இன்று நாம் பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேறி விட்டோம்; முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்லித் திரிகிறோமே. அரசு அவ்வப்போது நம்முடைய GDP 8%, 9% -த்தில் வளருகிறது என்கிறதே... உண்மையிலேயே நாம் நினைக்கும் இந்த முன்னேற்றம் என்பது உன்மையான முன்னேற்றம் தானா? இல்லை இது ஒரு மாயையா? இல்லை இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா? இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இதனால் நம் நாட்டுக்கு நன்மையா, இல்லை தீமையா என்பதை நாம் ஒரு கணம் நிலையோடு சிந்தித்தால் அறிந்து கொள்ளலாம்.

children poor

இன்றைய பொருளாதார நிலையைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பொருளாதாரத்தின் அடிப்படையைக் கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது.

பொருளாதாரத்தில் நம்முடைய தொழில், வருமான துறைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

முதன்மைத் துறை (Primary Sector):

இதானது விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுரங்கத் தொழில் முதலியவை. இதனுடைய முக்கியம் என்னவென்றால், ஒரு நாட்டின் உண்மையான உற்பத்தி அல்லது வருமானம் என்பது இந்தத் துறையிலிருந்து உருவாவதுதான். வேறொரு வழியில் சொல்வதானால் இல்லாததிலிருந்து நாம் உருவாக்குவது என்பது இந்தத் துறையில்தான் நடைபெறுகிறது. உதாரணமாக இன்று நாம் ஒரு நெல்விதையை விதைத்தால் இது சுமார் 150 நாட்களில் 100 நெல் மணிகளாக மாறுகிறது. அதாவது 99 நெல்மணிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. அதுபோல பசுக்கள் பால் கொடுக்கின்றன. மேலும் சுரங்கத்திலிருந்து தாதுக்கள், பெட்ரோலியம் போன்றவை நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் துறை (Secondary Sector):

இதானது முதல் துறையிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு அவற்றை உருமாற்றுவதற்காக செயல்படும் தொழிற்சாலைகளை குறிப்பதாகும். உதாரணமாக நாம் நெல்லை உற்பத்தி செய்து அரவை மில்லுக்கு அனுப்புகிறோம். பருத்தியை துணி மில்லுக்கு அனுப்புகிறோம், கரும்பை அதன் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறோம். பெட்ரோலியமும், கனிம வளங்களும் அதனதன் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உருமாற்றப்படுகிறது. இங்கெல்லாம் ஏதும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுகிறது. நெல் அரிசியாகிறது. பருத்தி துணியாகிறது, பெட்ரோலியம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பலவாறாக பிரிக்கப்படுகிறது. அவ்வளவே.

மூன்றாம் துறை (Tertiary Sector):

இதில் வருபவை முக்கியமாக சேவைத்துறைகளே. முதல் இரண்டு துறைகளின் வளர்ச்சிக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் இந்தத் துறை. உதாரணமாக போக்குவரத்து, மின்சாரம், அஞ்சல்சேவை, தொலைதொடர்பு, கணினி மென் பொருள், தொலைக்காட்சி, Internet இவற்றைக் கூறலாம்.

இந்த மூன்று துறைகளில் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவதும், உண்மையான ஒரு நாட்டின் உற்பத்தியும் என்பது முதல் துறையில் தான் உள்ளது. இன்றும் நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளார்கள். அதனால்தான் விவசாயத்தை இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று கூறுகிறோம். இந்த முதல் துறையையும் நாம் சற்று ஆழமாக சிந்தித்தால் இதில் விவசாயமும் கால்நடையிலிருந்து வரும் வருமானமுமே என்றும் நிலைத்து நிற்பது. இன்று விவசாயம் செய்வது போல் நாம் என்றும் விவசாயம் செய்யலாம். எத்தனை வருடமானாலும் ஒரு விதையிட்டால் 100 நெல்கள் உருவாகும். ஆனால் சுரங்கம் போன்றவை அப்படியல்ல. எடுக்க எடுக்க குறைந்து பின் ஒரு நாள் தீர்ந்து விடும். எனவே நம் நாட்டின் உன்மையான, நிலைத்து நிற்கும் பொருள் உற்பத்தி (வருமானம்) என்பது விவசாயமும் கால்நடைத்துறையும் தான். இதை பொதுவாக நாம் விவசாயம் என்றே கூறலாம்.

நம் நாட்டைப் பொருத்தவரை சுமார் 70% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே விவசாயம் உற்பத்தி உயருகிறது என்றால் 70% மக்களின் வாழ்வில் வருமானம் அதிகரிக்கிறது என்று அர்த்தமாகும். ஏனெனில் இந்த 70% மக்களும் விவசாயத்தின் முதலாளிகள். அவர்களின் உற்பத்தி இத்தனை சதவீதம் அதிகரித்து அதன்மூலம் அவர்களின் வருமானமும் அதிகரிக்கிறது.

இனி இரண்டாவது, மூன்றாவது துறை வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம். இவற்றின் பயனாளிகள் என்பவர்கள் மிகச்சிலரே. அதாவது வாகன உற்பத்தியாளர்கள், தொலைபேசி சேவை வழங்குபவர்கள், தொலைக்காட்சி சேவை அளிப்பவர்கள், தொழிற்சாலை முதலாளிகளும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களும். இவர்கள் தான் இங்கு பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு இதனால் வருமானம் கூடுகிறது. ஆனால் இதை வாங்கி உபயோகிப்பவர்கள் என்பது 70% விவசாயிகள் உள்பட உள்ள எல்லா மக்களும் அடங்குவார்கள். இவர்களுக்கு உண்மையிலேயே செலவு அதிகரித்திருக்கிறது. அதாவது அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் ஒவ்வொரு வருடமும் இந்த மூன்று துறைகளின் வளர்ச்சியைப் பற்றிய கணக்குகள் பிரசுரிக்கப்படுகின்றன. அவை GDP growth என்ற பெயரில் அறியப்படுகிறது. அதாவது கடந்த வருடம் உற்பத்தி செய்த பொருளை விட இந்த வருடம் எத்தனை சதவீதம் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதே அதன் பொருளாகும். உற்பத்தி அதிகரிப்பு என்பது உற்பத்தி செய்கிறவருக்கு வருமானமும், வாங்குகிறவருக்கு அது செலவுமாகும்.

நம்முடைய வளர்ச்சி கணக்குகளைப் பார்த்தால் ஒன்று புலனாகும். விவசாய வளர்ச்சி என்பது மிகமிகக் குறைவாகவும் (சில சமயங்களில் அது negative–லும்) செல்கிறது). ஆனால் மற்ற துறைகளில் அது அதிகமாகவுமே உள்ளது. உதாரணத்துக்கு விவசாய வளர்ச்சி என்பது சுமார் 2 சதவீதம் மட்டுமே. அதாவது கடந்த வருடம் 100 ரூபாய்க்கு உற்பத்தி செய்த விவசாயி இந்த வருடம் 102 ரூபாய்க்கு உற்பத்தி செய்கிறான். ஆனால் மற்ற துறைகளில் வளர்ச்சி என்பது 8% உள்ளது. அதாவது கடந்த வருடம் இரண்டாம், மூன்றாம் துறை பொருள்களை வாங்க 100 ரூபாய் செலவு செய்தவர்கள், இந்த வருடம் 108 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். எனவே 102 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு விவசாயி இவ்வருடம் 108 ரூபாய் செலவழிக்கிறான். அதாவது வருமானத்தைவிட 6 ரூபாய் அதிகம் செலவு செய்கிறான். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவு என்ன? வருமானத்தை விட செலவு செய்பவன் கடனாளி ஆகிறான். வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்கிறான். வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கிறது. இதனால் வங்கிகள் பாதிப்படைகின்றன. இந்நிலை மற்ற மக்களுக்கும் சம்பவிக்கிறது. ஆனால் இதனால் பயனடைவது ஒருசிலர் மட்டுமே. இவர்கள் மக்களுடைய பணத்தைப் பறித்து பெருமுதலாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் உயர்ந்து கொண்டே போகிறது. சாதாரண மக்கள் வருமானம் உயராமல் செலவை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நாம் ஊதாரித்தனம் என்கிறோம்.

இந்த ஊதாரித்தனத்தை ஊக்குவிப்பதற்குத்தான் விளம்பரங்களும், போதைகளும் பயன்படுத்தப்படுகிறது. பொருள்களை விற்பதற்காக நம் மூளை சலவை செய்யப்படுகிறது. மேலும் இன்டர்நெட் போதை, தொலைக்காட்சி போதை, கடையில் விற்கும் தின்பண்டங்களில் சுவையூட்டி என்ற போதை, வாகன உற்பத்தியாளர்களால் வளர்த்து விடப்படும் சோம்பேறித்தனம் என்ற போதை, தற்பெருமை என்ற போதை இவற்றால் வருவாய் கூடாத மக்கள் செலவைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெருமுதலாளிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏழைகள் மீண்டும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் இவர்களுக்கிடையிலான இடைவெளி பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த ஊதாரித்தனத்தை அரசும் ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் மக்கள் பொருள் வாங்கி குவிக்கும்போது தான் அரசுக்கு வரி வருமானம் அதிகரிக்கிறது. ஆனால் இது மக்களுக்கு வறுமையை அதிகரிப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. சில போலீஸ்காரர்கள் கொள்ளைக்காரர்களுடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து அதை ஊக்குவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கொள்ளை அடிப்பதில் ஒரு பகுதியை இவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன். இதைத்தான் இன்று அரசும் செய்துகொண்டிருக்கிறது.

இப்போது ஏதோ ஒரு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் காணப்படுகிறது. இது ஒரு கானல் நீர். ஏனெனில் இது நம்முடைய மூதாதையர்கள் உழைத்து கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்களை விற்றும், நம்முடைய இயற்கை வளங்களை அபரிமிதமாக சுரண்டுவதாலும் உருவானதே. இந்த இரண்டும் தற்காலிகமானதே. நம் ஊர்களில் சிலர் தம் மூதாதையர் சேமித்து வைத்த செல்வத்தை விற்று கொஞ்சம் நாள் சந்தோசமாக வாழ்வார்கள். அந்த நிலைதான் இன்று காணப்படுகிறது. எத்தனை நாள் தான் நாம் விற்று சாப்பிட முடியும்? மேலும் இயற்கை வளங்களான நிலக்கரி மறறும் தாதுக்கள் காலாகாலத்துக்கும் நமக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே இவை இரண்டும் தற்காலிகமானவை; விரைவில் நின்று விடும்

மேலும் விவசாயத்தில் உற்பத்தி கூடிவருகிறது என்று அரசு சொல்கிறது. உற்பத்தி கூட வேண்டுமானால் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் பயிர் பரப்பு அதிகரிப்பதன் மூலமே அரசு கூறும் உற்பத்தி பெருகியிருக்க வேண்டும். நாம் நம்மைச் சுற்றி இருப்பதைப் பார்த்தாலே இக்கணக்கு மெய்யானது அல்ல என்று அறிய முடியும். நாம் சில வருடங்களுக்கு முன் விவசாய நிலங்களாக இருந்தவை மற்ற பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால் மற்ற பயன்பாட்டிலோ தரிசு நிலமாகவோ இருந்த நிலம் விவசாய பயன்பாட்டிற்காக தற்போது மாற்றப்பட்டுள்ளதை யாராவது பார்த்திருக்கிறோமா? இல்லையே? அப்படியானால் உற்பத்தி எங்கிருந்து அதிகமானது?

இதிலிருந்து நாம் அறிவது முதல் துறையைவிட இரண்டாம், மூன்றாம் துறைகள் அதிக வளர்ச்சி பெறுகின்றன. இதன் காரணமாக பெருவாரியான மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அதுதான் இன்று, இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இது நேர்மாறாகவே நடக்க வேண்டும். அப்படியானால் தான் பெருவாரியான மக்கள் வளமையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் இங்கு இரண்டாம், மூன்றாம் துறைகளில் உள்ள ஒரு சிலர் மட்டுமே வளம் பெறுகிறார்கள். எனவே இது மிக மிக வருந்தத்தக்க ஒரு வளர்ச்சியே. இதில் பெருமைகொள்ள எதுவுமே இல்லை.

இன்றைய நிலையைப் பார்க்கும் போது ஒரு தமிழ் படப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. கல்லூரி நாட்கள் முடிந்து பிரிவு உபச்சார விழாவுக்காக பாடப்பட்ட பாடல், 'பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே பறந்து செல்கின்றோம்'. இந்தப் பாடலின் இடையில் ஒரு வரி வரும். 'வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே'. இது கல்லூரி மாணவர்களுக்கு சரியாக இருக்கலாம்; ஆனால் நாட்டுக்கு…?

- ஜே.என்.ஜெயச்சந்திரன்

Pin It