அய்யப்பன் மோட்டார் லாரியில் ஊர் சுற்றிவிட்டு, பக்தர்கள் வீடு களுக்கே சென்று காட்சி தந்துவிட்டுப் போனாரே! அந்த நாடகத்தைப் பற்றியல்ல, நான் எழுதப் போவது! அதிலொன்றும் அதிசயமில்லை! பண்டார சந்நிதிகள் பல்லக்கை விட்டிறங்கி மோட்டாரிலும், ரயிலிலும், ஆகாய விமானத்திலும் பிரயாணஞ் செய்கிறபோது (சங்கராச்சாரியார் மட்டும் இன்னமும் துணியவில்லை) அப்பாவி அய்யப்பன் (ட்யூபிளிகேட்) லாரியில் சுற்றியது தானா அதிசயம்? அவசியமேற்பட்டால் சைக்கிளில் ஏறிக் கூட சந்த பொந்தெல்லாம் வருவார்! விமானத்தில் ஏறிக்கூட உலக சுற்றுப் பிரயாணஞ் செய்வார்!
நான் எழுதுவது தஞ்சையில் நடந்த அய்யப்பன் நாடகத்தைப் பற்றி! அந்த நாடகத்தில் யாரோ ஒருவர் அய்யப்பன் அருளால் தமக்கு வயிற்று வலி நீங்கியதை எடுத்துக் கூறினாராம்!
அய்யப்பன் என்ன மருந்து கொடுத்தாராம், தெரியுமா? வெறும் விபூதிப் பிரசாதம்! அதாவது சாம்பல் தூள்! நம்பிக்கை மட்டுமிருந்து தின்றால் விபூதியின் மகிமை இதுமட்டுமா? எது வேண்டுமானாலும் செய்யக் கூடியது! வயிற்று வலி மட்டுமல்ல! வயிற்றுப் பசியைக்கூட ஒரு நொடிப் பொழுதில் நிரந்தரமாக நிறுத்திவிடும்! உண்மையான அய்யப்பன் பக்தர்கள் பக்தியை இன்னும் சிறிது ‘ஸ்ட்ராங்காக’ ஆக்கிக் கொண்டு வயிற்றுப் பசியையும் தவிர்த்துக் கொள்வார்களென்று எதிர்பார்க்கிறேன்! அப்படிச் செய்கிறவர் களுக்கு முன்ஷிமெடல் என்ற ஒரு பரிசு கூட அளிக்கலாம்!
கடவுள்கள் இந்தமாதிரி டாக்டர் அவதாரம் எடுப்பது தமிழ் நாட்டுக்குப் புதிதல்ல!
அப்பருக்குச் சூலை நோயைப் போக்கியிருக்கிறார், நம் அம்மையப்பன்!
செட்டிப் பெண்ணுக்குப் பிள்ளைப்பேறு பார்த்திருக்கிறார், தாயுமானவர்! - இன்னும் திருப்பதி, வைத்தீஸ்வரன் கோவில், கலியப் பெருமாள் கோவில், சமயபுரம், பழனி ஆகிய ஊர்களில் வீற்றிருக்கின்ற நம் கடவுள் டாக்டர்கள் பல நோய்களைப் போக்கி வருவதாகக் கேள்வி! இந்தப் பேருபகாரத்துக்காக, தலை மயிர் - முகமயிர் தட்சணை கொடுத்து வருகிறார்கள், பக்தர்கள்!
டாக்டர்கள் போதாமலும், ஆஸ்பத்திரிகள் போதாமலும் இரண்டுக்கும் பணம் போதாமலும் தொல்லைப்படுகின்ற இந்நாளில், கடவுள்களாவது இப்படி சில்லறை நோய்களைக் குணப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது பற்றி நான் இன்றைய சர்க்கார் சார்பில் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்! (பக்தர்கள் கடவுள்களை வாழ்க!’ என்றும், போற்றி என்றும் கூறுகின்றபடியால், நான் பாராட்டுவதில் குற்றமில்லையல்லவா?)
ஆனால் ஒரே ஒரு குறை! எல்லாக் கடவுள்களுமே இந்தச் சேவை புரியவேண்டும்! வேலைத் தொல்லை மிகுதியாயிருந்தால், இவர்கள் தனித்தனி நோயாகப் பிரித்துக்கொள்ளலாம்!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் குஷ்டரோகத்தைக் கவனித்துக்கொள்ளலாம்!
மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைப் பேறு சம்பந்தமான பெரிய ஆப்ப ரேஷன்களை மட்டும் கவனித்துக் கொள்ளலாம்!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வெட்டை நோயை (வெனீரியல் டிசீஸ்)க் கவனித்துக் கொள்ளலாம்!
காஞ்சிபுரம் வரதராஜர் க்ஷயரோகத்தைக் கவனித்துக்கொள்ளலாம்!
திருவாரூர் தியாகராஜர் கண் ஆப்பரேஷன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்!
சிதம்பரம் நடராஜர் எலும்பு முறிவதைச் சீர்படுத்தும் தொழிலை ஏற்றுக் கொள்ளலாம்! குடந்தை கும்பேஸ்வரர் குழந்தைகள் நோயைக் குணப்படுத்தலாம்! -இப்படியாக, கடவுளர்கள் நோய் தீர்க்கும் திருத்தொண்டில் ஈடுபட்டால் சர்க்காருக்கும் ஏராளமான பணம் மிச்சமாகும்! பெற்றோர்களும் டாக்டர் பயிற்சிக்காக, ஆயிரக் கணக்கில் செலவழித்து, 5-6 ஆண்டு தங்கள் பிள்ளைகளையும் பெண்களையும் படிக்க வைக்க வேண்டியதில்லை!
மருந்து வியாபாரிகளும் கள்ள மார்க்கெட்டில் விற்று ஏழைகள் பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்க முடியாது! எவ்வளவோ தொல்லைகள் ஒழியும்!
இவை மட்டுமா?
“கோவில்களை யெல்லாம் ஆஸ்பத்திரிகளாக்க வேண்டும்,” என்று சொல்கின்ற சுயமரியாதைக்காரனுக்கும் வாயடைத்துப் போகும்!
டாக்டர்களே! இருங்கள்! இருங்கள்! இப்போதுதான் டாக்டர் அய்யப்பன் புறப்பட்டிருக்கிறார்! இனி மற்றக் கடவுள்களும் டாக்டர்களாகப் போகிறார்கள்! டாக்டர்களே! உங்கள் வாயில் மண்தான்! நீங்கள் இனிமேல் அர்ச்சகர் (பார்ப்பனர் மட்டும்) ஆகவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை!
வயிற்று வலி போக்கும் அய்யப்பா!
வயிற்றுப் பசி நீக்குவாய், அய்யப்பா!
- குத்தூசி குருசாமி (5-3-51)
நன்றி: வாலாசா வல்லவன்