காட்டாறு ஏடு கடந்த 2017 ஆம் ஆண்டு 24. 12. 17 அன்று பாலினச் சமத்துவம் தொடர்பான பல்வேறு முழக்கங்களை முன்வைத்து சமையல் மறுப்புப் போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தின் முழக்கங்களில் ஒன்று “பெண்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக மட்டுமே உருவாக்கும் வகையில், குழந்தைப் பருவத்திலேயே நடத்தப்படும் காதுகுத்து விழாக் களைத் தடைசெய்!” என்பதாகும். இந்த முழக்கம் தொடர்பாக மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் தெரிவித்த மாற்றுக்கருத்துக்களுக்கு உரிய விளக்கங்களை இக்கட்டுரையில் காணலாம்.
1. கலாச்சாரம், பாரம்பரியத்தை நிறுத்தக் கூடாது. உறவு களில் நெருக்கம் உண்டாகவும், பணம், பொருள், சேர்ப்பதற்கும் இவ்விழா வேண்டும். அவரவர் விருப்பம் போல, விழா எளிமையாகவோ, பெரிய விழாவாகவோ இந்த விழா நடத்தப்படுமே தவிர நிறுத்தக் கூடாது என்றனர் சில பொதுமக்கள்..
நமது விளக்கம்
ஒரே சாதி மக்களை குலதெய்வம், குலம் என்று பிரித்து மக்களை ஒன்று சேர விடாமல் - இந்தச் சாதிப் பழக்க வழக்கங்களை சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் அழுத்தமாக கடைப்பிடிக்க பயன் படுவதே இந்தக் குல தெய்வ விழாக்கள்.
கலாச்சாரம், பாரம்பரியத்தை நிறுத்தக் கூடாது என்பதற்காக, குழந்தைக்கு காதுகுத்தி, மொட்டை அடிக்கிறார்கள். இந்த விழா அவரவர் வசதிக்குத் தகுந்தது போல் ஏற்பாடு செய்யப் படுகிறது. இதில் காதுகுத்து என்றாலே கிடா வெட்டு, காதுகுத்தி மொட்டை அடிப்பது போன்றவை குலதெய்வக் கோவில்களில் செய்யப் படுகிறது.
குல தெய்வக் கோவில்களில் கிடா வெட்டா தவர்கள் வீடுகளில் கிடா வெட்டுகிறார்கள். குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து விட்டு வீட்டுக்கு வந்து விருந்து ஏற்பாடு செய்கிறார்கள். அந்தக் கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்க ஒரு சாதியையும், காதுகுத்த ஒரு சாதியையும் அழைப்பார்கள். ஆக குழந்தையின் முதல் நிகழ்வே அனைவரும் ஜாதி அடிப்படையிலான தொழிலைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதாக உள்ளது.
இந்த மாதிரிச் செய்வது, சமுதாயத்திலும் உற்றார், உறவினர்கள் மத்தியிலும் தன்னுடைய தற்பெருமையை காட்டிக் கொள்வதாகும். இதைத் தான் கலாச்சாரம் பாரம்பரியம் என்கிறார்கள். இம் மாதிரியான விழாக்கள் தன்னுடைய தற் பெருமைக்கும், மொட்டை அடிப்பதனால் தாய் மாமன் சீர்வாங்குவதற்கும் பணம், பொருள் சேர்ப்பதற்க்கும், அந்த குழந்தையைப் பயன்படுத்தி - விழா ஏற்பாடு செய்வது தேவையில்லாத ஒன்று.
தேவையில்லாமல் 11 மாதக் குழந்தைக்குக் காது குத்தி, காதில் புண் ஆறாமல் இருப்பது, வலி தாங்க முடியாமல் குழந்தைக்குச் சொல்லவும் தெரியாமல் அழுது கொண்டே இருக்கும். ஒரு சில குழந்தைக்கு காய்ச்சல் கூட வருவதுண்டு.
காதில் இருக்கும் புண் ஆறும் வரை, யாராவது கை அந்தக் காதுக்குப் பட்டாலோ, தன்னுடைய கையே பட்டாலும் அழுது கொண்டேதான் இருக்கும். பொருள் சேர்ப்பதற்காக காதுகுத்து விழா ஏற்பாடு செய்யப்பட்டாலும், ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் காதுகுத்தினாலும் ஆண் குழந்தை கம்மல் போடுவது இல்லை. பெண் குழந்தை தான் கம்மல் போடணும், பூவைக்கணும், பொட்டு வைக்கணும் என்று சொல்கிறார்கள்.
காது குத்தில் தொடங்கி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று சொல்லி (பிறப்பு முதல் இறப்பு வரை ஏன் இறந்த பிறகும் கூட கலாச்சாரத்தை ) பின்பற்றி வாழ்ந்து கொண்டு கடனாளியாகத்தான் நம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
பொருளாதாரச் சிக்கல்
அடித்தட்டு மற்றும் நடுத்தரப் பிரிவுப் பொது மக்கள் காது குத்து விழா வைக்கவில்லை என்றால் இந்தச் சமுதாயம் நம்மை என்ன சொல்லும். நம்முடைய உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லி “கடன்” வாங்கிக் காது குத்தி, மொட்டை அடிக்கலாம். அப்புறம் மொய்ப் பணம் வாங்கிக் கடனை அடைத்து விடலாம். என்று விழா ஏற்பாடு செய்கிறார்கள்.
அப்படிச் செய்யும்போது தாய்மாமன் பணமாகவோ, நகையாகவோ, பொருளாகவோ சீர் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறைப் பழக்கமாக இருக்கிறது. தாய்மாமன் சீர் செய்ய குறைந்தது 30,000 தேவை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் காதுகுத்து ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டிற்கு அதைவிடச் செலவு அதிகமாகத்தான் இருக்கும்.
செய்முறைச் செலவு
மொய்ப் பணம் வைப்பதில் உறவினர்கள் நான் 2,000 வைக்கலாம் என்று நினைத்தேன், பங்காளி 3,000 வைக்கிறான் நாம் அவனைவிட அதிகமாகத் தான் வைக்கணும் என்று நினைப்பது, அப்படி நினைத்து கடன் வாங்கி மொய்ப்பணம் (செய்முறை) செய்வது, இப்படி வாங்கியக் கடனைத் திருப்பி அடைக்க நாம் மாதமாதம் தன்னுடைய குடும்பச் செலவுகளில் ஏதேனும் ஒரு செலவை குறைத்துக் கொண்டு கடனைக் கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு மத்தியில் விஷேச வீட்டில் சரியாக என்னைக் கவனிக்கவில்லை. எந்த விசயத்திற்கும் என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. என்னை மதிக்கவில்லை என்று சங்கடங்களும், சண்டைகளும் ஏற்படுகிறது. இப்படியாக ஒரு புறம் இருக்க, காது குத்து விழா ஏற்பாடு செய்யப்பட்டு, விழா நடந்து முடிந்து விட்டது. மொய்ப்பணம் பொருள் எல்லாம் வாங்கியாச்சு. அதற்கு அடுத்த மாதம் தன்னுடைய உறவினர்களில் மூன்று பேர் வீடுகளில் ஒரே முகூர்த்த நாளில் வெவ்வேறு விஷேச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த மூன்று குடும்பத்தாரும் தன்னுடைய வீட்டு (காது குத்து) விஷேசத்திற்க்கு குறைந்தது 5,000 மொய் பணம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் அதை திருப்பி செலுத்தும் போது 5,000 க்கு 6,000மோ, 7,000மோ வாகத்தான் செய்ய வேண்டும். இப்படி ஒரே நாளில் மூன்று பேருக்கும் செய்முறை செய்வது மிகவும் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு மீண்டும் கடன் வாங்க வேண்டியுள்ளது.
கடன் வாங்குகிறோம், –விஷேசம் வைக்கிறோம், மொய்ப்பணம் வாங்குகிறோம், செய்முறை செய்கிறோம், இப்படியாக ஒரு சுழற்சியான வாழ்க் கையாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப்படி நம்முடைய கலாச்சாரமும், பண்பாடும் நம்மைக் கடைசி வரைக்கும் கடனாளியாகவே வைத்திருக்கிறது. இந்து மத, ஜாதிப் பண்பாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிறை வைக்கிறது.
2. காது குத்து நிகழ்ச்சி என்பது தாய்மாமன் உறவு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்பது சில பொதுமக்களின் கருத்து.
நமது விளக்கம்
உறவு முறைகள் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உறவு முறைகள் எதற்காக நீடிக்கிறது, பின்நாளில் திருமண உறவுகள் ஏற்படுத்துவதற்கு இந்த விழா பயன்படுகிறது. இதனுடைய விளைவு என்னவென்றால் மரபணு வழியாக ஏற்படக்கூடிய 3,000 வகையிலான நிரந்தர ஊனங்கள் உறவு முறைத் திருமணத்தில் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பிட்ட சில வகையான மருத்துவ ஊனங்கள் உலகிலேயே தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் உறவு முறை திருமணங்கள் கூடாது என்று அரசு மருத்துவ மனைகளிலும் கூட விளம்பர படங்கள் வைக்கப் பட்டுள்ளன.
உறவு முறை திருமணத்தினால்,
1.பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படலாம்.
2.ஊனமுற்ற குழந்தைகளாகப் பிறக்கும் வாய்ப்பு மிக அதிகம்
3.மூளை வளர்ச்சியற்ற, புத்தி குறைவான குழந்தை பிறக்கும் வாய்ப்பு
4.பெண் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை.
இந்த மாதிரியான ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாகத்தான் இந்த மதச் சடங்குகள் பயன் படுகிறதே தவிர வேறு எதற்கும் இல்லை..
3. காது குத்துவதில் அறிவியல் இருப்பதாகவும் அந்த அறிவியலின் படி நன்மை இருப்பதாகவும் ஒரு சில மக்கள் கூறகின்றனர்.
நமது விளக்கம்
காது குத்தி நகை அணிவதை பற்றி ஈஷா யோகா மையம் சத்குரு கூறுகிறார்.
“நம் உடல் ஆரோக்கியம் மற்றும் மன உறுதி போன்றவை சமநிலையுடன் இருப்பதற்கு காது, மூக்கு போன்ற சில உறுப்புகளில் உள்ள சக்தி மையங்களைக் கவனிப்பது மிகவும் முக்கிய மானதாக இருக்கிறது. அந்த இடத்தில் சிறிது உலோகத்தை உபயோகப் படுத்துகிறோம். இப்படிச் செய்யும் போது அங்குள்ள சக்தி மண்டலம் தூண்டப்படுகிறது. இதனால் உடல் நிலை உறுதியாகிறது.
காதில் சரியான இடத்தில் பார்த்து குத்த வேண்டும். நம் கலாச்சாரத்தில் அதற்காகவே ஆட்கள் இருந்தார்கள். இப்போது டாக்டரிடம் போய், குத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கென்றே அனுபவம் உள்ள நபரிடம் செல்லும் போது அவர்கள் சரியான புள்ளியில் குத்துவார்கள். அப்போது உடல் மன ஆரோக்கியம் உறுதிப்பட வாய்ப்புள்ளது” என்று கூறகிறார்.
அவர் சொல்வது போல் காது மூக்கு குத்தினால் மன உறுதி போன்றவை ஏற்படும். சக்தி மண்டலம் தூண்டப்படுகிறது . உடல்நிலை உறுதியாகிறது என்றால் அவர் கூற்றுப்படி ஆண்கள், பெண்கள் என்று எல்லோரும் காது, மூக்கு குத்த வேண்டியது தானே ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் காது, மூக்கு குத்துகிறார்கள்?
சத்குரு காது குத்துவதற்கு ஒரு சாதி உள்ளது என்று கூறுகிறார். சாதி இறுக்கமாகவே இந்த விழா பயன்படுகிறது என்பதற்கு அதுவே சாட்சி.
காது மூக்கு குத்தியுள்ளவர்களுக்கு உடல் வலுப்பெறும், உறுதி பெறும் என்றால் நம் நாட்டு பெண்கள் அனைவரும் விளையாட்டு வீராங்கனை களாகவும், போர் வீரர்களாகத்தான் இருந்து இருப்பார்கள். ஆனால் அப்படி இல்லை. காது மூக்கு குத்தாத, நகை அணியாத அயல் நாட்டு பெண்கள் எத்தனையோ பேர் விளையாட்டு வீராங்கனை களாகவும், அறிவு சார்ந்தவர்களாகவும், அறிவியல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருக்கிறார் களே. அது எப்படி? ஆக இவர் கூறும் உறுதி, வலிமை எல்லாம் வீட்டுவேலைக் காரியாகவும், அழகுப் பொம்மைகளாகவும், பிள்ளை பெறும் இயந்திரங் களாக்கத்தான் பயன்படும்.
காது குத்துவதை பற்றி இணையதளங்களில் தேடினால் கிடைக்கும் செய்தி
நோயைத் தவிர்க்க:
காது குத்துவதன் வழி (ஹிஸ்திரியா) மாதவிடாய் வலி போன்ற நோய்களைத் தவிர்க்கலாம் என்றும், தோடு (கம்மல்) மனிதனின் உடல் மின்சாரத்தை செம்மைப்படுத்துவதாக கருதப்படுகிறது.
காது மடல் மனிதனின் இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாகும். எனவே, காதுகுத்தும் போது மூளை வளர்ச்சியும் ஞாபகசக்தியும் அதிகரிக்கும் என்று சொல்கிறது.
இதன்படி பார்த்தால் நமது இந்து மத கலாச்சாரத்தில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக காது குத்துகிறார்கள் என்று பார்த்தால் யாரும் அறிவு சார்ந்தவர்களாகவும், விஞ்ஞானி களாகவும் இல்லை. கொஞ்சம் அறிவியல் வளர்ச்சி கிடைத்ததென்றால் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான். கல்வி அறிவு கிடைத்தது என்றால் பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்றவர்களால் தான் கிடைத்தது.
இந்து மதச் சடங்குகள் அனைத்தும் விஞ்ஞானப் பூர்வமானது, அறிவியல் பூர்வமானது நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. அறிவியலுடன் போட்டி போட முடியாது. ஆகையால் இந்து மதச் சடங்குகள் அனைத்தும் அறிவியல் படி தான் அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவியலுக்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள் இந்து மதப் பார்ப்பனப் பாதுகாவலர்கள்.
4. ஆணுக்கும், பெண்ணுக்கும் இருவருக்குதான் காது குத்துகிறார்கள். இங்கிருந்துதான் அலங்காரம் தொடருகிறது என்றால் பெண்கள் தொடர் கிறார்கள் ஆனால் ஆண்கள் தொடருவதில்லை காதுகுத்துவது அலங்காரத்திற் காகத்தான் என்றால் அது ஆண்களிடம் இல்லை ஏன்?
நமது விளக்கம்
ஆணுக்குக் காது குத்தினாலும், அவன் தொடர்ச்சியாகக் காதணிகளை அணியா விட்டாலும் - அதிலும் ஜாதி அடிப்படையிலான தொழில்கள், தாய்மாமன் மடியில் அமர வைப்பது போன்ற சடங்குகளால் ஜாதிமுறை இறுக்கமாகவே இந்த விழா பயன்படுகிறது.
ஆண் வளர வளர ஆணின் அடையாளம் ‘வீரம்’ என்றும், பெண்ணின் அடையாளம் ‘அழகு’ என்றும் இந்த இந்துச்சமுதாயம் சொல்லித்தருகிறது. அதன் அடிப்படையில், ஆண் காதணிகளை விட்டு விட்டு, மீசை வளர்ப்பது, வேட்டியைத் தூக்கிக் கட்டுவது போன்ற பண்புகளைப் பின்பற்றுகிறான். பெண் தன்னை அழகு படுத்திக்கொள்ளப் பழக்கப் படுத்தப்படுகிறாள்.
பெண்ணின் அடையாளம் வெறும் அழகு மட்டுமல்ல; கல்வி, வீரம், ஆளும் திறன், நிர்வாகத்திறன் எல்லாம் பெண்ணுக்கும் உரியது தான் என்ற எண்ணத்தைப் பெண்ணுக்குக் கூறினால், பெண்களும் காதணிகளை விட்டு விட வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட நினைப்பே வராமல் தடுப்பது இந்து மத தர்மங்கள் தான்.
“எந்த வீட்டில் மாதர்கள் பூஷண (நகை) முதலியவற்றால் சந்தோசமடைகிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோசத்துடன் வசிக்கிறார்கள் எந்த வீட்டில் அவ்வாறு பூஜிக்கப்பட வில்லையோ அந்த வீட்டில் செய்கிற காரியங்கள் எல்லாம் பலனில்லாமல் போய்விடுகின்றான்.
- மனுசாஸ்திரம் அத்தியாயம் 3.சுலோகம் 56
“ஷேமத்தைக் கோரும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டில் நடக்கும் விரதங்கள் கலியாணங்கள் இவை முதலிய விஷேசக் காலங்களில் தன் உடன் பிறந்தாள் முதலிய மாதர்களை பூஷணம் (நகை) வஸ்திர (ஆடை) சாப்பாடு இவற்றினால் சந்தோசப்படுத்த வேண்டியது.”
- மனுசாஸ்திரம் அத்தியாயம் 3.சுலோகம் 59
“பெண்களுக்கு நகை போட்டு அழகு பார்க்கா விட்டால் அவர்கள் உடல் உறவுக்கு வர மாட்டார்கள் அப்படி வராவிட்டால் வாரிசுகள் உருவாகாது”
-மனுசாஸ்திரம் அத்தியாயம் 3.சுலோகம் 61
“பெண்கள் படுக்கை ஆசனம் அலங்காரங்களுக்கு ஆசைப் படுபவர்கள் காமக் குரோதங்களுக்கு வசப்படுவார்கள் செய்யத்தகாததை செய்பவர் களாகவும் துரோகபாவத்தோடும் இருப்பார்கள்”
- மனுசாஸ்திரம் அத்தியாயம் 9.சுலோகம் 17
இப்படி, பெண்களின் மூளையில் இந்து மதப் பண்பாடுகள் அழுத்தமாக விதைக்கப்பட்டுள்ளது. இதை இடை விடாது கடைபிடிக்கச் செய்கின்றன நகைக் கடை விளம்பரங்கள். சமீப காலமாகப் பிரபலம் ஆன “ஜிமிக்கி கம்மல்” பாட்டைக் கேட்டிருப்பீர்கள்.
அந்தப்பாட்டைப் பார்த்த ஆண்கள் நகையைப் பார்ப்பதில்லை. எந்த ஆணும் பாட்டைப் பார்த்து ஜிமிக்கி வாங்கி அணியவில்லை. பெண்களாகிய நாம் நகையை மட்டுமே கவனிப் போம். இந்தப் பாடல் விளம்பரம் ஆன உடனேயே ஏகப்பட்ட புரட்சிப் பெண்ணியம் பேசும் முற்போக்குப் பெண்களே ஜிமிக்கி கம்மலை வாங்கிப் போட்டுக்கொண்டு முகநூல் பக்கங்களில் படங்களை வெளியிட்டுக் கொண்டனர். சராசரிப் பெண்களின் நிலையைக் கேட்கவா வேண்டும். வாங்கவும் முடியாமல், அந்தச் சிந்தனையே தவறு என்ற எண்ணமும் இல்லாமல் ஏங்கிக் கிடப்பார்கள்.
அந்த ஏக்கத்தைத் திணிப்பது இந்துப் பண்பாடுகள். அந்த இந்துப் பண்பாடுகளின் மிக முக்கியமான அடையாளமும் தொடக்கமும் இந்தக் காதணி விழாக்கள் தான். அதனால் தான் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.