kuthoosi gurusamy 268சினிமா ஸ்டார் பெயரல்ல, இது. சகல கலைகளிலும் வல்லவளாகிய சரஸ்வதியின் பெயர்!

சரஸ்வதி என்றால் யார் அவள் வயதென்ன? எங்கேயிருக்கிறாள்? என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாள்? வைதீர்களைக் கேட்டால் இக்கேள்விகளுக்குப் பட்டுக்கத்தரிக்கிற மாதிரி பதில் கூறுவார்கள்!

இன்றைக்கு ஆயுத புஜையாம்! நாளைக்குச் சரஸ்வதி பூஜையாம்!

கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்! பிறகு விசாரித்தபோது, அநேகமாக எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும், போஸ்டாஃபீஸ்களிலும் தோரணங்கள் கட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வெளியூர்களிலும் இப்படித்தான் இருக்கும்.

மதமற்ற சர்க்காரல்லவா? ஆயுத பூஜையில்லாமல் எப்படி யிருப்பது? மகாண சர்க்காருக்குப் போலீஸ் ஸ்டேஷன்! மத்திய சர்க்காருக்குப் போஸ்டாஃபீஸ்! ரயில்லே இலாகாவிலும் ஆயித பூஜை, சரஸ்வதி பூஜை உண்டு!

கிறிஸ்தவர் - முஸ்லிம் - பௌத்தர் - ஜைனர் - மதமில்லாதவர் - ஆகிய இத்தனை பிரிவுகள் இருக்கும்போது சர்க்கார் நிலையங்களில் ஒரு ஹிந்துப் பண்டிகையைக் கொண்டாடுவது நீதியா? முறையா? தர்மமா? ஒழுங்கா? நேர்மையா? அறிவுடைமையா? - என்றெல்லாம் ஆத்திரப்பட்டுக் கேட்கக் கூடாது!

மத்திய சர்க்காரின் போஸ்டல் ஸ்டாம்புளிலும் கார்டுகளிலும் பார்த்தால் கடவுள்கள்!

இந்த மகாண சர்க்காரின் முத்திரையோ கோபுரம்!

இவைகளைச் சகிக்கிறபோது போலீஸ் ஸ்டேஷன்களிலும் போஸ்டாஃ பீஸ்களிலும் தோரணங் கட்டி ஆயுத பூஜை கொண்டாடுவதையும் பல்லைக் கடித்துக்கொண்டாவது சகித்துத்தான் தீரவேண்டும்.

இது அசல் அக்கிரகார ராஜ்யம்! அதாவது ராமராஜ்யம்; அதனால், என்க!

இனிமேல் இந்த போதை (மதுவிலக்கைப் போலவே மதுவிலக்கும் சுத்தப் பொய்!) ஏறிக்கொண்டேதான் போகும். சர்க்கார் அஃபிஸ்களிலெல்லாம் பஞ்சாங்கம் கட்டாயமிருக்கும்! அதில் பரீட்சையும் வைக்கப்படலாம்! பஞ்சாங்கப் பரீட்சையில் 100க்கு 70 மார்க் வாங்கியவர்கள் தவிர மற்றவர்களுக்கு உத்யோகம் கிடையாது என்ற தகுதி ஏற்பட்டாலும் ஏற்படலாம்! இதனால் திறமைசாலிகள் முன்னேற்ற மடைந்தாலும் அடையலாம்!

“ஓய்! சப் இன்ஸ்பெக்டர்! பத்து கான்ஸ்டபிள்களுடன் துப்பாக்கி சகிதம் புறப்பட்டு கடைத் தெருப் பக்கம் உடனே போகவேண்டும்! அங்கே கலவரமாம்! தெரியுமா? க்விக்!”

“சர்க்கிள்சார்! இன்றைக்கு ஆயுத பூஜையாச்சே! துப்பாக்கிகளைக் கழுவித் துடைத்து பூஜையில் வைத்திருக்கிறோமே! எடுத்தால் பாபமாச்சே!”

“அப்படியா! மறந்த போய்விட்டேன்! அப்படியானல் கான்ஸ்டேபிள்களை மட்டுமாவத உடனே போகச் சொல்!”

“சார்! ஒரு விண்ணப்பம்! இப்போது கொழுத்த இராகுகாலம்! ஆறுமணிக்கு மேல் அவசியம் அழைத்துக் கொண்டு போகிறேன்! அது வரையில் கலகம் வராது! கலகக்காரர்களுக்கும் இராகுகாலத்தில் கலகஞ் செய்ய வராது. ஸார்!”

“அப்படியா! நீயே அதி 9புத்திசாலி! சர்க்காருக்கேற்ற சப் இன்ஸ்பெக்டர்! சமயோசிதமாக யோசனை கூறியதற்காக உன்னைப்பற்றி மேலதிகாரிக்குச் சிபார்சு செய்யலாமென்றிருக்கிறேன்.”

- இந்த மாதிரி உரையாடல்கள் இனிச் சர்வசாதாரணமாக நடக்கலாம்!

ஆயுத பூஜை கொண்டாடுகிற ஆட்சி அசல் பஞ்சாங்க ஆட்சிதான்! அய்யமேயில்லை! இனிமேல் தர்ப்பைப்புல் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிடும்! போஸ்டாஃபீசுக்கும் வந்து விடும்!

ஒரு துண்டு கடுதாசியில் சமாசாரத்தை எழுதி, விலாசத்தையும் குறிப்பிட்டு, ஸ்டாம்பே ஒட்டாமல், அதற்குப் பதிலாக, நுனியில் ஒரு தர்ப்பைப் புல்லைக்கட்டி தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டால் போதும்! அடுத்த நிமிஷம் அக்கடிதம் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்விடும்!

அரிசியும், காய்கறியும் தர்ப்பையின் சக்தியினால் அந்தர லோகத்துக்கே போகிறபோது, அற்பக் கடுதாசி தானா வெளியூருக்குப் போகாது?

மதமற்ற ஆட்சியாம்! அடாடா! அருமையான மதமற்ற ஆட்சி! புராணப் புளுகை யெல்லாம் ஒரு புளுகென்றே சொல்லக்கூடாது!

அரசியல் புளுகின்கால் தூசிகூடப் பொறாது, உலகிலுள்ள எந்தப் புளுகும்!

சத்யமேவ ஜெயதி! ஜேய் ஹிந்த்!

குத்தூசி குருசாமி (19-10-50) 

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It