1933ஆம் ஆண்டில் ‘குடிஅரசில்’ மாமாங்கம் குறித்து ‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்:

புராண மரியாதைக்காரன் கேள்வி: ஐயா, சுயமரியாதைக்காரரே! கும்பகோண மாமாங்கக் குளத்தில் ஒரு அற்புதம் நடக் கின்றதே அதற்குச் சமாதானம் சொல்லும் பார்ப்போம்.

சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம.: மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  அதில் எவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே, அந்தக் குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்குப் பதில் சொல் பார்ப்போம்.

சு.ம.: இது ஒரு நல்ல புத்திசாலித் தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன். சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது, மாமாங்கக் குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசி பாலிட்டியார் இறைத்து விடுவார்கள். பிறகு ஓர் இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்பு மாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்குக் குளத்தை விட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வா°த்தவம்தான். ஆனால், அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர்விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு.ம.: அதெப்படித் தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரிய வில்லையே. அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம. : இதுவும் நல்ல கேள்விதான். பதில் சொல்லுகிறேன். மாமாங்கக் காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறைவே இருக்காது. ஒரு மனிதன் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் மாமாங்கக் குளத்துக்குப் போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பெய்ய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்து கொள்ள வேண்டும்  அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே, யாரும் காலோடு பேய்ந்து கொள்ளச் சம்மதிக்க மாட்டார்கள். எப்படி யாவது அடக்கி, அடக்கி அவசரமாய்க் குளத் துக்குப் போகும் வரை அடக்கிக் கொண்டு தான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன், இவர்களை அறியாமலே மூத்திரம் வந்து விடும். அந்த மூத்திரம் மாமாங்கத் தீர்த்தத் துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்து விடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பர்த்தியாகிவிடும். ஆகவே, வரவும் செலவும் சரியாகிவிடும்.

பு.ம.: அந்தப்படி அந்தக் குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்ற மிருக்காதா?

சு.ம.: நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகாபாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்க மாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடி போட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால், மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆகவே, செலவுக்கும் வரவுக்கும் தானாகவே சரியாய்ப் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.

(‘குடிஅரசு’, 26.2.1933)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.