலிருதும் கேள்வியை கேட்டுள்ளேன் . கேள்வியை புரிந்து பதில் சொல்லவும்.
Sivakumar
இந்து மதத்தில் 'மனுதர்மம்' என்பது தான் இந்து மதத்தின் சட்ட புத்தகம். இதை அடிப்படையாக வைத்து தான் இராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்றவை எழுதப்பட்டன.ஒருவனது பிறப்பின் அடிப்படையில் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது இந்து மதம். மற்ற மதங்கள் பிற மதத்தவரை தான் இழிவுபடுத்துகிறது! ஆனால் இந்து மதமோ தன் மதத்தவரேயே இழிவபடுத்துகிறது - பிளவுபடுத்துகிறது!!
Manikandan
siva: பைபளில் நான் சொன்னது ஒரு உதாரணம் மட்டும் தான் அது போல் பல பைபளில் இருக்கிறது. ராமாயணம் பற்றி நீங்கள் சொல்வது எல்லாம் தவறான புரிந்தால் அல்லது பொய்யான தகவலின் அடிப்படையில் உள்ளவை. என்னை கேட்டால் உலகின் மற்ற மதங்களை விட ஹிந்து மதம் ஆயிரம் மடங்கு உயர்ந்ததே, ஹிந்து மத தத்துவங்களை புரிந்து கொள்ள தெளிந்த அறிவு வேண்டும், உங்களை போல் கார்கியை போல் வெறுப்பு மற்றும் வஞ்சத்தை மனதில் வைத்து கொண்டு பார்த்தால் சரியாக இருக்காது.

காமாலை கண் உள்ளவனுக்கு எல்லாமே மஞ்சளாக தெரியுமாம் அது போல் தான் உங்களை போன்றவர்களின் ஹிந்து மத பார்வையும்.

உடனே என்னை பிராமணன் என்று சொல்ல வேண்டாம் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் ஆனால் யாரையும் வெறுக்காதவன், ஹிந்து மதத்தின் மீது பற்று உள்ளவன்.
siva
திரு மணிகண்டன்...

நீங்கள் கொடுக்கும் பைபிள் உதாரணமே பொருத்தமற்ற உதாரணம் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். தன் சொந்த மக்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி வைக்கும் ஏதாவது ஒரு உதாரணத்தை பிற மத்தத்தில் இருந்தால் எடுத்து காட்டுங்கள். மற்றபடி இராமாயணத்தில் இருந்து நான் கூறியது தவறு என்றால் நீங்கள் வால்மீகியையே சந்தேகிக்கிறீர்கள்... அப்படியெனில் சரியான ராமாயணம் எது ராமானந்த சாகர் ராமாயணமா....? உங்கள் விருப்பங்களில் இருந்து பேசுவதை விட்டு ஆதாரப்பூர்வ, விவாதப்பூர்வ உண்மைகளில் இருந்து பேசினால் நீங்கள் பார்ப்பனியத்தால் மூளை சலவை செய்யப்பட்டவர் அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
siva
திரு மணிகண்டன்...

தயவு செய்து

தன் சொந்த மக்களையே பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி வைக்கும் ஏதாவது ஒரு உதாரணத்தை பிற மத்தத்தின் புனித நூல்களில் இருந்தால் எடுத்து காட்டி இந்த போலி மதசார்பின்மை வாதியின் முகமூடியை தோலுரித்து உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.